திங்கள், 16 மே, 2016

சாப்பாட்டை தவிர எதுக்கும் வாயை..!?

"தயவு செய்து நான் பக்கத்துல இல்லாதபோது சாப்பாட்டை தவிர எதுக்கும் வாய திறக்காதிங்க...!"

அன்பான  சர்வாதிகாரத்துடன்  அம்மணி அருகில் வந்து காதை கடித்தார்கள்.

"அதுக்கு கூட ஏன் வாயை திறக்கனும். உங்கள் ஹாஸ்பிடல் ஆபெரசன் ரூமுக்கு  வரேன். உன் கையாலே தொண்டையில் ஒரு ஓட்டை போட்டு "டுயுப்" வைச்சி  சாப்பாட்டை அரைச்சி ஊத்திடுங்க.."

"நான் எவ்வளவு சீரியஸா பேசின்னு இருக்கேன். உங்களுக்கு எல்லாமே விளையாட்டு"?

"இப்ப நான் யாரிடம் என்ன பேசிட்டேன் ...இப்படி கொந்தளிக்கிற ?"


"நீங்க என்ன தப்பா பேசினீங்கன்னு உங்களுக்கு தெரியாது ?"

"உண்மையா தெரியாது .. நீயே சொல்லு.!!!"

"ஒரு ரெண்டு காரியம் தப்பா பேசினா எது தப்புன்னு தெரியும்.. வாய திறந்தா வரது எல்லாமே தப்பா இருந்தா எப்படி தெரியும்?"



"அப்படி என்ன தப்பா பேசிட்டேன்.. கொஞ்சம் விளக்கமா சொல்லு."

"உங்க நண்பர் அதுதான் ... அவர் மனைவி ஊருக்கு அவசரமா போய் இருக்காங்களே.. அவரிடம் என்ன கேட்டிங்க..?"

"நான் என்ன கேட்டேன்? சும்மா நலம் விசாரித்தேன்."

"உண்மைய சொல்லுங்க, எப்படி நலம் விசாரித்திங்க?"

"என்ன, உங்க வீட்டு அம்மணி ஊருல இல்லையா ? முகமே மாறி இருக்கேன்னு  கேட்டேன்."

"அப்படி கேட்டு இருந்தாதான் பிரச்சனையே இல்லையே.. உண்மைய சொல்லுங்க... எப்படி கேட்டிங்க.. ?"

"எனக்கு நினைவு இல்ல.கூட இருந்த மாதிரி சொல்ற இல்ல.. நீயே சொல்லு.. எப்படி கேட்டேன்?"

"என்ன மாப்பு.. வாயெல்லாம் பல்லு.. அம்மணிய ஊருக்கு எங்கேயாவது ஒன் வே டிக்கட் வாங்கி அனுப்பி வச்சிட்டியான்னு கேட்டிங்க"

"ஒ.. அதுல என்ன தப்பு.?"

"ஏங்க.. நீங்க கேக்கும் போது அவரோட மாமியார் பக்கத்துல இருந்தாங்க.. என் பொண்ணு என்ன பண்ணிச்சின்னு இப்படி பேசறாங்கன்னு கேக்குறாங்க!"

"சும்மா தமாசுக்குன்னு சொல்லிடு போ"

"சரி.. ஜாக்கிரதையா பேசுங்க.. எல்லாரும் ஒரே மாதிரியா இருக்க மாட்டாங்க,, ஓகே"

"சரி.."

"திரும்பவும் சொல்றேன்.. நான் பக்கத்தில் இல்லாத போது சாப்பாட்ட தவிர வேறு எதுக்கும் வாயை திறக்காதிங்க"

"சரி.. "

என்று தலையாட்டிவிட்டு.. அருகில் இருந்த மற்ற நண்பர்களை பார்த்து கண்ணாலே நலம் விசாரித்து கொண்டு இருக்கையில்.. சாரதி அருகில் வந்தான்.

"என்ன சித்தப்பூ.. மௌன விரதமா?"

"அம்மணி நமக்கு வாயிலே சனின்னு சொல்லிடாங்க. அதுதான்~"

"சித்தப்பூ.. நீயே முயற்சி பண்ணாலும் உன்னாலே அமைதியா இருக்க முடியாது. அப்படியே அமைதியா இருந்தாலும் அதனால பிரச்சனை தான் வரும்"

என்று சொல்லிக்கொண்டு இருக்கையில்.. அருமை நண்பன் தண்டபாணி அருகில் வந்தான்.

"என்ன வாத்தியாரே.. வீட்டுல ஏதாவது பிரச்சனையா?"

"அப்படி ஒன்னும் இல்ல.. ஏன் கேக்குற?"

"இல்ல! டைட்டானிக் கப்பலில் ரெண்டாவது சம்சாரத்த அனுப்பிவைச்ச மாதிரி ஒரு லுக் விட்டுணு பீலிங்கா இருக்கியே, அது தான்"

"தண்டம்! .. டேய் பாவி. அது என்ன ரெண்டாவது சம்சாரம் .. ஏன் மூத்த சம்சாரம் அந்த கப்பலில் போய் இருந்தா பீலிங் ஆகா மாட்டோம்மா என்ன?"

"அறிவா  பேசு வாத்தியாரே.. மூத்த சம்சாரத்துக்கு பீலிங் ஆகுற ஆளுன்னா . ரெண்டாவது சம்சாரமே வந்து இருக்காது இல்ல. அது தான்!"

"எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சினு இருக்கியே, தண்டம்.!"

"சரி நீ பேச்ச மாத்தாத .. வீட்டுல என்ன பிரச்சனையா?"

"இல்ல , ஏன்?"

"வாயில் அதர்சம் வைச்சுனு இருக்குற மாதிரி அமைதியா இருக்கியே"

"தண்டம்,, அது அதர்சம் இல்.. கொழுக்க....!"

"ரொம்ப முக்கியம்.. ஏன் அமைதியா இருக்க? சொல்லு"

"எனக்கு வாயில சனியாம்...!"

"வேற எதனா புதுசா எனக்கு தெரியாத விஷயம் சொல்லு  வாத்தியாரே.."

"டேய்..!!!"

"பீலிங் ஆகாத வாத்தியாரே.. ஜோக் பண்ணேன். கண்டின்யு .!"

"எனக்கு வாயில சனியாம்..!"

"அதுக்கு..?"

"அம்மணி அருகில் இல்லாத போது சாப்பாட்டை தவிர எதுக்கும் வாய திறக்காதன்னு ஆர்டர் போட்டுட்டாங்க.அதுதான் மௌன விரதம்."

"ஒ..சரி.. சாப்பாடுன்னு சொன்னவுடன் தான் ஞாபகம் வருது. மௌன விரதம் தானே. உண்ணா  விரதம் இல்லையே.. அங்கே பாரு உருளை போண்டாவும்  அல்வாவும்   வச்சி இருக்காங்க.. போய் வாங்கி சாப்பிடு.. போ!"

என்று தண்டம் கூற அங்கே சென்றேன்..

"வாங்க அண்ணா..! என்ன சாப்டுறீங்க..?"

"இதுல ஒன்னு .. அதுல ஒன்னு.."

அவர்களும்  போட்டு கொடுத்தார்கள். அந்த தட்டை வாங்கி கொண்டு வந்து தண்டம் சாரதி அருகில் இருக்கையில் அம்மணி மீண்டும் அருகில் வந்தார்கள்.

"ஏங்க.. நான் என்ன சொன்னேன்?"

"நீ தானே சொன்னே சாப்பாட்டுக்கு மட்டும் வாயை திறக்க சொல்லி .. அது தான் .. இத சாப்பிட வாயை திறந்தேன்."

"சரி. இதை என்னனு கேட்டு வாங்கினீங்க..?"

"நீயே சொல்லு..!"

"அதுல ஒன்னு.. இதுல ஒண்ணுன்னு கேட்டீங்களா?"

"இருக்காலாம், அதுல என்ன தப்பு..!"

"சாப்பாட்டை யாராவது அப்படி கேப்பாங்களா. அதுக்கும் இதுக்கும் தான் தனி தனி பெயர் இருக்கு இல்ல.. அதை சொல்லி வாங்க தெரியாதா?"

"இது ஒரு தப்பா.. இத போய்.!"

"நீங்க பெயர் தெரியாம அதுல ஒன்னு இதுல்ல ஒன்னு கேட்டா. இவருக்கு இதோட பேர் கூட தெரியல.. எனக்கு இதை எல்லாம் செய்ய தெரியாதுன்னு பேசுவாங்களே. கொஞ்சமாவது யோசித்து பார்த்தீங்களா..?"

"சாரி.. நான் ஒரு இன்னொசன்ட்  பார்ட்டி.. அவ்வளவு யோசிக்க தெரியாது."

"பேசும் போது ஜாக்கிரதையா பேசுங்க.."

"சரி..!"

"மீண்டும் சொல்றேன்.. சாப்பாட்டை தவிர வேற எதுக்கும் வாயை திறக்காதிங்க.."

"சரி.."

"அம்மணி அங்கு இருந்து கிளம்ப. என் தட்டும் காலியானது.. அருகில் இருந்த தண்டம்..."

"நாங்க எல்லாரும் ஆளுக்கு ரெண்டு ப்ளேட் சாப்பிட்டோம்.. அங்க நிறைய இருக்கு போய் கேட்டு வாங்கி சாப்பிடு வாத்தியாரே..!"

என்று சொல்ல.. நானும் மீண்டும் அங்கே சென்று..

"வாங்க அண்ணா..எப்படி ருசி..!?"

"நல்லா இருக்குது..!"

"இன்னொரு ப்ளேட் வேண்டுமா?"

"ம்..!"

"என்ன வேண்டும்..அதுல ஒன்னு  இதுல ஒன்னா?"

"உருளை போண்டா  ஒன்னு.. அல்வா ஒன்னு..!"

என்று கேட்ட என்னை மிகவும் அதிசயமாக அந்த அம்மணி பார்த்து இரண்டையும் போட்டு தந்தார்கள். அடுத்த ஐந்து நிமிடத்தில்..அம்மணி அருகில் வந்து..

"ஏங்க.. நான் என்ன சொன்னேன்..!?"

"சாப்பாடை தவிர...!"

"அது சரி.. அங்கே சாப்பாட வாங்கும் போது பேர் சொல்லி வாங்க சொன்னேன் தானே."

"இரண்டாவது முறை வாங்கும் போது பேர் சொல்லி தானே வாங்கினேன்.!"

"என்ன பேர் சொன்னீங்க?  அவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க.!?"
என்ன பேர் சொன்னீங்க..?"

"உருளை போண்டா , அல்வா கொடுங்கோன்னு சொன்னேன்..அதுல என்ன தப்பு!"

"என்ன தப்பா...? அது சிக்கன் சமோசா ... கேசரி.. அதை போய் .. உருளை போண்டா .. அல்வான்னு  கேட்டு இருக்கீங்களே என் சமையலை பத்தி என்ன யோசிப்பாங்கன்னு..."

சொல்லும் போதே..  அருகில்  இருந்த தண்டபாணி பாக்கெட்டில் இருந்த அலைபேசியை கையில் எடுத்து கொண்டு .....

"இங்கே சரியா கேக்குல.. வெளியே போய் பேசுறேன்"

என்று சத்தம் போட்டு கொண்டே எஸ்கேப் ஆனான்.

"போங்க,  அவங்களிடம் போய் நீங்க பண்ணதுக்கு மன்னிப்பு கேளுங்க.."

"என் தப்பு இல்ல.. தண்டம் தான்..!"

"நீங்க தண்டம் தான் அது உங்க தப்பு இல்ல.. போங்க போய் பண்ண காரியத்துக்கு மனிப்பு கேளுங்க."

"வாங்க அண்ணா..!"

"நீங்க பண்ண உருளை போண்டாவிர்க்கும், அல்வாவுக்கும் நான் மன்னிப்பு  கேக்குறேன்.."

என்று உளற.. அவர்களோ என்னை பேய் அறைந்ததை போல் பார்க்க (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்).. அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

"ஏங்க..!"

"சொல்லு..!"

"அவங்களிடம் போய் .. என்னான்னு மன்னிப்பு  கேட்டீங்க..?"

"என்னை மன்னிச்சிடு.. நான் இனிமேல் சாப்பாட்டை தவிர எதுக்கும் வாயை திறக்கமாட்டேன்." 

11 கருத்துகள்:

  1. வாழைப்பழம் காமெடி மாதிரி இந்த அதுல ஒன்னு இதுல ஒன்னும் பிரபலமாகி விடும். சிரித்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  2. //பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்//

    சரி

    பதிலளிநீக்கு
  3. ஹாஹாஹா! நகைச்சுவையில் அசத்துகிறீர்கள்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

  4. உங்களுக்கு நகைச்சுவைதான் மிக நன்றாக வருகிறது படிக்கும் போதே மனதும் சேர்ந்து சிரிக்கிறது தொடர்ந்து இது போல பல பதிவுகள் இட்டு கூடிய சீக்கிரம் அடுத்த புக்கையும் போட்டுவிடுங்கள் புக் போட்டாதான் எங்க வீட்டுகாரம்மா உங்களின் நகைச்சுவைகளை படிக்க முடியும்

    பதிலளிநீக்கு
  5. சாப்பாட்டுக்குத்தவிர வாயைத் திறக்கமாட்டேன்னு எழுதிட்டு, எங்களை சிரிக்க வச்சு வாயைத் திறக்கவச்சிட்டியே தம்பி விசு.

    பதிலளிநீக்கு
  6. அருமை அருமை..
    நகைச்சுவை அதுவும் இயல்பு வாழ்க்கை ஒட்டி எழுதும் உங்கள் எழுத்துக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  7. ஹாஹா..... எப்படியெல்லாம் மாட்டறீங்க!

    பதிலளிநீக்கு
  8. அற்புதம்
    அன்பான சர்வாதிகாரியிடம்
    ஒரு யதார்தவாதி படும் அவஸ்தையை
    நிஜமாக்வே "விசு "வலாகப் பார்ப்பது போலப்
    பட்டது. சொல்லிச் சென்ற விதம் அப்படி
    அவஸ்தைகள் தொடரவும்
    அதை தவறாது பகிரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. ஹஹ்ஹஹஹஹஹஹ் விசு ஆஃப்டர் அ லாங்க் டைம்....வயிறு புண்ணாகிடுச்சு...மருந்து ப்ளீஸ்....துளசிக்கு வாசிக்க முடியலை...நான் அவருக்கு வாசிக்கும் போது மீண்டும் இப்படிச் சிரிச்சுப்புடுவேனே......

    //என்ன மாப்பு.. வாயெல்லாம் பல்லு.. அம்மணிய ஊருக்கு எங்கேயாவது ஒன் வே டிக்கட் வாங்கி அனுப்பி வச்சிட்டியான்னு கேட்டிங்க.// ...ஹஹஹ

    போண்டா....ஹல்வா...ஹஹ்ஹ்ஹா செம விசு....

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...