புதன், 17 பிப்ரவரி, 2016

எண்ணுக்கு உயிர் அழகு ...

அகிலத்தின்  பொழுதுபோக்கின்   தலைநகரம்,  உலகின் எந்த ஊரில் திரைப்படத்தை சார்ந்த பணிகள் நடக்கும் இடத்தை பாலிவுட் , கோலிவுட் ,
டாலிவுட் என்று பெயரை மாற்ற வைத்த ஹாலிவுட் நகரத்திற்கு இன்று ஒரு முக்கிய நாள்.

இது எப்படி சாத்தியமாகும் என்று அனைவரையும் வியக்கவைக்கும் திரை துறையை சார்ந்த ஜம்பாவான்களை திரும்பி பார்க்கவைக்கும் நாள் அல்லவா இது?


இன்று ஆஸ்கார் திருவிழா. 2015ல் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தது எது என்று தேர்ந்தெடுத்தது அதை படைத்தோரை அழைத்து அவர்களை கௌரவித்து விருது தரும் நாள்.

நேரம் நெருங்கி கொண்டே இருக்க ஜாம்பாவான்களின் வருகையும் ஆரம்பித்தது. சிறந்த இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என்று உலகின் தலை சிறந்த கலைஞர்கள் ஒவ்வொருவராக அங்கே அமைக்கபட்டு இருந்த சிவப்பு கம்பளத்தில் நடந்து வர, அதில் வரும்  மங்கையரின் உடையை பற்றி விவாதிக்க வந்துள்ள தொலைக்காட்சி நிருபர்கள் போட்டி போட்டு கொண்டு இருக்க ..

அவர்களுக்கும் ஒரு சிரிப்பை அள்ளி தெறித்து விட்டு அரங்கத்தின் உள்
நுழைந்து அவரவருக்கு ஏற்கனவே ஒதுக்க பட்டு இருந்த இருக்கையில்  அமர, சுற்றும்  முற்றும் பார்த்தால், வாழ்க்கையில் தம் தம் கனவை எட்டி பிடித்த மனிதர்கள் தான் தென் பட்டனர்.

செவ்வாய் கிரகத்தில் காணமல் போன மனிதனாக இருக்கட்டும்,  வேறு கிரகத்தில் இருந்து வந்த தீவிரவாதிகளாக இருக்கட்டும், நூறு வருடங்களுக்கு முன் பனிக்கட்டியால் அடிபட்டு மூழ்கிய டைட்டானிக் கப்பல் சோகமாய்  இருக்கட்டும், ஹிட்லர் அவர்களின் மூர்க்கத்தனத்தில் நடந்த கோடிக்கணக்கான உயிர் சேதமாய் இருக்கட்டும்,  ஏன், இதே ஹாலிவுட் நகரில் ஒரு விலைமாதுவிற்கும் ஒரு பெரிய வியாபாரிக்கும் ஏற்படும் இயற்கையான காதலாய் இருக்கட்டும், கார்ட்டூன் என்று விளையாட்டாக ஆரம்பித்து இன்று கோடிகணக்கில் புரண்டு கொண்டு இருக்கும் அனிமேசனாக இருக்கட்டும்,

இந்த மனிதர்களால் எப்படி இதை உருவாக்க முடிகின்றது? ஒவ்வொரு மணித்துளியும் அரிது என்று ஓடிக்கொண்டு இருக்கும் இந்த காலத்தில் இவர்களின் இரண்டு மணி நேர படைப்பு நம்மை கட்டி போட்டு விடுகின்றதே என்ற வியப்பு பார்ப்போருக்கு கண்டிப்பாக வரும்.

அனைவரும் அமர்ந்து அமைதி காக்கையில், அரங்கத்தை இன்னும் ஒருமுறை நோட்டமிடுகையில் ஒருவரின் ஆடை மட்டும் தனியாக தெரிந்தது. பல ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவு செய்து வாங்கிய உடைகள் அத்தனை இருந்த போதும் அதையெல்லாம் மீறி  தனக்கென்றே ஒரு பாணியில் தனித்துவமாக தெரியும் இந்த ஆடை?

சேலை, தமிழ் நங்கையரின் அழகு அல்லவா? அந்த சேலையை அணிந்து அமர்ந்து இருந்த பெண்மணியின் மேசைக்கு கண்கள் விரைந்தன.

ஹாலிவுட் நகரில் ஆஸ்கார் விழாவில் சேலை அணிந்த யார் இவர்கள்? என்று யோசிக்கையில் அம்மணியின் அருகில் இருந்த மண்ணின் மைந்தன் தென்பட்டார். ஒ, இவர்கள் அவரின் துணைவியார் போல் இருகின்றது. இங்கே இவர்கள் எப்படி, ஏன்?  என்று நினைக்கயில் ..

மேடையில் இருந்தவர்கள் அடுத்த விருதிற்கான  அறிவிப்பை ஆரம்பித்தார்கள்.

Scientific and Technical Achievement for "the design, engineering and continuous development" க்கான விருதை வென்றவர் ..
                     
"கோட்டலங்கொ லியோன்" 

என்று அவர்கள் சொல்ல, அமர்ந்து இருந்தோரின் ஆர்பரிப்பு அதிகரிக்க லியோன் மேடையை நோக்கி சென்றார்.

இருக்கையில் இருந்து மேடைக்கு ஒரு நிமிட நடை. ஒரு நிமிடமா அது ? ஒரு வாழ்கையே அல்லவா ஓடியது.

கால்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையில் மனமோ பல்லாயிரம் மைல்களை தாண்டி பயணித்தது .

ஐயகோ.. இதை பார்க்க என் தகப்பனார் இல்லையே, என்ற ஏக்கம் தொண்டையை அடைக்கையில்,

கோயம்புத்தூர் நகரில்  தன் சகோதரனோடு வாழும் தன் தாயார் இதை பார்த்து கொண்டு இருப்பார்களா என்ற நப்பாசை வேறு...

இரண்டாம் அடியை எடுத்து வைத்த லியோன் தகப்பனையும் தாயையும் நினைத்த அடுத்த மாத்திரத்திலேயே சேலையோடு வந்த ரூபாவை  பார்த்தான். அந்த பார்வையில் தான் எவ்வளவு நன்றி.

இந்த விருதிற்காக நான் மேற்கொண்ட பணியை விட நீ செய்த தியாகங்கள் தான் எத்தனை?

பல நாட்கள் அலுவலகத்திலேயே தங்கி பணிபுரிந்த நாட்களில் நாம் பெற்ற ஸ்ருதி என்ற ராசாத்தியை தனியாக வளர்த்தவள் அல்லவா? பார்வையை புரிந்து கொண்ட ரூபா தன் பதில் பார்வையில் அங்கீகரிக்க, லியோனின் மனதிலோ,

என்னடா ஆஸ்கர் இது? என் அருமை மகள் ஸ்ருதி இங்கே வரமுடியவில்லையே என்று வருந்தி கொண்டு ஒரு வறட்டு சிரிப்பையும்   உதறிவிட்டு ஐந்தாவது அடியை எடுத்து வைக்கையில்  

தான் படித்த பள்ளியின் கணக்கு வாத்தியார் நினைவிற்கு வந்தார்.


எங்கே  லியோன் ?

சொல்லுங்க சார்..

இரண்டு என்ற எண்ணை எழுதும் போது, மேலே ஒரு சிறிய வட்டம் போட்டு அதை வளைத்து கொண்டு வந்து கீழே ஒரு நேர் கோடு போடவேண்டும்.

அப்படி தானே போட்டு உள்ளேன்.

நீ எழுதியுள்ள எண்ணை பார்த்தால் ஏதோ அன்ன பறவையை வரைந்துள்ளது போல் இருகின்றது. எண்ணுக்கே வாழ்வளிக்கும் உன் திறமையை பாராட்டினாலும் , நீ கணக்கிலும் சிறக்க வேண்டும் அல்லவா, அதனால் அதையும் கொஞ்சம் கவனி..

என்று அவர் சொல்கையில்.. அருகில் இருந்த சக மாணவனோ..

இது கூட பரவாயில்லை சார். இவன் ஆங்கிலத்தில் எழுதுவதை பார்த்தால்  நீங்கள் மயக்கமே போட்டு விடுவீர்கள் என்று சொல்லி லியோனின்  ஆங்கில எழுத்தை காட்ட, அதிலோ..

h  ஒட்டக சிவிங்கியாகவும் n யானையாகவும் s ஒரு அழகிய பறவையாகவும் மாறி இருந்தது.,

லியோன், இப்படி எண், எழுத்து, படம் எல்லாவற்றிலேயும் கவனம் செலுத்துகின்றாயே, பிற்காலத்தில் எந்த தொழில் - பணி செய்ய விரும்புகின்றாய்?

இது மூன்றும் சேர்ந்தாற்போல், சார்..

கடினமா உழை, கண்டிப்பாக நடக்கும்,

ஆசிரியரின் குரல் எதோ எதிரில்  இருந்து பேசுவதை போல் தெள்ளந்தெளிவாக கேட்டது.

மேடையை அடைந்தான். விருதை பெற்று கொண்டபின்னர் தன் நன்றியுரையை அளிக்கும் நேரம்.

அமர்ந்து இருந்தோர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுபவர்கள் அல்லவா ? ஆங்கிலத்தில் ஆரம்பித்தான்.

I would like to thank my wife Roopa and daughter Shruthi for their continued love and support and would like to dedicate this award to my parents. This award made me realize how blessed I am with so many friends and family from all over the world. எல்லோருக்கும் நன்றி..

என்று சொல்லி  முடிக்கையில் குரல் சற்று தடுமாறியது. அனைவரும் கை தட்ட, மேடையில் இருந்து இறங்கி  இருக்கையை நோக்கி செல்லும் நேரம் . மீண்டும் அந்த ஒரு நிமிட நடை. இம்முறை இந்த நடை சற்று பளுவாக இருந்தது. அது அவன் கையில் இருந்த ஆஸ்கர் என்று அனைவர் நினைத்தாலும், லியோனின் கால்கள் தன் இருக்கையை நோக்கி செல்ல மனமோ.. கள்ளபாளையம்  சென்றது..

அம்மா ராஜம் மரியசிங்கம், அப்பா லூர்து, இருவருமே ஆரம்ப பள்ளியின்  ஆசிரியர்கள்.  வீட்டிற்கும்  பள்ளிக்கும் வித்தியாசமே இருக்காது அப்படி ஒரு சூழ்நிலை.

அம்மா சமையலில் மும்முரமாக இருக்க, அப்பா லூர்து,  லியோனின் சகோதரன் கபசோ மற்றும் சகோதரி  இம்மாகுலேட் இருவரையும் அழைத்தார்!

மழை சாரல் அடிக்குதே.. எங்க லியோன் ?

மழை சாரல் அடிக்கையில் லியோன் எப்ப வீட்டில் இருந்தான் ?

விளக்கமா சொல்லு!

இவ்வளவு நாள் ஆகியுமா உங்களுக்கு தெரியல? அப்பா, தரை கொஞ்சம் நனைந்தால் போதும், இவன் வெளியே போய் " காலாலே நிலத்திலே கோலம் போட ஆரம்பிச்சிடுவான் " என்று சொல்ல அனைவரும் சிரிக்க...

தொடரும்...

4 கருத்துகள்:

  1. 'மேடைக்கு ஒரு நிமிட நடை. ஒரு நிமிடமா அது ? ஒரு வாழ்கையே அல்லவா ஓடியது' அட அட அட இது கவிதையா உரைநடையா? அல்லது சிலப்பதிகாரம் மாதிரி “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” வகையா? உணர்ச்சிவசப்பட்டு, உணரவைக்கும் பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா நம்மில் ஒருவர் அங்கீகரிக்கப்படும் போது அது நமக்கே ஏற்பட்ட ஒரு அங்கீகரிப்பு போல் ஒரு உணர்வு வருகின்றது. வருகைக்கு நன்றி.
      பாராட்டபடவேண்டியவர் லியோன், நான் என் பங்கிற்கு இளநீர் தான் எடுத்து வந்தேன்.

      நீக்கு
  2. மிக அருமையான உத்தி...கோட்டலங்கோ விருது வாங்கிய நெகிழ்வை எனக்குத்தெரிந்து இப்படி யாரும் பதிவு செய்யவில்லை...விகடன் உள்பட...நன்றிகள்

    பதிலளிநீக்கு
  3. விசு! மிக மிக அழகான விவரணம் வர்ணனை...நம்மூர்க்காரர் ஒருவரின் அங்கீகாரத்திற்கு உணர்வு பூர்வமான விவரிப்பு. அசத்தலான நடை அவரது நடையை விட அழகாய் மிளிர்கின்றது! அழகான ரைட்டப்...அருமை விசு! ரொம்பவே ரசித்தோம்..

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...