ஞாயிறு, 13 மார்ச், 2016

“கெட்டிமேளம்-கெட்டிமேளம்,எங்கடா தாலி”




எது காதல்?
நான்காவது படிக்கையிலே நாள் பார்த்து என் எதிர்  வீட்டிற்கு  குடி வந்தாள், பெற்றோருடன் ஒரு சிறுமி.  அடுத்த நாள், என் பள்ளியில், என் வகுப்பில் என் அருகில் அவள் அமர (அவள் பெயரின் முதல் எழுத்தும் என்னை போலவே ,எங்கள் வகுப்பில் பெயர் வரிசையில் தான் அமரவைப்பார்கள், வள்ளுவனுக்கு வாசுகி போல, எனக்கும் ஒன்று. அவள் அப்பாவிற்கு நன்றி கூறினேன்), கண்டவுடன் கண்டுகொண்டேன் கன உலகில் சென்று விட்டேன்,காசு கொடுத்து வாங்கிய கமர்கட்டும் கசப்பாகியது.
இது காதலா?
எட்டாவது படிக்கையில் இதே சிறுமி பாவாடை சட்டையை எறிந்துவிட்டு, அரை தாவணியில் நின்ற பொது, மெய்மறந்து, அந்நாள் வரை இப்பெண்ணை விட அதிக மதிப்பெண் பெற்ற நான்,அவளிடமே சென்று கணக்கு பாடத்தில் சந்தேகம் என்று சந்தடி சாக்கில் சில வினாடிகள் திருடினேனே …
அது காதலா?

+2 படிக்கையிலே வேறொரு பள்ளியில் இருந்து எங்கள் வகுப்பிற்கு வந்த “பாத்திமா” அவள் அழகை “பார்த்தியாம்மா” என்று அவனன் அலைகையில் எனக்கு தெரிந்தது எல்லாம் என் முதல் எழுத்து சொந்தகாரியான இந்த எதிர் வீடு கம்மல் தான்.முதல் முதலாக முழு கால்சட்டை அணிந்த போது, டைலரிடம் ட்ரையல் பார்கையில் வெயிட் எ நிமிட் பார் 5 நிமிட்ஸ் என்று கூறி, எதிரில் வந்தவர்களையும் கண்டு கொள்ளாமல் எதிர் வீடிற்கு ஓடி சென்று முழு கால் சட்டையுடன் நின்று கொண்டு, பொருளாதாரம் புத்தகம் இரவல் கிடைக்குமா என்று நொந்து நின்றேனே.

 அது காதலா?
கல்லூரி வந்தபின்பும் அந்த கள்ளி என் வகுப்பில் வந்தாள், “என்னைபாரு நீ” என்று தன் மீன் விழியில் கொக்கி போட்ட “அன்னபூரணி” யையும் தள்ளி வைத்து, புத்தகத்தின் நடுவில் அவள் புகைபட்டத்தை வைத்து எல்லா பாடத்திலேயும் அரியர்ஸ் வாங்கினேனே?
 அது காதலா?
புகை படம் என்றதும் நினைவிற்கு வருகிறது. புகை பிடிக்க கற்றுக்கொண்டு அனைவரின் பகையையும் பெற்று கொண்டு அவள் வந்தாள் மட்டும் புகையை அணைத்து விட்டு “வாங்க நாம் பேசிக்கொண்டே கல்லூரிக்கு போகலாம் என்றேனே”.
அது காதலா?
எமனுக்கு ஒரு எருமை போல எனக்கு ஒரு யமாஹா. அந்த நாளில் அரசியல்வதி ஒருவர் மண்டையை போட்டதினால் ரத்து ஆனது பேருந்து.   எதிர் வீடு தானே, நான் உங்களை வண்டியில் அழைத்து செல்கிறேன் என்று கூறி என் வீடு வழியை நானே மறந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தை முக்கால் மணிநேரத்தில் மேடு பள்ளம் தேடி கண்டுபிடித்து ஒட்டி அடைந்தேனே.
அது காதலா?
“முதல் சம்பளம் அம்மாவிற்கு ,  இரண்டாம் சம்பளம் அம்மணிக்கு என்று ” தாய்க்கு பின் தாரம்” என்பதை தவறாமல் செய்தேனே அது காதலா?
இல்லை இல்லை இதில் எதுவுமே காதல் இல்லை. ஏன் என்று புரியவில்லையா? இன்று அவளின் திருமண நாள். இவ்வளவு செய்த நான் அவளிடம் என் காதலை சொல்ல மறந்து விட்டேன். மன்னிக்க முடியாத குற்றம் என் பக்கம். எங்கிருதாலும் வாழ்க என்று கூற,  அழைப்பினை ஏற்று அமர்ந்து இருந்தேன்.
பின் காதல் என்றால் என்ன?
அமர்ந்து இருந்த என் அருகில் வந்த அமர்ந்தால் என் அடுத்த வீடு பெண். வருட கணக்கில் அருகில் வசித்தாலும் அவளிடம் நான் பேசிய வார்த்தைகளே சில தான். என்றாலும் இவளிடம் பல வருடங்களாக ஒரு கேள்வி கேட்க ஆசை. மனதை திடபடுத்தி கேட்டுவிட்டேன்.
நினைவிருக்கா    உனக்கு? நாம் +2 படிக்கையிலே ஒரு நாள் அவரசமாய் நான் போகையிலே என்னிடம் வந்து “மணி என்ன என்று கேட்டாயே”. உன் வீட்டில் ஆறு கடிகாரம், அதற்கும் மேல் “ஆல் இந்தியா ரேடியோ”வின் அலறல் சத்தம். என்னிடம் கைகடிகாரம் இல்லை என்று கிண்டல் பண்ணதானே அவ்வாறு கேட்டாய் என்றேன். அவள் கூறினாள் “மண்டு… மண்டு.. அன்றுதான் நீ முதல் நாளாய் முழு கால்சட்டை போடுகின்றாய் என்பதை அறிந்து கொண்டு, ஆறு மாதங்களுக்கு முன் எனக்கு என் பெற்றோர் எனக்கு வாங்கி தந்த அரை தாவணியை நான் அணிந்து அதை முதலில் பார்ப்பவன் நீயாகத்தான் இருக்க வேண்டும் என்று வழி மேல் விழி வைத்து கடிகாரத்தையே பார்த்துகொண்டு ஓடிவந்து உன்னிடம் நேரம் கேட்டேன். அது கிண்டாலா”?
ஏதோ என் ராசி அப்படி என்று, அன்றும் சரி இன்றும் சரி, என்றாவது நீ என்னை பார்ப்பாய் என்ற அற்ப ஆசையில் தான் இன்றும் உன் அருகில் வந்தேன் என்றாள்.
நிஜமாக சொல்லுகிறேன் “இது தான்  காதல்”
கெட்டிமேளம் கெட்டிமேளம் என்ற சத்தம் கேட்டு நான் உணர்ச்சி வசப்பட்டு ” எங்கடா தாலி” என்று  எழுந்து நிற்க, அருகில் நின்ற அவளோ குலுங்கி சிரித்தாள், “ஆக்க பொறுத்த நான் ஆற பொறுக்க மாட்டேனா என்று சொல்லி”,.

அடுத்த முகுர்த்தம்தான் நமக்கு என்றாள்.
நண்பர்களே, நாம் யாரை விரும்புகிறோம் என்பதை விட்டு தள்ளுங்கள். நம்மை யார் விரும்புகிறார்கள் என்பதை கற்று கொண்டு கட்டி வாழுங்கள்..

 “இது தான் காதல்”

நேரமின்மை காரணத்தினால் ஒரு மீள் பதிவு... .

2 கருத்துகள்:

  1. இதைப் படித்து அப்போதே ரசித்த பதிவு...விரைவில் தண்டபாணியை அழைத்து வாருங்கள் விசு. ரொம்பநாளாச்சு அவரைப் பார்த்து.

    பதிலளிநீக்கு
  2. அட... இவ்வளவு நடந்து இருக்கா...?

    முடித்த விதம் ஓஹோ... |

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...