சனி, 8 ஜூலை, 2017

வெள்ளிக்கிழமை விஷேஷம் ..

இறக்கி வைச்சிருக்கேன்!   இறக்கி வைச்சிருக்கேன்
!பொன்னாங்கன்னி மிளகாய்  போட்டு  இறக்கி வைச்சிருக்கேன்!. 

இந்த வாரம் செவ்வாய் கிழமை விடுமுறை ஆச்சே.. அதனால வெள்ளி கிழமை வந்ததே தெரியல. வெள்ளி மாலை வந்தவுடன் பொதுவாக அம்மணி வேலையில் இருந்து வர்றதுக்குள்ள வீட்டு பின் புற  தோட்டத்தை சுத்தம் பண்ணிடுவேன்.

ஏன்னு கேக்குறீங்க? நல்ல கேள்வி தான்.

நம்ம சுத்தம் பண்ணும் போது அம்மணி அங்கே இருந்தாங்கனா சுபர்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.. அது நமக்கு ஆகாது. அது மட்டும் இல்லாம.. இப்படி பண்ணுங்கோ.. அப்படி பண்ணுங்கோன்னு ஒரே விஷயத்தை மேஜர் சுந்தராஜன் பாணியில்  இங்கிலிஷ் - தமிழ்ன்னு மாத்தி மாத்தி அறிவுரை வேற..

இந்த வெள்ளியும் அப்படி தான் ஆரம்பிச்சது.. இங்கே இப்ப எல்லாம் ஒரு கான்சப்ட் வந்து இருக்கு.. "Raised Garden Bed" உயர்த்தி அமைக்க பட்ட படுக்கை!

புதுசா ஒன்னு வந்துட கூடாதே.. அம்மணி வாங்கி வந்து அதுல கத்திரி - புதினா - தக்காளி - லொட்டு - லொசுக்குன்னு போட்டுட்டாங்க. அதுக்கும் மேலே ஒரு ஓரத்தில் ஒரு சின்ன தொட்டியில் பொன்னாங்கன்னி கீரை.. அந்த  பொன்னாங்கன்னி கீரை தொட்டிய இந்த உயர்ந்த படுக்கை தோட்டம் மேலே வைக்கணும். வீட்டை சுத்தி நிறைய முயல். எட்டிச்சினா மொத்தத்தையும் கும்பலா சேர்ந்து அரை மணி நேரத்தில் காலி பண்ணிடும்.
உயர்த்தி தோட்ட படுக்கையின் மேல் பொன்னாங்கன்னி.. 

இந்த மாதிரி தான் இந்த வெள்ளியும் ஆரம்பிச்சேன். பொன்னாங்கன்னி தொட்டிய தூக்கி கீழே வைச்சிட்டு மத்த எல்லாத்தையும் சுத்தம் பண்ணிட்டு வீட்டுக்குள்வரும் பொது எட்டு மணி.

அம்மணியும் வீட்டை வந்து சேர..

பின்னால சுத்தம் பண்ணிடீங்களா...

எஸ் மேம்...

சூப்பர், பொன்னாங்காணி நல்லா வளந்து இருக்கு... இந்த ஞாயிறு சமைக்கிறேன்..

சூப்பர்.. ஆண்டவன் பொன்னாங்கன்னிய படைச்சதே அம்மணி சமைக்க தான். இவங்க சமையல் அப்படி இருக்கும்.

நினைத்து கொண்டே படுத்தேன்..

காலையில் அம்மணியும் கண்மணிகளும் வெளியே கிளம்ப.. நானும் தோட்டத்து புறம் வந்து பார்க்கையில் ... பேய் அறைந்தது போல் அலறினேன்.

சுத்தம் செய்யும் போது கீழே வைத்த பொன்னாங்கன்னியை மீண்டும் மேலே வைக்க மறந்துவிட்டேன். மொத்த கீரையையும் முயல்  ஸ்வாஹா..

தொட்டியை பார்த்தால்.. ஊரான் காசை கொள்ளையடித்து விட்டு திருப்பதிக்கு மொட்டை போட்ட சேகர் ரெட்டி.. கும்புடுறேன் சாமி OPS இருவரின் தலை போல் இருந்தது..

கண்ணும் மணியுமா அம்மணி காத்து வந்தாங்கா..
அய்யயோ.. என்ன பண்ணுவேன்..


இவர்கள் மூவரும் இல்லம் வருமுன் ...


அடிச்சி புடிச்சி மார்க்கெட் போய்.. பச்சை நிறத்தில் இருந்த அம்புட்டு இலையும் வாங்கியாந்து.. பிரட்டி வைச்சேன்..

பின்னர் :

என்னங்க இது.. வித்தியாசமா இருக்கே?

நம்ம

வீட்டு பொன்னாங்கன்னி தான்.. கூட இந்த ஊர் கீரையும் ஒன்னு போட்டேன்.
உனக்கு பிடிக்கும்னு நானே பிரட்டிட்டேன்...

ஓ..  பொன்னாங்கன்னி நல்லா வளந்து இருந்ததே .. நாளைக்கு நானே கூட்டு  பண்ணலாம்னு யோசித்தேன். இனிமேல் இந்த கீரையை நீங்க சமைக்காதீங்க நானே சமைக்கிறேன்.

பின்குறிப்பு :

இனிமேல் நீங்க இதை சமைக்காதன்னு சொன்னாங்களே.. ஒரு வேளை சமையல் கேவலமா? பொதுவா நல்லா இருக்குன்னு தானே சொல்லுவாங்க..

எது என்னமோ.

மயிரிழையில் தப்பித்தேன். 

திங்கள், 3 ஜூலை, 2017

ஹோட்டலில் போய் சாப்பிடுறவன் எவன்?

ஹோட்டலில் போய் சாப்பிடுறவன் எவன்? - நிர்மலா சீதாராம்.


ஆணவ திமிர் பிடித்த அமைச்சருக்கு...ஒரு விளக்கம்..

இங்கிலாந்து நாட்டில் மேல் படிப்பு படிக்க செலவு செய்யும்
 வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து ஆந்திராவில் காங்கிரஸ் அமைச்சரின் மகனை  காதல் திருமணம் செய்து கொண்டு.. பிறந்த நாளில் இருந்து இன்று வரை பசி - பட்டினி - சமையலறை - கழிவறை இல்லாத பத்து அடி அறை - கைக்கும் வாய்க்கும் எட்டும் அளவான கூலி ... என்று எதையும் அறியாத தமக்கு
ஹோட்டலில் சாப்பிடுறவன் எவன் என்று தான் கேட்க தோன்றும்.


என் வாழ்க்கையில்  24  வயதில் பாம்பாயில் வாழ்ந்து கொண்டு இருந்தேன் .. அன்று ஒரு நாள்..

அலுவலகத்திற்கு சென்ற என்னோடு இன்னும் மூன்று பேர். நால்வருமே தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக பாம்பே சென்றவர்கள். தம்மை போல் இங்கிலாந்து சென்று படிக்க எங்கள் பெற்றோர்கள் அரசியல் ஆதாயம் கொண்டவர்களாய் இல்லாவிடினும் . அவர்களின் கடின  உழைப்பால் அவர்கள் செய்த தியாகத்தினால்  நாங்கள் நால்வருமே அவரவர் துறையில் முதுகலை பெற்றவர்கள்.

சம்பளம் .. ஆளுக்கு 2 ,500  மாதத்திற்கு..

தங்கியதோ பத்துக்கு பத்துக்கு என்ற அறை. காலையில் ஆறு மணிக்கு முன்னால் நாங்கள் விளக்கையோ மற்றும் சத்தம் எதுவும் போட கூடாது. வீடு உரிமையாளரின்  எழுதாத சட்டம்.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...