Sunday, March 20, 2016

சம் மோர் குழம்பு ப்ளீஸ் ....

டிங் .. டாங்...

ஞாயிறும் அதுவுமா மதிய உணவு நல்லா ஏதாவது அம்மணி செஞ்சு இருப்பாங்கன்னு யோசித்து மேசையில் அமர அங்கே நேத்து ராத்திரி  மீந்த  ஐட்டம் மட்டும் இருக்க நொந்து கொண்டே உண்டு விட்டு..

அத்திப்பூத்தது போல் ஒரு பூனை தூக்கம் போடலாம் என்று நினைத்து கண்ணை மூடும் வேளையில்.. அழைப்பு மணி...

அடியேன் இல்லத்தில் தான் மூன்று சந்ததியை சேர்ந்த நான்கு தாய்குலம் இருக்கின்றதே.. யாராவது கதவை திறப்பார்கள் என்ற நப்பாசையில் தூங்க முயல...

மணி மீண்டும் அடித்தது...

யாராவது போய் யாருன்னு பாருங்களேன்...ப்ளீஸ்.

"பி தி மேன் ஆப் தி ஹவுஸ்", இளையவள் அவள் அறையில் இருந்தே அதட்டினாள்.
ஆமா.. இந்த மாதிரி வேலை வரும் போது மட்டும் "பி தி மேன்" ... இல்லாட்டி  ஒரு ஓரத்துல்ல போய் உட்கரன்னு சொல்லுவிங்களே..ன்னு நினைத்து கொண்டு கதவை திறக்க சென்றேன்.

திறக்கும் முயலும் போதே மணி இன்னொரு முறை அடித்தது.. ஒருவேளை யாராவது விற்பனையாளர்களா என்று  துவாரம் வழியாக பார்க்க ... அதில் கண்ட காட்சி என்னை   பேய் அறைந்தவன் போல் மாற்றியது (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இனொரு நாள் சொல்கிறேன்) .

கதவின் அடுத்த பக்கத்தில் குடும்ப சகிதம் தண்டபாணி..

தண்டபாணி தானே .. நல்ல நண்பன் தானே , இவனை பார்த்ததும் பேய் அறைந்ததை போல் ஏன் ஆனேன்... நல்ல கேள்வி.

மூன்று நாட்களுக்கு முன்.. அலை பேசி அலறியது..

விசு ஹியர்...

வாத்தியாரே.. எப்படி ஒரே ரிங்கில் எடுத்துட்ட..?

ரொம்ப முக்கியம்..

இல்ல சொல்லு வாத்தியாரே.. எப்படி ஒரே ரிங்கில் எடுத்த?

தண்டம்.. இந்த எத்தனை ரிங்கில் எடுத்த என்பது ஒரு சிதம்பர ரகசியம்.. அதை பத்தி அப்புறம் சொல்லுறேன்...விஷயத்த சொல்லு...

இல்ல, வாத்தியாரே.. இந்த ரிங் விஷயத்த சொல்லு..

டேய்.. விஷயத்த சொல்லு..

இந்த ஞாயிறு மதியம் போல் உங்க வீட்டு பக்கத்துல தான் இருப்போம்.. வரட்டுமா?

என்ன கேள்வி பாணி..வந்து  சேர். சரி என்ன விஷயம்.

ஒன்னும் இல்ல வாத்தியாரே.. இவ, அது தான் என் வீடு ராசாத்தி  டென்னிஸ் ஆட்டத்துல பைனல் வந்துட்டா.. உங்க வீட்டு பக்கத்தில் தான் பைனல்.

டேய்.. நாங்களும் வரோம் .. பாக்குறதுக்கு.

நீ இப்படி தான் கேட்பன்னு தெரியும்.. அங்கே பார்வையாளர்கள்  அனுமதி இல்ல.

சரி.. ஆட்டம் எத்தனை மணிக்கு முடியும்.

மதியம் 1 மணி போல்.

இப்படி பண்ணேன் பாணி..

எப்படின்னு சொல்லாம இப்படின்னு சொன்ன? எப்படி...

அப்படி போடு...

இப்ப நீ எப்படின்னு சொல்ல போறியா? இல்லாட்டி இப்படிதான்னு நானே முடிவு பண்ணட்டா?

தண்டம் .. ஆட்டம் முடிஞ்சதும்.. நேரா எங்க வீட்டுக்கு லஞ்சுக்கு  வந்துடு..

நானும் அதே தான் யோசித்தேன் வாத்தியாரே.. சுந்தரி தான் அக்காவ ஏன் தொந்திரவு படுத்துனும்னு சொல்லிட்டா.

பாணி, இந்த மாதிரி நீங்க யாராவது வந்தா தான் எனக்கு ருசியா ஏதாவது கிடைக்கும் .. தயவு செய்து வாங்க.

சரி, வாத்தியாரே.. முடிஞ்சா மோர் குழம்பும் செய்ய சொல்லு.

குழம்பும் .. .. பும் ன்னு ஏன் சொன்ன?

வாய் கிழிய எழுது. ஆனால் பேசுறது மட்டும் புரியாத மாதிரி நடி..

தண்டம் . அது வாய் கிழிய எழுதுறது இல்ல.. கை வலிக்க எழுதுறது..

என்னமோ ஒன்னு..

சரி.. குழம்பும்ன்னு ஏன் சொன்னே?

குழம்புன்னு சொன்னா நீ அதை மட்டும் செஞ்சி வைப்ப இல்ல .. அதனால தான்.. மத்ததையும் செய், கூடவே மோர் குழம்பும் செய்.

ஒ.. நல்ல விவரமா இருக்க பாணி.

கதவை திறந்தேன்..

வா பாணி.... சுந்தரி வாங்க.. மேட்ச் என்ன ஆச்சி..?

கடைசி செட்டில் கோட்டை விட்டுட்டா வாத்தியாரே..

சரி விடு... பைனல் வரை வந்து இருக்காளே, அத பாராட்டு..

வாத்தியாரே.. உன் பொண்ணு கோல்ப் ஆட்டத்தில் இப்படி கோட்டை விடும் போது நீ போடற கூத்து எனக்கு தெரியாதா?

பாணி.. இந்த மாதிரி நேரத்தில் அப்பன் சத்தம் போடணும் அடுத்தவன் தட்டி கொடுக்கணும். வா உள்ளே .வா..

சுந்தரியும் ராசாத்தியும் அமர.. நானோ.. அம்மணியும் ராசாதிக்களையும் அழைத்து கொண்டே...அவர்கள் அறையை நோக்கி சென்றேன்.

யாருங்க?

சுந்தரி.. தண்டபாணி.. குடும்பதோட.. அவங்க அம்மா வேற வந்து இருக்காங்க..

ஏன் திடீர்ன்னு?

மூணு நாளுக்கு முன்னாலே சொன்னாங்க .. லஞ்சுக்கு வாங்கன்னு நான் தான் சொல்லிட்டேன்.

லஞ்சுக்கா? எங்க லஞ்சு... எப்ப லஞ்சு?

ஐயோ.. உன்னிடம் சொல்ல மறந்துட்டன். எப்படியாவது காப்பாத்து.,.

ஒரு வேலை . ஒரு வேளையாவது ஒழுங்கா செஞ்சு இருக்கீங்களா?

ஒரு வேளையா.. ஒரு வேலையா?

ரொம்ப அவசியம்..

எப்படியாவது சமாளி..ப்ளீஸ்..

வாங்க சுந்தரி.. வாங்க..

ஐயோ, சாரி அக்கா..தூங்கினு இருந்தீங்களா?

காலையில் சீக்கிரம் எழுந்தது .. கொஞ்சம் அசத்தியா இருந்தது.

வாத்தியாரே.. செம பசி .. சாப்பிடலாமா.

ஆமா..இல்ல.. பசித்தால் சாப்பிடனும்..

அடேங்கப்பா.. பசிச்சா சாப்பிடனும்.. இவ்வளவு பெரிய விஷயத்த இவ்வளவு சிம்புளா சொல்லிட்டியே ...சாப்பிடலாமா?

பாணி...

என்ன வாத்தியாரே .. தீபாவளிக்கு கோழி திருடி மாறினவன் போல் முழிக்கிற ?

ஒரு தவறு நடந்துடிச்சி..

உப்பு அதிகமா போட்டுட்டியா? அதுக்கு என்ன? ரெண்டு தக்காளியா போட்டு இன்னொரு முறை கொதிக்க வை..

இல்ல, பாணி வேறு ஒரு தவறு..

ஒ . மோர் குழம்ப மறந்துட்டியா? பரவாயில்லை..

டேய்... நீ வரன்னு சொன்னதையே மறந்துட்டேன்..

வாத்தியாரே... கிண்டல் பண்ணாத.. பசிச்சா சாப்பிடனும் நீ தானே சொன்னே..

ஒரு அஞ்சு நிமிஷம் கொடு.. பீட்சா ஆர்டர் பண்றேன்.

வாத்தியாரே உண்மையாகவே மறந்துட்டியா..கிண்டல் தானே பண்ற?

உண்மையாவே பாணி..

அனைத்தையும் கேட்ட சுந்தரி.. என் மனைவியை பார்க்க .. அனைவரும் சேர்ந்து என்னை பார்க்க.. சுந்தரியோ..

அண்ணே... இந்த மாதிரி மறப்பிங்கோன்னு எனக்கு தெரியும்..

சாரி சுந்தரி.. இப்ப என்ன பண்றது.

நேத்து நான் அக்காவிடம் பேசும் போது நாளைக்கு பாக்கலாம்னு சொன்னேன்.. அவங்க.. நாளைக்கு எங்க எப்படின்னு கேட்டாங்க..

நாங்க தான் லஞ்சுக்கு வருமேன்னு சொன்னேன்..

அவங்களோ ...ஒன்னும் தெரியாமல் முழிக்க ..

நானோ என் வீட்டு அம்மணிய பார்க்க..

வாங்க, சாப்பிடலாம்.

இரு, ஆர்டர் பண்ணிடறேன்..

ஆர்டர் ஒன்னும் தேவை இல்ல, நான் லஞ்ச் செஞ்சு இருக்கேன்.

என்று அனைவரும் மேசையில் அமர..

நானோ.. மனதில்.. அப்பவே யோசித்தேன் .. என்னடா.. பக்கத்துல்ல இருக்கிற வெள்ளைக்காரன் வீட்டில் இருந்து கருவாடு வாசனை வருதேன்னு..

என்ன வாத்தியாரே.. எங்களை பார்த்தவுடன் டென்சன் ஆயிட்டியா?

பாணி.... உனக்கு இருக்கு மவனே.. இருக்கு.. அவங்களோடு சேர்ந்து  நீயும் என்னை போட்டு பாத்துட்ட இல்ல..

அனைவரும் சாப்பிட ஆரம்பிக்க.. பாணியோ என்னிடம்.. வாத்தியாரே..

பாஸ் மீ சம் மோர் குழம்பு..

இந்தா.

சம் மோர் குழம்புன்னு கேட்டா  ... கத்திரிக்காய் குழம்பே தரியே..

ஒ.. நான்  "Some More Kulambu" ன்னு தவறா புரிஞ்சிக்கிட்டேன் .. சாரி..

இதுக்கு போய் ஏன் சாரி.

சாரி இதுக்கு இல்ல..

பின்ன..
மோர் குழம்பு செய்யல ... அதுக்கு தான் சாரி..

நல்லா கை வலிக்க பேசு வாத்தியாரே..

டேய்.. அது வாய் கிழிய...

பின் குறிப்பு :

அலை பேசி மீண்டும் அலறியது..

வாத்தியாரே.. மீண்டும் ஒரே ரிங்கில் எடுதுட்ட்ட..

சரி சொல்லு..

ஒன்னும் இல்ல.. இந்த எத்தனை ரிங்கில் எடுக்குறாங்க என்பதில் எதை ஒரு விஷயம் இருக்குனு சொன்னீயே..

டேய்.. ரொம்ப அவசியம்.. அடுத்தவாரம் சொல்றேன்..

அடுத்த வாரம் ..எங்க சந்திக்க போறோம்.

உங்க வீட்டுல தான், சனி கிழமை லஞ்சுக்கு வரட்டுமா.

கண்டிப்பா வா..

சரி.. போனை சுந்தரியிடம் கொடு.. லஞ்சுக்கு வரேன்னு நானே சொல்லிடறேன்.

8 comments:

 1. சம் மோர் குழம்பை மிகவும் ரசித்துக்
  குடித்தேன்...தப்பு தப்பு படித்தேன்

  ReplyDelete
 2. :-) நல்ல அனுபவம்தான். உங்களைப் பற்றி எல்லோரும் நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்காங்க விசு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க இமா,., எங்கே ஆளையே காணோம். உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. நான் வந்த புதிதில் தாங்கள் அல்லவா என்னை வலைசரம் மூலம் அநேகருக்கு அறிமுக படுத்தி வைத்தீர்கள்.

   Delete
 3. அப்போ.... அடுத்த வாரமும் செம சாப்பாடு வெய்ட்டிங்க்.....?

  ReplyDelete
 4. தொடர்புக்கு....

  ReplyDelete
 5. ஐயோ பாவம் பாணி! விசு இப்படி சம் மோர்க்குழம்பு கொடுக்காமல்..சம் மோர் குழம்பு கொடுத்து ......அது சரி சுந்தரிக்குக் கூடத் தெரியாதோ ??!! மோர்க்குழம்பு செய்யச் சொல்லலை போலும் அவர்கள் அக்காவிடம்

  ReplyDelete
 6. வணக்கம்

  நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. எழுதியதில் ஒரு தவறு. தண்டபாணிக்கு, நீங்கள் மோர்க்குழம்பு செய்திருப்பீர்கள் என்று தெரியும். (he assumes). உப்பு ஜாஸ்தினா 2 தக்காளியைப் போட்டுக் கொதிக்கவை என்று சொல்லமுடியாது. மோர்க்குழம்பை மீண்டும் எப்படிக் கொதிக்க வைக்க முடியும்? பருப்புக்குழம்பு போல் இல்லை அல்லவா? மற்றபடி எப்போதும்போல் நன்றாக எழுதியுள்ளீர்கள்.

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...