மட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் "வாடி என் கெப்பங்கிழங்கு" மற்றும் ஒரு தலை ராகத்தில் வரும் "நீனா மீனா லீலா ஷீலா ராதா வேதா..."என்ற பாடல்களை முணுமுணுத்து கொண்டு இருந்த வேளையில் ... அடியேனின் மனதில் குடி இருந்தது..
சிலோன் பாப்பிசை..
சுராங்கனியில் ஆரம்பித்து, சின்ன மாமியே, ஓ மை டார்லிங் ரோஸி, அடிடா சுந்தரலிங்கம், காலேஜ் லைஃப் பைன் என்று பல பாடல்கள் ... என்னே ஒரு ராகம் என்னே ஒரு தாளம் ... இசையோடு நகைசுவை வேறு... சொல்ல வேண்டுமா?
எங்கு போனாலும் நண்பர்கள் மத்தியில் ..
விசு ஒரு பயலா பாட்டு பாடு என்று விண்ணப்பம் வரும். இந்த பாடல்களை நான் அறிந்த ஒரே காரணத்தினால் அறியாதவர்கள் இல்லத்தில் நடக்கும் விழாக்களுக்கும் அடியேனுக்கு அழைப்பிதழ் வரும்.
இப்படி நாட்கள் ஓடி கொண்டு இருக்கையில்...
அருகில் இருந்த ஒரு தியேட்டரில் கமலஹாசனின் "சவால்" என்ற படம் காலை காட்சிக்கு வந்தது. ரிலீஸ் ஆகும் போது அந்த படம் சரியில்லை என்று கேள்வி பட்டதால் தவிர்க்க பட்டது. இப்போது பார்க்க வேற படம் இல்லையே என்று காலை காட்சிக்கு நண்பன் ஒருவருடன் சென்றேன். அங்கே ஒரு சண்டை காட்சியில் .. பேட்டை ரௌடியாக பரட்டை தலை தொங்கு மீசை வைத்து கொண்டு வந்து ஒருவர் "வூடு கட்ட" அருகில் இருந்த நண்பன்..
விசு.. இவருக்கு ஒரு நன்றி சொல்லிக்கோ...
யாரு இவர்...?
அட பாவி.. பயலா பாடல்கள் பாடுறேன்னு ஊரை ஏமாத்தி சுத்தினு இருக்கியே..
அதுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
அந்த பாடல்கள் பாடியது இவருதான்.. .. சிலோன் மனோகர்...!
ஓ மை காட்.. உண்மையாகவா.. என்னே அருமையான குரல் என்று நினைக்கையில் அந்த காட்சி மறைய அவரை மீண்டும் காண அடுத்த நாள் அதே பகல் காட்சிக்கு வந்தேன். படம் மாற்ற பட்டு ரஜினியின் "தீ "என்ற படம் ஓடி கொண்டு இருக்க.. அதே நண்பன்..
நீ என்ன படம் பார்க்கவா வந்த.. மனோகரனை தானே பார்க்க வந்த.. இந்த படத்திலும் இருக்காரு வா..
என்று அழைக்க.. இன்னொரு முறை .. மனோகரன்..
சிலோன் பாப்பிசை ஒரு வித்தியாசமான வகை. அதை பாடுபவர்கள் எனோ தானோ என்று பாட முடியாது.. ரசித்து ருசித்து சிரித்து பாடவேண்டும். AE மனோகரன் அவர்களின் குரல் வளம் மற்றும் ரசிப்பு தன்மை இப்பாடல்களுக்கு மிகவும் பொருந்தியது...
அதற்கு பின்னர் உறவினர் ஒருவர் மனோகரனின் கேசட் ஒன்றை வெளிநாட்டில் இருந்து வாங்கி அனுப்ப.. இவரின் அணைத்து பாடல்களும் அத்துப்படி..
விட்ட குறையோ தொட்ட குறையோ என்று யாழ்பாணத்து பெட்டையை மணமுடிக்க.. மணம் முடித்த சில மணி நேரங்களில், நண்பன் ஒருவன், அம்மணியை..
அவர்.. பாப்பிசை பாடல்களை வடிவா பாடுவார்.. அதனால அவர் காதல் வலையில் துள்ளி விழுந்தீர்களோ ..
என்று பகடி பண்ண..
உங்களுக்கு எப்படி இந்த பாடல்கள் தெரியும்?
உனக்காக கற்றுக்கொண்டேன்..
விசிறு கதை கதைக்காதீங்க.. எங்க ஊரில் இந்த பாடல்களை படிக்கும் பொடியன்களை நாங்கள் தள்ளியே வைப்போம்.. உங்களுக்கு எப்படி?
சரி விடு... அதுவா முக்கியம்...?
ஒரு பாட்டு படிங்க ..
எனக்கு கொஞ்சம் பாட வரும் அதனால படிக்கவேண்டாம் .. வேணும்னா பாடுறேன்..
பாடுறத தான் நாங்க படிக்குறதுன்னு சொல்வோம்..
அப்ப படிக்கிறதை "பாடு"ன்னு சொல்லுவீங்களா?
அய்யயோ... படிங்க..
யாரு பாட்டு.. மனோஹரனா? நித்தி கனகரத்தினமா?
ஏங்க.. நான் மோசம் போய்ட்டேன் போல இருக்கே.. பாட்டு மட்டும் இல்லாம பாடுனவங்க பேரு கூட தெரியுதே..
சரி வேணா விடு...
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
சொல்லு..
AE மனோகரன் வீடு எங்க தெருவில் தான் இருந்தது..
ரியலி..அவரு எப்படி...
அப்ப நான் ரொம்ப சின்ன பெட்டை .. ஆனா அம்மாவுக்கு அவங்க வீடை நல்லா தெரியும்..
சரி.. அவரை பத்தி கொஞ்சம் சொல்லு!
சின்ன வயசுலே எப்ப பாரு சுருட்டை முடி பரட்டை தலை, அழுக்கு ஜீன்ஸ்
கையில் சிகரெட் பாட்டு .. சினிமானு அலைவாராம்.
என் கதையை விடு. மனோகரனை பத்தி சொல்லு..
அவரு தாங்க..நீங்க சிகரெட் பிடிப்பீங்களா?
அதுவா முக்கியம்.. சொல்லு..
எப்படியாவது இசை மற்றும் சினிமாவில் பெரிய ஆளா வரணும்னு கொலோம்போ கிளமபி போய்ட்டாரு ...
அப்புறம்..எங்க ஊரில் வந்த முதல் தமிழ் படத்துல கதாநாயகனா நடிச்சார்.. அதுல அவரு நடிச்சத பார்த்து கமல் ரஜினி ரெண்டு பெரும் .. இவரு எங்க படத்துல நடிச்சாதான் அடுத்த படமே நடிப்பேன்னு பிடிவாதமா இருந்தார்களாம்..
கமல் - ரஜினி பிடிவாதம்.. அதை யார் சொன்னா?
அதுவா முக்கியம்..?
சினிமா மட்டும் இல்லீங்க.. உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான மேடையில் சிலோன் பாப்பிசை பாடல்களை படித்து , தமிழை கடல் கடந்து எடுத்துன்னு போனாரு. உண்மையாவே நல்ல குரல் வளம்..அவரு மட்டும் தலைமயிரை கொஞ்சம் வடிவா வெட்டி இருந்தாரு .. அப்புறம் ரஜினி கமல் எல்லாம் அவுட்.
நீ அவரை பார்த்து இருக்கீயா அவர் பாடி கேட்டு இருக்கீயா?
சத்தியமா...கடைசியா ஒருமுறை நான் யாழ்ப்பாணத்தை விட்டு வரும் போது ஒரு நிகழ்ச்சி பண்ண வந்தாரு.. அங்கே இருக்க எல்லாரும் சுராங்கனி .. சுராங்கனின்னு சத்தம் போட இவரோ.. இந்தியாவில் இப்ப இருக்க நம்பர் ஒன் சாங் படிக்கிறேன்னு சொல்லி .."வாசலில்லா மரமிதுன்னு" ஒரு பாட்ட படிச்சாரு.
அது.. வாசமிலா மலரிது..
ரொம்ப முக்கியம்... நான் பேசும் போது இப்படி திருத்துறது எனக்கு பிடிக்காது.
சரி..அவரை பத்தி மேலே சொல்லு..
வேற என்னத்த சொல்றது.. இங்கே வந்த பிரச்சனையில் தான் நாங்க எல்லாம் ஊரை விட்டு வெளிக்கிட்டோமே.. அப்புறம் அவரை பத்தி ஒன்னும் தெரியல..
தற்போது, அம்மணியோட ஒரு உரையாடல்..
AE மனோஹரன் தவறிட்டாரு...
ஐயோ.. உண்மையாவா.. நல்ல நடிகருங்க.. அந்த காலத்துல..
நினைவு இருக்கு.. அவரோட நடிப்பை கேள்வி பட்டு கமல் ரஜினி ரெண்டு பேரும் பண்ண பிடிவாதம்..
அது எப்படி உங்களுக்கு தெரியும்..?
எங்கேயோ படிச்சேன்..
நல்ல மனுஷன்.. நல்ல பாடகர்.. உலகம் முழுக்க தமிழை பாடி பாடின்னு வந்தார்.. இருந்தாலும் அவரோட திறமையை இந்த உலகம் வெளி கொண்டு வரலைன்னு தான் சொல்லணும்..
கண்டிப்பா..
RIP .. AE மனோகரன்..
தங்களின் இசைக்கு.. விட்டு சென்ற நினைவிற்கு கோடி நன்றி!
இதோ இந்த குறுகிய காணொளியில் இவரின் அட்டகாசமான குரல் வளத்தையும் உச்சரிப்பையும் கேளுங்கள்.. கூடவே எங்களின் ஆட்டமும் பாட்டமும் தான்.