வியாழன், 27 பிப்ரவரி, 2014

"பாயா" விற்கு பதிலா "சாயா"!வைச்சிக்க நீ!

ஒரு கையிலே ஓசை எழுப்பி, சுவரில்லாமலே சித்திரம் வரைந்து, மௌன கீதங்களால் மாளிகை அமைத்த பாக்யராஜின் இன்று போய் நாளை வா என்று ஆல் இந்திய ரேடியோ விவித்பாரதியில் 9:30 மணிக்கு கேட்ட பின்பும் எனக்கு தூக்கம் வர மறுத்தது. என்ன சொல்வது. வாழக்கையிலே முதல் முறையாக நாளைக்கு ஒரு காரியம் செய்ய போகிறேன்.
விவரமாக சொல்லுகிறேன் கேளுங்கள்! +2 படிக்கும் நான் சென்னையில் விடுதியில் தங்கி இருந்த நேரம். தீபாவளி விடுமுறைக்காக வடபழனியில் உள்ள என் அத்தை வீட்டிற்கு   சென்று இருந்தேன். 4D பேருந்தை அடையாரில் இருந்து பிடித்து தங்க சாலை வந்து சேர்ந்த போது மணி ஒரு 4 இருக்கும் (அந்த வாகன எண்ணை சரியாக தான் சொன்னேன் என்று நினைக்கேறேன், தவறாக இருந்தால் யாராவது தெரிந்தவர்கள் திருத்துமாறு கேட்டு கொள்கிறேன்). தங்கசாலையில் இருந்து பையை தூக்கி தோளில் மேல் போட்டுக்கொண்டு நடந்து செல்லுகையில் ஒரு நினைப்பு. அடடடா. இங்கே பாபு உணவகத்தில் அருமையான பாயா கிடைக்குமே, ஒரு விளாசல் விளாசி விட்டு போகலாமா என்று. மண்டை வேண்டாம் என்று சொன்னாலும் இதயம் வேண்டும் என்று சொன்னதால், நேராக சென்று, முதலில் விலை என்ன என்று பார்த்தேன். பாயா: 2 கால் 2 ருபீஸ், 4 கால் 3.50 ருபீஸ், கணக்கியல் படிப்பவன் ஆயிற்றே, அதனால் கல்லாவில் அமர்ந்து இருந்தவரிடம் 4 கால் 3.50 என்றால் 2 காலுக்கு 1.75 தானே என்றேன். அவர் வீட்டில் என்ன பிரச்சனையோ உனக்கு பாயா இல்லை என்று கூறிவிட்டார். (இப்படி தான் ஆம்பூர் சலாம் ஹோட்டலில் ஒரு முறை ஆசையாக சென்று மூளை இருக்கிறதா என்றேன், அவர் உங்களுக்கு முன் வந்தவருக்கு கூட இருந்தது ஆனால் உனக்கு இல்லை என்றான், அதை பற்றி விவரமாக இன்னொரு நாள் எழுதுகிறேன்).



"விசு வாயிலாதாண்டா உனக்கு கண்டம், இனிமேல் சாப்பிட தவிர உன் வாயை எதற்கும் திறக்காதே" என்று சொன்ன என் பாட்டியின் நினைவு வந்தது. ஹாயா, "பாயா" சாப்பிடலாம் என்று போன எனக்கு"கைக்கு எட்டிய கால்" என் வாயினால் வாய்க்கு எட்டவில்லையே என்று நொந்து கொண்டே பக்கத்துக்கு கடையில் ஒரு "சாயா" குடித்து விட்டு அத்தை   வீட்டை நோக்கி நடந்தேன். 




சரி, இப்போது தூக்கம் என் வரவில்லை என்று சொல்லுகிறேன்,. அத்தை வீட்டில் நுழைந்த உடனே என் கண்ணில் பட்டது ஒரு போர்வை போர்த்திய விஷயம். "பாயாவை" நினைத்து கொண்டே வந்ததோ என்னோமோ அதை பார்க்க ஒரு ஆட்டிற்கு போர்வை போர்த்தி நிக்க வைத்ததை போல் இருந்தது. அங்கே வந்த என் அத்தை மகன் சத்தியிடம், இது என்ன என்றேன். அவன் வாய்  எல்லாம் பல். "பார்வையை தூக்கினான் போர்வையை நீக்கினான்". அதனுள்ளே பதுங்கி கிடந்தது சிவப்பு நிறத்தில் லூனா என்று அழைக்க படும் அந்த காலத்து இரு சக்கர வாகனம். அதற்கு முன்னால் வரை சைக்கிள் மட்டுமே தொட்டு பழகிய எனக்கு கை கால் எல்லாம் வேர்த்து விட்டது. தொட்டு பார்க்கலாமா என்றேன், தொடலாம், ஆனால் தொட்டவுடன் இந்த துணியால் துடைத்து விடு என்று ஒரு துணியை குடுத்தான். அவன் சற்று அயர்ந்த நேரத்தில், தொடுவது மட்டும் என்ன? அந்த வாகனத்து இருக்கையில் அமர்ந்தே பார்த்து விட்டேன். இது உனக்கா என்றேன், இல்லை இது அப்பாவிற்கு, எனக்கு இன்னும் இதை ஓட்ட வயது பற்றாது என்றான். நான் அவனுடன் சிறியவன், அவனுக்கே குறைந்த வயது என்றால், எனக்கு?

இரவு ஒரு 8 மணி இருக்கும், சத்தி என் அருகில் வந்த ஒரு சதி திட்டம் போட்டான். நாளை காலை அப்பா ஊருக்கு போகிறார், நாம் வேண்டும் என்றால் இந்த வண்டியை எடுத்து கொண்டு ஒரு சிறிய ஆட்டம் போடலாம் என்றான். இதை உனக்கு ஓட்ட தெரியுமா என்றேன், நான் நன்றாக ஓட்டுவேன், முடிந்தால் உனக்கும் சொல்லித்தருகிறேன் என்றான். இதனால் போனது தான் என் தூக்கம்.

திரும்பி, திரும்பி படுத்து எப்போது தூங்க போனேன் என்று எனக்கே தெரியாது. காலை ஒரு 5:15 மணிக்கு எழுந்து, குளித்து புது துணி (எங்க மாமா ஒரு தங்கமான மனசுகாருங்க, எப்ப அவர் வீட்டுக்கு போனாலும் புது துணி வாங்கி வைச்சிருப்பாரு) அணிந்து  கொண்டு சத்தியை எழுப்பினேன். நேரம் என்ன என்ற கேட்ட அவனிடம் 5:45 என்று சொன்னவுடன் கத்த  ஆரம்பித்து விட்டான்.அப்பா 8 மணிக்கு மேல தான் போவாரு அதுக்கு முன்னால நீ மீண்டும் என்னை எழுப்பினால் உனக்கு இன்று "லூனா" கிடையாது என்றான். என்ன செய்வது. அத்தை போட்ட காப்பியை  குடித்து கொண்டே "லூனா" அருகில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தேன். என் மனதில் இருந்ததை தெரிந்தவர் போல் என் மாமா, இன்னும் கொஞ்ச நாள் பொறு, உனக்கு ஓட்ட சொல்லி தருகிறேன் என்றார். மனதில் ஒரு திகிலான தில். மாமாவும் அத்தையும் 8 மணி போல் பிரபாத் பஸ் ஸ்டாப் சென்று 33 பேருந்தை பிடித்து (மீண்டும் வாகன என்னில் ஒரு சிறு சந்தேகம்) சென்ட்ரல் ரயில் நிலையம் புறப்பட்டனர். அவர்கள் அந்த பஸ்ஸை பிடிக்கும் வரை நான் காத்து இருந்து வீட்டிற்கு ஓடி வந்த நான் தயாரான நிலையில் இருந்த சத்தியை பார்த்தவுடன் பரவசம் அடைந்தேன்.

நீ தயாரா? நான் தயார் என்றான். சரி உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என்றான்? ஏன் என்று கேட்டேன், பெட்ரோல் போட வேண்டும் என்றான். ஒரு லிட்டர் 7 ருபாய் சொச்சம். என்னிடம் ஒரு 4 அல்லது 5 இருக்கும் என்றேன் (3:50 குறைத்து தான் சொன்னேன், போகும் போது பாபு உணவகத்தில் மீண்டும் ஒரு முறை சென்று வாயை மூடி கொண்டு " பாயா "சாப்பிடலாம் என்ற நப்பாசை). சரி அதை எடுத்துகொள் வரும் போது பெட்ரோல் போட்டு வைக்க வேண்டும், இல்லாவிடில் அவர் "அலைகள் ஓய்வதில்லை தியாகராஜன்" போல மாறி விடுவார் என்றான். புது துணி போடவில்லையா  என்று கேட்டேன், அதற்க்கு அவன் நான் இதை நேற்றே புது துணி போட்டு ஓட்டினேன் வா போகலாம் என்றான்.

எங்கே போவது? நேராக மெரினா பீச் என்று ஒரு பிளான். ப்ரோட்வயில் நேராக சென்று குறளகம் வந்து சேர்ந்தவுடன், அரை லிட்டர் போட்டால் போதும் ஆளுக்கொரு "கோன்ஐஸ்" வாங்கி கொள்ளலாம் என்றான். சரி என்று அதை ருசித்து விட்டு நேராக பீச் பக்கம்   வண்டியை விட்டோம். கோட்டைக்கு  சற்று முன்னே உள்ள பாலத்தின் அடியில் வண்டியை நிறுத்தி என்னை ஓட்ட சொன்னான். அவன் ஓட்டுவதை ஒழுங்காக கவனித்தால் மிகவும் லாவகமாக அதை ஓட்டினேன்.

கோட்டை அருகில் சென்றவுடன் வண்டியை திருப்பி வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்த எங்களுக்கு அங்கே காலை ஓட்டம் ஓடி கொண்டு இருந்த நரசிம்மனை பார்த்தவுடன் ஒரு சந்தோசம். வா நரசிம்மா, நீயும் வண்டியில் ஏறு என்று சொல்லி வந்து கொண்டு இருந்த எங்களுக்கு வழியில் ஒரு ஏழரை சனியன் உள்ளது என்று அப்போது தெரியாது.

பாரிஸ் கார்னர் அருகே வந்து இருப்போம், ஒரு போலீஸ் எங்களை நிறுத்தினார். அவர் நிறுத்தியவுடன் சத்தியும் நரசிம்மனும் பேய் அறைந்ததை போல் (பேய் அறைந்த கதையை இன்னோருநாள் சொல்லுகிறேன்) ஆகிவிட்டனர். எனக்கும் பயம் தான் என்ன இருந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளாததால் அந்த போலீஸ் என்னிடம் பேச்சு கொடுத்தார்.
போலீஸ்: எங்கடா போறீங்க?
நான்:வீட்டுக்கு
போலீஸ்: இது டூ வீலெர் ஆச்சே என் மூணு பேர் போரிங்கோ?
நான் :(அப்ப ஒரு வீலுக்கு ஒருத்தன்தான  போலாம்னா பஜாஜ் செடக் வண்டில மூணு வீல் இருக்கே அப்ப மூணு பேர் போலாமா கேட்கலாம்னு யோசித்தேன், ஆனா என் பாட்டி சொன்ன, "விசு உனக்கு வாயில தான் கண்டம் டைலாக் நினைவுக்கு வந்ததால்) "சாரி சார்"
போலீஸ்: இனிமேல் மூணு பேரு போறதுனா ஒருத்தன் ரிக்சாவில் போங்கோ
நான் :ஓகே சார் (வண்டியை ஸ்டார்ட் பண்ணி கொண்டு)
போலீஸ்: நான் பேசினே இருக்கேன், நீ எங்க கிளம்புற
நான்: வீட்டுக்கு சார் 
போலீஸ்: கேட்ட கேள்விக்கு ஒரு மாதிரி பதில் சொல்லுறியே உனக்கு என்ன "குடும்பம் ஒரு கதம்பம்" விசுன்னு நினைப்பா?
நான்:இல்ல சார்
போலீஸ்:சரி ஒரு அஞ்சு ரூபா இருந்தா குடுத்துட்டு போ
நான்: அஞ்சி ரூபா இருந்தாதான் ஒருத்தன் ரிக்சாவில் போய் இருப்போமே சார்
போலீஸ்: விட்டேனே பார். மீண்டும் டைரக்டர் விசு மாதிரி பேசுறியே
நான் :சாரி சார்
போலீஸ்: சரி, பாக்கெட்டில் கை விட்டு பார் அஞ்சு ரூபா இருக்கும்.
நான்: என் பாக்கெட்டில் அஞ்சு ரூபா இருந்தா அந்த பேண்டே வேற யாருதோ சார்.
போலீஸ் : திரும்பவும் விசு டைலாக்?
நான் : சாரி சார்
போலீஸ்: இப்ப எவ்வளவு காசு தான் கொடுக்க முடியும்?
நான்: இங்கேயே வெயிட் பண்ணுங்கோ நான் வீட்டில போய் எடுத்துட்டு வரேன்.
போலீஸ்: நீ வராட்டி.
நான்: இவங்க ரெண்டு போரையும் விட்டு விட்டு போறேன். இவங்க தான் கரண்டீ
போலீஸ்: நீ வராட்டி இவங்க ரெண்டும் பேருக்கும் தீபாவளி ஒரு நாள் முன்னாலே வரும்
நான்: ஏன் சார்?
போலீஸ்: (என் பேச்சில் மயங்கி விட்டார் போல்), இவ்வளவு நல்லா பேசுறியே உன் பெயர் என்ன தம்பி?
நான் :"விசு" சார்!

போலீஸ் : என்னை விட்டுருன்னு (அவர் லத்திய சைக்கிளில் லாவகமாக சொருவி வண்டிய எடுத்தார்).

அவர் சென்றவுடன் வண்டிய ஸ்டார்ட் பண்ணி ஏறுங்கடான்னு சொன்னேன். ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து " மாப்பு நீ வண்டியை வீட்டுக்கு எடுத்துட்டு போ, நாங்க பின்னாலே நடந்து வரும்னு சொன்னாங்கோ.

வீட்டில் வந்து கதவை திறந்த எனக்கு ஒரே அதிர்ச்சி, மாமாவும் அத்தையும் ரயில மிஸ் பண்ணிட்டு நாளைக்கு போகலாம்னு திரும்பி வந்துட்டாங்க. மாமா என்னிடம் நேராக, வண்டிய எங்க எடுத்துன்னு போனன்னு கேட்டார். ஒன்னும் இல்ல மாமா, பக்கத்து தெரு குழாயில் தண்ணி போட்டு (வண்டிக்குத்தான்) துடைக்கலாம்ன்னு தள்ளிண்டே போனேன்னு சொன்னேன். அப்ப ஏன்  வண்டி இன்னும் அழுக்கா இருக்கு? மாம்ஸ், அங்க தண்ணி வரல. சரி, இந்தா ஒரு பக்கெட்  தண்ணி, அந்த போலீஸ் காரனிடம் சமத்தா பேசின இல்ல? அதே போல் சமத்த கழுவுன்னாரு.

மாம்ஸ், அது நடந்தே அரை மணி நேரம் ஆச்சி, உங்களுக்கு எப்படி தெரியும். அட பாவி, சென்ட்ரலில் இருந்து வரும் 33,  பாரிசில் ஒரு அஞ்சு நிமிஷம் கூடவே நிப்பானே உனக்கு தெரியாதா? என்ன?. அப்ப பார்த்தேன். அது சரி அவங்க ரெண்டு பேரும் ஏன் பேய் அறைஞ்ச மாதிரி ரோட்டில உட்கார்ந்து விட்டார்கள் என்றார் சிரித்துகொண்டே.

நண்பர்களே, Jokes apart, நாம் அனைவரும் வாழ்கையில் பல நல்ல மனிதர்களை சந்தித்து இருப்போம். என் வாழ்வின் எனக்கு கிடைத்த இந்த மாமா மனிதர்களிலே மாணிக்கம். யாருக்கும்,எப்போதும் தீங்கு நினைக்காதவர். அவரிடம் நான் கற்று கொண்டது எவ்வளவோ நல்ல விஷயங்கள். நன்றி மாம்ஸ்.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

அந்த நாள் மறந்து போனது... நண்பனே.. நண்பனே..நண்பனே...

கீழ் மூச்சும் மேல் மூச்சும் மாறி மாறி விட்டு கொண்டே ஓடி வந்த தண்டபாணியை என்னப்பா ஆச்சின்னு கேட்டது தப்ப போச்சி.  வாத்தியாரே மோசம் போயிடிச்சேன்னு சொன்னான். விளக்கமா சொல்லு பாணி  என கேட்ட எனக்கு அவன் கொடுத்த பதில் ரொம்ப சாதாரணமா இருந்தது.

இன்னிக்கு என் பொண்டாட்டி பிறந்தநாளாம், நான் மறந்தே போயிட்டேன் என்றான். அட பாவி இதுக்கு போய் ஏன்டா இவ்வளவு பதறுற என்று கேட்டதிற்கு அவன் கொடுத்த பதில் என்னை அதிர வைத்தது.

என்னா வாத்தியாரே, இவ்வளவு சிம்பில்லா சொல்லிட? போனவாரம் கூட நானும் என் மனைவியும் நீ உன் பொண்டாட்டி பிறந்தநாளை மறந்துட்டு நீ பட்ட பாட பேசி சிரித்தோம் சொன்னான். அட பாவி, அந்த  விபத்த நானே மறந்துட்டேன், நீங்க எல்லாம் இன்னும் நினைவில் வைத்து இதில் சிரிப்பு வேற என்று சற்று நொந்தேன்.

சரி, இப்ப மணி இரவு 7:30 ஆச்சே இப்ப எப்படி ஞாபகம் வந்ததுன்னு கேட்டேன். ஒன்னும் இல்ல, நம்ப அடுத்த தெரு மாணிக்கவாசகம்  இப்ப தான் போன் பண்ணான். அவன் மனைவி கிட்ட என் மனைவி சொன்னாளாம். இன்றைக்கு என் பிறந்தநாள், என் கணவர் ஏதோ சர்பிரைஸ் பண்ண போறாருன்னு. அதுதான் அடிச்சி புடிச்சி ஏதாவது வாங்கிட்டு போலாம்னு வந்தேன்னு சொன்னான்.

இப்ப 7:30 மணி ஆச்சே பாணி, எதுவுமே கிடைக்காதே சொன்னேன்.வாத்தியாரே, வீட்டுலே எதாவது "கிப்ட் பேக்" பிரிக்காத ஏதாவது இருந்தா ஒன்னு குடு, நாளைக்கே திருப்பி தரேன் சொன்னான்.
அட பாவி  நம்ப நிறைய கிப்ட் அட்வான்சா வாங்கி வச்ச விஷயம் இவனுக்கு எப்படி தெரியும்ன்னு கேட்பதற்கு முன்னே, நீ தான் அந்த பிறந்த நாளை மறந்ததில இருந்து அடுத்த 6 வருஷத்துக்கும் பரிசு வாங்கி ஒளிச்சி வைச்சிருக்கான்னு ஊரே பேசுதேன்னு சொன்னான்.

சரி வீட்டுக்கு வானு சொல்லி அவனுக்கு ஒரு   புது டப்பாவில் இருந்து பிரிக்காத ஒரு "சப்பாத்தி மேக்கர்" கொடுத்தேன். அதை பார்த்தவுடன் அவன் அழுதே போய்ட்டான். வாத்யாரே, "இது கை இல்ல கால்லுன்னு" ஒரு கும்பிடு போட்டன். பாணி, உணர்ச்சிவச படாத, ஒரு ஆணின் கஷ்டம் ஆணுக்குதான் தெரியும், இதுக்கு போய் இவ்வளவு பீல் அக்க கூடாதுன்னு சொன்னேன். அதற்க்கு அவன் இது ஒரு சாதாரண கிப்ட் இல்ல, என் உயிர் காத்த தெய்வம். இதுனால ஒரு கல்லுல ரெண்டு மாங்கா இல்ல ஒரு தோப்பே அடிச்சேன்னு எனக்கு ஒரு பாராட்டை தெரிவித்தான் . புரியும் படியா சொல்லுனு சொன்னேன்.

 வாத்தியாரே, என் கைரேகையை கொஞ்சம் பாருன்னு சொல்லி ஆகைய காட்டுன்னான். அவன் கையிலே ரேகையே காணோம். என்னடா ச்சி கேட்டேன். தினமும் நான் தான் வீட்டில் சப்பாத்திக்கு மாவு பிசையெரென்னு சொல்லி அழுதான். அவன் இத சொல்லுபோதே மெதுவா என் ரெண்டு கையையும் நான் என் பாக்கெட் உள்ள விட்டுவிட்டேன்.

சரி, வீட்டை போய் வேளையோட சேறு சொல்லி விடை பிரியும் போது, அது சரி வாத்தியாரே பொண்டாட்டி பிறந்தநாள மறக்காம இருக்க என்ன பண்ணலாம்னு கேட்டான். நீ போ, நாளைக்கு போன்ல சொல்லுறேன் அப்படியே அசந்தேன்,

பொண்டாட்டி பிறந்த நாள மறக்காம இருக்கனும்ன்னா  என்ன பண்ணலாம்.

தினமும் கலையில் எழுந்தவுடனே பல் விளக்கும் முன்னாலே இன்றைக்கு பொண்டாட்டி பிறந்த நாளான்னு செக் பண்ணிக்கோ. 365 நாளில் ஒரு நாள் வந்தே தீரும்.

பிள்ளைகளிடம் அம்மா பிறந்த நாளுக்கு வெளிய சாப்பிட போலாம்ன்னு சொல்லி வைச்சிரு, அவங்க எப்படியும் நினைவு படுத்துவாங்க.

கல்யாணம் பனும் முன்னாலே எனக்கு இந்த பிறந்த நாள் எல்லாம் கொண்டாட விருப்பம் இல்ல, நீ என் அருகில் இருக்கும் ஒவ்வோர்  நாளும் பிறந்த நாளேன்னு பொதுவா சொல்லி வச்சிரு.

உன் பிறந்த நாளை அவங்க எப்படியாவது ஒருதரவ மறக்கிற மாதிரி ஏதாவது பண்ணு. இந்த விஷயத்தில மட்டும் நீ வெற்றி பெற்ற பிறகு நீ பொண்டாட்டி பிறந்த நாளை பற்றி கவலையே படவேண்டாம், எப்ப மறந்தாலும், நீ கூட தான் ஒரு முறை மறந்தன்னு சொல்லி தப்பிக்கலாம்.

இப்படி யோசித்தே தூங்க போய்டேன்.

அடுத்த நாள் காலையில் ஆபீஸ் போற வழியில் காபி குடிக்க போற வேலையில் நம்ப பார்த்தசாரதி மாமனார், மாமியாரை பார்த்தேன்.மாமி  கொஞ்சம் அசந்த வேலையில், மாமா, உங்களுக்கு  கல்யாணம் ஆகி 40 வருஷம் ஆச்சே, இதுவரை எப்பவாது மாமி பிறந்தநாளை மறந்து இருக்கேளான்னு கேட்டேன். கல்யாணம் ஆனா முதல் வருஷம் மறந்தேன்னு சொன்னார். சரி, அடுத்த 39 வருஷம் எப்படி மறக்காம இருக்கேள் ன்னு கேட்டேன். ஒரு முறை மறந்து பாரு, பிறகு எழு எழு ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்னு சொன்னார்.

 இப்படி பேசும் போதே பார்த்தசாரதி வந்தான். சாரதி, உன் பொண்டாட்டி பிறந்த நாளை நீ எப்படி மறக்காம இருக்கேன்னு கேட்டேன். அதற்க்கு அவன் சொன்னான். நான் ரொம்ப புத்திசாலி, எங்கப்பா மறந்து பட்ட கஷ்டம் நான் கேள்வி பட்டேன். அதனால் பொண்ணு பார்க்கும் போதே ஒரு கண்டிஷன் போட்டேன்னு சொன்னான். என்னப்பா அது, நம்ப எல்லாருக்கும் தெரியாத கண்டிஷன் என்று கேட்ட எனக்கு ஒரு அதிர்ச்சி. பொன்னு எப்படி இருந்தாலும் பறாயிலை, ஆனா அவள் பிறந்த நாளும் என் பிறந்த நாளும் ஒரே நாலா இருக்க வேண்டும்ன்னு ஒரு கண்டிஷன். சரி அப்படி அமைஞ்சததா கேட்டதிற்கு ஆமாம் என்றான். அ ப்படியே ஆனாலும் எப்படிப்பா அவள் பிறந்தநாளை மறக்காம இருக்கன்னு கேட்டதிற்கு, அது ஒன்னும் இல்ல வருஷத்திற்கு ஒரு முறை அவள் என்னிடம் வந்து " Happy Birthday" சொல்லுவா. நான் உடனே மறக்காமா "Same to you"  சொல்லுவேன்னு பெருமையா சொன்னான்.

இந்த மாதிரி "over confident" ஆனா பார்த்தசாரதி அவன் திருமண நாளை மறந்த கதைய அடுத்த வாரம் சொல்லுறேன்.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

"கெட்டிமேளம்-கெட்டிமேளம்,எங்கடா தாலி"

எது காதல்?




நான்காவது படிக்கையிலே நாள் பார்த்து என் எதிர்  வீட்டிற்கு  குடி வந்தாள், பெற்றோருடன் ஒரு சிறுமி.  அடுத்த நாள், என் பள்ளியில், என் வகுப்பில் என் அருகில் அவள் அமர (அவள் பெயரின் முதல் எழுத்தும் என்னை போலவே ,எங்கள் வகுப்பில் பெயர் வரிசையில் தான் அமரவைப்பார்கள், வள்ளுவனுக்கு வாசுகி போல, எனக்கும் ஒன்று. அவள் அப்பாவிற்கு நன்றி கூறினேன்), கண்டவுடன் கண்டுகொண்டேன் கன உலகில் சென்று விட்டேன்,காசு கொடுத்து வாங்கிய கமர்கட்டும் கசப்பாகியது.

இது காதலா?

எட்டாவது படிக்கையில் இதே சிறுமி பாவாடை சட்டையை எறிந்துவிட்டு, அரை தாவணியில் நின்ற பொது, மெய்மறந்து, அந்நாள் வரை இப்பெண்ணை விட அதிக மதிப்பெண் பெற்ற நான்,அவளிடமே சென்று கணக்கு பாடத்தில் சந்தேகம் என்று சந்தடி சாக்கில் சில வினாடிகள் திருடினேனே ...

அது காதலா?

+2 படிக்கையிலே வேறொரு பள்ளியில் இருந்து எங்கள் வகுப்பிற்கு வந்த "பாத்திமா" அவள் அழகை "பார்த்தியாம்மா" என்று அவனன் அலைகையில் எனக்கு தெரிந்தது எல்லாம் என் முதல் எழுத்து சொந்தகாரியான இந்த எதிர் வீடு கம்மல் தான்.முதல் முதலாக முழு கால்சட்டை அணிந்த போது, டைலரிடம் ட்ரையல் பார்கையில் வெயிட் எ நிமிட் பார் 5 நிமிட்ஸ் என்று கூறி, எதிரில் வந்தவர்களையும் கண்டு கொள்ளாமல் எதிர் வீடிற்கு ஓடி சென்று முழு கால் சட்டையுடன் நின்று கொண்டு, பொருளாதாரம் புத்தகம் இரவல் கிடைக்குமா என்று நொந்து நின்றேனே.

 அது காதலா?

கல்லூரி வந்தபின்பும் அந்த கள்ளி என் வகுப்பில் வந்தாள், "என்னைபாரு நீ" என்று தன் மீன் விழியில் கொக்கி போட்ட "அன்னபூரணி" யையும் தள்ளி வைத்து, புத்தகத்தின் நடுவில் அவள் புகைபட்டத்தை வைத்து எல்லா பாடத்திலேயும் அரியர்ஸ் வாங்கினேனே?

 அது காதலா?

புகை படம் என்றதும் நினைவிற்கு வருகிறது. புகை பிடிக்க கற்றுக்கொண்டு அனைவரின் பகையையும் பெற்று கொண்டு அவள் வந்தாள் மட்டும் புகையை அணைத்து விட்டு "வாங்க நாம் பேசிக்கொண்டே கல்லூரிக்கு போகலாம் என்றேனே".

அது காதலா?

எமனுக்கு ஒரு எருமை போல எனக்கு ஒரு யமாஹா. அந்த நாளில் அரசியல்வதி ஒருவர் மண்டையை போட்டதினால் ரத்து ஆனது பேருந்து.   எதிர் வீடு தானே, நான் உங்களை வண்டியில் அழைத்து செல்கிறேன் என்று கூறி என் வீடு வழியை நானே மறந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தை முக்கால் மணிநேரத்தில் மேடு பள்ளம் தேடி கண்டுபிடித்து ஒட்டி அடைந்தேனே.

அது காதலா?

"முதல் சம்பளம் அம்மாவிற்கு ,  இரண்டாம் சம்பளம் அம்மணிக்கு என்று " தாய்க்கு பின் தாரம்" என்பதை தவறாமல் செய்தேனே அது காதலா?

இல்லை இல்லை இதில் எதுவுமே காதல் இல்லை. ஏன் என்று புரியவில்லையா? இன்று அவளின் திருமண நாள். இவ்வளவு செய்த நான் அவளிடம் என் காதலை சொல்ல மறந்து விட்டேன். மன்னிக்க முடியாத குற்றம் என் பக்கம். எங்கிருதாலும் வாழ்க என்று கூற,  அழைப்பினை ஏற்று அமர்ந்து இருந்தேன்.

பின் காதல் என்றால் என்ன?

அமர்ந்து இருந்த என் அருகில் வந்த அமர்ந்தால் என் அடுத்த வீடு பெண். வருட கணக்கில் அருகில் வசித்தாலும் அவளிடம் நான் பேசிய வார்த்தைகளே சில தான். என்றாலும் இவளிடம் பல வருடங்களாக ஒரு கேள்வி கேட்க ஆசை. மனதை திடபடுத்தி கேட்டுவிட்டேன்.

நினைவிருக்கா    உனக்கு? நாம் +2 படிக்கையிலே ஒரு நாள் அவரசமாய் நான் போகையிலே என்னிடம் வந்து "மணி என்ன என்று கேட்டாயே". உன் வீட்டில் ஆறு கடிகாரம், அதற்கும் மேல் "ஆல் இந்தியா ரேடியோ"வின் அலறல் சத்தம். என்னிடம் கைகடிகாரம் இல்லை என்று கிண்டல் பண்ணதானே அவ்வாறு கேட்டாய் என்றேன். அவள் கூறினால். "மண்டு... மண்டு.. அன்றுதான் நீ முதல் நாளாய் முழு கால்சட்டை போடுகின்றாய் என்பதை அறிந்து கொண்டு, ஆறு மாதங்களுக்கு முன் எனக்கு என் பெற்றோர் எனக்கு வாங்கி தந்த அரை தாவணியை நான் அணிந்து அதை முதலில் பார்ப்பவன் நீயாகத்தான் இருக்க வேண்டும் என்று வழி மேல் விழி வைத்து கடிகாரத்தையே பார்த்துகொண்டு ஓடிவந்து உன்னிடம் நேரம் கேட்டேன். அது கிண்டாலா"?

ஏதோ என் ராசி அப்படி என்று, அன்றும் சரி இன்றும் சரி, என்றாவது நீ என்னை பார்ப்பாய் என்ற அற்ப ஆசையில் தான் இன்றும் உன் அருகில் வந்தேன் என்றாள்.

நிஜமாக சொல்லுகிறேன் "இது தான்  காதல்"

கெட்டிமேளம் கெட்டிமேளம் என்ற சத்தம் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு " எங்கடா தாலி" என்று நான் எழுந்து நிற்க, அருகில் நின்ற அவளோ குலுங்கி சிரித்தாள், "ஆக்க பொறுத்த நான் ஆற பொறுக்க மாட்டேனா என்று சொல்லி", அடுத்த முகுர்த்தம்தான் நமக்கு என்றாள்.




நண்பர்களே, நாம் யாரை விரும்புகிறோம் என்பதை விட்டு தள்ளுங்கள். நம்மை யார் விரும்புகிறார்கள் என்பதை கற்று கொண்டு கட்டி வாழுங்கள்.. "இது தான் காதல்".

சனி, 8 பிப்ரவரி, 2014

தன்மான வெறியும் வருமான வரியும்...


வருடம் 1987. அந்த நாளை மறக்க இயலுமா? வேலூர் ஊரீஸ் கல்லூரியில் முதுகலை பட்டத்திற்காக பசி பட்டினியை மறந்து படித்த காலம் அது.  முதுகலையின் இரண்டாவது வருடம்.  ஐந்து தேர்வு எழுத வேண்டும். ஐந்தில் ஒன்று, "வருமான வரி".அந்த காலத்தில் வருமானமே இல்லை, வரிக்கு எங்கே செல்வோம். என்ன என்றாலும் படிக்க வேண்டுமே. மற்ற நான்கு பாடத்தை நன்றாக புரிந்து படித்தாலும் ஐந்தாவதான இந்த "வருமானவரி" மிகவும் கடினமாக இருந்தது. சிறு பிள்ளையாக இருந்த போதே ஒரு கனவு. நன்றாக படிக்க வேண்டும். நல்ல ஒரு உயர்ந்த வேலை வேண்டும். மருத்துவர், பொறியாளர் படிக்க பெரிய தொகை வேண்டும். அது நம்மிடம் இல்லை. சட்ட நிபுணர் ஆக வேண்டும் என்றால் பொய் சொல்ல வேண்டும். அந்த தில்லும் இல்லை.

இப்போது என்ன செய்வது என்று நினைத்த போதுபல வருடங்களுக்கு முன்  பக்கத்துக்கு வீட்டு பெரியவர் சொன்னார், நீ ஏன் தணிக்கையாளர் ஆக கூடாது என்று. அதற்க்கு நிறைய செலவு ஆகுமே என்றேன். ஆனால் அவரோ அது தவறான கருத்து. நன்றாக படித்தால் நீ தணிக்கையாளர் ஆகலாம் என்றார். அடடா, கரும்பு தின்ன கூலியா? 10 படிக்கும் போது வந்த அந்த ஆசையை இந்த பாழாய் போன வருமானவரி பாடம் பதம் பார்த்துவிடுமோ என்று பயந்த நேரம்.
இந்த நேரத்தில் தான் கும்பிட போன தெய்வம் குறுக்கில் வந்ததை போல் என் வகுப்பு தோழன் ஜான் வருமானவரி பாடத்தினால் தான் படும் கஷ்டத்தை என்னிடம் சொன்னான். எனக்கும் அதே பிரச்னை என்றேன். அப்போது அருகே இருந்த எங்கள் பேராசிரியரை சென்று எங்கள் பிரச்சனையை சொன்னோம். அவர் திருவாசகம் போல சில வார்த்தைகள் சொன்னார். எப்படியாவது, மெட்ராஸ் பல்கலைகழகத்தின் தபால் படிப்பு  முறைக்காக வெளி வரும் புத்தகத்தை வாங்கி படி, எளிதில் புரியும் என்றார். விடுவோமா நாங்கள்?
அடுத்தநாளே பேருந்தில் ஏறி சென்னை பிரவேசம்.  அங்கே பாரிஸில் இறங்கி  மற்றொரு வண்டி பிடித்து மெட்ராஸ் பல்கலைகழகம் சென்றோம்.  அங்கே எங்கள் இருவருக்கும் யாரையும் தெரியாது. கையில் உள்ள  50 Rs மட்டுமே. அதிலே புத்தகமும் வாங்க வேண்டும், மீண்டும் வேலூர்க்கு போக வேண்டும்.




அப்போது அங்கே பணிபுரியும் ஒரு நபரை அணுகி எங்களுக்கு இந்த புத்தகத்தை தர முடியுமா என்றோம்? ஒரு புத்தகத்திற்கு 25 ருபாய் என்றார். எங்களுக்கு இரண்டு புத்தகம் வேண்டுமே அந்த காலத்தில் நகலும் எடுக்க இயலாதே அதனால் மொத்தம் உள்ளதே 50 ருபாய் தான் அதிலே நாங்கள் ஊருக்கும் போய் சேர வேண்டும் என்றோம். பதிலாக அவர், 40 ருபாய் தன்னிடம் கொடுத்து விட்டு 10 ரூபாயில் இருவரும் லாரி பிடித்து போங்கள்என்றார். அருமையான யோசனை என்று அவருக்கு ஒரு நன்றி கூறிவிட்டு புத்தகத்துடன் கிளம்பினோம்.
என்னடா இந்த புலம்பல் இத்தனை வருடம் கழித்து ஏன் என்று பார்க்கின்றீர்களா? அது ஒன்றும் இல்லை. இந்த புனித பயணம் அன்று கடினமாக இருந்தாலும் அந்த வருட தேர்வு முடிவு வரும் போது இரட்டிப்பான மகிழ்ச்சியை தந்தது. ஏன்  தெரியுமே? அந்த வருடம் மெட்ராஸ் பல்கலைகழகத்தில் வருமான வரி பாடத்தில்  மாநிலத்திலேய  முதலாவதாக வந்த மாணவன் பெயர் என்ன தெரியுமா ? 

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...