வெள்ளி, 13 டிசம்பர், 2013

ஹிந்தியும் விம்பில்டனும்..


ஹிந்தியும் விம்பில்டனும்..

ஜுலை 6, 1986. அந்த நாளை என்றுமே வாழ்க்கையில் மறக்க முடியாது. வேலூர் அருகேயுள்ள காந்தி நகரில் வாழ்ந்து வந்த காலம் அது. அருமையான நண்பர்கள், அட்டகாசமான கல்லூரி, வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்ந்தகாலம் அது. 1985 வரை வானொலியிலேயே வாழ்ந்து வந்த எங்களுக்கு தொலை காட்சி நிகழ்சிகள் பார்ப்பது என்பது ஒரு கனா. 1986ல் ஒரு சில வசதியான நண்பர்கள் இல்லத்தில் Dyanaro, Solidare என்ற கருப்பு வெள்ளை பெட்டிகள் வர துவங்கிய காலம். வாரம் ஒரு முறை ஒளியும் ஒலியும் மற்றும் சித்ரஹார், சித்ராலீலா மற்றும் என்றாவது ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் ஒலிபரப்பு. 

இந்நாட்களில் எங்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். கிரிக்கெட், கிணற்று நீச்சல், ரஜினி -கமல் யார் பெரியவர் என்ற பட்டி மன்றம் மற்றும் என்றாவது ஒரு சினிமா. இப்படி போய்கொண்டு இருந்த காலத்தில் குறுஞ்சி பூ பூத்தார் போல் எங்கள் வீட்டிற்கு ஒரு பல வண்ண தொலைக்காட்சி பெட்டி அரபு நாட்டில் இருந்து வந்தது. அது வந்த இரண்டே நாட்களில் என் நண்பர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு ஆகிவிட்டது. கருப்பு வெள்ளையில் கிரிக்கெட் பார்த்து வந்த எங்களுக்கு கலர் டிவியில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் Benson and Hedges Cricket. 

கிரிக்கெட்டை அதிகமாக விளையாடும் நாங்கள் எல்லோரும் தினம் தோறும் 9வது தெருவில் உள்ள பாலாஜி இல்லத்தில் சேருவோம். நான், பாலாஜி, வாட்மோர் என அழைக்க படும் வெங்கட், முதல் வீட்டு சந்தானம், பிரதீப், கிருஷ்ணன், குரு, பிரகாஷ் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து மணி நேர கணக்கில் கிரிக்கெட் விளையாடுவோம். பாலாஜியும், வெங்கட்டும் பக்கத்துக்கு வீட்டில் இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் எப்போதுமே போட்டி. சினிமாவில் "கமலா-ரஜினியா" கிரிக்கெட்டில் 'ஸ்ரீகாந்தா-சாஸ்த்ரியா" என்று இவர்கள் போடும் சண்டைதான் எங்களுக்கு தீனி. 

கிரிக்கெட்டை அதிகமாக விளையாடும் நாங்கள் அனைவரும் டென்னிஸ் விளையாட்டை ரசித்து பார்ப்போம். அப்படி டென்னிஸ் விளையாட்டை ரசிக்கும் நாட்களில் வந்தது தான் இந்த "ஹிந்தியும் விம்ப்ளேடனும்". 1985 வரை Borg-Connors-McEnroe தான் ஜாம்பவான்கள். இப்படி இருக்கையில் திடீர் என்று ஜெர்மனியில் இருந்து போரிஸ் பெக்கர் என்ற புதுமுகம் 1985ல் பட்டதை பெற்றான். பெக்கரின் ஆட்டம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. 1986 ஆட்டம் துவங்கிய முதல் அனைவருடைய கவனமும் பெக்கரை நோக்கி சென்றது. சென்ற வருடம் இவர் வெற்றி ஒரு லக் ஆட்டமாக இருக்குமோ என்ற பேச்சு எங்கேயும் இருந்தது.இந்த நிலையில் பெக்கர் தன்னோடு மோதிய அனைவரையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு தகுதி ஆனார். இறுதி போட்டியில் அவர் எதிர்த்து ஆடும் இவான் லேண்டில் உலக no . 1 ஆகா இருந்த நேரம் அது. French, Australian, US open அனைத்தையும் வென்ற அவர் ஒரு புல் தடுக்கி பைல்வான். லண்டன் மைதானத்தில் உள்ள புல்லின் மேல் இவர் ஆட்டம் சற்று தடுமாறும். எப்படியாகிலும் வென்று விடுவேன் என்று சாவாலிட்டு ஆட்டத்தில் இறங்க ஆயத்தமானார். 

இறுதி ஆட்டம் July 6 ,1986. அது ஒரு ஞாயிறு கிழமை. ஆட்டம் தூர்தர்ஷனில் 5 மணிக்கு ஒளிபரப்பாகும். காலை ஆலயத்தை முடித்து கொண்டு நேராக நண்பன் பாலாஜியின் இல்லத்திற்கு சென்றேன். அங்கே அன்றைய ஆட்டத்தை பற்றிய முன்னோட்டங்கள் விவாதிக்கபட்டன. எலாம் பேசி முடித்த பிறகு நண்பன் சந்தானம் அனைவரின் பணத்தையும் சேகரித்தான். ஆளுக்கு 2 ருபாய். பெக்கர்தான் வெற்றி பெறுவான் என்று நானும் அன்று ஆலயத்திற்கு செல்ல வேண்டிய அம்மா கொடுத்த காசை ஆண்டவனிடம் கடன் சொல்லி கட்டி வைத்தேன்.அடியேனின் இல்லத்தில் கலர் டிவி என்பதால் அனைவரும் எங்கள் இல்லத்திற்கு 4:45க்கு கூடுவதாக ஒரு பிளான். மதியம் ஒரு 12 மணி போல் ஒருவொருக்கொருவர் பிரியாவிடை கொண்டு செல்ல முற்படுகையில் நண்பன் பாலாஜி என்னிடம் வந்து தனக்கு 4-5 ஹிந்தி வகுப்பு உள்ளது என்றும் (அவன் ஒன்னும் ஹிந்தி படிக்க போகவில்லை , அந்த கதையே "ஏக் தின் ஏக் கிஸ்ஸான் ரஹதாதா" என்று பிறகு தான் எங்களுக்கு தெரிய வந்தது, அதை பற்றி இன்னொருநாள் எழுதுகிறேன்) 5 மணிக்கு பாடம் முடித்து நடந்து வந்தால் 40 நிமிடம் ஆகிவிடும் என்று சொல்லி என் சைக்கிளை கடன் வாங்கி கொண்டான்.

12:30 போல் வீட்டில் வந்து சேர்ந்து ஞாயிறும் அதுவுமாய் வீட்டில் இருந்த ஆட்டுக்கறி கொழம்பை ஒரு பிடிபிடித்து விட்டு ஏப்பம் விடும் போடு நேரம் 1:15. டென்னிஸ் விளையாட்டுக்கு இன்னும் 4 மணிநேரம் இருகிறதே? அதுவரை என்ன செய்வது என்று நினநிது, கல்யாணமண்டபத்தில் இருக்கும் நண்பன் சடைஆண்டியின் வீட்டிற்கு சென்றேன். சடையும் நானும் சேர்ந்து அருகில் உள்ள டீ கடையில் ஒரு பானம் அருந்திவிட்டு அத்தோடு செய்யவேண்டிய சில கடமைகளையும் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி ஆக்ஸ்லியம் கல்லூரியை நோக்கி சுள்ளி பொறுக்க கிளம்பினோம்.

அங்கே சென்றவுடன்தான் நினைவிற்கு வந்தது, அடடா.. இன்று ஞாயிறு ஆயிற்றே, கல்லூரி இல்லையே என்று. மீண்டும் வீடு வந்து சேரும் போது மணி 3.45. அப்போதுதான் நினைவிற்கு வந்தது ஆல் இந்திய ரேடியோவின் "நேயர் விருப்பம்". இந்நிகழ்ச்சியில் அந்த நாட்களில் ஹிட்டான ஒரு 6-7 பாடல்கள் ஒளிபரப்பப்படும். ரேடியோவை ஆன் செய்தால் முதல் பாடல், "அடி ஆத்தாடி", தொடர்ந்து "சின்ன மணி குயிலே", பின் "வா வெண்ணிலா", "மாமாவுக்கு குடும்மா குடும்மா" (இளைய ராஜா படா கில்லாடி பா! அதே இசையிலே வார்த்தையை மட்டும் மாற்றி ரஜினிக்கு ""மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவின்னு ஒரு ஹிட் கொடுத்துட்டார்) என்ற அட்டகாசமான பாடுகளை கேட்டு முட்டிக்கும் போது மணி 4:55. அஞ்சே பாட்டுல எப்படி ஒரு மணி நேரம் போச்சின்னு கேட்கிறிங்களா? நல்ல கேள்வி. அந்த காலத்தில் பாட்டுபோடும் முன் அதை கேட்ட நேயர் பெயரை ஒருஅரைமணி நேரம் வாசிப்பாங்க. எல்லா பாட்டையும் எல்லா வாரமும் "டெல்லி பாபு" என்பவர் கேட்டதா சொல்லுவாங்கோ.

சொன்னபடியே பாலாஜியை தவிர மற்ற எல்லா நண்பர்களும் வீட்டில் சேர்ந்தாச்சு. டிவியை ஆன் பண்ணினோம். அப்போதான் ஞாயிறு தோறும் வரும் 'sports time 4-5" முடியும் தருணம். பாட்னாவில் நடக்கும் படகு போட்டி காட்டி கொண்டு இருந்தார்கள். சரியாக 5 மணிக்கு அது முடிந்து " Live to Wimbledon" என்ற எழுத்துக்கள் வர எங்கள் வாயெல்லாம் பல். மணியோ 5:10 ஆகிவிட்டது, ஆனாலும் டிவியில் டென்னிசை காணோம். ஒருவேளை விம்பிள்டனில் மழையோ என்று மலைத்து இருக்கும் போது, ஒளி பதிவு சற்று மறைந்து மீண்டும் வந்தது. அதை பார்த்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. தொலைகாட்சியில் மூன்று பேர் அமர்ந்து இருந்தனர். ஒருவர் 'புல்புல்தாரா" ஒருவர் "வயலின்" மற்றொருவர் "தபேலா" வசம் 'ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை வாசித்து கொண்டு இருந்தனர். அதிர்ச்சியில் அமர்ந்து இருந்த எங்களுக்கு என்ன நடகின்றது என்றே தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து வடமிருந்து இடப்புறமாக சில ஹிந்தி வார்த்தைகள் நகர்ந்தன. எங்களில் ஒருவனுக்கும் ஹிந்தி " நஹி மாலும்". என்ன செய்வது திக்காடி கொண்டு இருக்கும் போது, பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்ததை போல் எங்கள் ஹிந்தி பண்டிட் பாலாஜி மூச்சி வாங்கி கொண்டே வந்து சேர்ந்தான்.

அவனை அருகில் அழைத்து நடந்தவற்றை கூறி அந்த ஹிந்தி வார்த்தைகளை மொழி பெயர்த்து கொடு என்று கேட்டோம். அதை படித்த பாலாஜியின் முகம் பேய் அறைந்ததை (பேய் அறைந்ததை நாங்கள் பார்த்ததை இன்னொருநாள் எழுதுகிறேன்) போல் மாறியது. அடுத்த நிமிடமே இந்திய அரசியல் வாதிகளை ஆங்கிலத்தில் திட்டினான். அவனை சற்று நிதானபடுத்தி, இன்று டென்னிஸ் வருமா என்று கேட்டதிற்கு, 'வரும் ஆனா வராது" என்ற இக்கால வார்த்தைகளை அக்காலத்திலேயே சொன்னான். கொஞ்சம் விவரமாக சொல்லு என்றோம். நாங்கள் இவ்வளவு பேசும் போதும், அந்த மூணு பெரும் அதே பாட்டை மீண்டும் மீண்டும் வெவ்வேறு மொழிகளில் வாசித்து கொண்டு இருந்தார்கள். கடைசியாக பாலாஜி வாயை திறந்தான். "பாபு மரகையா" (மணி ரத்தினம் இங்க தான் காப்பிஅடிச்சி இருப்பாரோ?) என்று மிகவும் கோபமாக சொன்னான். அது சரி பாலாஜி, யாரு இந்த பாபுஜி என்று கேட்ட எங்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி. அவர் பெயர் ஜகஜீவன் ராமாம். அவர் துணை பிரதமராக இருந்தவராம், என்று சொன்னான்.  அதை கேட்ட நண்பன் குரு உடனடியாக என்ன? இங்கிலாந்து நாட்டில் ஒரு இந்தியன் பிரதமராக இருந்தாரா? சபாஷ்... அவர் எவ்வளவு நன்றாக ஆட்சி செய்து இருந்தால் விம்பிள்டனை நிறுத்தி  இருப்பார்கள் என்று மார் தட்டி கொண்டான். எனக்கோ சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அவனை தனியாக அழைத்து இவர் இந்தியாவின் துணை  பிரதமராக இருந்தார் என்று விளக்கி சொன்னேன்.

சரி அவர்தான் இறந்து விட்டாரே, அதற்க்கு ஏன் விம்பிள்டனை நிறுத்தினார்கள் என்று கேட்ட சந்தானத்திற்கு பாலாஜி கொடுத்த பதில் மாரடைப்பையே கொடுத்து விட்டது. "விம்பிள்டன் நடக்குதப்பா, ஆனால் அதை டிவியில் காட்ட மாட்டார்கள்". கூடி வந்து இருந்த பதினைந்து பெரும் குழம்பி விட்டோம். அதற்கு பாலாஜி இன்றுடன் சேர்த்து மூன்று நாட்க்களுக்கு நாடே சோகம் கொண்டாடவேண்டும் என்றான். சோகத்தை எப்படி கொண்டாடமுடியும் என்று கேட்ட பிரகாஷை கொஞ்சம் அமுக்கி வாசிக்க சொல்லிவிட்டு  வாட்மோர் என்ற வெங்கட், இந்த அரசியல்வாதிகள் இருந்தாலும் பிரச்சினை இறந்தாலும் பிரச்னை என்பதை அனைவரும் ஒத்துக்கொண்டு அவரவர் இல்லத்திற்கு சென்றோம். இரவு முழுக்க தூக்கம் இல்லை. பெக்கர் வெற்றியா? லேண்டில் வெற்றியா? 

காலை 5 மணிக்கு எழுந்து நேராக ஓட்டை பிள்ளையார் கோயில் அருகில் உள்ள ராதா கடைக்கு சென்று செய்தி தாளை படிக்கும் போது ஒரு இன்ப அதிர்ச்சி. பெக்கர் நேர் செட்டில் லெண்டிலை வென்றார். அங்கிருந்து கிளம்பி நேராக சந்தானம் வீட்டிற்கு சென்றேன். ஒன்றும் இல்லை என் 4 ரூபாயை வாங்கி கொள்ள. இவ்வளவு சோதனையிலும் 2 ரூபாயாவது வந்ததே என்ற சந்தோஷத்தில் மண்ணை வாரி போட்டான் சந்தானம். எப்படியும் லேண்டில் தான் வெற்றி பெறுவான் என்று எண்ணி நேற்று இரவே எல்லார் பந்தய பணத்தையும் செலவு செய்து விட்டானாம், நாங்கள் மன்னிக்க வேண்டுமாம். 

என்னவோ நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று கூறி, கல்லூரில் சந்திக்கலாம் என்று விடை பெற்றேன். நாங்கள் எல்லோரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஆயினும், அவரவர் குல தெய்வத்திற்கு பயந்தவர்கள். கல்லூரியில் மதிய உணவிற்கு அமர்கையில், நண்பன் பாலாஜி, நம்மில் ஒருவன் எதோ ஒரு தெய்வ குற்றம் செய்து இருக்கின்றோம், அதனால் தான் நேற்று அப்படி நடந்தது என்றான். அனைவரும் ஒற்றுமையாக இருக்கலாம் என்று ஒத்துகொண்டோம். அனைவரும் பிரிகையில் மனதில் ஒரு உளைச்சல். நேற்று காலை ஆண்டவனுக்கு படைக்க வேண்டிய காணிக்கையை பந்தயமாக கட்டியதால் இருக்குமோ..


நீங்களே சொல்லுங்கள்.



Our gang celebrating 25th Anniversary of B.com Graduation...



கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...