புதன், 21 ஜூன், 2017

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா ?

கோடை விடுமுறை ஆரம்பித்து ஒரு இரண்டாம் வாரம். மூத்த ராசாத்தி ஒரு வாரம் விடுமுறையை அனுபவித்து விட்டு இரண்டாவது வாரம் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டாள். அவள் பணி  புரியும் "கோல்ப் கோர்ஸ்" அவளுக்கு மிகவும் பரிச்சயமான இடம். 8 வயது முதல் வருடத்தில் பாதி நேரத்தை இங்கேயே செலவழித்தவள், அதனால் அனைவரையும் தெரியும்.

இளையவளுக்கு 14 வயது . முழு நேர வேலைக்கு செல்லாவிடிலும், அவளும் மூத்தவளோடு காலையில் கிளம்பி சென்று விடுவாள். அங்கே நடக்கும் சம்மர் கேம்பில் வாலெண்டியராக பணி புரிவாள். அதற்கு பணம் பெறாவிட்டாலும் உணவு கிடைக்கும்.

நாட்கள் இப்படி போக.. நேற்று இளையவளோடு ஒரு உரையாடல்..

டாடி .. போன  ஞாயிறு (Fathers Day)  நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அவங்க கல்யாணத்த பத்தி பேசினோம்.



சற்று அதிர்ந்தேன். சுதாரித்து ...



பதினைஞ்சு ஆக  இன்னும் ஒரு வாரம் இருக்கு. இப்ப கல்யாணத்த பத்தி என்ன அவசியம்? அப்படி என்ன பேசுனீங்க. யாரை கட்டிக்க போறேன்னு பேசுனீங்களா?



ச்சே .. அது இல்ல டாடி... யாரு எங்களை கைபிடிச்சி கல்யாணத்துக்கு கோயிலுக்குள்ளே கூட்டினு போய் விடுவாங்கன்னு..


கிருத்துவ திருமணத்தில்.. முதலில் மணமகன் ஆலயத்தின் உள்ளே அமர்ந்து விடுவார். அதற்கு பின் இசை முழங்க மணப்பெண்ணை அவளின் தகப்பனார் கை பிடித்து கொண்டு ஆலயத்திற்குள் அழைத்து வருவார். பிறகு.. இந்த பெண்ணை இவருக்கு கொடுப்பவர் யார் என்று அழைக்கையில் 
 "நான்தான்"  என்று அந்த தகப்பன் அந்த பெண்ணை மணமகனிடம்   ஒப்படைப்பார். 

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு தகப்பனுக்கும் சரி மற்றும் மணப்பெண்ணுக்கும் சரி மிகவும் முக்கியமான நிகழ்ச்சி. மேலும், பெரும்பாலான திருமணத்தில்  இது நடக்கையில் ஆனந்த கண்ணீரை பார்க்கலாம்.


இது என்ன கேள்வி மகள்.. அவங்க அவங்க அப்பா தான். நீ பொறந்த அன்னைக்கு அம்புட்டையும் மூட்டை கட்டி வச்சிட்டு உன்னோடவே சுத்தின்னு  இருக்கேனே!   நான் தான் உன்னை கூட்டினு போவேன்.

எனக்கு சரி டாடி.. என் பிரென்ட்.. "ப்ரியா.."

இம்முறை  உண்மையாகவே அதிர்ந்தேன்.

ப்ரியாவின் தகப்பன் நல்ல நண்பன். சில வருடங்களுக்கு முன் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார்.

ஐயோ.. என்ன மகள்.. ப்ரியாவின் எதிரில் ஏன் இந்த "அப்பா" பேச்சு?

இல்ல, டாடி.. போன ஞாயிறு "பாதர்ஸ் டே" தானே.. அதுதான்.

அதுக்கு ஏன் மகள் அவள் எதிரில்.. பாவம் பிள்ளை ரொம்ப கஷ்டபட்டு இருப்பாளே.

ஐய்யோ .. இந்த யாரு கையை பிடிச்சுன்னு கூட்டின்னு போவாங்க என்பதையே
 பிரியா தான் பேச ஆரம்பிச்சா..

ரியலி.. எப்படி?

யார் யார் பாதர்ஸ் டேக்கு என்ன என்ன கிப்ட் கொடுத்தோம்ம்னு பேச்சு வந்தது.   அப்ப தான் அவ இதை பத்தி பேச ஆரம்பிச்சா.

என்ன சொன்னா ?

கல்யாணத்து அன்னிக்கு யார் யாரை யார் யார் கை பிடிச்சு கொடுப்பாங்கன்னு அவளே கேட்டா...

நாங்க எல்லாரும் அப்பா .. அப்பான்னு சொன்னோம்..  இன்னொரு பொண்ணு ப்ரியாவை பார்த்து உன்னை யார் கை பிடிச்சி கொடுப்பாங்கன்னு கேட்டா,
அதுக்கு பிரியா..

ஐயோ.. .மகள் பதறி இருப்பாளே..!

அய்யயோ , நீங்க ஒன்னு.. சிரிச்சின்னே  பதில் சொன்னா..

என்ன சொன்னா...

"விசு மாமா. ., விசு மாமா" தான் என்னை கோயிலுக்குள்ள கூட்டினு போயிட்டு கை  பிடிச்சி கொடுப்பார்.

இம்முறை ஆனந்தத்தில் அதிர்ந்தேன்.. இளையவள்  தொடர்ந்தாள்..

You must be very proud of it, Daddy.. for Priya  to say like that"

இல்ல, ராசாத்தி.."Priya has not made me proud, shes humbled me"

நட்புகளே.. இதுவரை என் வாழ்வில் 17 வருடம் "பாதர்ஸ் டே" என்ற  நாளை கொண்டாடி இருப்பேன். இந்த 17 வருடங்களில் எத்தனையோ விலையுர்ந்த பரிசுகளை பெற்று இருக்கின்றேன்.

அவை அனைத்தை காட்டிலும் இந்த வருடம் "பிரியா" கொடுத்த கிப்ட் பல மடங்கு உயர்ந்ததை  போல் உணர்கிறேன்.

இப்படி ஒரு அன்பான மகளை கொண்டாட அவள் அப்பா கொடுத்து வைக்கவில்லையே..

4 கருத்துகள்:

  1. விசு அண்ணா மனம் நெகிழ்ந்தது ..அந்த பெண் ப்ரியா உங்கள் மேல் வைத்த அன்பும் நம்பிக்கையும் க்ரேட் ..
    belated fathers day wishes to you

    பதிலளிநீக்கு
  2. பெற்றால்தான் பிள்ளையோ!

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் பெருமை கொள்ளத் தக்க
    நெகிழ்ச்சியான விஷயமே
    (ராஜாத்திகள் மூலம் மற்றுமொரு ராஜாத்தி )
    அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு