வியாழன், 22 ஜூன், 2017

முதல் முதலாக பார்த்த போது...


மூத்தவள் பிறந்த அன்று
முழுமையானேன் என்று இருந்த வேளையில்..
மூன்றே வருடத்தில்
முழுவாம இருக்கேன் என்று

முந்தானையில் முகத்தை துடைத்து கொண்டே
மூச்சு வாங்க
முணுமுணுத்தாள்
மூன்று முடிச்சி வாங்கியவள்..

முழுக்க பொய் தானே
முகத்தை பார்த்து சொல் என்றேன்..
முன்னே வந்தாள் சொல்லவில்லை..
முகத்திலே தெரிந்தது  அகத்தின் அழகு...

முன் ஏற்பாடு எதுவும் இல்லையே
முன்பின் உதவிக்கும் ஆள் இல்லையே
மூன்று பேர் என்று தானே இருந்தோம்
முதலுக்கே என்றேன் .. வாய் அடைத்தாள்..

மும்மாரி பொழிய மாதங்கள் கழிய
முழு கற்பிணியானாள்
முதலில் எனக்கு சொல்லுங்க
மூத்தவள் ஆசைக்கு அடுத்தது  ஆஸ்திக்கா?


மூடினேன்  வாயை
முகர்த்தேன் மூத்தவளை ஆஸ்தி எனக்கெதற்கு
முடிந்தால் ஆசைக்கு இரண்டு கொடு
முனங்கினேன்  அவள் காதில்




முடிந்தது பிரசவம்
முண்டியடித்து உலகம் வந்தாள்..
முன்பே இவளை  எங்கேயோ கண்டேனே
முகம் அப்படியே அவள் அம்மா!

முந்தாநாள் போல் தான் இருந்தது
முடிந்தது பதினான்கு வருடம்
மும்முரமான பம்பரம் தான் இவள்
முழுமையாக்கினாள் என்னை தானே.

என்னுள் இருந்த  குழந்தையை எழுப்பிய இவள் என் சேய் அல்ல தாய். வாழ்த்துகிறேன் என்னை வாழ வைப்பவளை. 




4 கருத்துகள்:

  1. நானும் உங்க தாயை வாழ்த்துகிறேன்.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டிம்மா.

    பதிலளிநீக்கு
  2. அழகான வாழ்த்து ..இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்க வீட்டு குட்டி தேவதைக்கு ..
    God bless her .

    பதிலளிநீக்கு
  3. முழுக்கவிதையும்
    முதல்தரம்..
    முகஸ்துதி அல்ல இது
    முற்றிலும் உண்மை

    பதிலளிநீக்கு