புதன், 21 ஜூன், 2017

"வானம் பார்த்த விவசாயி"...!

காலை 4 மணிக்கு எழுந்து  நேற்றைய மிச்ச மீதியை "பழையது" என்ற பெயரில் உப்பை மட்டும் சேர்த்து பருகிவிட்டு , தன் கால்நடைகளோடு கால்நடையாக மொத்த நாளையும் வெயிலிலே தாரை வார்த்து விட்டு, தூவிய விதைகளால் வரும் விளைச்சலை கனவில் கொண்டு தூங்க செல்கிறான்.
பட உபயம் :புவனா கருணாகரன் 

தூக்கம் வரவில்லை .எப்படி வரும்? முகத்தில் அடிக்கும் காற்றை வைத்தே மனது சொல்லுகின்றது ... நாளை மழை வராது.  இரவு இரண்டு மணி, அருகில் இருந்த பசு, கன்று ஈனுகையில் உயிரை விட அதையும் தோண்டி புதைத்து விட்டு, ஐயகோ நாளையில் இருந்து பிள்ளைகளுக்கு பால் இல்லையே என்ற துக்கத்தோடு பெருமூச்சு விட... அருகில் இருந்த மனைவி கேட்கின்றாள்..

என்னங்க தூங்கலையா?


இல்ல .. பசு ..

அது தான் போச்சே, இப்ப அதை நினைத்து என்ன பண்ண போறோம்? அய்யய்யோ என்னங்க முகமெல்லாம் கண்ணீர்.. அழுதீங்களா..

ச்சே ச்சே...நானா ... ஏதோ கண்ணுல தூசி...

ஏங்க, உங்க சோகம் எனக்கு தெரியாதா... என்னிடம் மறைக்க முடியாது..

நீ கூட தான் என்னிடம் மறைக்க முடியாது...

நான் என்னத்த மறைத்தேன் ...

நேற்று இரவு எனக்கும் பிள்ளைகளுக்கும் மட்டும் சாப்பாடு போட்டு நீ சாப்பிடாமல் படுத்தியே.. அதை சொன்னேன்.

இல்லைங்க .. அதுவந்து...

அட பாவி மவளே... போ .. போய் பாதி வயிறாவது ரொப்பி கொள். உனக்கும் ஏதாவது வந்து தொலைத்தால் ..நம்ம நிலைமை ஏன்னா ஆகுறது.

பேசி கொண்டே இருக்கும் போது மணி 5 ஆகியது. கிணற்றில் எட்டி பார்த்தான் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீர் தெரியவில்லை. கண்களை திருப்பி வயலை பார்த்தான்.. விதைகளை தனக்குளே மூடி வைத்து கொண்டு வறட்சியாக இருந்த அந்த பூமி    இவனுக்கு கற்பம் தரித்தவுடன் விதவையான பெண் போல் தோன்றியது.

மழை வருமா...மழை வருமா என்று எண்ணி கொண்டு இருந்தவனை அருகில் நின்று கொண்டு இருந்த மணல் லாரியின் ஓட்டுனர் அழைத்தான் .

இந்த வருடமும் மழை வராது.. இந்த பாழா போன விவசாயத்தை விட்டுவிட்டு  என்னோட வந்து மணல் வாரி வண்டியில் போடு. மூணு வேளை சாப்பாடுகாவது பணம் கிடைக்கும்.

மனதில் விவசாயிக்கே உள்ள மானம் - ரோசம்.. நீ, போ நான் வரல..

என்று சொல்லியவன்..

அயோக்கிய சுயநல வாதிகளே .... ஆறில் இருந்த மணலை வாரி விட்டீர்கள்.. அருகில் இருந்த மரங்களை வெட்டி விட்டீர்கள், எங்கே இருந்து மழை வரும் ?

என்று சொல்லிக்கொண்டே காரி துப்பி விட்டு மீண்டும் நிலத்தையும் அதன் பின்னர் வானத்தையும் பார்த்தான், கண்ணுக்கும் மனதிற்கும் ஒன்றுமே அகப்படவில்லை.

நாட்கள் போனது , பாதி நீர் கிடைத்ததால் பாதி பயிர் பிழைக்க ..மீதி மறிக்க, அறுவடை அடுத்தவாரம் ஆனாலும் அதில் வரும் வரவு பாதி கடனை கூட அடைக்காதே என்று எண்ணி கொண்டே இருந்தவனின் மூத்த ராசாத்தி சொன்னாள்..

அப்பா ...உங்க விலா எலும்பு  ஒவ்வொன்றையும் தொடாமலே எண்ணி விடலாம்.

என்ன சொல்ற.. ?

உங்க உடம்பு ரொம்ப ஒட்டி போய் இருக்கு அப்பா.. என்று சொல்லி கொண்டே அவள் அம்மாவிடம் ஓட..இவனோ அன்று தான் தன் வயிறை பார்த்தான் .. சுருங்கி போய் உள்வாங்கி இருந்தது.

இன்னும் ஒரு வாரம் ... "லாபம்" இல்லாவிட்டாலும் "பட்டினி" என்ற சாபம் இருக்காதே என்று உறங்க சென்றவனை ...தடால் என்று  சத்தமாக ஒலித்த  இடி எழுப்பியது. கண் திறக்க முயலுகையில் "பளிச்" என்ற மின்னல் வர .. கண்ணை பொத்தி கொண்டே வெளியே வந்தான்... விண்ணை பொத்துகிட்டு வானத்தில் இருந்து ஊற்றியது மழை.

அறுவடைக்கு தயாரான பயிரை அன்று இரவே பறி கொடுத்து , வேலியே பயிரை மேய்ந்ததையும் தாண்டி ... மழையே பயிரை அழித்ததை கண்டு மனைவியை பார்த்தான். அவளோ, தன் கண்ணில் தூசி என்று சொல்லி வேறு திசை திரும்பினாள்.

காலையில்என்னப்பா, இவ்வளவு மழை பெய்து இருக்கு? என்னிடம் சொல்லவே இல்லையே.. தெரிந்து இருந்தால் எவ்வளவு விளையாடி இருப்பேன் என்று அறியா வயது இளைய ராசாத்தி சொல்ல...

அது தான் வருண பகவான்  விளையாடி விட்டாரே , அதற்கும் மேல் என்ன விளையாட்டு என்று மனதில் நினைத்து கொண்டே...

இல்லடியம்மா... உன்னை எழுப்பலாம்னு தான் வந்தேன். ஆனால் "இடி" ரொம்ப பலமா இருந்ததினால் நீ பயபடுவ இல்ல, அதுதான் எழுப்பல .. இப்ப போய் விளையாடு..

என்று சொல்கையில், எதிர் தெருவில் பெரிய கூக்குரல்..

அய்யய்யோ ... நம்ம கதிரேசன் .. தூக்கு போட்டுக்கிட்டு தொங்கிட்டான்..

கதிறேசனா... அட பாவி மவன்.. 4 பிள்ளைகள் ... இளம் வயது மனைவி.. ஆறு ஏக்கர் நிலத்தில் நெல்லு போட்டு இருந்தானே ..அடுத்த வாரம் தானே அறுவடை.. இப்ப ஏன் இந்த காரியம் பண்ணான் என்று எண்ணியவனுக்கு இங்கு பெய்த மழை அடுத்த தெருவிலேயும் பெய்து இருக்குமே என்ற எண்ணம் உதிக்கவில்லை.

இருக்குற எல்லா பணத்தையும் போட்டு.. நகை நட்டை அடகு வைத்து கடன் வாங்கி விவசாயம் செய்தான்.  நேத்து மழையில் எல்லாம் நாசமா போக தோட்டத்திலேயே தொங்கிட்டான்.

என்று யாரோ சொல்ல.. இவன் மனைவியோ..கண்ணாலே.. ஏங்க.. அந்த மாதிரி காரியம் எதுவும் செஞ்சிடாதிங்க என்று கெஞ்ச .. இவனோ, அருகில் இருந்த இரண்டு ராசாதிக்களையும் அணைத்து கொண்டு, தன் கண்ணில் இருந்த தூசியை தட்டினான்.

கதிரேசனை புதைக்கையில் பசுவின் நினைவு வந்தது. பசு மட்டுமா போனது .. இவன் இல்லத்தில் பால் வாசனையும் அல்லவா போனது ...

நாசமாகி இருந்த நிலத்தை மீண்டும் பார்க்கையில், மணல் லாரி  ஓட்டுனரின் குரல் கேட்டது.

யோவ்.. இன்றைக்காவது வரியா? மழை பெய்ததினால் மணல் எடுப்பது கொஞ்சம் சுலபம். பணம் போட்டு தரேன்..

இன்னும் கொஞ்சம் மானம் இருந்தது.

வேண்டாம் நீ போ ..

என்று சொல்லியவனிடம் .. அருகில் இருந்தவர் ஒரு தாள் கொடுத்தார்..

அதில் எழுதி இருந்தது..

மழையினால் பாதிக்க பட்ட விவசாயிகள் அனைவரும் நாளை பஞ்சாயத்து ஆபிஸ் பக்கம் வரவும். உங்களுக்குக்காக அமைச்சர் ஒருவர் உதவி செய்ய வந்துள்ளார் என்ற சொல்ல..

ஊரே புறப்பட்டு சென்றது பஞ்சாயத்தை நோக்கி. போகையில் அனைவரின் பேச்சும்..

பணம் தருவார்களா.. இல்லை

பொருள் தருவார்களா ? அல்ல

அடுத்த வருடத்திற்கான விதை தருவார்களா ?

வாங்கிய கடனை ரத்து செய்வார்களா?

என்னவா இருக்கும்.. ?

அனைவரும் அமர அமைச்சர் ஆரம்பித்தார் அவரின் அறிவுரையை..

 என் அருமை விவசாய நண்பர்களே.. சமீபத்தில் பெய்த மழையில் நீங்கள் எல்லாரும் உங்கள் விளைச்சலை இழந்தீர்கள் என்று கேள்வி பட்டேன். அதுமட்டும் அல்லாமல் உங்களில் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டார் என்று கேள்விபட்டேன். மிகவும் விசனம். நாங்கள் இருக்கும் போது நீங்கள் இந்த மாதிரியான காரியத்தில் ஈடுபட கூடாது.

அனைத்தையும் இழந்த நீங்கள் இன்று முதல் யோகா கற்று கொள்ளுங்கள். யோகாவின் மூலம் நீங்கள் உங்கள் சோகங்களை மறக்கலாம். யோகா செய்வதினால் உங்களுக்கு பசி எடுக்காது. யோகா செய்தால் உங்கள் உடம்பில் உள்ள கொழுப்பு குறையும். இன்று முதல் யோகா செய்ய பழகுங்கள் ... யோகா .. யோகா .. யோகா...

என்று சொல்லி.. நீங்கள் அனைவரும் இப்போது போகலாம் என்று பேச்சை முடித்தார்.

விவசாயிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு.. இல்லத்திற்கு கிளம்புகையில், இவன் மட்டும்ஒரு காரியத்தை கவனித்தான்.

அந்த மணல் லாரி டிரைவர் அந்த அமைச்சரிடம் சிரித்து பேசி கொண்டு இருந்தான். ஏதோ ஒரு பையும் கையும் மாறியது போல் தெரிந்தது.

ஐந்து நிமிடம் கழித்து அடித்து பிடித்து லாரி டிரைவரிடம் சொன்னான்.

அண்ணே . நாளைக்கு காலையில் மணல் ஏத்த எத்தனை மணிக்கு வரணும்?

இப்ப தான் புத்தி வந்ததா... ?

எட்டு மணிக்கு வா ! இந்தா 100 ரூவா.  பொஞ்சாதி பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுத்துட்டு வா.

சரி அண்ணே...

காலையில் :

என்னங்க .. கடையில் இருந்து இட்லி வடை.. ஏது பணம் ?

இன்னைக்கு மணல் வார போறேன், அவங்க கொடுத்தாங்க.

இதுக்கு பதிலா நீங்க கதிரேசன் போல தூக்கு போட்டுக்கிட்டு தற்கொலை செஞ்சி இருக்கலாம்.

அட .. புரியாதவளே,.இது மட்டும் என்ன பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ற கதையா என்ன.. இதுவும் தற்கொலை தான்.

புரியல..

அடியே என் அருமை பொண்டாட்டி, ஆறு இல்லாத ஊரு நாறும், நதி இல்லாத ஊரு சமாதி... இப்ப மணல் வாருற வேலையும் தற்கொலைதான்.

அவளோ, மீண்டும் தன் கண்ணில் இருந்த தூசியை துடைத்தாள்.



பின் குறிப்பு ;

சில்லென்ற மழை காற்று முகத்தில் அடிக்க லாரியின் மேலே அமர்ந்து இரண்டு பக்கமும் மழையினால் நாசமடைந்த வயல்களை பார்த்து கொண்டே தன் வாழ்வே தலை கீழாக மாறி போனதே என்று நொந்து கொண்டே போகையில்,  அந்த சுற்றுலா பயணிகள் தங்குமிடம் (Travelers Bungalow )  வந்தது. அதன் வாசலின் முன்னே அந்த அமைச்சர்   தன் தொப்பையை குறைக்க தலைகீழாக நின்ற படி ஒரு "யோகா " செய்து கொண்டு இருந்தார்.
தூரத்தில் கதிரேசன் தூக்கில் தொங்கிய மரம்.. 

1 கருத்து: