சனி, 3 ஜனவரி, 2015

புடவை அழகா இருக்கே..?!

சென்ற வார பதிவில் நான் 2015ல் என் குடும்பத்தினரிடம் இன்னும் அதிகமான நேரம் செலவிடவேண்டும் என்று எழுதி இருந்தேன். நேரம் செலவு செய்வது என்பது என்ன அவ்வளவு சுலபமா? நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு .."நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை" என்று பாடி கொண்டே காலத்தை கடத்த முடியுமா? ஏதாவது பேசலாமே என்று நினைத்து ...மனைவியிடம் ..



புடவை நன்றாக உள்ளதே , புதிதாக வாங்கினாயா?

என்னங்க...? என் புடவையை பற்றியெல்லாம் பேசுறீங்க, உங்களுக்கு உடம்பு சரி இல்லையா என்ன?

அப்படி எல்லாம் இல்ல, இந்த வருடத்தில் உங்களோடு இன்னும் அதிக நேரம் செலவு செய்யலாம் என்று ஒரு பொருத்தனை. அதனால் தான்.

அதிக நேரம் செலவு செய்ய ஆசை படுவது நல்லது. ஆனால் அந்த நேரத்தில் குடும்பத்திற்கு ஏதாவது நல்ல காரியம் செய்யுங்கள், சும்மா இந்த புடவை - சுடிதார்ன்னு பேசி உங்க நேரத்தை மட்டும் இல்லாமல் எங்க நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.

சாரி.. இனிமேல் பேச மாட்டேன். இருந்தாலும் இந்த புடவை நல்ல இருக்கே , புதுசா வாங்கியதா?

இப்ப இந்த புடவை எப்ப வாங்கியது என்று தெரியாமல் இங்க இருந்து கிளம்ப மாட்டீர்கள் போல் இருக்கே..?

இல்ல, இவ்வளவு நாளா இந்த புடவையை நான் பார்த்ததே இல்லை, இவ்வளவு அழகா இருக்கே.. அது தான் கேட்டேன்.

இந்த புடவைய நீங்க இதற்கும் முன்னாடி பார்த்ததே இல்லை?

இதை பார்த்தே நினைவே இல்லை.. ஏன் அப்படி கேக்குற?

ஒன்னும் இல்லீங்க.. போன வருடம் NBA Finals ஆட்டத்தின் போது உங்கள ஒரு நாள் ஒரு நாலு மணி நேரம் காணோம். நீங்களும் தண்டபாணியும் எங்கேயோ முக்கியமான விஷயமா போறோம்ன்னு சொல்லி கிளம்பினீர்கள். நானும் சுந்தரியும் எத்தனையோ முறை போனில் கூப்பிட்டு பார்த்தும் நீங்க எடுக்கவே இல்லை. ஒரு 4 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தீர்கள், வரும்போதே இந்த புடவைய என்னிடம் கொடுத்து இதை கடையில் தேடி எடுக்க 3 மணி நேரம் ஆச்சின்னு சொன்னீங்க. இப்படி மூணு மணி நேரம் தேடி வாங்கிய புடவைய இவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டீர்களே..?

அதுவா இது?

ஆமாங்க.. அதுதான் இது.. ரொம்ப நல்லா இருக்கு இல்ல..
என்னங்க அதுதான் இது என்றவுடன் பேய் அறைந்த மாதிரி முகம் மாறி விட்டது..?

அதெல்லாம் ஒன்னும் இல்லையே, நான் ஒன்னும் அப்படி பேய் அறைந்த மாதிரி (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக வேறொரு நாள் சொல்கிறேன்) ஆகவில்லையே...

மனதில்...

அம்மணி பேச்சில் பொடி வச்சி பேசுறாங்களே... இதில் எதோ தவறு நடந்துள்ளது.. இந்த புடவை.. நான் வாங்கி கொடுத்ததா ? நான் வாங்கி கொடுத்ததா.....நினைவுகள் .... Flash Back  நோக்கி சென்றது.. ஒரு வருடம் முன்னால்,  NBA Finals  கூடை பந்து ஆட்டத்தின் போது..அலை பேசி அலறியது...

வாத்தியாரே...

சொல்லு தண்டம்.

உடனே போனை எடுத்து கொண்டு பாத்ரூம் போ.. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.

பாணி.. உன் நம்பரை பார்த்தவுடனே நான் போனை எடுத்து கொண்டு பாத்ரூம் வந்துட்டேன். விஷயத்த சொல்லு.

வாத்தியாரே.. NBA Finals  ஆட்டத்திற்கு ரெண்டு சூப்பர் டிக்கெட் கிடைத்து இருக்கு.. நீ என்ன சொல்ற?

எப்படி பாணி.. இந்த டிக்கட் பயங்கர டிமான்ட் ஆச்சே...

டிமான்ட் எல்லாம் உனக்கு வாத்தியரே, எனக்கு இது ரொம்ப ஈசி மேட்டர்.. நீ ஒரு காரியம் பண்ணு.. இனிமேல் என்னை தண்டம்ன்னு செல்லமா கூப்பிடறத விட்டு விட்டு முழுசா தண்டபாணி கூப்பிட ஆரம்பி..

அதுவா இப்ப ரொம்ப முக்கியம் தண்டம்..

பாத்தியா? இவ்வளவு பெரிய டிக்கட்டை கையில் வச்சிக்கினு உன்னையும் கூப்பிடறேன், நீ திரும்பவும் என்னை தண்டம் .. சொன்னா எப்படி..?

சரி விடு தண்டபாணி... இந்த ஆட்டம் மொத்தம் கிட்ட தட்ட 4 மணி நேரம் ஆகுமே டா.. சுந்தரியை எப்படி சமாளிச்ச?

வாத்தியாரே.. இந்த மாதிரி நேரத்தில் நம்ம சொல்லிக்காமா கிளம்பிடனும். வரும் போது கையில் ஒரு புது புடவை எடுத்து கொண்டு அவங்க முகத்துக்கு நேரா நீட்டி.. உனக்காக ஒரு புடவை தேடி தேடி வாங்கி வந்தேன் என்று சொன்னா அவங்க கோபம் எல்லாம் மறைந்து போய்டும்..

டேய் .. இப்ப கிளம்பினா கூட ஆட்டத்திற்கு ஒரு 15 நிமிடம் தாமதமாக தானே போவோம், இப்ப எங்க போய் புடவை வாங்க போறோம்.

பொறுமை வாத்தியாரே.. பதறாத..நிதானமா கேளு..

சொல்லு தண்டபாணி..

வாத்தியாரே.. சுந்தரியும் சரி.. உங்க வீட்டு மந்திரியும் சரி ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை இந்தியா போகும் போது.. நிறைய புது புடவைகள் வாங்கின்னு வருவாங்க..

டேய்.. அது ஒரு நல்லது - பண்டிகைக்கு மற்றவர்களுக்கு கொடுக்க வாங்கி வந்தது தண்ட பாணி..

இரு வாத்தியாரே.. ரெண்டு டசன் வாங்கி வந்த புடவையில் ஒன்னு காணாமல் போனா தெரியவா போது..?

புரியில பாணி..

என்ன வாத்தியாரே.. இந்த விசயத்தில் எல்லாம் நீ புள்ளி வைக்காமலே கோலம் போடுவ ... இப்ப தீடீர்ன்னு தடுமாருற?

சரி, பாணி அதில் ஒன்னு எடுத்து கொடுத்தா கூட கண்டுபிடிசுடுவாங்களே பாணி, அதை வாங்கியதே அவங்க தானே..

ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கலையாம்..

தண்ட பாணி.. அது ஆக்க பொறுத்தவளுக்கு...  பொறுத்தவனுக்கு நீ சொல்றது தப்பு..

ரொம்ப முக்கியம் வாத்தியாரே.. விஷயத்துக்கு வா..

சரி சொல்லு ..

உங்க வீட்டில் இருந்து நீ ஒரு புடவை எடுத்துன்னு வந்துடு.. இங்க இருந்து நான் ஒரு புடவை எடுத்துன்னு வரேன். இந்த புடவையை நீ அங்க கொடுத்துடு.. அந்த புடவையை நான் இங்கே கொடுத்திடறேன். ரெண்டு பெரும் நம்ம ரெண்டு பேரை.. "தீர்க்க சுமங்கலி பவ"ன்னு சொல்லி வாழ்த்தி வைப்பாங்க...

தண்டம் .. மவனே இதில மட்டும் நம்ப மாட்டனும் ... அப்புறம் பால் தாண்டா ..

வாத்தியாரே உனக்கு NBA Finals  பார்க்க வேண்டுமா வேண்டாமா?

வேண்டும்..

அப்ப உடனே ஒரு புடவைய சுட்டு காரில் போட்டு கொண்டு கிளம்பு..

சரி தண்டம் ..15 நிமிஷத்தில் சந்திப்போம்.

வாத்தியாரே.. சொல்றேன்னு தப்பா நினைக்காதே..

சொல்லு...

சுந்தரி வாங்கி வந்த புடவை எல்லாம் பட்டு புடவை.. நீயும் பட்டு புடவையா பாத்து எடுத்துன்னு வா... வேற ஏதாவது.. காக்கிநாட ஸ்டைலில் வேண்டாம்.

ரொம்ப முக்கியம் தண்டம்..


நினைவு திரும்பியது.

ஒரு வேளை இந்த புடவை "பண்டமாற்று முறை"யை கண்டு பிடித்து விட்டார்களா?

கண்டு பிடித்து விட்டார்களா?..

யோசித்து கொண்டு இருக்கும் போதே ...அலை பேசி அலறியது..

வாத்தியாரே.. தண்டம் பேசுறேன்..உடனே போனை எடுத்து கொண்டு பாத்ரூம் போ.. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.

பாணி.. உன் நம்பரை பார்த்தவுடனே நான் போனை எடுத்து கொண்டு பாத்ரூம் வந்துட்டேன். விஷயத்த சொல்லு. நானே கூப்பிடனும்னு நினைத்தேன். போன வருஷம் நம்ம நடத்திய அந்த "புடவை மாற்று முறையை" சுந்தரி கண்டுப் பிடிச்சிட்டாங்களா?

வாத்தியாரே.. அதை கேட்க்க தான் நான் உன்னை கூப்பிட்டேன்.. அங்கே கண்டுப் பிடிச்சிட்டாங்களா?

அப்படி தான் தெரியுது பாணி.. நீ எப்படி மாட்டுன..?

ஒன்னும் இல்லை வாத்தியாரே.. இந்த புது வருஷத்தில் மனைவி பிள்ளைகளிடம் நிறைய நேரம் செலவு பண்ணலாம்னு நம்ப முடிவு பண்ணோம் இல்ல.. சும்மா ஒருத்தருக்கு ஒருத்தர் முகத்தை பார்த்து கொண்டு.. " நான் ஒரு குழந்தை.. நீ ஒரு குழந்தை" ன்னு பாடி கொண்டா இருக்க முடியும்னு யோசித்து..

மேல சொல்லு..

புடவை நல்லா இருக்கே எப்ப வாங்கினேன்னு கேட்டு சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டேன்...நீ எப்படி வாத்தியாரே மாட்டுன?

என்னத்த சொல்வேன் தண்டம்.. என்னத்த சொல்வேன்..

தொடர்ந்து நடந்தது என்ன ? அது படிக்க இங்கே சொடுக்குங்கள்  "புடவைக்கு ஒரு பூவா - தலையா ...! "

www.visuawesome.com

15 கருத்துகள்:

  1. வணக்கம்
    சொல்லிய விதம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ரூபன்.

      நீக்கு
  2. வணக்கம்
    த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தெரிய வில்லை ஐய்யா.. பட்டும் படாமலும் பேசினார்கள்.. பொருது இருந்து பார்ப்போம். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. ஹா... ஹா... அங்கும் அதே போல் தானா...?

    ஆயிரம் புடவைகள் இருந்தாலும் அவர்களுக்கு புடவைகள் விசயத்தில் மறதி என்பதே கிடையாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///ஹா... ஹா... அங்கும் அதே போல் தானா...?///

      அப்ப அண்ணன் விசு போலத்தான் திண்டுக்கல்தனபாலனுமா என்ன

      நீக்கு
  5. விசு,

    வேலியிலே போற ஓனான் ன்னு எதோ ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருது. எல்லா புடவைகளை அடையாளம் காணக்கூடிய விசேஷ அமைப்பு பெண்களின் மூளையில் இருக்கும்போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா சொன்னீங்க காரிகன். என்னத்த பண்றது..

      நீக்கு
  6. யதார்த்தமான நடை அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
  7. இதுக்குத்தான் அந்த பக்கமே போறது இல்ல,அலுவலகத்தில் எனக்கு நானே சிரித்து கொண்டைதை பார்த்து நண்பர்கள் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.நன்றி

    பதிலளிநீக்கு
  8. ஹஹ்ஹஹஹ செம நண்பரே! ஐயோ வயிறு குலுங்கி சிரிச்சு சிரிச்சு....நல்ல புடவை மாற்று ப்பா....தாங்கலப்பா....

    எங்க தளத்துல இன்னும் கொஞ்ச நேரத்துல ஒரு இடுகை....அத முடிஞ்சா பாருங்க...தப்பா எடுத்துக்கக் கூடாது நண்பரே! சும்மா ஒரு தமாஷுக்குத்தான்....

    பதிலளிநீக்கு
  9. ஹஹ் ஆண்களுக்கு நண்பரே நீங்கள் சொல்வது போல் 3 கலர்தானே தெரியும்! அதச் சொல்லி சமாளிச்சுருக்கலாமே!

    பதிலளிநீக்கு
  10. ஆஹா..கெட்டிக்காரரின் பொய்யும்
    புரட்டும் தக்குமுக்குத் திக்குத்தாளம்
    என்பது இதுதானே

    ஆனாலும் நம்பரைப் பார்த்ததும்
    பாத் ரூம் போகிற டெக்னிக் அருமை

    மனம் கவர்ந்த பதிவு

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  11. Superb plot. நல்ல நகைச்சுவை. Congrats.this is Sumitra Ramjee

    பதிலளிநீக்கு