வியாழன், 2 அக்டோபர், 2014

மேற்கே போகும் ரயில்...

"நம்பர் 40 பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் வில் அரைவ் ஷார்ட்லி ஆன் பிளாட்பாரம் நம்பர்1"

இதை கேட்டவுடன் "தேன் வந்து பாயுது காதினிலே" போன்ற ஒரு இன்பம்.



அக்டோபர் 1, இது கலைத்தாயின் செல்ல மகன் சிவாஜி கணேசனின்  பிறந்த நாள் மட்டும் அல்ல. என் இனிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பிறந்த நாளும் கூட. சிறுவயதில் இருந்தே பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் மேல் ஓர் தனி காதல்.  வீடு பெங்களூர், படிப்பது தமிழ் நாட்டில். ஒவ்வொரு விடுமுறைக்கும் இது தானே என்னை என் இல்லத்திற்கு அழைத்து செல்லும். என்ன அனுபவங்கள்...என்ன நினைவுகள், அதில் சில!


பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிட்ட தட்ட 15 பெட்டிகள் இருந்தாலும் அதில் 2 பெட்டிகள் தான் ஜெனரல் பெட்டிகள் . மற்றவைகள் எல்லாம் ரிசர்வ் செய்ய வேண்டும். நம் கதை தான் தெரியுமே. ரிசர்வ் செய்ய நமக்கு எது நேரம்? சில நேரங்களில் டிக்கெட் வாங்க கூட நேரம் இல்லாத வாழ்ந்த காலம் தானே. சென்னையில் இருந்து பெங்களூர்க்கு  கிட்டதட்ட 6 மணி நேரம் பிரயாணம். நின்று கொண்டு போக முடியாதே. ஆதலால் எனக்கே உரிய பாணியில் ரிசர்வ் பெட்டியில் அமர ஒரு உத்தியை கண்டு பிடித்தேன். அது என்னவா?

ஓர் ஜெனரல் டிக்கெட் வாங்கி கொண்டு, ரிசர்வ் பெட்டியை நோக்கி செல்லவேண்டும். அந்த பெட்டியின்  வெளியில் அன்றைக்கான ரிசர்வ் செய்தவர்களின்  பெயர்கள் போட்டு இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் சில இருக்கைகள் ரிசர்வ் செய்ய படாமல் இருக்கும். இந்த இருக்கைகளில் யார் முதலில் அமருகின்றார்களோ அவர்களுக்கு 2 ருபாய் கட்டணம் வசூலித்து டிக்கெட் பரிசோதகர் அந்த இருக்கைகளை ஒதுக்கிடுவார். இந்த ரிசர்வ் செய்யாத இருக்கைகளில் அமர நாம் வண்டி வருவதற்கு முன்னே காத்து இருந்து, அது வந்த உடனே ஓடி ஏறி பிடிக்க வேண்டும். நமக்குதான் அதற்க்கு நேரம் இல்லையே, அதனால் தான் இந்த யுக்தி.

எந்த எந்த இருக்கை ரிசர்வ் செய்யாமல் இருக்கின்றதோ, நேராக அந்த இருக்கைக்கு சென்று அங்கே அமர்ந்து உள்ள நபரிடம், ஒரு கேள்வி கேட்பதை போல இல்லாமலும், சந்தேகம் கேட்பது போலவும் உள்ள தோரணையில்... "ரிசர்வ்ட்"!? என்று சொன்னால், அவர் பதில் எதுவும் சொல்லாமல் எழுந்து விடுவார் (வைடிங்க் லிஸ்ட் - அல்ல கடைசி நேர ரிசர்வ்ட் நாம் பண்ணியுளோம் என்று நினைத்து). அவர் எழுந்தவுடன் அந்த இருக்கையில் நாம் உரிமையோடு அமர்ந்து கொள்ளலாம்.  இப்போது அடுத்த கட்டத்திற்கு வருவோம். இந்த எழுந்த நபர் அங்கேயே நின்று கொண்டு இருந்தால் டிக்கெட்  பரிசோதகர் வரும் போது நாம் ரிசர்வ் செய்யவில்லை என்பதை கண்டு பிடித்து விடுவார் அல்லவா? அதில் இருந்து தப்பிக்க..

சார், முன்னால்  S-3 பெட்டியில் நிறைய இடங்கள் காலியாக இருக்கின்றது என்று சொன்னோம் என்றால் அவர் அங்கு இருந்து போய் விடுவார். உடனே அந்த இடம் நமது இடம் ஆகி விடும். நிம்மதியாக செல்லலாம். இப்போது நாம் செய்த ஏமாற்று வேலையை அருகில் இருப்பவர்கள் யாராவது பார்த்து பரிசோதகரிடம் போட்டு கொடுத்து விட்டால்? அதில் இருந்து சமாளிக்க, பரிசோதகர் வரும் வேளையில் அந்த இருக்கையில் நம் "பை" அல்லது "புத்தகம்"  ஏதாவது வைத்து விட்டு பரிசோதகரை பெட்டியின் வாசலிலே சந்தித்து அங்கேயே அந்த 2 ரூபாயை கட்டி விட வேண்டும்.

இதை சமாளித்தவுடன், எதிரில் உள்ளவர்களிடம் ஒரு நவரபெச்சு.. எதோ விட்ட குறை தொட்ட குறை போல்,

எப்படி விசு, அவர்கள் பெயர் என்ன, வயது என்ன, அவர்கள் எங்கு இருந்து வருகின்றார்கள், எங்கே போகின்றார்கள் என்று   அவர்கள் கூடவே வளர்ந்து வந்தது போல் தெரிந்து வைத்து கொண்டு இருக்கின்றாயே, இவர்கள் உனக்கு முன்பே அறிமுகம் ஆனவர்களா?  

அது எல்லாம் ஒன்றும் இல்லை மாப்பு. அந்த வெளியே உள்ள லிஸ்டில் எந்த சீட் காலி என்று பார்க்கும் போதே அருகில் யார் யார் இருகின்றார்கள் என்பதயும் பார்த்து கொள்ள வேண்டும்.

வண்டி ஆம்பூரில் நிற்கும் பொது ஏற்கனவே கடிதம் எழுதி இருந்ததால் நண்பன் ராஜ், சலாம் ஹோடேலில் இருந்து பிரியாணி வாங்கி கொண்டு வந்து ரயில் நிலையத்தில் காத்து கொண்டு இருப்பான். சென்னையில் இருந்து வாங்கி கொண்டு வந்த "இறால் வறுவலை" அவனிடம் கொடுத்து விட்டு, அவன் தரும் பிரியாணியை சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடும் போது, "குப்பம்" வரும்.
அங்கே, பல வகை காய் கறிகள்- பழ வகைகளை வாங்கும் போது அருகில் உள்ளவர்களின் நல்ல மதிப்பு கிடைக்கும். மாணவனாக இருக்கும் போதே என்ன ஒரு பொறுப்பு.

இந்த ரயில் பிரயாணத்தில் அருகில் உள்ள குடும்பத்தின் மதிப்பை பெறுவது மிகவும் அவசியம். அதை நாம் பெற்று விட்டோம் என்றால், அவர்கள் எடுத்து வந்த புளி சோறு, முட்டை, மற்றும் இதர தீனி வகைகள் அனைத்தும் நமக்கும்  கிடைக்கும்.  அந்த காய் கரி வகையறாக்களை வீட்டிற்கு கொண்டு  போகும் போது , வீட்டிலேயும்  நல்ல பெயர்..

என்ன அனுபவங்கள்... நன்றி பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்.. நன்றி.. .
"உன்னை போல் நல்லோர்   ஊரில் யார் உள்ளோர்"

என்ற வாக்கியத்திற்கு சொந்தமான என் குடும்பத்திடம் என்னை வருட கணக்கில் "அணைத்து -அழைத்து " சென்றதற்காக!

பின் குறிப்பு : இந்த அருமையான பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் இந்த வருடம் (2014) தன் 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. வாழ்த்துக்கள்!


www.visuawesome.com

6 கருத்துகள்:

  1. எனக்கும் ட்ரைன் மீது ஒரு காதல் உண்டு சார்.

    12 வருடம் திருப்பதிக்கும் சென்னைக்கும் பயனித்த அனுபவம் சார்.

    அதனாலையே ட்ரைன் என்றால் ரொம்ப பிடிக்கும்.

    உங்கலோட அனுபவங்கல் படித்து ரசித்தேன்.
    நேரம் கிடைக்கும்போது நானும் பயன அனுபவங்கள் எழுத உங்கலின் இந்த பதிவு தூண்டி இருக்க்உ சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி மகேஷ். "ரயில் பயணங்களில்" அனுபவங்களே தனி தானே. கண்டிப்பாக எழுதுங்கள். நானும் என்னால் முடிந்தவரை எழுதுகிறேன்.

      நீக்கு
  2. ரயிலில் இப்படியும் பயணம் செய்யலாமோ?

    பதிலளிநீக்கு