ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

சுண்டலும் கொழுக்கட்டையும் நம்பிக்கையும்.

 சனிகிழமை காலை அதுவுமாய், அம்மணிகள் மூவரும் பணிக்கு செல்ல அடியேன் மட்டும் இல்லத்தில்!


சும்மா தானே இருப்பீங்க, இதையெல்லாம் செய்யுங்கன்னு மூவரும் ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்து செல்ல, லிஸ்டில் இருக்கும் ஒவ்வொன்றாக செய்து முடிக்கையில் கடைசியில் எனக்கு பிடிக்காத நான் வெறுக்கும் ஒன்று.

"காஸ்ட்கோ" என்ற கடைக்கு சென்று , இதை எல்லாம் வாங்கி வாருங்கள் என்று ஒரு அட்டவணை.

சரியான வெயில், வண்டியை எடுத்துக்கொண்டு "காஸ்ட்கோ" அடைய அங்கே பார்க்கிங்கில் அம்புட்டு கூட்டம்.

அது என்னமோ தெரியல.. நான் இங்கே வரும்போது மட்டும்

"அடே டே.. விசு வந்து இருக்கான் போல இருக்கே, வாங்க ஒரு சுத்து போய் பாத்துட்டு வரலாம்னு எல்லாரும் கிளம்பி வந்துடுவாங்க போல இருக்குன்னு"

நினைத்து கொண்டே தூரத்தில் கிடைத்த பார்க்கிங் ஸ்பாட்டில் வண்டியை போட்டு விட்டு வெயிலில் ஐந்து நிமிடம் நடந்து வாசல் அடையும் போது.. 

அம்புட்டு பேர் முகத்திலும் முகக்கவசம்.

அட சே.. என்று நொந்து கொண்டே மீண்டும் வண்டிக்கு வந்து முகக்கவசத்தை  மாட்டி கொண்டு மீண்டும் ஐந்து நிமிடம் கழித்து வாசலை அடைய, எனக்கும் முன்னால் நுழைந்தவர் முககவசம் இல்லாமல் நுழைய அங்கே இருந்த பணியாளர்,

"Facemask  Please "

"சாரி, காரில் மறந்து வைச்சிட்டேன்"

என்று சொல்லி காரை நோக்கி நடக்க, அந்த அம்மணி.. 

"நோ ப்ராபிளம், இந்தாங்க!" 

என்று ஒன்றை தர.. அவரோ..

"தேங்க்ஸ், கார் தூர இருக்கு, அஞ்சி நிமிஷம் இந்த வெயிலில் எப்படி நடப்பனேனு யோசித்தேன்"

அவர்கள் இருவரும் சிரித்து கொண்டே விடை பெற, நான் நொந்து கொண்டே அங்கிருந்து விலகினேன்.

இதுவரை வாழ்க்கையில் நானும் சரி மற்றும் நான் அறிந்த எந்த ஆண்மகனும் சரி, ஒருமுறை கூட அம்மணி சொன்ன அயிட்டங்களை சரியாக வாங்கியது இல்லை என்ற அசரீரி கேட்க, 

ஒவ்வொன்றாக சரி பார்த்து வாங்கிக்கொண்டு இருக்கையில், ஒரு ஐட்டம் ..

"Fruit Melody - "Pine apple , Berries, Peach, Mango " ன்னு போட்டு இருக்கும். ஒன் பாக்கெட்.

தேடி கொண்டு இருக்க, எதிரில் அம்மணி சொன்ன பழம் எல்லாம் போட்டு ஒரு பாக்கெட் இருக்க, எதுக்கும் ஒரு போட்டோ அனுப்பி சரி பார்த்துக்கலாம்னு , போட்டோ அனுப்பி, பதிலுக்கு காத்து கொண்டு இருக்கையில், அலை பேசி அலறியது.

இல்லத்தில் அருகில் வசிக்கும் என் இனிய தமிழ் நட்ப்பு,

"விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள், வீட்டுல இருக்கீங்களா, கொஞ்சம் குடீஸ்  பண்ணி இருக்கோம், எடுத்துன்னு வரோம்"

மனதில் ...

அட அட .. விநாயகர் சதுர்த்தி ஐட்டம் எல்லாம் சூப்பரா இருக்குமே!

"இப்ப, இப்ப வந்துடுவேன். அஞ்சே நிமிசத்துல "

என்று சொல்லுகையில், அம்மணியின் டெக்ஸ்ட்டும் "அது தான் அந்த Fruit Melody என்ற பதில் வர, 

விநாயக சதுர்த்திக்கு வரப்போகும் விளக்குமா வை நினைத்து கொண்டே.., அதை சாப்பிட்டு தான் எம்புட்டு நாளாச்சு..என்று ஏங்கி கொண்டே வர, சில நிமிடங்களில்..

குடீஸ் வந்தது.

அருமையான கொழுக்கட்டை, மற்றும் சுண்டல். பார்த்தாலே  பசி தீரும் போன்ற ஒரு லுக். நான் உண்டு விட்டு அம்மணிக்கும் எடுத்து வைத்துவிட்டு, அலை பேசியில் ..

"சுண்டலும் கொழுக்கட்டையும் சூப்பர்.. இருந்தாலும் அந்த விளக்குமா செய்யலையானு.. "

கேட்க, அவர்களோ,

"விளக்குமா புள்ளையார் நோம்புக்கு தான், நவம்பர் போல செய்வோம். சதுர்த்திக்கு சுண்டல் மற்றும் கொழுக்கட்டை "

என்று விளக்கினார்கள் .

வளரும் காலத்தில் இப்படி தான் இந்தியாவில்..

தீபாவளி அதிரசம்

ரமதான் பிரியாணி

கிருஸ்துமஸ் கேக் 

என்று தாக்குவோம். ஆனால் கடந்த சில வருடங்களாக சில மத வெறியர்களால் ஒருவருக்கொருவர் இவ்வாறான பண்டங்களை பரிமாறி தாக்குவது போய், வார்த்தைகளினாலும் கருத்துகளினாலும் தாக்கி கொண்டு இருப்பதை காண முடிகின்றது.

இருந்தாலும் இம்மாதிரியான அருமையான அன்பான நட்புகள்  இல்லத்தில் இருந்து  வந்த சுண்டலும் கொழுக்கட்டையும் அந்த  மதவெறியர்களின் சுயநல எண்ணங்களை அடித்து துரத்தி விடும்  என்ற நம்பிக்கையை மீண்டும் எனக்குள் வரவைத்தது

பணியில் இருந்து வந்த அம்மணி! 

"என்ன சுண்டலும் கொழுக்கட்டையும்!!?"

என்று கேட்க நானும் சொல்ல,

"செம்ம டேஸ்ட்.. !!"

என்று சொல்லி உடனே அந்த அம்மணியிடம்அந்த கொழுக்கட்டை ரெசிப்பி கொஞ்சம் தாங்க என்று வாங்கி கொண்டார்கள்.

பின் குறிப்பு :

என்னங்க.. ?

"சொல்லு..!"

"எங்க அந்த Fruit Melody"?

"அது .. அது.."

அதுதான் என்று அம்மணி டெக்ஸ்ட் பார்த்த நேரத்தில் விளக்குமாவை பற்றிய  போன் வந்ததால் அதை மறந்துவிட்டேன் என்று எப்படி விளக்குவேன் என்ற என் விளக்குமா பிரச்னையை யாராவது விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

2 கருத்துகள்: