வியாழன், 30 ஜூலை, 2020

"பொரிகடலை"யோர கவிதைகள்

வளரும் காலத்தில் பள்ளி ஆண்டு முடிந்து கோடை ஆரம்பிக்க, விடுமுறைக்காக கிராமம் செல்லும் வழக்கம். முதல் இரண்டு நாட்கள் தோழிகள் தோழர்கள் நட்புகள் உறவுகள் என்று நேரம் போவதே தெரியாது. 

மூன்றாம் நாளில் இருந்து கொடுமை தான். கோடை வெயிலை சொல்லவும் வேண்டுமா? 

அருகில் உள்ள பனை மரத்தில் நொங்கு இறக்கினால் அதை வைத்து இரண்டு நாட்கள் ஓட்டலாம்.

மற்றபடி, காலை துவங்கி மாலை வரை.. 

எட்டு மணி போல் எழுந்தால் இல்லத்தின் எதிரே தினமணி மற்றும் தி ஹிந்து செய்தி தாள் இருக்கும். இரண்டிலும் விளையாட்டு பகுதியை வார்த்தை வார்த்தையாக படித்துவிட்டு காலை சாப்பாடு. 

ஒன்பது மணி போல் தோழி தோழர்கள் யாராவது வந்து கதவை தட்ட அருகில் உள்ள திராட்சை தோப்பு. 

அதற்கு பின்னர் அருகில் உள்ள தென்னந்தோப்பில் இளநீர் திருட்டு.சில நாட்களில் இளநீர் என்று காய்களை பறித்து பின்னர் அதை உறிக்கையில் முத்திய தேங்காய் என்று அறிகையில், அதன் மூன்று கண்ணில் ஒரு கண்ணை குருடாகி நீரை மட்டும் பருகி, உள்ளே சின்ன சின்ன வெல்ல துகள்களை அனுப்பி, மற்றொரு தேங்காயில் இருந்து ஒரு துண்டை வெட்டி மீண்டும் அந்த கண்ணை குணமாக்கி..

மட்டைகளை எல்லாம் கூடி சேர்த்து நெருப்பூட்டி அந்த வெல்லம் போட்ட தேங்காயை அதில் ஒரு பதினைந்து நிமிடம் வைத்து, பின்னர் உடைத்து சாப்பிட்டால்.. என்ன ஒரு சுவை. 

ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தாலும் இந்த சுகம் இனி வாரா.. !!அப்படியே இந்த சுகம் வந்தாலும் சுகத்தின் கூடவே சுகரும் வரும்.

தேங்காய், மாங்காய், திராட்சை.. இவை மட்டுமா? கோடை விடுமுறைக்கென்றே உள்ள இன்னொரு விஷயம் பொரி  கடலை.

வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடக்கும் சந்தைக்கு சென்று அங்கே அருமை தோழி தனலக்ஸிமியின் அப்பாவின் வண்டி கடையில ஒரு படி பொரி மற்றும் வேர்க்கடலை, உடைச்சகடலை மற்றும் மிக்ஸர் வாங்கி வந்து, பங்கு போட்டு உண்ட நாட்கள் தான் , மற்றும் அந்த சுவை தான் என்ன?

இப்படி கோடை நாட்கள் போய் கொண்டு  இருந்த வேளையில் ஒரு நாள் எங்களோடு சேர்ந்து விளையாட வந்த தனலட்சிமி, 

"மசாலா பொரி சாப்பிட்டு இருக்கீங்களா? "

"மசாலா பொரியா ? அப்படினா?"

"அட பாவத்த!!, நாளைக்கு எடுத்துன்னு  வரேன்" 

ன்னு சொல்லி, எடுத்துன்னு வர..

"மசாலா பொரி.. " 

"அதை கண்டு பிடிச்சவனுக்கு சுத்தி தான் போடணும் அம்புட்டு ருசி."

"என்ன? எங்க அப்பாவை அவன் இவன்னு சொல்ற..!!? கொஞ்சம் கூட மரியாதை இல்லாம?"

"சாரி.. உங்க அப்பா தான் கண்டுபிடிச்சாரா!? "

"பின்ன!!?"

மனதில்.. அது என்னா ..? அப்பனை பத்தி சொன்னா பொண்ணுங்களுக்கு கோவம் பிச்சினு வருது? 

"இதை எப்படி செய்யுறது, தனம்?"


முதலில் பொட்டு கடலையையும் வேர்கடலையையும் கொஞ்சம்  எண்ணெய் போட்டு தனி தனியா வறுத்து எடுத்துக்கணும்.  


கொஞ்சோடு கடலை எண்ணை, சுட வச்சி, அதுல இஞ்சி பூண்ட கொஞ்சம் தட்டி போடணும். அந்த இஞ்சி பூண்டை சும்மா தட்டினா போதும், தோலை எல்லாம் உரிக்க கூடாது. பாதி வாசனை போயிடும். இஞ்சியும் பூண்டும் நல்ல மொறு மொறுனு வர நேரத்துல...



கொஞ்சம் கருவேப்பிலை வாசனைக்கு,

கொஞ்சம் மஞ்ச தூள் கலருக்கு, 

கொஞ்சம் மிளாகாய் தூள் காரத்துக்கு,

கொஞ்சம் மிளகு தூள் வாசனைக்கு,

கொஞ்சம் உப்பு நாக்குக்கு,

போட்டு ஒரு முறை கலக்கி, 
அதுல வேர்க்கடலை, உடைச்ச கடலை போட்டு  ரெண்டு நிமிஷம் கலக்கி விடணும். 

அப்புறம் அந்த கலவையில் பொரியை கொட்டி இன்னொரு ரெண்டு நிமிஷம் கலக்கி தேவைக்கேற்ப மிக்ஸர் போட்டா... 

"மசாலா பொரி " 

ரெடி!

என்னமோ தெரியல.. இன்னைக்கு  மசாலா பொரி நினைவுக்கு வந்தது. 

செஞ்சேன். ..
அதே வாசனை,
அதே ருசி, 
அதே கோடை,
அதே கடலை.
அதே நினைவு,
ஆனா எதோ ஒன்னு மிஸ்ஸிங்.. 

என்னவா இருக்கும்?

சொல்லுங்களேன்!

பின் குறிப்பு :

பணியில் இருந்து திரும்பிய இளைய ராசாத்தி..

"என்ன புதுசா எதோ வாசனை வருதே...?!!"

"ட்ரை பண்ணி பாரு"

ஒரு பிளேட் "மாசாலா பொரி" போட்டு கொடுக்க, பொரியை மட்டும் ரசித்து ருசித்து விட்டு ...

"அடுத்த முறை இந்த எக்ஸ்டரா எதுவும் போடாதீங்க.. இந்த "Fluffy Rice " மட்டும் தனியா செய்யுங்க.. ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்"

இவளோட வயசுல நம்ம  பொட்டுக்கடலை வேர்கடலைக்கு தானே அலைவோம், இந்த காலத்து பசங்க வித்தியாசமா இருக்காங்களே ....

2 கருத்துகள்:

  1. நல்ல இனிய நினைவுகள். பொக்கிஷமான நினைவுகளும் கூட

    துளசிதரன்

    விசு இங்க இந்த மசாலா பொரி ரொம்பவே விக்குது. நாங்களும் வீட்டில் செஞ்சு ரொம்பவே ரசித்து சாப்பிட்டதுண்டு. இதுல கொஞ்சம் நாங்க வெங்காயம் கோஸ், காரட், கொத்தமல்லி, எலலம் கட் பண்ணி போட்டும் சாப்பிடறதுண்டு. அதுவும் செம டேஸ்டியா இருக்கும்

    இந்த மசாலா பொரி பிருந்தாவன், சென்னை மெயில் ல்ல எல்லாம் வரும்

    கீதா

    பதிலளிநீக்கு