புதன், 29 ஜூலை, 2020

இக்கறிக்கு அக்கறி பச்சா !

 80 களின் பெங்களூர் நாட்கள். திங்கள் காலை துவங்கி சனி மதியம் வரை வேலை. சனி மதியம் ஒரு மணிக்கு சனியன் விட்டது ஒன்னரை நாளுக்கு என்று, அந்த நொடிக்காகவே வாழ்ந்த ஒரு தருணம்.

ஒரு மணிக்கு வீட்டுக்கு சென்று டெரிகாட்டன் பேண்ட் மற்றும் ஷர்ட்டை கழட்டி எறிந்துவிட்டு, 

அழகானா
 அருமையான 
ஆச்சரியமான 
அம்சமான 
அட்டகாசமான
 அற்புதமான 
மற்றும் அழுக்கான ஜீன்ஸையும்

அதற்கென்றே வடிவமைக்க பட்ட T ஷர்ட் ஒன்றையும் அணிந்து கொண்டு கவாஸாகி பஜாஜை எட்டி  உதைத்தால் தானாக பிரிகேட் ரோடில் உள்ள "இந்தியானா பர்கர்ஸ்" உணவகத்திற்கு சென்று நிற்கும்.

இம்பீரியலின் சிக்கன் கபாப்,
எம்பையரின் சில்லி சிக்கன்
டாஜின் பிரியாணி
பானூஸின் ரோல்ஸ்...


இவை எல்லாம் அருமை தான். இருந்தாலும் அதற்கு அதற்கென்று ஒரு  கால நேரம் உள்ளதல்லவா .. சனி மதியம் இந்தியானா பர்கர்ஸ்.

இரண்டு மணி போல் உள்ளே நுழைய, நட்ப்புகள் சில ஏற்கனவே அமர்ந்து இருக்கும், மற்றும் சில நமக்கும் பிறகு வரும். இங்கே மெனுவில் மொத்தமே ஐந்து அல்ல ஆறு ஐட்டம் தான்.  என்னமோ வெவ்வேறு பெயர்கள் அந்த மெனுவில் இருந்தாலும் அவர்களுக்கு செய்ய தெரிந்த ஒரே விஷயம் பர்கர்ஸ் தான். ஆனாலும் சும்மா பில்டப்புக்காக வேற வேற பெயர்கள் வித்தியாசம் வித்தியாசமா வைச்சி இருப்பாங்க. 

"மெது மெது" என்று அப்போது தான் பேக்கரியில் இருந்து வந்த பன்னை இரண்டாக வெட்டி சட்டுவதில்கொஞ்சம் பட்டர் போட்டு, கூடவே க்ரில்ட் வெங்காயம், நேர்த்தியாக வெட்ட பட்ட தக்காளி நடுவில்  ரஸ்ஸல் மார்க்கெட்டில் இருந்து வந்த "கொத்து மாட்டு கறியில்" தட்டி செய்யப்பட்ட பர்கர்ஸ்..


அந்த கறியை அவர்கள் சட்டுவதில் திருப்பி திருப்பி போடும் போதே, நாக்கில் எச்சில்.

இதன் அருகிலேயே நாகார்ஜுன் போன்ற அசைவ உணவகங்கள் உண்டு. அங்கே பதினைந்து ரூபாய்க்கு மட்டன் சிக்கன் பிரியாணி கிடைக்கும். ஆனால் நமக்கு ருசி முக்கியமல்லவா. அதனால் இந்த பர்கர்ஸ்  அந்த மட்டன் சிக்கன்  பிரியாணியை விட விலை அதிகமாய் இருந்தாலும் நாங்கள் இங்கே தான் இருப்போம்.

இதற்கு தொட்டுக்கொள்ள எந்த நிமிடத்திலும் கெட்டுவிடும் என்று நிறத்தில் ஒரு சாஸ்.. மற்றும் வினிகரில் போட்டு எடுத்த ஒரு வெள்ளரி பிஞ்சு. என்ன ஒரு ருசி.. அட அட அட.. இப்ப யோசித்தாலும் நாக்கு ஊறுது.

இங்கே இன்னொரு விஷயம்.

தமிழகத்தின் இருந்த வந்த நம்ம பங்காளிகளை ஒரு முறை இங்கே அழைத்து செல்ல.. 

"என்ன மாம்ஸ், பெங்களூரில் பெஸ்ட் லன்ச் வாங்கி தரேன்னு சொன்னீயே ... எங்கே கூப்பிட்ன்னு போக போற ?" 

"அக்கடபண்ணி சூடு"

அங்கே சென்று ஆளுக்கொரு பர்க்கர்ஸ், கூடவே ஒரு "தம்ப்ஸ் அப் " ஆர்டர் செய்ய.,

பர்கரை ...

"மாம்ஸ், கரி பன் , சூப்பர்"

"கரி பன்.. ஐ, பேரே சூப்பரா இருக்கு!""

"என்ன மாம், ஒரு கடி கடிச்சா ஐட்டம்சுத்தமான  நெய்யில் செய்யபட்ட கேசரி போல பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரி  தானா உள்ள போகுது, ஆட்டுக்குட்டி கறியா"

"டேய், இது  பீப்!!"

"என்னாது பீப்பா?"

எதோ ஒரு பாக்யராஜ் படத்தில் ஒருவர் "இட்லியா" என்று அலறுவாரே.. அப்படி அலறினான். .

"ஏண்டா சாப்பிடமாட்டியா?"

"நீ ஒன்னு.. நல்லா சாப்பிடுவேன், இருந்தாலும் என் கண்ணை என்னால நம்பவே முடியல?"

"ஏன்!?"

"இன்னா மாம்ஸ்..?பீப் ஹோட்டலை ஊருக்கு நடுவுல வச்சி வரவன் எல்லாரும் பெருமையா நுழைஞ்சி ஒருத்தனுக்கொருதன் ஆட்டம் பாட்டம்ன்னு?"

"இது என்ன பெரிய விஷயமா ?"

அழுதே விட்டான் பங்காளி..

"மாம்ஸ், எங்க ஊரில் எல்லாம் பீப் ஹோட்டலுக்கு நாற்காலி கூட கிடையாது. நின்னுக்குனு தான் என்று அவன் சொல்லும் போது தான், ஆமா இல்ல, என்று நம் தமிழகத்தின் அனுபவம் நினைவிற்கு வந்தது.

"இருந்தாலும் மாம்ஸ், நீ இப்படி எங்களுக்கு சீப்பா பீப் பர்க்கர்ஸ்  வாங்கி கொடுத்துட்ட பாரு. நீ ரொம்ப கொஞ்சம்!"

"அட பாவத்த, டே.. நீங்க எல்லாம் என் கசின்ஸ் அதனால தான் இங்கே செலவே நிறைய ஆனாலும் பரவாயில்லைன்னு கூட்டினு வந்தேன். சீப்பா வேணும்னா பக்கத்துல நாகர்ஜூனாவில் மட்டன் சிக்கன் பிரியாணி வாங்கி கொடுத்து இருப்பேன்"

"என்னா மாம்ஸ் சொல்ற..? இது மட்டன் சிக்கனோட காஸ்ட்லியா?  ... எப்படி, எதுக்கு ஏன்.."

"அப்புறம் சொல்றேன்.."

"மாம்ஸ், ஒன்னு சொன்னா கோச்சிக்க மாட்டியே.. இனிமேல் எப்ப இப்படி சேரில் உக்காந்து ரிலாக்ஸா பீப் சாப்பிடுவேன்னு தெரியாது.. இன்னொரு "கரி பன்" சொல்லேன் "

சொன்னேன்.

சரி, இது என்ன திடீர்னு "கரி பன் " பத்தி பதிவு?

ரொம்ப நாள் கழிச்சி ஆபிஸ் பக்கம் வர, மதிய பசி.. ஏதாவது சாப்பிடலாம்னு வெளியே போனா .. எதிரில் வந்தது எல்லாம் "பீப் பர்கர்ஸ்". இந்த கடையில் இருக்கும் பர்கர்ஸ் எல்லாம் நல்லா இருக்கும்னு தான், ஆனாலும்..

எங்க பெங்களூரில் கிடைக்கும் இந்தியானா பர்கர்ஸ் போல வருமா?

பின் குறிப்பு:

பெங்களூர் நகரில் இருப்பவர் யாராவது இந்த பதிவை வாசிக்க நேர்ந்தால்..

பிரிகேட் ரோடின் இறுதியில் உள்ள ரவுண்டு அபௌட்டில் இருந்த "இந்தியானா பர்கர்ஸ் " இன்னும் உள்ளதா? 



சொல்லவும்.

5 கருத்துகள்:

  1. // எந்த நிமிடத்திலும் கெட்டுவிடும் என்று நிறத்தில் ஒரு சாஸ்... //

    என்னவொரு கணிப்பு...! ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  2. அனுபவங்கள் சுவைக்கின்றன விசு!

    துளசிதரன்

    விசு உங்கள் அனுபவங்கள் அதை விவரிக்கும் விதம் தான் அலாதியான சுவை!

    பிரிகேட் ரோடின் இறுதியில் உள்ள ரவுண்டு அபௌட்டில் இருந்த "இந்தியானா பர்கர்ஸ் " இன்னும் உள்ளதா? //

    இருக்கிறதே அதுக்கு எதிர்த்தாப்புல EVA மால் இருக்கு இப்ப. அப்ப இருந்திருக்காது!! நான் பர்கர் ஷாப் போனதில்ல ஆனா ப்ரிக்கெட் ரோட் போனப்ப பார்த்தது. ஃபேமஸ்னு கேள்விப்பட்டேன். ஜொமாட்டோ வழி கூட சப்ளை இருக்கு போல.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இக்கறிக்கு அக்கறிக்கு பதிலாக பச்சை காய்கறிகள் எவ்வளவோ நல்லது என்று எல்லோரும் செல்கிறார்களே?

    நடமாடிக்கொண்டிருந்த ஒரு உயிரை கொன்று தின்பது பாவம் இல்லையா?

    விலையைக்குறித்து ஆச்சரியப்பட்டு உங்கள் பங்காளி சொல்வதாக எழுதியிருப்பதில் திருத்தம் தேவை, பிரியாணியைவிட " சீப்பா" க்கு பதில் "காஸ்ட்லியா" என்றிருக்கவேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இக்கறிக்கு அக்கறிக்கு பதிலாக பச்சை காய்கறிகள் எவ்வளவோ நல்லது//

      பதிலாக அல்ல, நண்பரே... காய்கறிகள் நல்லது என்று சொல்லி இருப்பார்கள்.

      //நடமாடிக்கொண்டிருந்த ஒரு உயிரை கொன்று தின்பது பாவம் இல்லையா?
      //

      என்னை குழப்பிவிட்டீர்கள். இது எத்தனை நாளா?

      //பிரியாணியைவிட " சீப்பா" க்கு பதில் "காஸ்ட்லியா" என்றிருக்கவேண்டுமோ?//

      பெங்களுர் பர்கரின் ருசியை நினைத்து கொண்டே ஒரு மயக்க நிலையில் எடுத்தியதால் வந்த உணர்ச்சிப்பிழை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. மாற்றி விட்டேன்.

      நீக்கு
  4. சில சுவைகள் நாக்கை விட்டு மறைவதே இல்லை.  அதை நினைக்கும்போதே அதை விரும்பிச் சாப்பிட்ட இடத்துக்கும் செலவின்றி அழைத்துச் சென்று விடுகிறது பாருங்கள்...

    பதிலளிநீக்கு