ஞாயிறு, 12 ஜூலை, 2020

ஹவாய் தீவில் செக்க செவேலென்று ஒரு பப்பாளி !

வளரும் வயதில் பொதுவாகவே நாம் அனைவரும் விரும்பி ருசித்து உண்ணுவது பழங்கள். பழங்கள் பலவிதம் தான். அவை அனைத்திற்கும் தனி தனி மணம் குணம் நிறம் வாசம் சுவை என்று உண்டு.

பொதுவாகவே யாராவது விருந்தினர் இல்லத்திற்கு நாம் சென்றாலோ நம் இல்லத்திற்கு யாராவது வந்தாலோ ஆப்பிள் மற்றும் ஆரஞ் எடுத்து செல்வது வழக்கம்.

இவை இரண்டும் தவிர திராட்சை மற்றும் வாழை பழம் இல்லத்திற்கு வருவதை அடிக்கடி கண்டு இருக்கின்றேன். காலத்திக்கேற்ப இல்லம் வரும் அடுத்த பழம் மா !

இப்படி பல வித பழங்களை வைத்து தாக்கினாலும் எது என்னமோ தெரியலை என்னோ தெரியல அந்த காலத்தில் பப்பாளி பழத்தின் மேல் அவ்வளவு ஈர்ப்பு வந்தது இல்லை.

இல்லத்தை சுற்றி பல மரங்கள் இருந்து அது இலவசமாக கிடைத்ததால் இருக்கலாம். அல்லது மிக பெரிய பெரிய அளவில் உள்ளதால் எளிதில் கையில்  எடுத்து கொண்டு நடந்து கொண்டு சாப்பிட முடியாதலால் கூட இருக்கலாம்.  

இது தவிர.. "பப்பாளி சாப்பிடு .. இரும்பு சத்து அதிகம், உடம்பிற்கு நல்லது" என்று பெரியவர்கள் சொன்னதாலும் இருக்கலாம்.  

இப்படி வாழ்க்கை இருக்கையில் சில வருடங்களுக்கு முன் உறவினர் ஒருவர் திருமணத்திற்கு ஹவாய் தீவிற்கு செல்ல நேரிட்டது. அங்கே  ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கையில், காலை உணவிற்கு பழகூடை வேண்டுமா என்று விடுதி  பணியாளர் கேட்க..

அடே டே! இந்த மாதிரி ஹோட்டலில்  பழங்கள் அருமையா இருக்கும்.. வைச்சி தாக்கலாம் என்று நினைத்து ..

"எஸ் .. ப்ளீஸ்" என்று கூற

அடுத்த நாள் காலை கதவின் எதிரில் ஒரு பழ கூடை.  அதை பார்த்த உடன் அதிர்ந்தேன். இன்னாடா இது.. இம்புட்டு பெரிய ஹோட்டலில் அவ்வளவு பணத்தை வாங்கி கொண்டு ஒரு கூடை பப்பாளி அனுப்பி வைச்சி இருக்காங்களேன்னு கொஞ்சம் கோவமே வந்தது.

அடுத்து வந்த ரூம் சர்விஸ்  பணியாளரை அழைத்து சற்றே சூடான தொனியில்..

"வேற பழமே இல்லையா.. பப்பாளி மட்டும் தானா!!!?"

என்று கேட்க, அவரோ..

"வி சர்வ் தி பெஸ்ட் இன் தி ஐலென்ட். இது உலகிலேயே சிறந்த பப்பாளி ஆக்கும்" 

என்று சொல்லிவிட்டு கிளம்ப, அது என்ன உலகிலேயே சிறந்த பப்பாளி.. பப்பாளி பப்பாளி தானே என்று நினைத்து கொண்டு சீவி ஒரு துண்டை வாயில் போட...

மூன்றாம் பிறை  படத்தில் 

"வான் எங்கும் தங்க மீன்கள்" 
என்று துவங்கும் பாடலின் இடையே ஒரு ///

"பா. .. பா ... பாப்பா ... பாப்ப்பா .. "

என்று ஒரு குரல் வருமே.. அந்த சத்தத்தை உணர்ந்தேன். அவ்வளவு  ருசி.

அடுத்த மூன்று நாட்கள் ஹவாயில் விளைந்த பப்பாளியில் பாதியை நான் தான் முடித்து இருப்பேன். 

இவ்வளவு ருசியாக இருப்பதை எப்படியாவது நம்ம வீட்டிலும் வளர்க்கனும் என்று கடைசியாக உண்ட பப்பாளியின் விதையை கையோடு  எடுத்து கொண்டு விமானநிலையம் செல்ல, அங்கே ஒரு எச்சரிக்கை..
 
"தாவரம், விலங்கு, விதை என்று எதையாவது எடுத்து சென்றால் அதற்கு பெரிய தண்டனையும் அபராதமும் அளிக்கபடும்."

அடித்து பிடித்து பையில் இருந்த விதையை குப்பையில் எரிந்து விட்டு, வாய்க்கு எட்டியது வீட்டுக்கு எட்டவில்லையே என்று  ஆறு மணி நேரம் பறந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை அடைந்து இல்லத்தை சேர்ந்தேன்.

வந்ததும்  முதல் வேலையாக அருகில் உள்ள செடி மரம் விற்கும் கடையில் ஹவாய் பப்பாளி இருக்கா என்று கேட்க அவரும் இருக்கு என்று அழைத்து சென்று ஒரு நான்கு அடி மரத்தை காட்டி 180 டாலர் மட்டும் என்று சொல்ல..

மனதில் பல நிமிடங்கள் பூவா தலையா போட்டு சரி ஒன்று விடுங்க என்று சொல்ல.. இது சாம்பிள் தான். உங்களுக்கு வேணும்னா ஆர்டர் பண்ணுங்க, மூன்று மாதத்தில் வந்து எடுத்து கொள்ளலாம் என்று சொல்ல, அங்கிருந்து வெளியேறினேன்.

அடுத்த சில நாட்களில் இங்கே அமைந்துள்ள கடைக்கு சென்று பழங்கள் வாங்குகையில் அந்நாள் வரை என் கண்ணில் படாத பப்பாளி "என்னை பார் என் அழகை பார் " என்று அழைக்க அருகில் சென்றேன். அதிர்ச்சி.

ஹவாய் பப்பாளி. ஒன்று மூன்று டாலர். 

அட பாவத்த. இது என்ன ஆப்பிள் ஆரஞ் பழத்தோடஅதிக விலையா இருக்கே என்று நொந்து கொண்டே ஒன்றை மட்டும் வாங்கி  இல்லத்திற்கு வந்து பழத்தைவெட்டினால் மீண்டும் அதிர்ச்சி. உள்ளே நிறைய விதைகள்.

இது என்ன? நாம் விதையை எடுத்து வந்தால்  அபராதம், பழத்தோடு வந்தால் பிரச்சனை இல்லையா? என்று நினைத்து கொண்டே விதைகளை காயவைத்து  பின் தோட்டத்தில் வீசி, அடுத்த சில நாட்களுக்கு பப்பாளி செடியை தேடி போக ஏமாற்றமே. ஒரு செடியையும் காணோம்.

மூன்று வருடங்கள் இப்படி விதையை வீசி கொண்டு இருந்த எனக்கு சென்ற வாரம் ஒரு அதிர்ச்சி.  பின் தோட்டத்தில் திராட்சை பழத்தை  அறுவடை செய்யலாம்  என்று செல்ல கீழே பப்பாளி செடிகள்.

அனைத்தையும்  பச்சிளங்குழந்தையை போல் எடுத்து "தோட்ட படுக்கை " என்று அழைக்கப்படும் Garden  Bed  ல் மாற்றி வைத்தேன். இன்னும் சில நாட்கள் அவை இதில் சீராக வளர்க்க பட்டு வளர்ந்தும் வந்தால் மீண்டும் எடுத்து சரியான இடத்தில வைக்க வேண்டும். 

இது பப்பாளி தானே.. வளருமா? 

4 கருத்துகள்:

  1. பப்பாளி வேகமாக வளரும்...

    பப்பாளியின் முதல் துண்டை வாயில் போட்டவுடன், மூ.பி. பாட்டு... அடடே..!

    பதிலளிநீக்கு
  2. என்னை திராட்சைக் கொத்துகள்தான் கவர்ந்தன. மிக அருமையா வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  3. பப்பாளி வேகமாக வளரட்டும்.  முக்கியமாக அங்கு கிடைத்த அதே ருசி கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் காலநிலைக்கு எல்லா மரங்களும் வளரும் நண்பரே .
    பப்பாசி ஊரில் சாப்பிட்ட சுவையை நான் எங்கும் காணவில்லை .இங்கு வருபவை க்ர்பியனில் இருந்து வருபவை என் நினைக்கிறேன் .
    இது குட்டை இனமா ? உயரமாக வளர்பவையா >

    பதிலளிநீக்கு