வியாழன், 11 ஜூன், 2020

ஸ்ரீதர் - MSV - கண்ணதாசன் " சொர்க்கத்தில் கொண்டாட்டம்" (கண்ணதாசன் 3)

இன்னும் சில நாட்களில் கண்ணதாசனின் பிறந்தநாள் வருகின்றது அல்லவா. அதையொட்டி கண்ணதாசனை  பற்றிய நிறைய பதிவுகள் வரும். அதெல்லாம் வருவதற்கு முன்பே நமக்கு தெரிந்த கண்ணதாசனை (மீள் )பற்றி அடுத்த சில நாட்களில் தருவோம்.


 "நெஞ்சில் ஒரு ஆலயம்"  என்ற திரைப்படம் ஸ்ரீதர் – MSV – கண்ணதாசன் மூவரும் இணைந்து வழங்கிய படம். எனக்கே 7 கழுதை வயசு ஆக போகுது, இந்த படம் நான் பிறப்பதற்கும் நான்கு வருடங்கள் முன்னதாக  வந்து உள்ளது.


இரண்டு நாயகர்கள் ஒரு நாயகி. படத்தின் கதை – திரை கதை அமைப்பு பாடல்கள் இசை எல்லாம் நன்றாக அமைய இது ஒரு காவியம் ஆகிவிட்டது.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த படம் அந்த காலத்திலேயே நான்கே வாரங்களில் எடுத்து முடிக்க பட்டது (வெளி நாட்டு கூத்து பாடல் இல்லை என்று நினைக்கின்றேன்).



என் பிறப்பிற்கும் முன்னால் வந்த இந்த படத்தை பற்றி நான் எப்படி அறிந்தேன்? நல்ல கேள்வி. நல்ல படம் என்றால், விஷயங்கள் தானாக வந்து சேரும் அல்லவா, அது மட்டும் அல்லாமல்  நான் ஸ்ரீதரின் ரசிகன், அதனால் அவர் விஷயங்கள் பல தேடி சென்று கற்று வந்தேன்.
வளரும் நாட்களில் அவரை போல ஒரு இயக்குனர் ஆகவேண்டும் என்ற அற்ப ஆசை தான் (விசு, உனக்கு தேவையா, கணக்கு பிள்ளை வேலைய பாரு எல்லாரும் சொல்வது  எதிரொலியோடு கேட்கின்றது). ஆசை தான் யாரை விட்டது, சரி, கதைக்கு வருவோம்.
இந்த விளக்கம் நான் கேள்வி பட்டது தான், நான் கேள்வி பட்டதை என் பாணியில் உங்களுக்கு சொல்லி வைக்கின்றேன்.
இந்த படம் வெளி வந்த நாட்களில்  படத்தின் அத்தனை கலைஞர்களும் ஒன்றாக கூடி ஒரு பட வேலையை  முடித்து வைப்பார்களாம். முக்கியமாக பாடல் ஆசிரியர் – இசை அமைப்பாளர் மற்றும் இயக்குனர் மூவரும் தனியாக ஒரு இடத்தில தங்கி  (இது தான் நாளடைவில்  “ரூம் போட்டு யோசிக்கும்” முறையாகிற்று ) இயக்குனர் கதையை சொல்ல மற்ற இருவரும் பாடலையும் இசையும் எழுதி அமைப்பார்களாம்
.
இந்த படத்திற்கான இந்த வேலை செய்வதற்காக இம்மூவரும்  ஊட்டி அருகே (நான் கேள்வி பட்டது தான், வேறு எந்த ஊராக இருந்தால் என்ன, கதைக்கு வருவோம்) தங்கி தம் தம் வேலையை செய்து வந்தனர்.
நாட்கள் ஆகின்றது. ஒரு நாள், ஸ்ரீதர் அவர்கள் மாலை 8 மணி போல் மற்ற இருவரையும் அழைத்து நாளை காலை கடைசியாக  ஒரு பாட்டு, அந்த காட்சியை நான் இன்னும் சிறிது மாற்ற வேண்டி வரும், அதனால் கதையை இப்போது சொல்லாமல் நாளை சொல்கின்றேன்.
இந்த பாடல் இப்படத்திற்கு கரு போன்றது. தயவு செய்து நீங்கள் இருவரும் இன்று இரவு சீக்கிரமே படுக்கைக்கு போய் நல்ல ஓய்வு எடுத்து விட்டு காலை 7 மணிக்கு வந்து விடுங்கள், நாம் வேலையை ஆரம்பிப்போம் என்றார்.
கண்ணதாசன் – விஸ்வநாதன் இருவரின் வாழ்க்கை பாணி (life style) முற்றிலும் வேறு பட்டது. விஸ்வநாதன் ஓர் கட்டுபாடான மனிதன். இந்த காரியத்தை இப்படி தான் செய்ய வேண்டும் என்று வாழ்பவர். கண்ணதாசனோ ஒரு காட்டாறு வெள்ளம் போல வாழ்ந்தவர். ஒரு கோப்பையிலே என் குடி இருக்கும் என்ற பாணியில் வாழ்ந்தவர். 

ஸ்ரீதர் இவாறாக சொன்னவுடன், விஸ்வநாதன் அவர்கள் தம் இரவு சிற்றுண்டியை முடித்து கொண்டு ஓய்வெடுக்க சென்றார்.  மணி 9:30 போல் இருக்கும் பக்கத்து அறையில் இருந்து பாட்டு மற்றும் சிரிப்பு சத்தம். என்ன நடக்கின்றது என்று பார்க்க சென்ற விஸ்வநாதன் அவர்களுக்கு அதிர்ச்சி. 

அங்கே கண்ணதாசன்  அறையில் தோழர்கள் – தோழிகள் – புட்டிகள் சகிதமாக கவியரசு அமர்ந்து அறட்டை அடித்து கொண்டு இருந்தார்.  என்ன தாசா? இயக்குனர்  காலையில் சீக்கிரம் வா என்றாரே, இது இப்போது அவசியமா என்ற கேள்விக்கு கண்ணதாசன் “நீங்க போய் தூங்குங்கள் காலை பார்க்கலாம் “என்றார்.

மீண்டும் தன அறைக்கு வந்த விஸ்வநாதனுக்கு தூக்கம் வரவில்லை. எப்படி வரும், பக்கத்து அறையின் கூச்சலில் யார் தான் படுக்க இயலும். மணி ரெண்டு போல் ஆகியது. மீண்டும் ஒரு முறை விஸ்வநாதன் பக்கத்துக்கு அறைக்கு சென்று பார்க்கையில், கண்ணதாசன் அவர்கள் விருந்தினர்கள் அனைவரையும் அனுப்பி  விட்டு, கையில் ஒரு பாட்டிலோடு அமர்ந்து இருந்தார்.

 விஸ்வநாதன் அவரை பார்த்து, “இப்பவாது போய் தூங்கி ஓய்வெடு, 
இயக்குனருக்கு தெரிந்தால் எல்லாருக்கும் பிரச்சனை” என்று சொல்ல, கண்ணதாசன் அவரிடம் “இயக்குனருக்கு தெரிய வாய்ப்பே இல்லை, நீ சொன்னால் தான் தெரிய வரும். இன்று இங்கே நடந்ததை நீ சொல்லி விடாதே, என் கையில் உள்ள பாட்டிலை மறந்து விடு” என்று சொல்லி தூங்க போனார். 

காலை 7 மணி, இயக்குனர் மற்றும் விஸ்வநாதன் தயாராக இருக்க கண்ணதாசனை காணவில்லை. எழு எட்டு ஆகிற்று, எட்டு ஒன்பது ஆகிற்று. நேரம் போக போக ஸ்ரீதர் பொறுமையை இழந்து சிறிது கோப பட, விஸ்வநாதான் உண்மையை உளறி விட்டார்.
இவர்கள் இப்படி பேசி கொண்டு இறக்கையில் கண்ணதாசன் சிறித்து கொண்டே உள்ளே வந்து, நான் தயார் , நீங்கள் இருவரும் தயாரா என்று கேட்க, ஸ்ரீதர் அவர்கள், ஏன் இவ்வளவு தாமதம்? உம்மை 7 மணிக்கே அல்லவா வர சொன்னேன்? என்று சத்தம் போட, கண்ணதாசனோ, “கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேன் மன்னிக்க வேண்டும்”” என்று கூற ஸ்ரீதர் அவர்களோ, “இல்லை  இல்லை, நேற்று இரண்டு மணி வரை நீ குடித்து கும்மாளம் போட்டு இருத்கின்றாய் நேற்று இரவு இரண்டு மணிக்கு உன் கையில் பாட்டில் இருந்து உள்ளது”என்று சொல்ல, விஸ்வநாதனோ குற்ற உணர்ச்சியோடு வானத்தை பார்க்க ஆரம்பித்தார்.
அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லையே என்று கண்ணதாசன் கூற, “இல்லை எனக்கு செய்தி வந்தது, நேற்று நீ இப்படி தான் செய்து உள்ளாய் “என்று ஆணித்தரமாக கூற, கண்ணதாசன் விஸ்வநாதனை பார்த்தார்; குற்றம் செய்த நெஞ்சம் குருகுருக்குமே, அகத்தின் அழகை முகம் காட்டி விட்டது.
சரி, இதுதான் காட்சி என்று ஸ்ரீதர் அந்த காட்சியை விளக்க,  விஸ்வநாதன் அவர்கள் கண்ணதாசனை “நீ பாடலை சொல், நான் இசையை போடுகின்றேன்” என்றார். கண்ணதாசன் , பரவாயில்லை நீங்களே மெட்டை சொல்லுங்கள்  நான் வார்த்தையை அதற்க்கு ஏற்ப சொல்கின்றேன் என்று சொல்ல விஸ்வநாதன் ஆரம்பித்தார்.
ல ல ல லா லா லா …

சொன்னது நீ தானா ?…..
(கண்ணதாசனின் இந்த  வார்த்தைகளை கேட்டவுடன் விஸ்வநாதன் அவர்கள் முகம் பேய் அறைந்ததை போல் மாறியது. பேய் அறைந்தால் முகம் எப்படி மாறும் என்பது எனக்கு எப்படி தெரியும் என்று உங்களில் சிலர் கேட்பது தெரிகின்றது. நான் கண்டிப்பாக மற்றொரு நாள் அந்த பேய் அறைந்த கதையை எழுதுகின்றேன்)
சற்று அதிர்ந்த விஸ்வநாதன் சற்று சமாளித்து.. மீண்டும்
ல ல ல 

என்று சொல்ல, கண்ணதாசனோ
சொல் … சொல்.. சொல்...
என்பதோடு விட்டு விடாமல் :
சம்மதம் தானா? சம்மதம் தானா? ஏன் ஏன் ஏன் என்னுயிரே… 
இன்னொரு கைகளிலே, யார், யார்,யார் .. நானா? 
என்னை மறந்தாயா ?ஏன் ஏன் ஏன் என்னுயிரே… 

என்று சொல்ல, விஸ்வநாதன் முழிப்பதை பார்த்த ஸ்ரீதர் அவர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
“சரி , விடு கண்ணதாசா, இந்த வரிகள் நன்றாக இருக்கின்றது “என்று பாராட்டி மற்ற சரணங்களையும் மூன்று பெரும் சேர்ந்து முடித்து வைத்தனர். .
என்ன ஒரு அனுபவம்… கண்ணதாசன் கண்ணதாசன் தான்…
படித்து முடித்தீர்கள் அல்லவா? இப்போது இந்த பாடலை கேட்டு பாருங்கள்.


சொன்னது நீ தானா ?

இந்த நிகழ்ச்சியை மனதில் வைத்து கொண்டு இந்த பாடலை இன்னொருமுறை கேட்டுப்பாருங்கள். படத்தில் இந்த பாடலை பார்க்கையிலே அழுகை வந்தாலும், இந்த எழுதிய சூழ்நிலையை வைத்து பார்த்தால் சிரிப்பு தான் வரும்.

ஒரே பாடலுக்கு தேம்பி தேம்பி அழவைக்கவும் குலுங்கி குலுங்கி சிரிக்கவைக்கவும் கண்ணதாசனில் தான் முடியும்.

2 கருத்துகள்:

  1. அருமை...

    இந்த

    பேய் அறைந்த கதை...

    ம்ஹிம்...

    ?

    !!!

    பதிலளிநீக்கு
  2. ஒரு சோக பாட்டுக்குள்ள இவ்வளவு சுவையான அனுபவமா. ஆமாம் சார் கண்ணதாசன் கண்ணதாசந்தான். இன்னும் அவரைப்பற்றி இப்படி சுவையான அனுபவங்களை எழுதுங்கள். படிச்சிக்கிட்டே இருக்கிறோம். ஆர்வமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு