வியாழன், 30 ஏப்ரல், 2020

வீடு, வீதி, காடு மற்றும் கடைசி!!!

#tccontest2020
"உறவுகள் - என் பார்வையில்

விடுதியில் தங்கி பத்தாவது படித்து கொண்டு இருந்த காலத்தில் விதிமுறைகளை மீறி சுவரேறி செகண்ட் ஷோ  சினிமா சென்று அகப்பட்ட ஒரு நாள்.

"ஏன் சினிமாவிற்கு போன?"

"சாரி சார்"

"ஏன் போன?"

"படுத்தா தூக்கம் வர மாட்டுது"

"ஏன்?"

என்று பிரம்பை தூக்கியவர் .

"ஒரே வீடு, அம்மா,  அக்கா  நினைவா வருது"

என்ற பதிலை கேட்டு பிரம்பை மேசையின் மேலே வைத்து விட்டு,

"என் ஆபிசில் வந்து பார்!"

என்று சொல்லிவிட்டு  கிளம்பினார்.

"சார்"



"சிட் டோவ்ன்"

"தேங்க்ஸ்"

"இந்த வயசுல வீடு அப்பா... சாரி ...அவரு  இறந்துட்டாரு இல்ல, அம்மா அண்ணன்  அக்கா எல்லாம் முக்கியம் அவங்க பாசம் அவசியம் தான். ஆனா அது எல்லாருக்கும் வாய்க்காது, I know it is not fair. ஆனாலும் அதையே நம்ம ஒரு எக்ஸ்குயூஸா  எடுத்துக்க கூடாது"

"ஓகே சார்"

"போ, இனிமேல் இப்படி பண்ணாத"

"சார்!!!?"

"எஸ்"

"தூக்கம் வராட்டி என்ன சார் செய்வீங்க!!?"

"மீ,, !!? ஓகே.. தூக்கம் வருதோ இல்லையோ ... படுக்கைக்கு போயுடுவேன். மனசுல ஒரே ஒரு நினைப்பு தான். நாளைக்கு காலையில் நான் எலாட்டி அந்த நாள் எப்படி போகும்னு யோசித்து, அதுல எனக்கு என்ன என்ன பிடிக்கலையே அதை மனசுல குறிச்சி வைச்சிட்டு இருக்கையிலே தூங்க போயிடுவேன் நீயும் ட்ரை பண்ணு"

அன்று படுக்கையில், நாளை காலை எழாவிட்டால்..

அம்மாக்கு லெட்டர் போட்டு மூணு வாரமாச்சி!

நண்பன்  கபிலனுக்கு ஆறு ரூவா கடன்.

வீட்டை விட்டு சண்டை போட்டுட்டு போன வார்டன் சம்சாரம் கையெழுத்து மாதிரியே எழுதி ஸ்டாம்ப் ஒட்டமா அனுப்ப  அத அவரு காசு குடுத்து வாங்க வைச்சத்துக்கு மன்னிப்பே கேக்கல.

பி டீ மாஸ்டர் வெஸ்பா ஸ்கூட்டர்ரில்  காத்து புடிங்கி விட்டது, பாவம் அவரு ரெண்டு கிலோ மீட்டர் தள்ளினு போனார்

தனக்கு வரும் சொற்ப படிப்பு உற்சாக தொகையில் இருந்து அக்கா போன   மாசம் இருபது ருபாய் அனுப்புனாங்க.. அதுக்கு நன்றி சொல்லி ஒரு பதில் போடணும்.

கூட படிக்கும் அன்னபூரணியோட லஞ்ச் பாக்சில்  ...

தூங்கி விட்டேன்.

இது நடந்து 40 + வருடமாகிற்று ஆனால் இந்த பழக்கம் இன்னும் இருக்கின்றது. நேற்று படுக்கையில்..

அம்மா:

அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் இருக்கின்றார்கள் (முதியோர் இல்லமா, ஏன் என்று வியப்படைவர்களுக்கு , இன்னொரு பதிவில் பதில் சொல்கிறேன்). இந்த கொரோனா வந்ததில் இருந்து அவர்கள் இல்லத்து கதவை மூடி விட்டார்கள். தொலை பேசியில் தான் தொடர்பு. 94 வயது ஆனாலும் இன்னும் ரொம்ப சமத்து. போனை எடுத்தவுடன்.. நீங்க சாக்கிரதை நீங்க சாக்கிரதை என்று தான் அறிவுரை. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்கவங்க எல்லாம் எப்படியோ தெரியலையே என்று மனதில் ஒரு சோகம். எப்ப பாரு யாருக்காவது ஏதாவது நல்லது செய்யணும்னு ஒரு எண்ணம். காலையில் எழுந்தா அவங்கள மாதிரியே இருக்கணும்.

அடுத்து அம்மணி..

சின்ன வயசுல யாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரங்களை நேரில் அனுபவிச்சவங்க. படிக்கும் போதே அப்பா அம்மாவை பறிகொடுத்துட்டு இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து ஆடம் பிடிச்சி நல்லா படிச்சி வாழ்க்கையில் சாதிப்பேன்னு சொல்லி சாதிச்சி காட்டியவங்க. நடுவுல  எங்க கண்ணாலம்..

மருத்துவ மனையில் செவிலியாராக பணியாற்றுபவர்கள். கொரோனா தாக்கத்தில் நான் மற்றும் மகள்கள் இல்லத்தில் அடைக்கப்பட்டு இருந்தாலும் அம்மணி மட்டும் வேலைக்கு போகின்றார்கள்.

"கொரோனா வைரஸ், ஊரடங்கு கொஞ்சம் ஜாக்கிரதையா இரு!!"

"இது எல்லாம் ஒரு ஊரடங்கா? 83 ' ல் எங்க ஊரடங்க நீங்க பாத்து இருக்கணும். ஒவ்வொரு நாளை கடப்பதும் ஒரு யுகமே கடந்துடும். பசி  பட்டினி அதையெல்லாம் கூட விடுங்க உயிர் பயம். ஒவ்வொரு நாள் தூங்க போகும் போதும் அடுத்த நாள் எழுவோமா... எழும் போது கூட இருக்க அப்பா அம்மா இருப்பாங்களான்னு...

இந்த ஊரடங்குக்கு எல்லாம் பயப்படாதீங்க.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் ..

காலையில் எழுந்தா அவங்க மாதிரியே பாஸிட்டிவா இருக்கனும்..


மூத்தவ...

கல்யாணத்து புதுசுல சிகரெட் குடி பழக்கம் இருந்ததாமே, அம்மா  சொன்னாங்க.. நான் பிறந்ததால தான் குப்பை கொட்டுனாங்களாம்.  "சோ , யு பெட்டெர் ரெஸ்பெக்ட் மீ", என்று அலறியவள்.

பள்ளி படிப்பை முடித்துவிட்டு   இன்று கல்லூரியில் முன்றாவது வருடம். படித்து கொண்டே, கல்லூரி கோல்ப் அணியிலும் இருந்து கொண்டு கல்லூரி கொயரிலும் பாடி கொண்டு  வேலைக்கும் போய் கொண்டு இருக்கின்றாள்.  எங்கள் வீட்டில் இருந்து 100  மைல் தொலைவில் அவள் வீடு. தனியாக இருந்து தானே சமைத்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றாள். இங்கே இருக்கும் போது சோம்பேறியாக இருந்தவள் இப்போது துரு துரு.. கொரோனா அடைப்பிற்காக  இங்கே வந்தவள் இப்போது..இங்கே.. இதை இங்கே வை .. அதை அங்கே வை. சுத்தமா இருங்க.. என்று சொல்லி கொண்டு இருக்கின்றாள்.

காலையில் எழுந்தாள் அவளை போல் டைம் மேனேஜ்மென்ட் பண்ண வேண்டும்.

இளையவள்..

பள்ளி இறுதி ஆண்டு. கொரோனாவினால் பள்ளி நடப்பதில்லை. ஆணடவன் புண்ணியம் போன வருடமே எந்த கல்லூரி போக போகின்றாள் என்று அலசி ஆராய்ந்து ஒரு கல்லூரியை தேர்ந்தெடுத்து அதற்கான ஒப்பந்தமும் போட்டாச்சு. ஒரு வருடமாக அருகில் உள்ள ஒரு கோல்ப் கடையில்  வாரம் 25  மணி நேரம் போல் வேலை செய்தாள்.  அதில் கிட்டும்  பணத்தில் பாதியை சேமிப்பு கணக்கில் போட்டு விடவேண்டுமென்று அடியேன்  ( நம்ம தான் செய்யல ) சொன்ன அறிவுரையை கேட்டு ஒரு வருடமாக செய்து வந்தவள்..கொரோனாவில் வேலை இல்லை , எப்படி சேமிப்பேன் என்று பெருமூச்சி விடுகையில், அவள் ஆபிசில் இருந்து ஒரு கடிதம்.  இந்த கொரோன கடையடைப்பு நாட்களில் தாம் வேலைக்கு வர முடியாதலால். அரசாங்க உத்தரவின் படி தம்முடைய சராசரி சம்பளத்தை அடுத்த மூன்று மாதங்களுக்கு இத்துடன் அனுப்பி வைக்கின்றோம். டாடா ..டாடா .. என் சேமிப்பு ஓகே.  என்று கொக்கரிப்பு.

காலையில் எழுந்தால்  அவளை போல் சற்று பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்..

அக்கா

அக்காவின் பிள்ளைகள் வேற வேற நாட்டில் படிச்சினும் புழைச்சினும் இருக்காங்க. இந்த கொரோனா தாக்கலில் எப்படி இருக்காங்களோ.. காலையில் எழுந்ததும் ஒரு போனை போடணும்.

நண்பன் :

"விசு..அம்மணி ஹாஸ்பிடலில் பயங்கர பிசினு கேள்வி பட்டேன் . நீ சமைப்ப .. அது எனக்கும் தெரியும். இருந்தாலும் உன் ராசாத்திங்களுக்கு வாய் ருசியாவும் ஏதாவது சாப்பிட  ஆசை இருக்கும் இல்ல. சுந்தரி இன்னைக்கு சமைக்கிறா. அதை ஒரு மணி போல உன் வீட்டு  கதவுக்கு எதிரில் வைச்சிட்டு காலிங் பெல் அடிச்சிட்டு போறேன். என்ஜாய் பண்ணுங்க.. "

என்று என்றும் கூறும் தண்டபாணி..

காலையில் எழுந்தவுடன் பக்கத்துல இருக்க அஞ்சப்பரில் அவனுக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு அவன் வீட்டுல பெல் அடிச்சி வைச்சிட்டு வரணும்.

அன்னபூரணி

இந்த வயசுல அன்னபூரணிய பத்தி என்ன நினைப்பு?  ஒழுங்கா குப்பை கொட்டின்னு  இருக்குறது பிடிக்கலையா  என்று மனசாட்சி கேட்க ...அவளை  விட்டுவிடுவோம்.

இந்த ஒவ்வொரு உறவும் கடவுள் நமக்கு வீடு, வீதி, காடு மற்றும் கடைசி என்று கொடுத்தவை!

போற்றுவோம் இவற்றை.

#tccontest2020

4 கருத்துகள்:

  1. தண்டபாணி அவர்களை மிகவும் எதிர்ப்பார்க்கிறேன்... உங்களின் பிடித்த அந்த ரகசியம் எப்போ வெளியில் வரும்...?

    பதிலளிநீக்கு
  2. அந்த ரகசியம் வரும் ஆனா வராது..

    பதிலளிநீக்கு
  3. முழுக்க, முழுங்க முழுவதுமே முழுமையான சுவாரஸ்சியம் நண்பரே...

    கவனமாக இருங்கள் வாழ்க நலமுடன்.

    பதிலளிநீக்கு

  4. நினைப்புகள் எல்லாமே நல்லவைதான், ஆனா எப்ப தூங்குறது ? , இதுக்கே விடிஞ்சு போயிருக்குமே தம்பி .

    பதிலளிநீக்கு