சனி, 11 ஏப்ரல், 2020

18 வயது விசுவிற்கு ஒரு கடிதம்!

அன்பார்ந்த விசு,

இந்த கடிதத்தை எழுதம் எனக்கு தற்போது 54 வயதாகிறது. இன்றைக்கு இங்கே ஏப்ரல் 10,2020!  இதை பெரும் உனக்கு இன்று 18 வயது தான்.  நாளும் ஏப்ரல் 10 , 1983  என்று நினைக்கின்றேன்.

கடந்த ஒரு மாதமாகவே இங்கேயும் சரி, உலகம் முழுக்கவும் சரி, கொரோனா என்ற கொடூர நோய் தாக்கி கொண்டு இருக்கின்றது.ஒரு மாதமாக உலகமே வீட்டிற்குள் அடங்கி கொண்டு உள்ளது. அடியேனும் அதற்கு விதிவிலக்கல்ல.

மருத்துவமனையில்  சேரும் நோயாளிகளை பார்க்கையில், அவர்களின் சுகத்திற்காக தியாக மனதுடன் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களை பார்க்கையில் எனக்கு உதித்த எண்ணத்தை தான் இந்த கடிதத்தில் உனக்கு எழுதுகிறேன்.



கல்லூரியில் காமர்ஸ் படித்து தணிக்கையாளராக வேண்டும் என்ற எண்ணத்தை உடனடியாக கைவிட்டு விட்டு அருகில் உள்ள CMC மருத்துவ மனையில் மருத்துவ படிப்பு ஏதாவது ஒன்றில் சேர்ந்து விடு.  அது மருத்துவராக இருக்கலாம், செவிலியராக இருக்கலாம், லேப் டெக்னீசியன் ,  X RAY டெக்னீசியன், பார்மசிஸ்ட் என்று ஏதுவாய் இருந்தாலும் பரவாயில்லை. இந்த காமர்ஸ் படித்து தணிக்கையாளராவதால் உலகிற்கு ஓர் நன்மையையும் கிடையாது. உன் வீட்டில் வேண்டுமென்றால் விளக்கெறியலாம்.

மற்றும், இல்லத்திலேயே அடைந்து கிடக்காதே! வெளியே செல். மக்களை கவனி. யார் முகத்திலாவது சோகம் தெரிந்தால் என்னவென்று விசாரி. முடிந்தால் ஒரு வேளை உணவு  வாங்கி கொடு.

நேரம் கிடைக்கும் போது அங்கே உள்ள சிறைச்சாலைக்கு சென்று உள்ளே  இருக்கும் கைதிகளோடு சற்று நேரம் அமர்ந்து பேசு. அவர்களிடம் விசாரித்து அவர்கள் இல்லத்திற்கு சென்று அவர்களின் பிள்ளைகளுக்கு சிறையில் உள்ள அப்பா - அம்மா கொடுத்தார்கள் என்று ஏதாவது விளையாட்டு பொருள் வாங்கி கொடு. போகும் போது நொறுக்கு தீனி மற்றும் பால் பழம் வாங்கி போ. கை  வீசி கொண்டு போய் நிற்காதே,


ஆற்காடு மாவட்டத்தில் அநேக மாற்று திரானோர் பள்ளிகள் உள்ளது. காது கேளாதோர்களுக்காக  , பார்வையற்றகளுக்காக. வார இறுதியில் அங்கே போ. மீண்டும் கை வீசி கொண்டு போய்விடாதே. பார்வையற்றவர்கள் விடுதிக்கும்  பள்ளிக்கும் செல். அவர்களிடம் சற்று பேசு. அவர்களின் உலகமே  குரல் தான். நல்ல புத்தகங்கள் வாங்கி செல்,  மணி நேர கணக்கில் அவர்களுக்கு படித்து காட்டு.  செவி இழந்தோருடு ஓடி ஆடி விளையாடு.

கூடவே இருக்கின்றார்களே உன் இனிய நண்பர்கள். அவர்களிடம் இன்னும் அன்பாயிரு. பணம் மட்டும் அல்லாமல் நேரத்தையும் செலவிடு.

படிப்பை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன், மற்றவை உன் கையில்.

இந்த வயதில் காதல் கீதல் என்று நேரத்தை வீணடிக்காதே. அப்படியே இருந்தாலும் உன் ராசி, அது எல்லாம் உனக்கு ஒத்து வராது.

இசை என்பது பொழுது போக்குக்கு மட்டுமே. அதிலே மூழ்கி விடாதே. மற்றும், புகை சோமபானம் சுறா பணம், மிகவும் கவனமாக இரு. பழகிவிட்டால் நிறுத்த முடியாது.

மற்ற மதத்தை சார்ந்தவர்களோடு இன்னும் பழகு. இந்த சந்தர்ப்பத்தை இழந்து விடாதே. சொன்னால் நம்பமாட்டாய் இருந்தாலும் சொல்கிறேன். இந்தியாவில் இம்மாதிரியான மத ஒற்றுமை உன் சந்ததியோடு முடிந்துவிடும். அடுத்த சந்ததியில் மதம் என்றாலே காழ்ப்புணர்ச்சி, அடி தடி வெட்டு குத்து மட்டுமே.

இன்னும் எவ்வளவோ எழுத ஆசை. இத்துடன் நிறுத்திகொள்கிறேன். முடிந்தால் பதில் போடு. ம்ம்ம்..

ஒரு விஷயம், இதற்கு மட்டும் அல்ல, எப்போது யார் என்ன எழுதினாலும் அதை படித்து விட்டு அப்படியே போய் விடாதே. பதில் எழுத்து.

என்றும் அன்புடன்

விசு
ஏப்ரல் 10, 2020

பின் குறிப்பு :

கிரிக்கெட் பார்ப்பதை தவிர் . இந்நாட்களில் கிரிக்கெட்டில் சிறிது சூதாட்டம் கையோங்கி இருக்கின்றது என்று ஒரு கேள்வி. இன்னும் சொல்ல போனால் அடுத்த இரண்டு மாதத்தில்  இங்கிலாந்தில் உலக கோப்பை நடக்க உள்ளதாம். அதில் இந்தியா , மேற்கு இந்திய தீவு, இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற ஜாம்பவான்களை அதிசயமாக தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று கூட சொல்கின்றார்கள். கிரிக்கெட்டுக்காக நேரத்தை வீணடிக்காதே. இன்று இருக்கையின் முனையில் நீ அமர்ந்து பார்த்த ஆட்டங்கள் எல்லாம் சூதாட்டத்தினால் ஏற்கனவே முடிவு செய்ய பட்டது என்று அறிய வரும் போது மிகவும் வருந்துவாய்.

3 கருத்துகள்:

  1. அருமையான கடிதம்...

    முடிவில் பணம் செய்யும் மாயை...

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்துள்ள கடிதம். அந்த சிறைச்சாலைக்குச் செல்லும் போது வாங்கிச் செல்லச் சொல்லும் விஷயங்கள் உங்கள் ரெண்டாவது கதைபுத்தகத்தில் கூட நீங்க சொல்லிருந்தீங்களே...உமா செய்வாளே!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. I am sure your 18 years old would have done all the things you have mentioned here and may be more. We are in a generation where I can positively say, the 18 year olds will be more progressive than their own version in 54 years.

    பதிலளிநீக்கு