ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

நந்தவனத்தில் ஒரு "அயோக்கியா"

கற்பனை தான்..

இதை படிக்கும் அனைவரும் தமக்கு அறிந்த ஒரு சிற்றூர் அல்லது கிராமத்தை மனதில்  ஏற்றி கொண்டு படிக்க ஆரம்பியுங்கள். அடியேனின் மனதில் பருகூர் !

பெரியவரின் இல்லத்தில் நல்ல காரியம். ஆறு வருடத்திற்கு முன் பெரியவரின் மூத்த மகளின் திருமணம் நடந்ததை ஊரில் யார் தான் மறப்பார். அப்படி ஒரு  திருமணம்.

ஊரின் எல்லையில் இருக்கும் காட்டில் இருந்து விறகு பொறுக்குபவர்கள் துவங்கி உள்ளே இருக்கும் ரெட்டி குடும்பத்தாரின் தங்க நகை வியாபாரிகள் வரை மகிழ்ந்த திருமணம்.

ஆறு வருடம் கழித்து பெரியவரின் இரண்டாம் மகளுக்கு  நிச்சயதார்த்தம் சென்ற வாரம். ஊரே மீண்டும் மகிழ்ந்தது. இன்னும் நான்கு மாதத்தில் கல்யாணமாம். அதுவும் பருகூரிலே கல்யாணமாம். மாப்பிள்ளை பெரிய பெரிய படிப்பு படித்து இருந்தாலும், ஊரிலேயே செட்டில் ஆகி பெரியவரோட நஞ்சை புஞ்சையை சமாளிக்க போறாராம்.

ஊரே களை கட்டியது.


என்ன சிலுவை.. ஊரே கொண்டாடினு இருக்கு, நீ மட்டும் சோம்பேறியா தூங்கினு இருக்க?

சிலுவையிடம் கேட்டார், ஆறுமுக ஆச்சாரி.

உனக்கு என்ன ஆச்சாரி.. பெரியவர் வீட்டு பொண்ணு புது குடித்தனம் போறாங்க, சன்னல், கட்டுலுன்னு பெரிய வேலை. அதனால கட்டை கட்டையா கடன் வாங்கி தயாரா இருக்க  . என்னை சொல்லு!

நீயும் தயாராகு, சிலுவை.

ஆறுமுகம், என் தொழிலுக்கு தயாராக கூடாது. நான் செய்யுறது சவப்பெட்டி. எனக்கு வியாபாரமே வரக்கூடாதுன்னு இந்த ஊர் மட்டும் இல்ல, நானுகூட தினம் வேண்டிக்குறேன். நீ கிளம்பு, மூணே மாசத்துல உனக்கு ரெண்டு வருஷ வேலை இருக்கு. சவப்பெட்டி மட்டும் இல்ல எனக்கு மத்த மர வேலையும் தெரியும், தேவை பட்டா சொல்லி அனுப்பு.

மீண்டும் தூங்க போனான் சிலுவை.

ஆறுமுகம் இல்லத்தை நோக்கி செல்கையில், எதிரில், டைலர் மாதவன்..

என்ன மாதவா? பட்டணத்துல இருந்து வர போல இருக்கு?

ஆமாம் ஆறுமுகம், பெரியவர் வூட்டு கல்யாணம் வர போது இல்ல.. அதுக்கு நிறைய வேலை இருக்கு. சன்னல் திரை, தலையானி, கல்யாணத்துக்கு புது துணி, அது இதுன்னு.. அதுதான், புதுசா ஒரு  மெஸின்னுக்கு ஆர்டர் கொடுத்துட்டு, பட்டணத்துல இருக்க என் மச்சினனன, மூணு மாசத்துக்கு உதவிக்கு வர சொல்லிட்டு வந்தேன்.

அங்கே இருந்து மாதவன் கிளம்ப,  வழியில்,  பஞ்சு கடை ராமநாதன்..

என்ன நாதா? மூணு மாட்டுவண்டியில் மூட்டை மூட்டையா, எங்கே இருந்து வர..

பெரியவர் வீட்டு கல்யாணம். இங்கேயே வேற குடி போக போறாங்களாம்.  அதுதான் மழை காலத்துக்கு முன்னால பொண்டாட்டி நகையை அடகு வைச்சி பஞ்சு வாங்கியாந்தேன். குறைஞ்சது மூணு மெத்தை, தலைகாணி..ஊஞ்சலுக்கு இருக்கைன்னு, தேவை படும் இல்ல..

ராமநாதன் கிளம்ப...வழியில், பாத்திர கடை முத்துக்குமார்.

என்ன குமாரு.. வாயெல்லாம் பல்லு...

பெரியவர் வீட்டு கல்யாணம் நிச்சயமாகிடுச்சாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு. மூத்தவ கல்யாணத்துக்கு அம்புட்டு சீர் வரிசையிலும் அவ பேர் இல்லைன்னு பெரியவர் கோச்சிக்கினார். அது தான்.. மூத்தவளுக்கு செஞ்ச அதே சீர் போல இளையவளுக்கும் செய்வாருன்னு அவருக்கு சொல்லாமலே நானே அம்புட்டையும் ஆர்டர் பண்ணிட்டு இளையவள் பேரையும் அதுல எழுத சொல்லிட்டேன்.

முத்துக்குமார் கிளம்ப,  வழியில்,

மளிகை கடைக்காரர்,
துணி கடைக்காரர்,
இஸ்திரிகாரர்,
சமையல்காரர்,
வாழை மண்டி,
செருப்பு கடைக்காரர்,

இப்படி அனைவரும் சுருருப்பாக  இருக்க சிலுவை மட்டும் தூங்கி கொண்டு இருந்தான்.

கல்யாணத்துக்கு இன்னும் மூணே வாரம்.

ஆறுமுகம் அண்ணே..

வீட்டின் எதிரில் டைலர் மாதவன் , மற்றும் பாத்திர கடை குமார்.

வாங்க, வாங்க .. சொல்லுங்க..

என்ன அண்ணே.. கிட்ட தட்ட முக்கா வேலை முடிஞ்சது போல இருக்கே .. பெரியவர் முன் பணம் ஏதாவது கொடுத்தாரா?

இல்ல.. கடன் வாங்கி தான் ... செஞ்சேன்..

அண்ணே.. என்னமோ பயமா இருக்குனே.

என்ன சொல்ற..

கல்யாணத்துக்கு இன்னும் மூணே வாரம் தான்.. பெரியவர் எந்த வார்த்தையும் சொல்லி அனுப்புல அண்ணே.. ஒரு வேளை கல்யாணம்.

குமாரு.. வாயை கழுவு. நேத்து கூட நாம அய்யரை பார்த்தேன். நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து அடுத்த மாசம் முதல் முகூர்த்ததில்ன்னு  சொன்னாரு..

இல்ல அண்ணே.. நான் கூட கடன் கிடன்  வாங்கி ஏறக்குறைய அம்புட்டையும் தயார் பண்ணிட்டேன். இன்னும் பெரியவர்ட்ட இருந்து  எதுவும் சேதி வரலையே.. அதுதான்.

பெரியவர் மாப்பிள்ளை ஊருக்கு போய் இருக்காராம். அடுத்த வாரம் வருவாராம், அப்ப போய் கேக்கலாம்.. நீங்க வேலைய செய்யுங்க. குமாரு, சீர் பாத்திரத்துல சின்னவ பேரை மறக்காம அடிச்சிடு. மூத்தவ கல்யாணம் போல ஆகிட போகுது.

கிளம்பினார்கள்.

அடுத்த வாரம் முடிந்து, கல்யாணத்துக்கு   பத்தே நாள். தேவையான அனைத்தும் பெரியவர் சொல்லாமலே ரெடி.

குமாரு..

பாத்திர கடையின் எதிரில் இருந்து அழைத்தார் ஆறுமுகம்.

உனக்கு ஏதாவது சேதி..

இல்ல அண்ணே..

பெரியவர் அழைப்பிதழ் வைச்சாரா?

அவரு வீட்டு கல்யாணத்துக்கு ஊருக்கு அழைப்பு இல்லை அண்ணே.. அம்புட்டு பேரும்  வரணும். அழைப்பிதழ் வெளியூருக்கு மட்டும் தானே.

இப்ப என்ன பண்றது?

சரி வா, அவரு வீட்டுக்கே போய் சாடை மாடையா கேட்டுடுவோம். போகின்ற வழியில் கூட்ரோட்டில் இருந்த

மளிகை கடைக்காரர்,
துணி கடைக்காரர்,
இஸ்திரிகாரர்,
சமையல்காரர்,
வாழை மண்டி,
செருப்பு கடைக்காரர்,

மற்றும் பலரும் சேர்ந்து கொள்ள..

பெரியவர் இல்லத்தை அடைந்தார்கள்..

இவர்களை கண்டதும் பெரியவரே வெளியே வந்தார்..

வாங்க.. வாங்க.. நம்ம குடும்ப வழக்கம் தெரியும் இல்ல, அழைப்பிதழ் எல்லாம் கிடையாது. அம்புட்டு பேரும்  கலயாணத்துக்கு வந்துடனும்,

ஐயா...

ஆறுமுகம் தான் ஆரம்பித்தான்..

என்ன, ஆறுமுகம்.. உடம்பு சரியில்லையா?

உடம்புக்கு  என்னய்யா, நல்லாத்தான்  இருக்கேன். நம்ம பாப்பாவுக்கு மேசை நாற்காலி , கட்டில் , ஊஞ்சள்னு .. மூத்தவ போலவே ....

ஓ.. முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன் பாரு ..

சொல்லுங்க ஐய்யா..

அனைவரின் முகத்திலும் ஒரு சிறிய சந்தோசம்.

பெரியவர் தொடர்ந்தார் ..

மாப்பிள்ளை பட்டணம் பாருங்க.. அங்கே ஒரு வெளிநாட்டு கடை வந்து இருக்கலாம்.. பெரு கூட.. என்னமோ.. "அயோக்கியா" (IKEA) வாம்..

சொல்லுங்க ஐயா..பயத்தோடு கதறினார்கள்..

மளிகை கடைக்காரர்,
துணி கடைக்காரர்,
இஸ்திரிகாரர்,
சமையல்காரர்,
வாழை மண்டி,
செருப்பு கடைக்காரர்,

மற்றும் பலரும் ..

அந்த கடையில், வீட்டுக்கு தேவையான குண்டூசியில் இருந்து அம்புட்டும் கிடைக்குதாம். மாப்பிள்ளை அம்புட்டையும் அங்கேயே வாங்கிட்டாரு. நாளைக்கு நாலு லாரியில்  வந்துடுமாம். நீங்க அம்புட்டு பேரும் வந்தீங்கனா இறக்கி வைக்க வசதியா இருக்கும்.

நன்றி சொல்லி விட்டு பெரியவர் கிளம்ப,

ஐயோ.. ஆறுமுகம் எங்களை விட்டு போய்ட்டிங்களேன்னு...

 மாரடைப்பில் இறந்த  ஆறுமுகத்தை பார்த்து பாத்திர கடை குமார் கதறினான்.

களை கட்டி இருந்த ஊரே இப்போது சின்னா பின்னாமாகியது. கடனில் வாங்கிய அனைத்தும் , கெட்டு , அழுகி, தூசி பிடித்து வீணாகி இருக்கையில், ஊரே சோகமா சோர்ந்து இருக்கும் நேரத்தில்..

சிலுவை மட்டும் சுறுசுறுப்பாக இருந்தான் . அவன் இல்லத்தின் எதிரில்  வெல்வேறு சைசில் சவப்பெட்டிகள்.



3 கருத்துகள்:

  1. Ikea வருகையால் இப்படியும் சில பாதிப்புகள். ஆனால் இந்தியாவில் தச்சு வேலை(கார்பென்டரி) என்பது எவ்வளவு விலையுயர்ந்தத விஷயம் தெரியுமா? Ikea வில் ஜஸ்ட் லைக் தட் வாங்கியவை எல்லாம் பெரும் விலை கொடுத்து செய்ய வேண்டியிருந்தது. டிசைன் மாற்றம் மற்றும் தொழிலாளர்களை வேலை வாங்குவது பற்றியெல்லாம் ஒரு தனி பதிவே போடவேண்டும். அன்புடன், எழிலரசி பழனிவேல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி. தங்களின் கருத்தை அறிந்தேன். ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும். உள்ளூர் காரரின் வேலை விலை உயர்ந்து இருந்தாலும் அவர் ஈட்டும் லாபமும் உள்ளூரிலேயே செல்வு செய்ய படும். தச்சு வேலை(கார்பென்டரி) ஒரு உதாரணர்த்திக்காக தான் சொன்னேன். IKEA அணைத்து சிருட் தொழிலையும் நசுக்கும். சில வருடங்கள் பொறுங்கள். இதன் விளைவு தெரியும்.

      IKEA போன்ற நிறுவங்கள் ஈட்டும் லாபம் அடுத்த நொடியே வெளிநாட்டில். அது நம்முடைய கட்டமைப்பையே சீரழிக்கும்.

      நீக்கு