ஞாயிறு, 22 ஜூலை, 2018

"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்"

வாரம் முழுக்க வேலைக்கு சென்று விட்டு, வெள்ளி வரை காத்திருந்து வெள்ளி ஐந்து அடித்தவுடன்.. "ஹாப்பி வீக்கெண்ட்" என்று அலுவலகத்தில் அலறி விட்டு இல்லத்தை அடைந்து...

இசை ..

டிவியில் ஸ்போர்ட்ஸ்..

சாப்பாடு ...

கோல்ப்  (அதை தான் வாரமுழுக்க தாக்குவோமே)

நண்பர்கள்..

உறவினர்கள்...

என்று தாக்க திட்டம் போட்டு,

அந்த திட்டத்தையும்  சனி இரவு வரை நேர்த்தியாக நடத்தி விட்டு

ஞாயிறு காலையில் ஆலயத்திற்கு சென்று, எல்லாம் வல்ல இறைவனை வணங்கிவிட்டு ..

மதிய உணவை முடித்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுகையில், மணி 3:45.

மூத்தவள் எங்கே?

அவ வீட்டுக்கு போய்ட்டா ..


சொல்லவே இல்லை.

சொல்ல தான் வந்தா.. ஆனா நீங்க தூங்கிறத பாத்துட்டு அப்புறம் போன் பண்ணி சொல்றேன்னு போய்ட்டா..

சும்மா சொல்ல கூடாது... மூத்தவ வழி தனி வழி..

ஏன்..

தூங்குற ஆம்பிளைய எழுப்பாம போறாளே...அது எல்லாருக்கும் வராது..

இந்த வஞ்ச புகழ்ச்சி எல்லாம் வேணாம்...

சின்னவ எங்க?.

ஒரு அஞ்சி நிமிஷம் தான் இவளுங்கள விட்டுட்டு ஒரு ஓரத்தில் சும்மா உக்காருங்க..

மனதில்.. இன்னைக்கு ரொம்ப லக்கி டே. பொதுவா... இதை கூட்டுங்க
.. அதை பெருக்குங்கன்னு சொல்லுவாங்க.. இன்னைக்கு சும்மா இருன்னு சொல்லறாங்கன்னு மனதில் நிம்மதியோடு, வீட்டின் பின்புறம் தோட்டத்தில் அமர...

மணி நான்கு...

என்னடா இது இம்புட்டு போர் அடிக்குதே என்று நினைக்கையில்... மனதோ
பின்னோக்கி ஓடியது.

80 களில் பள்ளி - கல்லூரி சென்றோர்களின் இதயத்தை  கவர்ந்த நேரம், ஞாயிறு 4-5. சில இல்லங்களிலேயே "டேப் ரெக்கார்டர் - வீடியோ"  இருக்கும் காலம் அது.

ஆல் இந்திய ரேடியோவின் "நேயர் விருப்பம்". அப்போது தான் வெளிவந்த புது படத்து பாடல்களை இந்நேரத்தில் ஒளி பரப்புவார்கள்.  இந்நிகழ்ச்சியில் அந்த நாட்களில் ஹிட்டான ஒரு 6-7 பாடல்கள் ஒளிபரப்பப்படும். மற்ற நாட்களில் ரேடியோவில் பழைய பாடல்கள் மற்றும் சில சுமாரான பாடல்கள் ஒளி பரப்பினாலும் இந்த ஒரு மணி நேரத்தில் வரும் பாடல்கள் சூப்பராக இருக்கும்.

அன்றும் ரேடியோவை ஆன் செய்தேன்..

முதல் பாடல், "அடி ஆத்தாடி", தொடர்ந்து "சின்ன மணி குயிலே", பின் "வா வெண்ணிலா", "மாமாவுக்கு குடும்மா குடும்மா" (இளைய ராஜா படா கில்லாடி பா! அதே இசையிலே வார்த்தையை மட்டும் மாற்றி ரஜினிக்கு ""மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவின்னு ஒரு ஹிட் கொடுத்துட்டார்) என்ற அட்டகாசமான பாட்டுகளை கேட்டு முடிக்கும் போது மணி 4:55. அஞ்சே பாட்டுல எப்படி ஒரு மணி நேரம் போச்சின்னு கேட்கிறிங்களா? நல்ல கேள்வி. அந்த காலத்தில் பாட்டுபோடும் முன் அதை கேட்ட நேயர் பெயரை ஒருஅரைமணி நேரம் வாசிப்பாங்க. எல்லா பாட்டையும் எல்லா வாரமும் "டெல்லி பாபு" என்பவர் கேட்டதா சொல்லுவாங்கோ.

அதை நினைத்து கொண்டே அதே  பாடல்களை கேட்டு கொண்டு இருக்கையில்... இளையவளோ ..

டாடா...அந்த முதல் பாடலை திரும்பவும் போடுங்க..

"அடி   ஆத்தாடி" என்று ஜானகியோ சித்ராவோ அலற..

இவளோ..

இவங்க ஏன் இப்படி பூனையை யாரோ மெதிச்ச மாதிரி அலறுறாங்க ?

என்ன சொன்ன?

ஏன் இவ்வளவு ஹை பிச்சில் பாடுறாங்க.. இந்த ராகம் நல்லா இருக்கே.. அதை நல்ல நோட்டில் பாடுவது  தானேன்னு, சொல்ல..

மீண்டும் ஒருமுறை கேட்டுவிட்டு, இவள் சொல்வதும் சரிதானே.. இருந்தாலும் இளையராஜா ... இளையராஜா தான்.. இதுக்கும் காரணம் இருக்கும்  என்று நினைக்கும் போதே..

மனதில்..

நல்ல வேளை.. கோழிகூவுதில் வந்த "பூவே இளைய பூவே" பாடலை இன்னைக்கு கேக்கல. இல்லாட்டி மலேஷியா வாசுதேவன்  " இனிக்கும் தேனே, எனக்கு தானே" என்று பாடும் போது என்ன சொல்லி இருப்பாளோ என்று நினைத்து கொண்டு இருக்கையில்..

மணி ஐந்து..

என்னங்க...

சொல்லு..

சும்மா உக்காந்துனு இல்லாம..

நீ தானே.. இவளுகள மறந்துட்டு சும்மா உக்கார சொன்ன..

அது ஒரு மணி நேரத்துக்கு தான். இப்ப கிளம்புங்க.. இவளை கூட்டினு  ஒரு ரவுண்டு கோல்ப் போயிட்டு வாங்க..

கிளம்பினோம்..

வண்டியில் ஏறியவுடன்..

இளையவள் சொன்னாள்..

உங்களுக்கு ரொம்ப பிடித்த மூன்று தமிழ் பாடல்கள் போடுங்க..

ஏன்?

உங்க டேஸ்ட் என்னனு பார்க்கணும், ஸ்டார்ட் நொவ்.

கோடை கால காற்றே....

வாவ்.. டாடா.. நல்ல டுயூன். இந்த பாட்ட வெறும் பேஸ் வைச்சே பாடலாம்., நெக்ஸ்ட்..

பருவமே, புதிய பாடல் பாடு...

நைஸ்...வெறி கேட்ச்சி.. கடைசி பாட்டு..

அன்று வந்ததும் அதே நிலா...

இந்த மூணு பாட்டிலும் மூணாவது தான் பெஸ்ட்.

கோல்ப் மைதானத்தை அடைந்தோம். என்னதான் சொல்லுங்க, கலிபோர்னியா கலிபோர்னியாதான்..

மாலை 5  30  க்கு ஆரம்பிச்சாலும் இரவு 8  வரை ஆடலாம். அம்புட்டு வெளிச்சம்.

அலை பேசி அலறியது...

என்னங்க..?

சொல்லு..

வெளியே சாப்பிடாதீங்க.. டின்னர் ரெட்டி..

நைஸ்.. என்ன சாப்பாடு..

வந்து பாருங்க.. யுவர் பேவரட்...

என்னவா இருக்கும் என்று யோசிக்கையில்..

இளையவளோ... தட் திங் டாடா... ஆரஞ்சு கலரில் இருந்தா இனிப்பா இருக்கும். வெள்ளையா  இருந்தா உப்பு காரமா இருக்கும்.

ஓ உப்மா...

4 கருத்துகள்: