திங்கள், 2 ஜூலை, 2018

நாய் கடி ஜனா !

1986 உலக கால்பந்து சீசன்..கல்லூரி நாட்கள்.. கால் பந்து நடப்பது என்னமோ அமெரிக்காவில இருந்தாலும்.. கால் பந்துபோட்டியில் இந்தியா கலந்துக்காம இருந்தாலும்..

உலகமே தலை கீழே போனாலும் பரவாயில்லை .. இந்த கால்பந்து போட்டியை அணு அணுவா அனுபவிக்கணும்னு உடம்பில் இருக்க ஒவ்வொரு செல்லும் சொல்ல.. ரசிக்கணும்னு முடிவும் பண்ணியாச்சு

கல்லூரி ஆரம்பிச்சி  ரெண்டே நாள் தான் ஆச்சி.. ரெண்டு வாரத்துக்கு முன்னால தான் அம்புட்டு பேருக்கும் எம்புட்டு அரியர்ஸ் என்ற செய்தி வந்தது. இந்த வருடம் மூன்றாம் ஆண்டு. கடைசி வருடம். முதலாம் ரெண்டாம் வருடம் அரியர்ஸ் இருந்ததை வீட்டில் மறைச்சிடலாம். ஆனா மூணாவது வருஷம் பெயில் ஆனா.. வூட்டுக்கு தெரிஞ்சிடும்ன்னு கொஞ்ச பயத்துல முதல் நாளில் இருந்தே படிக்கலாம்னு ஒரு முடிவு பண்ண ரெண்டே நாளில் உலக கோப்பை ஆரம்பிச்சிடிச்சி.

சரி .. ஒரு மாசம் தானே உலக கோப்பையை முழுசா பார்த்துட்டு அப்புறம் படிச்சிக்கலாம்னு ஒரு முடிவெடுத்துட்டு நண்பர்களோடு சேர்ந்து ஒரு எந்த அணியோட எந்த அணி என்னைக்கு ஆடுறாங்கன்னு ஒரு பெரிய வரை படம் போட்டு கையில் கிடைச்ச அஞ்சையும் பத்தையும் வைச்சி பந்தயம் கட்டினு  இருந்த நாட்கள்..



ஒரு ராத்திரிக்கு மூணு ஆட்டம். முதல் ஆட்டம் 10  மணி  போல் ஆரம்பிக்கும் ரெண்டாவது ஆட்டம் 1  மணிக்கு கடைசி  ஆட்டம் 3 மணி போல் ஆரம்பிச்சி முடியும் போது விடிஞ்சிடும்.

ரா முழுக்க கண்ணுல விளக்கணையை ஊத்தி  பாத்துட்டு காலம்பற பக்கத்துல இருக்க ராதா கடைக்கு போய் ஒரு டீ ரெண்டு பன் வாங்கி சாப்பிட்டு வந்து வூட்டுல பேன எட்டுல தட்டி விட்டு தூங்க போனா சாயங்காலம் அஞ்சு மணிக்கு விம்பிள்டன் பாக்க தான் எழுவோம். அம்புட்டு பிசி.

சரி.. இப்ப ஒரு மாசம் காலேஜுக்கு எப்படி போகாம இருக்குறது.

ரெண்டாவது நாள் அங்கே போகாதனால பேராசியர் ரொம்ப கோவமா இருக்காருன்னு தெரிஞ்சிக்கின்னு.. பக்கத்துல இருந்த CMCயில் வேலை செஞ்சினு இருந்த பங்காளியிடம்.. கை கால் பிடிச்சி வலது கையில் ஒரு மாவு   கட்டு போட்டுனு மூணாவது நாள் காலையில் பேராசியர் அறையின் எதிரில் அமர..

என்ன.. ரெண்டு நாளா...?

சார்...

கையில என்ன?

மாவு கட்டு..

அது சரி.. அதை எதுக்கு நீ போட்டுனு இருக்க..

வந்து..

என்ன ஆச்சி.. உண்மைய சொல்லு..

நம்ம ஜனாவை..!

ஆமா .. ஜனார்த்தனன் அவனுக்கு என்ன ஆச்சி.. ரெண்டு நாளா அவனையும் காணோம்?

தெரியாதா..?

என்ன தெரியாதா..?

ஜனாவுக்கு என்ன ஆச்சின்னு தெரியாதா?

சொல்லு..!

ஜனாவை..!

ஜனாவை..!?

ஜனாவை...!

ஜனாவை..!?

என்ன பொய் சொல்லுவது என்று நாக்கை தொங்க போட்டு கொண்டு இருக்கையில்..

ஜனாவுக்கு என்ன ஆச்சி? அதுக்கு உன் நாக்கு ஏன் தலை தெறிக்க ஓடி வந்த நாய் நாக்கு போல தொங்குது..

ஜனாவை..!

ஜனாவை..!?

நாய் கடிச்சிடிச்சி..!

நாய்க்கு ஒன்னும் ஆகலையே..

சார்..!?

ஜோக் பண்ணேன்.. எப்படி இருக்கான்..?

இருக்கான்..

சரி அவனை நாய் கடிச்சதுக்கு உனக்கு ஏன் மாவு கட்டு போட்டாங்க..

நான் காப்பாத்த போனேன்..

அப்புறம்...

நாய் என்னை துரத்த நான் செவுரு எகிறி குதிச்சி தப்பிச்சிட்டேன்.

ஜனா ஏன் அந்த செவுற ஏறி குதிக்கல..

அவனை தான் நாய் கடிச்சிடுச்சே...

டே..என்கிட்டயே வா..நாய் கடிக்குறதுக்கு முன்னால அவன் ஏன் சுவரை தாண்டி குதிக்கல..

அவன் தான் பாக்கலையே..

பாக்கணும்னு அவசியம் இல்லையே.. நாய் சத்தம் போட்டுன்னு தானே ஓடி வரும்.

நான் அவன் சுவரை பாக்கலையேன்னு சொன்னேன்..

சரி எகிறி குதிச்சதுக்கு ஏன் மாவு கட்டு...

கீழ விழுந்துட்டேன்..

இது எத்தனை நாளுக்கு...?

பைனல்ஸ் வர..இன்னும் ஒரு மாசம் இருக்கு..

என்ன?

பைனல் செக் அப் இன்னும் ஒரு மாசத்துல அது வரை ...!

சரி.. அப்ப நீ புக்ஸ் எல்லாம் எடுத்துன்னுவர வேண்டாம்.. எதுவும் எழுத கூட வேண்டாம். சும்மா வந்து கிளாஸில் உக்காரு..

சார்..

கைக்கு மட்டும் தான் மாவு கட்டு.. உக்கார எடத்துல கூட சரியான அடி . தையல் கூட போட்டு இருக்காங்க..

அது எத்தனை நாள்?

பைனல்ஸ வரை..

சரி.. எலியும் பாலாஜியும் எங்கே.. அவங்க கூட ரெண்டு நாளா காணோம்..

ஜனாவை..!?

ஜானாவை தான் நாய் கடிச்சிடுச்சே...

ஆமாயில்ல..!

எலி எங்கே...?

மருந்து வாங்க போய் இருக்கான்...

எலிக்கு தான் மருந்து வாங்குவாங்க.. எலியேமருந்து வாங்க போனானா.. தமாஷா இல்லை..

பாலாஜி...

எலியோட தான் போனான்..

காமர்ஸ் படிக்குற பாலாஜி எதுக்கு எலியோட போனான்.. சுவாலஜிக்கு மாற போறானா?

சார்..

எலியும் பாலாஜியும் எங்கே?

ஜனாவை..!?

டேய்.. ஜானாவை நாய் கடிச்சிடிச்சி.. எலி மருந்து வாங்க பாலாஜியோட  போனான்.. என்ன மருந்து? எங்கே போனான்?

நாய் கடிக்கு ஊசி வாங்க போனான்..

ரெண்டு நாளா..?

பதினாறு ஊசியாம்  சார்.. இங்கே இருக்க எல்லா கடையிலும் கேட்டு பார்த்தாச்சு..ஸ்டாக் இல்லை..

ஐயோ.. தொப்புளை சுத்தி போடுனுமே..

சுத்தி போடற  அளவுக்கு அவ்வளவு பெரிய தொப்புள் இல்ல...

டே... நான் சொன்னது.. ஊசி..

சார்..

சரி.. இப்ப என்ன பண்ண போறீங்க.. அவங்க வீட்டுக்கு சொல்லி அனுப்பிடீங்களா?

சார்.. இன்னும் உயிரோட தான் இருக்கான்.. ஹாஸ்பிடலில்  படுத்துன்னு இருக்கான்.

பாலாஜி எங்கே..?

அவன் மெட்றாஸ் போய் இருக்கான்..

எதுக்கு.. ? எப்ப வருவான்...?

ஊசி வாங்க தான்.. பதினாறு கிடைச்சவுடன் வருவான்..

நீ பொய் சொல்லல தானே..?

சார்.. யாராவது நாய் கடிச்சிச்சின்னு பொய் சொல்லுவாங்களா..?

இந்த காலத்துல யாரை நம்புறது..!

டாக்டர் சர்டிபிகேட் கேட்டா போச்சி.. !

என்று சொல்லி நாக்கு கடிக்குமுன்....

நல்ல ஐடியா, சரி.. உன் கூடவே சுத்தினு இருப்பானே.. சந்தானம்.. அவனை ஏன் காலேஜ் பக்கமே காணோம்?

ஜனாவை..!?

டே.. நாய் -  எலி - மருந்து - பாலாஜி - மதராஸ் - ஊசி.. அது எல்லாம் தெரியும்.. சந்தானம் எங்கே?

ஜனாவை..!?

ஜனாவை..?

நாய் கடிச்சிடிச்சி இல்ல..

ஆமா.. அதுக்கும் சந்தானத்துக்கும் என்ன?

டாக்டர்..

டாக்டர்.. இன்னும் கொஞ்ச நாளுக்கு  அந்த நாயின் நடத்தையை கவனமாக கவனிக்கனும்ம்னு சொன்னாரு.

அதுக்கு..

அவன்  அந்த நாயைவே பார்த்துனு இருக்கான்..

இந்த நாயின் கவனத்த கவனமா கவனிக்கவே நாலு நாய்  வேணும்..

சார் ..!

எவ்வளவு நாள்..?

பைனல்ஸ்  வர...!

அது சரி.. ஜனாவை கடிச்ச நாயை இவன் ஏன் பாத்துக்கணும்...

கடிச்சது  சந்தானத்தோட நாய் சார்...

சந்தானத்து நாய் ஜனாவை ஏன் கடிக்கணும்...?

அதை சந்தானத்திடம் தான் கேக்கணும்...

எனக்கு ஒரு உதவி பண்ணு..

சாரி.. கையில் மாவு கட்டு..

கை அவசியம் இல்ல..

சொல்லுங்க.

ஜனாவை உடனே டாக்டர் சர்டிபிகேட் அனுப்ப சொல்லு..

சார்..!?

அவனை தானே நாய் கடிச்சது .. நீ ஏன் பதறுற..

பாலாஜியை மட்ராஸ்க்கு போன பஸ் டிக்கட் எடுத்துன்னு வந்து காட்ட சொல்லு..

சார்..

எலி வாங்கிய நாய் ஊசி ஒண்ணாவது நான் பார்த்தேயாகணும்... எடுத்துனு வர சொல்லு.

சந்தானம்..

சார்...

அவன் காலேஜுக்கு திரும்பவும் வரும் போது ஒரு நாள் அவன் நாயை கூட்டினு வர சொல்லு..

சார்..

கிளம்பு போ.. நல்லா ரெஸ்ட் எடு.. பைனல்ஸ்க்கு அப்புறம் பாக்கலாம்.


அன்று இரவு..

அறையில்.. சந்தானம்- எலி-பாலாஜி. மற்றும் அடியேன்..

இன்னைக்கு செம மேட்ச் விசு..

ஆமாயில்ல...

சரி விசு.. நம்ம  டிப்பார்ட்மெண்ட் பெரிச எப்படி சமாளிக்க போறோம்..

அதை விடு.. அதுக்கு நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.

என்ன ஏற்பாடு..

எலி.. ?

சொல்லு..

எப்படியாவது எந்த பார்மஸிக்காவது போய் நாய் கடி ஊசி ரெண்டு  வாங்கின்னு வா..

பாலாஜி...?

தினமும் காலையில் வேலூர் பஸ் ஸ்டான்ட் போய் ... மெட்ராஸில் இருந்து வரவங்க கை காலை பிடிச்சி   யூஸ் பண்ண   டிக்கட்  ரெண்டு மூணு வாங்கின்னு வா..

சந்தானம்..?

சொல்லு..

உடனே வீட்டுல சொல்லி ஒரு நாய் வாங்கு..

ஜனா..?

சொல்லு..!

உன்னுது தான் ரொம்ப கஷ்டம்.. ஆனா நம்ம எல்லார் வாழ்க்கையும் உன் கையில் தான் இருக்கு..

நண்பர்களுக்கு ...உலக கோப்பைக்கு எது வேனும்னாலும் செய்றேன்.. சொல்லு..

நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது..

எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லு..

ஏதாவது ஒரு நாயை கலாட்டா பண்ணி லைட்டா ஒரு கடி வாங்கின்னு வா..

விசு...!?

1 கருத்து:

  1. ஹா ஹா ஹா ஹா ஹா...ஹையோ செம விசு! இப்படி அப்பாவியான சார் இருந்தா....ஃபுட் பால் தானோ..நைசா அவர்கிட்ட கோல் போட்டுட்டூய்ங்க போல...ஹா ஹா


    பதிலளிநீக்கு