சனி, 17 ஜூன், 2017

அ(ர்)ப்பனுக்கு வாழ்வு வந்தால்...


அப்பா...
என்றாள்...


அடித்து பிடித்து ஓடி
மூச்சு வாங்க..
பல படி தாண்டி மேலே வந்தேன்.....

வழியில் அவள் அம்மா கேட்டாள்..
ஊரிலேயே உனக்கு மட்டும் தான் பிள்ளையா ..

நல்ல கேள்வி...

நினைவரியாத நாளில் அடுத்தவன் போல்..
அவன் தோளில் நிற்க முடியாத   பாக்கியம் ...

முதல் வகுப்பிற்கு அவனவன்
அவரின் அரவணைப்பில் வரும் போது...
அனாதை   போல் நின்ற துர்பாக்கியம்...



பின்புறத்தை அவன் பிடித்து கொண்டே தள்ள..
கீழேவிழாமல் இவன் கற்றுக்கொண்டான் சைக்கிள்..
எனக்கோ... பிடிக்க யாரும் இல்லாததால்..
மங்கி பெடல் அடித்து முட்டியெல்லாமல்ல காயம்.



ஆழ் கிணற்றில் அவன் மிதக்க
அவன் வயிற்றை  பிடித்து கொண்டு..
காலை உதைடா. காலை உதைடா...
என்று அவர் சொல்ல..
 எனக்கு அப்பனானதோ
கருப்பாய் வந்த காற்றடித்த லாரி டுயூப்.

ரெண்டும் கெட்டான்  பருவம்.
எங்கேடா கிடைச்சது சிகரெட் ?
எங்கப்பா பாக்கெட்டில் உருவின்னு வந்தேன் என்றான்...
அடே.. டே... இதற்கு கூட நான் கொடுத்து வைக்கவில்லையே என்றேன்.

பதினெட்டு ....
காதலா - காமமா..
என்று அறிய நான் பட்ட பாடு..
சொல்லி மாளாது...
அருகில் ...
அவனிருந்து  இருந்தால்.. 
அறிந்திருப்பேனோ..?


கல்லூரி...
தோள் மேல் வளர்ந்த இவன் இனி தோழன் என்று
அவர்தம் மைந்தனோடு ஆர்ப்பரிக்க...
ஆலமரத்தடியில் தனியாக நான்.

ரொம்ப வெயில்..
சில்லுனு பீர் அடி
என்று ஆங்கிலோ இந்திய நண்பன் சொல்ல.
அதை எத்தனையோடு நிறுத்தவேண்டும்
என்று அவன் அறிந்திருந்தான் அவன் அப்பாவிடம்..
நானோ அப்பாவி.. மீண்டும் தவறு மூலம்
கற்று கொண்டேன் புது பாடம்.


ஐந்து வருடம் கழித்து..
எனக்கே தெரியாமல் நான் ..
பாடு எதுவும் தெரியாமலே
முதுகலை பட்டதாரி ஆனேன்..

கருப்பு அங்கி சிவப்பு தொப்பி
அணிந்து அனைவரும் குதுகூலம் போட
எடுப்பார் கைப்பிள்ளையாகவும் வக்கு இல்லாமல் ..
எனக்கு எதற்கு இந்த அங்கியும் தொப்பியும்
என்று எழுந்து வந்தேனே..

அடுத்து வேலை..

நேரத்திற்கு போ..
வங்கி கணக்கை ஆரம்பி..
வாகனத்தை வாங்கு..
வீட்டை கட்டி பார்..
உனக்கென்று ஒரு துணை...

இதையெல்லாம் தாமதமாக நானே கற்று கொண்ட பாடம் தானே..
அவன் இல்லையே.. சொல்லி கொடுக்க..

அடுத்து .. மணம்!
அங்கேயும் அவனில்லை.
அவளை எப்படி நடத்தவேண்டும் என்று அறியாதலால்
குழம்பி ...
மீண்டும் சுதாரித்து ...
கற்று, அதற்கு தக நிற்க ....

நான் முழுவாமா இருக்கேன்...
என்று அவள் சொல்ல..
இதை கூட கேட்க நீ இல்லையே
என்று.. நான் முழுவதுமாக கரைந்தேன்..

பிறந்தாள் ராசாத்தி...
இரு கையிலும் அவளை அணைத்து...
என்னை பெத்த ராசாத்தி ..
யாம்  பெறாத இன்பத்தையெல்லாம்
நீ பெறணும்...

என்று நினைக்கையில்...

மீண்டும் ... கேட்டது..
மேல் படியில் இருந்து...

அப்பா...

ஐம்பது ஆனாலும்...
அவளுக்கே எண்ணிரெண்டு ஆன பின்னும்..
ஐந்து படிக்கு கால் வைத்து தாண்டி ஓடினேன்..

அம்மணி சொன்னாள் ..

அற்பனுக்கு வாழ்வு வந்தால்....

அட பாவி..
இது அற்பனுக்கு வந்த வாழ்வு இல்லையம்மா .....
அப்பனுக்கு  வந்த வாழ்வு என்றேன்..

மாலை..

இப்படி  பண்ணி இவளுங்கள ரொம்ப கெடுத்து வைச்சி இருக்கீங்களே..
என்றாள்...

அம்மணி..."இப்படி கெடாமல் வளர  நான் பட்ட பாடு.."

என்றேன்..

புரியல ..என்றாள்...

கண்டிப்பாக ...
"கண்ணில்லாதவனுக்கு தானே தெரியும் பார்வையின் சொர்க்கம்.."

மீண்டும் புரியல..

"அப்பா இல்லாமல் வளர்ந்தவனுக்கு தான் தெரியும் அப்பாவின் அன்பு"!

அனைத்தையும் பார்த்து பெருமூச்சு விட்டாள்  அமர்ந்து இருந்த என் அன்னை.


HAPPY FATHERS DAY TO EVERY GENTLEMAN OUT THERE!

2 கருத்துகள்:

  1. அருமை ஐயா, என்னுடைய வாழ்க்கைக்கும் மிக்க சரியாக பொருந்துகிறது. "அப்பா இல்லாமல் வளர்ந்தவனுக்கு தான் தெரியும் அப்பாவின் அன்பு" சூப்பர். எனக்கும் சிறிய வயதில் அப்பா இல்லை ஒவொரு வரியும் என் வாழ்கை

    பதிலளிநீக்கு
  2. பெறாத இன்பத்தையெல்லாம்
    நீ -solla malladha thunbam.very touching

    பதிலளிநீக்கு