வியாழன், 15 ஜூன், 2017

குற்றம் புரிந்தவன்..

ஆர்டர் !ஆர்டர் ! ஆர்டர் !..

ஆல் ரைஸ்.. கோர்ட் இஸ் இன்  செஷன்..

என்று அந்த பணியாளர் சொல்ல ..நீதிபதியும் அங்கே வர...வழக்கு தொடர்ந்தது.

இன்றைக்கான வழக்கு?

வங்கி கொள்ளை!

இந்த நீதிபதிக்கென்று இங்கே நல்ல பெயர் உண்டு. ஒவ்வொரு வழக்கையும்   தீர விசாரித்து அதற்கான தீர்ப்பை சீராக வழங்குவது மட்டும் அல்லாமல் தீர்ப்பின் மூலம்  குற்றவாளி  மனம் திருந்தி  வாழ்க்கையை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்.

குற்றம் சாற்றபட்டவர்  கூண்டிற்குள் தலை குனிந்து கொண்டு நிற்க..

அரசு வக்கீல் வாதிட்டார்..



கனம் கோர்ட்டார் அவர்களே.. பட்ட பகலில் பலர் கண்ணுக்கெதிரே வங்கிக்கு சென்று அங்கே பணிபுரிபவரிடம்  துப்பாக்கியை காட்டி மிரட்டி 2,924 டாலர்களை திருடியுள்ளார். இவருக்கு தாம் தான் தயவு தாட்சனை காட்டாமல் அதிக பட்ச தண்டனை தர வேண்டும்...

என்று  சொல்லி அமர..

குற்றவாளிக்காக வாதிட்ட  வக்கீல்..

கனம் கோர்ட்டார் அவர்களே.. என் கட்சிக்காரர் எதையும் திட்டமிட்டு செய்யாமல் அவசர பட்டு இந்த தவறை செய்துவிட்டார் அவரை மன்னித்து குறைந்த பட்ச சிறை தண்டனை வழங்குமாறு ..

நீதிபதி தன் பொறுமையை இழந்து விட்டார்!

என்ன சொல்கின்றீர்கள். இவர் வங்கி பணியாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டினாரா?

ஆமாம், யுவர் ஹானர்.. ஆனால்...

பணத்தை எடுத்து கொண்டு அங்கு இருந்து ஓடினாரா?

ஆமாம் .. யுவர் ஹானர்.. ஆனால்...

காவல் துறை இவரை துரத்தி பிடித்தனரா?

இல்லை யுவர் ஹானர்..

பிறகு எப்படி கைது செய்யப்பட்டார் ?

பணத்தை எடுத்து கொண்டு வெளியே வந்து வங்கியின் வரவேற்பு அறையில் அமர்ந்து இருக்கும்  போது... பிடிபட்டார்.

திருடியவன் தப்பி தானே செல்வான்.. இவர் ஏன் அங்கே அமர்ந்தார்.. ?

காவல் துறை வரட்டும் என்று..

நீதிபதி ஆச்சரியத்தோடு அடுத்த என்ன என்பதை கேட்க ஆவலானார்.

காவல் துறை வந்ததா?

வந்தது யுவர் ஹானர்..

பின்னர்..

என் கட்சி காரர்.. காவத்துறையினரிடம்  நேராக சென்று துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு நீங்கள் தேடும் நபர் நான் தான் என்று சரணடைந்தார்.

குற்றம் செய்ததை தானே தவறு என்று ஒப்பு கொண்டதால் என் கட்சிகாரருக்கு குறைந்த பட்ச சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

நீதிபதி குற்றவாளியை பார்த்தார்.

நீயாகவே சரணடைந்தாயா?

எஸ் யுவர் ஹானர்.,

ஒரு 2 ,924  டாலருக்கு யாராவது இந்த வேலையை செய்யவார்களா? ஏன் இந்த மாதிரி செய்தாய்..?

என்று அவனை கோவமாக கடிந்து கொள்ளும் போதே.. குற்றவாளியின் வக்கீல்.. நீதிபதியை நோக்கி..


யுவர் ஹானர் .. நான் உங்கள் அருகில் வந்து கனம் கோர்ட்டார் அவர்களிடம் தனியாக பேச முடியுமா?

பேசலாம். ஆனால் அந்த அரசு தரப்பு வக்கீலையும் வர சொல் என்று சொல்ல.. குற்றம் சாற்றப்பட்டவரின் வக்கீல் நீதிபதியின் காதை கடித்து விட்டு  கையில் ஒரு தாளை கொடுத்தார்.

அதில்...

உன்னை போல் ஒரு ராட்சஷியோடு  வாழ இனியும் என்னால் முடியாது. காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க போகும் வரை  தொடரும் உன் கொடுமையை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்று இருந்தேன்.. ஆனால் நான் கோழை  அல்ல. உன் எதிரிலே நீ இல்லாமல்  என்னால் சுதந்திரமாக சந்தோசமாக வாழ முடியும். வாழ்ந்து காட்டுவேன். என் சந்தோசமான வாழ்வை பார்த்து நீ அழுது சாக வேண்டும்.

நீதிபதி.. வக்கீலை நோக்கினார்..

மனைவி மேல் கோவம் இருக்கலாம் . அதற்கென்று வங்கியை கொள்ளையடித்து அந்த பணத்தில் வாழ்வேன் என்பது மிக பெரிய குற்றம்.

கனம் கோர்ட்டார் அவர்களே.. தவறாக புரிந்து கொண்டீர்கள். மேலே படியுங்கள்.

கடிதம் தொடர்ந்தது.

நான் இன்றே ஏதாவது  ஒரு பெரிய தவறை செய்து விட்டு  சந்தோசமாக நிம்மதியாக சிறை சாலையில்  என் எஞ்சிய நாட்களை கழிக்க போகிறேன்.

நீதிபதி இரு வக்கீல்களை தம் தம் இருக்கைக்கு போக சொல்லிவிட்டு அவனை பார்த்தார்.

அவன் கோழையாக  தெரியவில்லை.. ஒரு வீரனாக தெரிந்தான். என்னே ஒரு மனிதன். இவ்வளவு படித்தும் எனக்கு இப்படி தப்பிக்க வழி  தெரியாமல் தினந்தோறும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேனே  என்று தன் வாழ்க்கையை ஒரு நிமிடம் யோசித்து ... பின்னர் சுதாரித்து.. தன் தீர்ப்பை சொன்னார்.

அருமையான  நீதிபதி.. தீர்ப்பு வித்தியாசமாகவும் இருக்கும் அதே நேரத்தில் நல்ல தீர்ப்பாகவும் இருக்கும் என்று அநேகர் ஏங்குகையில்...

இந்த தவறை செய்த இவருக்கு தவறுக்காக சூழ்நிலையை கருதி.. ஆறு மாதம் "House Arrest" என்று தீர்ப்பளிக்கிறேன். இந்த ஆறு மாதத்தில் இவர் வீட்டை விட்டு எங்கேயும் செல்ல கூடாது.

மேலும்.. இவருக்கு 2 , 924  டாலர்..

கனம் கோர்ட்டார் அவர்களே இவரிடம் பணம் இல்லை. அபராதம் கட்ட முடியாது..

பொறுமை..

மேலும் இவருக்கு 2,924  டாலர் பணம் அரசாங்கத்தில் இருந்து தரப்படும். அதை இவரின் மனைவியிடம் கொடுக்கவும். அதை வைத்து கொண்டு இவர் மனைவி அடுத்த ஆறு மாதம் வேலைக்கு செல்லாமல் .. இவரோடு இல்லத்திலேயே  தங்கி இருக்க வேண்டும் ..

இது தான் என் தீர்ப்பு..


போட்டாரே ஒரு போடு..

நிஜம் தான்.. இங்கே நடந்தது.. செய்தித்தாளில் வந்ததை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

விசித்திர வங்கி கொள்ளை

1 கருத்து:

  1. அடக் கஷ்டமே
    ஆயுள் தண்டனைக்குப் பதில்
    மரண தண்டனை மாதிரியல்லவா
    எனக்குப்படுகிறது
    வித்தியாசமான வழக்கு
    வித்தியாசமானத் தீர்ப்பு மட்டுமல்ல
    வித்தியாசமான பதிவும் கூட
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு