திங்கள், 15 மே, 2017

கடலும் மௌனராகமும்....

இன்னாடா இம்புட்டு நாளா.. விசுவை காணோமேன்னு சந்தோசமா இருக்கீங்களா.. அப்படியே இருங்க..

ஒரு முக்கியமான வேலையில் இருக்கேன்.. இன்னும் மூணு மாசத்துக்கு பதிவு எழுதும் நோக்கம் இல்ல..

நடுவுல..

இன்னைக்கு காலையில்... முகநூலில் .. தோழி கீதாவின் (Geetha Chandra) பதிவு ஒன்னு பார்த்தேன்...

என்ன ஒரு அற்புதமான எழுத்து நடை.. கணக்கு புள்ளையா இருப்பதினால்.. அதிகமாவே ரசிக்க முடிஞ்சது .. நீங்களும் படியுங்க...

கீதா.. ஹோப் யு டோன்ட் மைண்ட்...

Here we go....

Debit the Receiver.. ?  அப்படினா.. ரிசீவரை  கிரடிட் பண்ணவே முடியாதா? 


கடலும் மௌனராகமும்

-------------------------------------------------------------------
கிட்டத்தட்ட சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் ஆடிட் ஆஃபிஸில் ஷார்ப் 3 மணிக்கு , எஸ் ஜானகி பாடலை நான் C ஷார்ப்பில் பாட முற்பட்டபோது ஆர் வி அவசரமாய் உள்ளே நுழைந்து “;
“கீதா ..ஏன் பாடிவிட்டாய் ? உன் பாட்டை நிறுத்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே” என்றதும் எரிச்சலுடன் தலை நிமிர்ந்தேன்

“சார் உன்னை கூப்பிடறார்”

ஆடிட்டர் சார்……. “நீயும் ஆர்வீயும் SRS மில் ஆடிட் பாத்துடுங்கோ. ஒன் வீக் டெய்லி காலைல விருதுநகர் போயிட்டு சாயங்காலம் வந்துடலாம் " என்று ஏதோ கொல்லையில் காயப்போட்ட துணியை எடுத்து வரச்சொல்லும் சாவதானத்தில்.

கேட்ட மாத்திரத்தில் தலை சுற்றி ஒரு நொடியில் என் முதுகை நானே பார்க்க முடிந்தது..

ஒரு மாதிரி திக்கி திணறி “ சார் நாளைக்கு எனக்கு ஜுரம்.. போக முடியாது” என்றேன்.. அதைக் கேட்டு சார் சிறிதும் சலனமின்றி ,தேள் கொட்டிய பவர் ஸ்டார் முகபாவத்தில் என்னை பார்த்து விட்டு வேறு யாரோ வந்து விட்டதால் வெளியே கிளம்பி விட்டார்

முறைத்த ஆர் வீயிடம் … “ரெண்டு மாசத்துல கல்யாணம் ..இப்படி விருதுநகர் சிவகாசி ன்னு டெய்லி நாயா அலைஞ்சா கறுத்து போய்டுவேன்னு அம்மா பீல் பண்ரா " என்றேன்

மாபெரும் ஹாஸ்யத்தை கேட்ட தினுசில் அவன் கெக்கே பிக்கேயென்று சிரித்து “பொன்குஞ்சானாலும் அதோட அம்மா காக்கா தான் பாத்தியா” என்றான். நான் எரிச்சலுடன். “ என்னோட ஜோக்கையே அந்துருண்டை போட்டு என்கிட்டே அடிக்காதே” என்று வள் என்று விழுந்தேன்

"எனக்கு சௌகர்யப் படலை...என்னை விடேன்..உனக்கு என்ன ஆளா கிடைக்காது...வேற யாரவது ஜுனியரைக் கூட்டிண்டு போ" என்று சிடு சிடுத்தேன்

“இதோ பார் ..காளை மாட்டுகிட்ட போய் ஒரு லிட்டர் பால் கறந்துண்டு வான்னு சொன்னா கூட ஒரு குத்து மதிப்பா கறந்து கொண்டு வந்துடறேன் ... என்ன தனியா ரங்கு கிட்ட விட்டுடாத ... ஒரு வேலையும் வாங்க முடியாது” என்றான்

மேற்படி பாராவில் அடிபடும் மில் பெரிய மில். அக்கௌன்டன்ட் ரங்கூ என்ற ரங்கமணி வீர வைஷ்ணவர். தேங்காய் சீனிவாசன் ஜாடையில் வயிறு நிறைய தொப்பையுடன் இன்னதென்று காரணம் இல்லாமல் அவருக்கு ஆர் வீயை கண்டால் அவ்வளவாக ஆகாது… அவன் எந்த லெட்ஜெரை கேட்டாலும் “இல்லை ய் ய் ய் ய் ய் ……….” என்று அடித்தொண்டையில் உறுமுவார். அவர் அப்படி உச்சஸ்தாயியில் “இல்லை ய் ய் ய் ய்” என்று பிளிறும் போது ,அந்த “ லை “மட்டும் அப்படியே பறந்து வந்து அவன் கழுத்தில் மாலையாய் வந்து விழும். அவன் “நான் என்னவோ அம்மன் கோவில் கூழ் ஊத்த டொனேஷன் கேட்ட மாதிரி என்ன உறுமு உறுமுது பாரேன் என்று கொதிப்பான்”

நான் படு பவ்யமாய் எப்பவும் ஒரு வித மக்கு களையுடன் வளைய வருவதாலோ என்னவோ. தெரியாது….. ஆர்வீயிடம் அந்நியனாய் இருக்கும் ரங்கமணி என்னுடன் சற்று ரெமோ மாதிரி தான் இருப்பார். அவன் “ பாத்ரூம் எங்க?” என்று விஜாரித்தால் கூட ஏடாகூடமாய் “அதை எட்டால பெருக்கி ABCD யால வகுத்து ..”என்று அவர் குடுக்கும் விவரித்தில் ,,,,,ஆர்விக்கு வந்த பாத்ரூம் ரிவர்ஸில் உள்ளே போய் தொண்டையில் புரையேறும்….

இதுவே நான் கேட்கும் உப்பு பெறாத கேள்விகளுக்கு ஏதோ சின்ன வயது ராமானுஜத்தை கண்டு பிடித்த தினுசில் கண்கள் பனிக்க accountancy பாலபாடமான ‘Debit the receiver” சமாச்சாரங்களை சாங்கோபமாக சொல்லிக் கொடுப்பார். ஆர் வீ அதைப் பார்த்து ரத்தம் கக்கி. “நானும் நாளைக்கு புடவை கட்டிண்டு வர போறேன் " என்று குமுறுவான்…
..
நிற்க.....இது இப்படி இருக்க ...ஏன் மில் ஆடிட்டுக்கு வர மாட்டேன் என்று ஆர் வீ பத்து நிமிடம் மன்றாடிய பின் மனசில்லாமல் என் சங்கடத்தை சொன்னேன்.

அவன் சற்று மௌனமானான் . நம்பாமல் என்னையே சற்று நேரம் பார்த்தான். “நீயா இப்படி feel பண்றே? நீ பேனுக்கே ஈரெடுக்கற கேடியாச்சே”; என்று ஆரம்பித்தான்

என் முகத்தின் தீவிரம் அவனைத் தாக்கி இருக்க வேண்டும்

“ஹ்ம்ம். வயசுக் கோளாறு …நான் வேணும்னா …”என்று ஆரம்பித்தான்

“இது என் பிரச்சினை .நான் பாத்துக்கறேன்” என்றேன்

“சின்ன விஷயத்தை பெருசு படுத்தாதே . உன்னுடைய profession, career எல்லாத்தையும் மனசுல வெச்சுக்கோ” என்றான்.

நான் பதில் சொல்லவில்லை.

என்னை எப்படியோ சமாளித்து இதோ மில்லுக்கு கூட்டி போகிறான்.

சம்பவ தினத்தன்று கையில் ஆடிட் பைகள் கனக்க விருதுநகர் பஸ் ஸ்டாண்டில் இறங்கினோம்.
நான் ஒரு தீர்மானத்தில் இருந்தேன்.. இது ஒன்றும் பேசித் தீர்க்க முடியாத சங்கடமில்லை.. சொல்லப் போனால் ஆர் வீ சொல்வது போல் இது ஒரு விஷயமே இல்லை... இது போன்ற விஷயங்களுக்கு நான் இந்த இடத்துக்கு ஆடிட் வரத் தயங்கினேன் என்றால் வருங்காலம் என்னைப் பார்த்து வழித்துக் கொண்டு சிரிக்கும்

பழரசக் கடையில் ஈக்களுக்கு நடுவே சற்றே தெரிந்த சாத்துக்குடி மேல் ஆர் வீக்கு மோகம் பிறந்து “ஒரு ஜூஸ் அடிச்சுட்டு தெம்பா உன் பிரச்சினையை தீர்ப்போம் " என்றபடி “இந்தாப்பா ரெண்டு சாத்துக்குடி ஜூஸ். …ஐஸ் வேண்டாம். நாலு ஈக்கு மேல வேண்டாம் உடமபு தாங்காது” என்று குடுத்த ஜூஸை வேதனையுடன் குடித்தேன்

நேரம் யுகமாய் நகர்ந்தது

மில் கேட் நெருங்க நெருங்க நடை தளர்ந்தது

ஆர்வீ , “தைரியமா இரு நான் இருக்கேன்” என்றான்

நான் “;ம்ம்:; என்று ஈனஸ்வரத்தில் முனகினேன்

"ஆனா தப்பா நெனச்சுக்காத ….உனக்கே இது கொஞ்சம் ஜாஸ்தியா படல... ? " என்றான்

"ஏய்...அவர் வயசென்ன என் வயசென்ன ...எனக்கு அப்பா மாதிரி " என்றேன்

இதோ கேட்டுக்கு வந்து விட்டேன்

நான் சங்கடப்படும் தருணம். .. அந்த நிகழ்வு மெல்ல நடந்தது

கஞ்சி சட்டியில் விழுந்து புறப்பட்டது போல் விறைப்பாய் யூனிஃபோரம் அணிந்த செக்யூரிட்டி எங்களை பார்த்ததும் அதை விட விறைப்பாக கையைத் தூக்கி ஒரு பெரிய சலூட்… கிட்டத்தட்ட , 60 வயது மதிக்கத்தக்கவர். ஆர்வீ அந்த பெரியவர் அடித்த salute ஐ ஒரு ஆர்மி ஜெனரல் போல அமர்த்தலாய் ஏற்றுக் கொண்டான். நான் அப் பொழுதில் தடால் என்று அவர் அருகில் சென்று தைரியத்தை வரவழைத்து…..
“ ஐயா நீங்க வயசுல எங்களை விட ரொம்ப பெரியவர். உங்கள பாத்தா எனக்கு அப்பா மாதிரி இருக்கு..இப்படி எங்களை பாத்து salute அடிக்காதீங்க எனக்கு மிகவும் சங்கடமா இருக்கு “ என்றேன்

செக்யூரிட்டி நெகிழ்வுடன் குழம்பி நிற்க …..அது வரை மனதில் இறுக்கி வைத்திருந்த பெரும் பாரத்தை இறக்கிய நிம்மதியில் ஆர் வீயை நான் பார்க்க அவன் …”அவ்வளவு தானே ….well done…. இனிமே மில் ஆடிட் வர மாட்டேன்னு சொல்ல மாட்டியே” என்றான். நான் சிரித்தேன்…

என் பிரச்சனை முடிந்தது ..இனி ஆர்வீயாச்சு ரங்கூவாச்சு

பி கு : இந்த பதிவைப் படித்ததும் ….மௌன ராகம் போஸ்ட்டரைப் பார்த்துவிட்டு தியேட்டர் உள்ளே வந்து உட்கார்ந்த பின் கடல் படம் பார்த்த உணர்வு இருந்தால் நீங்கள் என் நண்பனே...

6 கருத்துகள்:

  1. ஆஹா விசுவுக்கு இணையா
    நகைச்சுவையாய் எதிர்ப்பாட்டுப் பாட
    ப்திவர் உலகில் இன்னொருவரும் இருக்கிறாரா ?
    ஆச்சரியம்தான்

    இனி பதிவர் கச்சேரி
    நன்றாக களை கட்டும் என
    நினைக்கிறேன்

    அருமையான பதிவை பகிர்ந்து
    அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா. .இவங்களுக்கு எதிரில் நாம் ஒரு மடு... இவங்க லெவெலெ வேற...

      நீக்கு
  2. சகோதரி கீதா அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. இந்த சங்கடம் பல இடங்களில் உண்டு... விவசாயம் பொய்த்து நல்ல உழைப்பாளிகளெல்லாம். இப்படி பெருந்தாத ஒரு சீருடை அணிந்து... தகுதியற்றவர்களுக்கு சல்யூட் அடிக்கும் நிலை... இந்த சகோதரி சொன்னது போல நானும் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன்,

    பதிலளிநீக்கு
  4. Receiverஐ தூக்கி யாருகிட்டயாவது கொடுங்க. கிரெடிட் வாட் கோஸ் அவுட். Receiver கிரெடிட் ஆகிடும். ஓ நீங்க அந்த Receiverஐ சொன்னீங்களா?

    பதிலளிநீக்கு
  5. கிதாவுக்கு வாழ்த்துகள். புது உறவு கிடைத்ததில் என்னை மறந்திடாதீங்கண்ணே

    பதிலளிநீக்கு