செவ்வாய், 7 மார்ச், 2017

பொறுக்கிகள் .. பொறுக்குகையில்.. பொறுக்கப்பட்டனர்...

அவளும் செம்படவச்சி  தானே...
அதனாலோ என்னவோ ..
இவன் குடித்த தாய் பாலில் கூட
உப்பு தான் சுவைத்தது ...

ஆத்தா... என்று பேச்சுக்கு தான் அழைப்பான்
அடுத்த வரியில்
அப்பா எப்ப வருவாரு ..
அது தான் அவன் பேசிய அதிக வார்த்தைகள்.

ஆறாவது நாள் பௌர்ணமி...
அதுக்கு முன்னால வந்துடுவார்..
வா சாப்பிட..என்று அழைக்க ...
அருகில் இருந்த குழியில் ஆறு கல்களை
போட்டு வாடை அழைக்க ...
கருவாடை  தாக்கினான்.

இரவு தூங்குகையில்..
ஆறே நாள்...தான் பௌர்ணமி...
ஆத்தாளும் ஏங்கினாள் ...
அவனும் ஏங்கினான்..

காலையில்  ..
கல் இருந்த குழி சென்று..
ஒரு கல்லை தூக்கி எரிந்து
மீதியை எண்ணினான்..
ஒன்னு .. ரெண்டு .. மூணு .. நாலு ..
அஞ்சு
என்ற சத்தம் ஆத்தாளிடம் இருந்து வந்தது.

என்ன பிரிட்சோ  ..அப்பா வர இன்னும்
அஞ்சி நாள் தானே...

அதே வாடை ...

அன்று இரவு உறங்குகையில்
அப்பா வரும் நாளை
ஆத்தா எண்ணினாள்..
அவனும் எண்ணினான்...

ஐந்து நாலாக நாலு  மூன்றாக
அடுத்த மூன்று நாள்
அப்பா வரவில்லை..

அந்த தெருவில் வாழ்ந்த ஐந்து ஆண்களும்
சென்ற படகு..
பௌர்ணமி அன்று கடலில் இருக்க கூடாதே..
அலை அதிகமாயிற்றே ...

என்று நினைக்கையில்...
அவன் வரவில்லை ..
அது வந்தது..

மேரியமா...
சூசை தவறிட்டான்.....
என்ற  அசரீரி வர ...
அவளோ .... மயங்கினாள்...

விழித்த பின்...

விடுதலை புலிக்கு எண்ணெய் கொடுக்க போன
 தமிழக மீனவர் ஐந்து பேர் சுட்டு கொலை.
சூசையா..
புலியா ..
எண்ணெய்யா..
அவளுக்கு புரியவில்லை..
அந்த ஐந்து பேர் அரசியல் சூதாட்டத்தில்
பலிக்கடாவானார்கள்
என்று...

பிழைக்க வேண்டுமே...
மீன் பிடித்து வயிற்றை
நிரப்ப சூசை இல்ல,..
மேரி..
சந்தைக்கு வந்து  மீனை கழுவி சுத்தம் செய்..
கிலோவுக்கு எட்டணா...

ஒப்பு கொண்டாள் ...

ஆத்தா ..
ஆரு ஆத்தா அது புலி...?
தெரியல..
அப்பா கெட்டவராம் அதுதான் கொன்னுட்டாங்களாம்.
அவங்க கொன்னது அப்பாவா இல்லைடா...
அப்பாவிய ...

சரி... இன்னைக்கு ஸ்க்கூல் ஏன்  போகல..
எனக்கு பிடிக்கல ஆத்தா...
நான் கடலுக்கு போறேன்...

வேண்டாம் என்று சொல்லமுடியவில்லை..
அவனில் அவனை காண்டவேண்டும் என்று
வருடங்கள் காத்திருந்தாள்..

சுத்தம் செய்ய வந்த மீனில்
கிடைத்த தலையில் வைத்த
குழம்பை  ஊற்றும் போது சொன்னாள்..
ஆறு நாளில் பௌர்ணமி ..
அதுக்கு அப்புறம் போ..

ஆத்தா வெளியே போனவுடன் ஆறு கல்களை
எடுத்துக்கொண்டு குழி நோக்கி ஓடினான்..
தொட்டில் பழக்கம் தானே..

அங்கே கல்லை வைத்து
கண்ணீரோடு அமர்ந்து இருந்தாள் ..
மேரியம்மா..

ஏன் ஆத்தா ..அழுவுற...?
உங்கப்பன் கடைசியா போனது நினைவு வந்துடிச்சி..
விடு ஆத்தா.. அழுவாத ..

கல்கள் ஐந்தாக..அவளோ..

நான் அடுத்த வாரத்தில் இருந்து
மீன் சுத்தம் செய்ய வரமாட்டேனுங்க..
ஏன்..?
என்  புள்ளை கடலுக்கு போறான்..
அவனுக்கு சமைக்கணும்.
அவன் சம்பாரிக்க போவதை
தன்னடக்கமாக சொன்னாள்.

அப்பனின் ஒரே சொத்து ..
கருப்பு கயிற்றில் .. சுறா பல்..
அவன் கயிற்றில் கட்டி
வழி அனுப்பினாள் ..

அவன் மனதிலோ..
இனி என் ஆத்தா
மீன் கடைக்காரி..
சுத்தம் செய்யும் வேலைக்காரி இல்லை..

அந்த ஒரே எண்ணம் தான்.

அலை உயர்ந்து முகத்தில் அடிக்க..
வாயிலோ உப்பு சுவை..

கற்கள் குறையும் முன்பே...
அதிகாலையில் சத்தம்..
மேரிமா ... பிரிட்டோ தவறிட்டான்..

கனவென்று நினைத்தாள்..
இருந்தாலும் அதிகாலை கனவல்லவா ..
முகத்தை கழுவி கற்குழியியை நோக்கி
முதல் அடி..

மேரிமா.. பிரிட்சோ   தவறிட்டான்.

மயங்கினாள்..

விழித்த பின்..

தமிழக மீனவன் இலங்கை கடற்படையினால் சுட்டு கொலை..

பிரிட்சோ  ..
உரிமைக்கு போகவில்லை..
 உயிருக்கு போகவில்லை..
தன் தாயின் உணவிற்கு போனான்..

மாட்டுச்சி சுறா என்று..
நீர் நோக்கி அவன் பார்க்க..
தப் சென்ற சத்தம்...
கழுத்தில் குருதி..
குண்டு நுழைந்த ஓட்டையில்...
உப்பு தண்ணீரும் போக..
இரு வினாடி தான்..
இருக்கும்..

என்  ஆத்தா ...
இனிமேல் மீன்கடை காரி..
சுத்தம் செய்யும் வேலையாள் அல்ல.
அந்த இரு வினாடியில்
அவள் கற்களை எண்ணும்
காட்சிதான்  வந்தது.


நாம் அவனுக்காக இரு வினாடி மௌன அஞ்சலி செலுத்த வேண்டாம்..

விண் நோக்கி  படுத்து ..
காரி துப்புவோம்..
அவனை பாடைக்கு
அனுப்பிய பிணங்களுக்கு ..


அடுத்த நாள் ட்விட்டரில்:
பொறுக்கிகள் .. பொறுக்குகையில்.. பொறுக்கப்பட்டனர்...



பொறுக்குதில்லையே நெஞ்சு!




3 கருத்துகள்:

  1. தொடர்ந்து நடைபெறும்கொடுமையான கடல் மரணங்கள். முடிவைத் தேடாமல் அலைக்கழிக்கும் அரசுகள்..

    பதிலளிநீக்கு
  2. மன்னிக்கவே முடியாத அரசுகள்! கொடுமையான நிகழ்வு. இது தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது....நீங்கள் சொன்ன விதம் அருமை

    பதிலளிநீக்கு