ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

நாளை நமதே ....

ஆசிரியர் தினத்திற்காக.. 

பழைய பதிவுதான்.. இருந்தாலும் பிடித்த பதிவு...


விசு ….
சொல்லுங்க சார்…
நாளைக்கு காலையில் 5 மணிக்கு பஸ்… எல்லா ப்ளேயர்சும் 4:30 மணிக்கு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடனும். மேட்ச் கரெக்டா 7:30மணிக்கு ஆரம்பிச்சிடும். அந்த 5 மணி வண்டிய மிஸ் பண்ணா அடுத்த வண்டி பிடிச்சி போக நேரமாயிடும்… ஓ கே …
எங்கள் பள்ளியின் ஹாக்கி அணி … மற்ற சில அணிகளுடன் மோத சீர்காழியில் இருந்து பொறையார் என்ற ஊரூக்கு செல்ல வேண்டும்.
இரண்டு ஊருக்கும் கூட்டி கழித்து பார்த்தால் கிட்ட தட்ட 40- 50 கிலோ மீட்டர் தான் என்று நினைக்கின்றேன் .. (சரியாக நினைவு இல்லை ). இவ்வளவு அருகில் உள்ள இடத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்னாள் கிளம்பினோமா என்று யோசித்தால் இப்போது சிரிப்பு தான் வருகின்றது .

சார்… போட்டி ஆடும் போது அணிய போகும் உடையை இங்கே இருந்தே அணிந்து கொள்ளலாமா ? அங்கே போனவுடன் நேரம் வசதி இருக்குமோ இருக்காதோ …?
சரி, இங்கே இருந்தே அணிந்து கொண்டு வாருங்கள் …
வாத்தி அப்படி சொன்னவுடன் … அனைவர் வாயிலும் பல் .. என்னதான் இருந்தாலும் … அந்த பள்ளிகூடத்திர்க்கான விளையாட்டு துணியை அணிந்து கொண்டு பிரயாணிக்கையில் மற்றவர்கள் நம்மை மேலும் கீழும் பார்க்கும் போது நம்மை அறியாமலே ஒரு பெருமை…
டேய், அவங்க அவங்க ஹாக்கி ஸ்டிக்கை அவனனவன் எடுத்துனு போங்க … மறக்காம நாளைக்கு எடுத்துனு வந்துடுங்க ..
தேங்க் யு சார்…
அணியில் மொத்தம் 14 பேர் .. இதில் 11 பேர் முதலில் இறங்குவோம் .. அடுத்த மூன்று பேர் தேவை பட்டால் ஆடுவார்கள். பொதுவாகவே .. இந்த 40 கிலோ மீட்டர் பயணத்தில் வண்டியின் டீஸல் வாசனையை பொறுக்காமல் குறைந்த பட்சம் ரெண்டு பேராவது மயக்கம்- வாந்தி நிலைமைக்கு வந்து விடுவார்கள், அப்போது இந்த கூடுதலான மூன்று பேர் தான் … காப்பாற்றுவார்கள் ..
அனைவரும் பிரிந்து அவரவர் இல்லம் செல்ல .. விடுதியல் இருந்து படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் இந்த அணியில் இருந்தோம். நேராக தாமஸ் வார்டன் இல்லத்திற்கு சென்று ..I3a9d899b3346a
சார்.. நாளைக்கு காலையில் .. பொறையாரில் ஆட்டம். 5 மணிக்கு எல்லாம் பஸ் ஸ்டாண்டில் இருக்க வேண்டும் … அதனால்…
ஒரு நிமிஷம் இருங்க..
உள்ளே சென்று விட்டு வந்தார் ..அவர் கையில் ஒரு பெரிய பை …அதில் ஒரு அலாரம் வைத்த மணி கடிகாரம் , மற்றும் …6  பிரிட்டானியா பிஸ்கட் பாக்கட்  .. ஒரு க்ளுகோஸ் டப்பா.. சில எலுமிச்சை பழங்கள் .. மூன்று டவல் …
சரி, நேரா உங்க அறைக்கு போய் சீக்கிரம் தூங்க போங்க .. நாளைக்கு அலாரம் வைத்து நேரத்துக்கு கிளம்பி பஸ் ஸ்டாண்டுக்கு போங்க ….
சார், காலையில் டிபன் …
நீங்க 4: 30 போல கிளம்ப வேண்டும், இங்கே தயார இருக்காது. ..வேண்டும் என்றால்.. இந்தா ஆளுக்கு ஒரு ரூவா. பஸ் ஸ்டாண்டில் இட்லி ஏதாவது வாங்கி சாப்பிட்டு கொள்ளுங்கள் …
ரொம்ப நன்றி சார்…
டேய் … ஷூஸ் எல்லாம் இருக்கா…?
இருக்கு சார் …
சரி கிளம்புங்க…
சரி சார்…
என்னதான் இருந்தாலும் நம்ம வார்டன் சூப்பர் வார்டன் …தான்.. நம்ம கொடுத்து வைச்சவங்க தான்…
அலாரம் 4 மணிக்கு வைத்து விட்டு ..அவனவன் பையில் துணிமணியை வைத்து விட்டு .. அடுத்த நாளுக்கான ஆட்டத்தை நினைத்து கொண்டு எப்போது படுத்தோம் என்று தெரியாது…
கதவு சத்தம் கேட்டது…தாமஸ் வார்டன் தான்..
டேய்.. 4:45 ஆச்சி .. இன்னும் கிளம்பலையா…
அட பாவி.. அலாரம் அடிக்காமல் விட்டுடிச்சி.. அலாரம் நேரத்த சரி பார்த்து வைச்ச ராதாகிருஷ்ணன் அதற்க்கான சாவியை கொடுக்க மறந்துட்டான்..
அடிச்சி பிடிச்சி எழுந்து கிளம்பி பஸ் ஸ்டாண்ட் நோக்கி ஓடுகையில் ..
டேய்.. என் சைக்கிள் எடுத்துன்னு மூணு பெரும் போங்க … அங்க அந்த ஹோடேலில் நிக்க வச்சிட்டு அந்த முதலாளியிடம் சாவியை கொடுத்துடுங்க …
நன்றி சார்..
ஒருவன் மெதித்தால் பத்தாது என்று மூவரும் சேர்ந்து மிதித்து 10 நிமிடத்தில் பஸ் ஸ்டாண்ட் அடைந்த பின் தான் மூவரின் ஹாக்கி ஸ்டிக்கும் , விடுதியிலேயே விட்டு விட்டு வந்தது தெரிய வந்தது..
அங்கே இருந்த விளையாட்டு ஆசிரியர் சிறிது சத்தம் போட்டு விட்டு (சார்.. பரவாயில்லை சார்.. 11 பேர் மட்டும் தானே ஆடுவோம்.. அந்த மத்த மூணு பேருடைய குச்சியை வைச்சி சமாளிச்சிக்கலாம் … விசு.. நல்ல கணக்கு போடற நீ. எதிர் காலத்தில் நீ கணக்கு பிள்ளை தான் . இருந்தாலும் ஆட்ட விதி படி ..ஆளுக்கொரு ஹாக்கி ஸ்டிக் அவசியம் .. சரி வாங்க அங்கே போய் பார்த்து கொள்ளலாம்)
ஏற்கனவே தாமதமாக வந்ததால் இட்லிக்கு நேரம் இல்லை … வண்டியில் ஏறி அமர்ந்தோம். சீர்காழியில் இருந்து பொறையார் செல்ல வேண்டுமென்றால் மாயவரம் வழியாகத்தான் செல்ல வேண்டும். சீர்காழியை தாண்டும் போது ஜுபிட்டர் (அப்படிதான் நினைக்கின்றேன்) என்ற ஒரு சினிமா தியேட்டர் அருகே வண்டி சில வேளைகளில் நின்று ஆட்களை ஏற்றி கொள்ளும் . அந்த இடத்தில வண்டி நின்றது.. அங்கே எங்கள் தாமஸ் வார்டன் வண்டியில் ஏறினார்..
படவா ராஸ்கல்ஸ் ..துப்பாக்கி இல்லாமல் சண்டைக்கு போறீங்களா (அவர் ஒரு மிலிடரி ஆள் ) .. பிடிங்கடா .. என்று அந்த ஹாக்கி ஸ்டிக்கை கொடுத்தார் .. கூடவே ஒரு பிளாஸ்டிக் பை.. இந்தா பிடி.. அந்த மூணு ரூவாயை திருப்பி கொடு..
சார்.. இட்லிக்கு ..
டேய்.. நீங்க கிளம்பியதே தாமதம் … இதில இட்லிக்கு எங்க நேரம் இருக்கும்ன்னு நானே வாங்கி வந்தேன்…
ரொம்ப நன்றி சார்…
சரி,.. சைக்கிள் சாவி எங்கே.. அந்த முதலாளியிடம் கொடுத்திங்களா .. இல்லாட்டி பத்திரமா பாக்கெட்டில் போட்டு எடுத்துன்னு வந்து இருக்கிங்களா என்று கேட்கும் போதே..

ராதாகிருஷ்ணன் ..
சுத்தமா மறந்துட்டன் சார்… இந்தாங்க உங்க சாவி என்றான்..
பொறையாரை சென்றடைந்து எதிர் அணியினர் போட்ட ஒரு கோல் வித்தியாசத்தில் போராடி தோற்றோம்.. விழுப்புண் பல ஏந்தி மீண்டும் சீர்காழி வந்து சேருகையில் இரவு 9 மணி…
விடுதியில் அனைவரும் உறங்கி விட … உணவறையில் மூன்று தட்டுகளில் உணவு பரிமாற்ற பட்டு மூடி வைக்க பட்டு இருந்தது. எதிரில் ” For Hockey Players ” என்று ஒரு சிறிய குறிப்பு இருந்தது… காலையில் எழுந்ததில் இருந்து ஓடி ஓடி கொண்டு இருந்ததால் மிகவும் களைப்பு..
ராதா எனக்கு பசி கூட இல்லை.. இங்கே விடுதி உணவு.. “வெங்காய சாம்பாரு வேகாத சோறு தானே.”. நான் தூங்க போறேன்.. நீங்க சாப்பிட்டு வாங்க ..
என்று சொல்லி கொண்டே கிளம்ப …
விசு… ஒரு நிமிஷம் என்று கபிலன் (மூன்றாவது ஆட்டக்காரன் சத்தம் போட்டான்.. )
என்னடா…?

ஹாஸ்டல் சாப்பாடு இல்ல விசு.. ஹோட்டல் பிரியாணி…நம்ம வார்டன் தான் வாங்கி வச்சி இருக்காரு..
தட்டின் அருகில் உட்க்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கையில் .. அதன் அருகே இன்னொரு குறிப்பு ..
தோல்வியே வெற்றியின் முதல் படி.. எப்படி தோற்றோம் என்று நினைக்காமல், ஏன் தோற்றோம் என்று நினைத்து பார் ..

நாளை நமதே.
பின் குறிப்பு ;
ராதா கிருஷ்ணன் .. அந்த கடைசி நிமிடத்தில் உன்னிடம் வந்த பந்தை நீ அருகில் ப்ரீயாக இருந்த விசுவிடம் தந்து இருக்க வேண்டும்.. அதை நீயாக முன்னேறி சென்று கோல் அடிக்க முயற்சி செய்தது தவறு என்று நான் நினைக்கின்றேன்…

இப்படிக்கு

வார்டன் தாமஸ்..
ராதா… நானும் கேக்கனும்னு யோசித்தேன் … ராதா .. கிருஷ்ணா .. ராதா … கிருஷ்ணா ன்னு கோயிலில் கும்புட்ற மாதிரி சத்தம் போட்டேனே .. ஏன்டா எனக்கு பந்தை பாஸ் பண்ணல..
நீ கத்துனது எனக்கும் கேட்டுச்சி … ஆனால்.. நான் முன்னேறி போய் கோல் அடிக்கனும்ன்னுதான் நீ ஆண்டவன வேண்டுரியோன்னு நினைத்தேன் …

5 கருத்துகள்:

  1. பழைய பதிவுதான்.. இருந்தாலும் பிடித்த பதிவு...//

    ஆம் எனக்கும்
    என் போன்று பலருக்கும்

    பதிலளிநீக்கு
  2. நல்ல நினைவுகள்...மறக்க முடியாதது...வார்டனை என்னாலும் மறக்க முடியாது..

    பதிலளிநீக்கு
  3. THERE ARE SO MANY WARDENS TEACHERS WHO SIGNIFICANTLY CONTRIBUTE ALL GOOD THINGS TOWARDS STUDENTS....OF COURSE YOU CAN COUNT THEM NOWADAYS....

    பதிலளிநீக்கு