திங்கள், 20 ஜூன், 2016

தம்பிக்கு எந்த ஊர் ?

மூன்று நாள் வார இறுதி... அதுதாங்க ... Long Weekend ...வருடத்தில் 7 முறை தான் வரும். அடுத்த மாதம் ஜூலை 4ல் வர போகின்றது. சில வருடங்களுக்கு முன் இதை கொண்டாடிய விதம் மலரும் நினைவுகளாக வந்தது. 
குடியரசின் சுதந்திர தினம். இந்த வருடம் சனிக்கிழமை வந்ததால் வெள்ளி-சனி-ஞாயிறு விடுமுறை.
இந்தியாவை போல் நீ எவ்வளவு வேண்டுமானால் அடி, நாங்கள் அஹிம்சையில் சுதந்திரத்தை வாங்கி கொள்வோம் என்று வாங்கியது அல்ல. மயிலே மயிலே சிறகு போடு என்றால் போடாது.. அதை நாமே பிடுங்கவேண்டும் என்று போரினால் வாங்கியது. அதனால் தான் என்னவோ ... சுதந்திரத்திற்கும் சுதந்திர நாளுக்கும் இங்கே நிறைய மரியாதை.

சுதந்திரம் என்பது ஒரு உணர்ச்சி. அது ஒவ்வொரு மனிதனின் உரிமை. ஆனால் இந்த உரிமையை நாம் உயிரை போல் பாது காத்து கொள்ளவேண்டும்.இந்த உணர்ச்சி இந்நாட்டில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. முக்கியமாக தேசிய கீதத்திற்கு கொடுக்கப்படும் மரியாதையே ஒரு சிறப்பு. இந்நாளில் இந்நாட்டின் கொடி வீடு வீடாக இருப்பதே ஒரு அழகு.
வெள்ளி முழுவதும் குடும்பத்தோடு நேரத்தை கழித்துவிட்டு, இரவு படுக்க போகும் போது சிறிது தாமதமாகிவிட்டது (நம்ம 8-9க்கு குறட்டை விடற ஆளு, இன்றைக்கு 10 ஆகிவிட்டது ). தூக்கம் வந்து தழுவும் முன் இந்த விடுதலையை வாங்கி கொடுத்த தியாக உள்ளங்களுக்கு ஒரு நன்றியை சொல்லி விட்டு, மனதில் இந்நாட்டு தேசிய கீதத்தை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.
எப்போது தூங்கினேன் என்று தெரியல்லை, ஆனால் படுத்து சிறிது நேரத்திலேயே அலை பேசி ரிங்கியது. இந்த மாதிரி இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை வரும் அலை பேசி அழைப்புக்கள் எப்போதுமே நல்ல செய்தியை தராதவைகள். மனதில் சிறிய தயக்கத்தோடு யாருக்கு என்ன ஆச்சோ என்று எண்ணி எடுத்தால்..

வாத்தியாரே....
சொல்லு பாணி..
என்ன இன்னும் தூங்கினு இருக்கியா ?
டேய் இப்ப நேரம் என்ன?
4:30 ஆச்சி வாத்தியாரே..
இவ்வளவு காலையில் என்ன பாணி .. தூங்காம..என்ன விஷயம்.
நான் நினைச்ச மாதிரியே நீ மறந்துட்ட ... நல்ல வேளை நான் அலாரம் வைச்சி எழுந்தேன் ...
என்ன விஷயத்த நான் மறந்தேன்...
வாத்தியாரே.. இன்றைக்கு ஜூலை 4
நேத்து மூணு , நாளைக்கு அஞ்சி...விஷயத்துக்கு வா தண்டம்.
வாத்தியாரே.. இந்த வருசம் ஜூலை 4 வானவேடிக்கையை உங்க ஊருல பார்க்க்கலாம்னு பிளான் மறந்துட்டியா?
தண்ட பாணி சொன்னவுடன் நான் நினைவு வந்தது. இங்கே ஒவ்வொரு ஊரிலும் .. (ஊர் என்றவுடன் இந்தியா போல் நினைத்து கொள்ளவேண்டாம்.. நான் வாழும் இடத்தில் 20 மைலுக்கு ஒரு ஊர்) இந்நாளில் அட்டகாசமான  பட்டாசு வான வேடிக்கை காட்டப்படும். வருடாவருடம் நாங்கள் யாரவது ஒரு நண்பன் ஒருவர் இல்லத்தில் கூடி அங்கு இருந்து இந்த வான வேடிக்கைகளை பார்ப்போம். இந்த வருடம் எங்கள் இல்லத்தில் .
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ... நாங்கள் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் இந்த ஊருக்கு ஒரு கிரகப்ரவேசம் செய்து குடியேறினோம். ஆனாலும் இவ்வூரில் மற்ற ஊர்களை காட்டிலும் வான வேடிக்கை சிறப்பாக இருக்கும் என்று கேள்வி பட்டதினால் நண்பர்கள் அனைவரும் இங்கே கூடுவதாக ஒரு பிளான்.
நல்ல வேளை கூப்பிட்ட பாணி.
சரி உடனே கிளம்பி போய் ஒரு நல்ல இடமா பாத்து பிடிச்சி வை.
இதோ இப்போவே போறேன் ..
நிறைய நாற்காலி மற்றும் பாய் போன்ற ஐட்டத்தை எடுத்துன்னு போ வாத்தியாரே..
சரி..
சீக்கிரம் கிளம்பு..
வண்டியில் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ... அருகில் ஒரு ஐந்து நிமிடத்தில் இருக்கும் தேசிய பூங்காவிற்கு சென்றேன். அங்கே தான் இந்த வானவேடிக்கை இரவு 9 மணிக்கு ஆரம்பிக்கும். ஊரில் உள்ள அனைவரும் அங்கே தான் இருப்பார்கள். அதனால் இந்தியாவில் பேருந்தில் இடம் பிடிப்பதை போல் இங்கேயும் சீக்கிரமாக போய் நல்ல இடத்தில் நம் இருக்கைகளை எல்லாம் காலையிலே போட்டு விட்டு வந்தால் இரவில் நேராக போய் அங்கே அமர்ந்து கொண்டு வான வேடிக்கை கண்டு களிக்கலாம்.
அந்த இடத்திற்கு சென்று எனக்கு பிடித்த ஒரு இடத்தில் பாய் மற்றும் நாற்காலிகளை போட்டு விட்டு , "என்னமோ போ மாதவா" என்று என்னையே நான் பாராட்டி கொண்டு வீட்டை வந்து சேரும் போது மணி 7.
என்னங்க ஆளையே காணோம்...?
இல்ல, இரவு வானவேடிக்கை பார்க்க நல்ல இடமா பிடிக்க போனேன்.
பக்கத்து வீட்டில் விசாரித்தீர்களா ? நம்ம இந்த ஊருக்கு புதுசு.. நல்ல இடமா அவங்க சொல்லுவாங்க..
அவங்களிடம் கேட்டால், அவங்களுக்கும் இடம் பிடிக்க சொல்லுவாங்க, இதை எல்லாம் வாயோடு காது வைச்சி முடிக்கணும். நீ யாரிடமும் சொல்லாதே..
பழமொழி தப்புன்னு  நினைக்கிறன்..  
ரொம்ப அவசியம்... என் அறிவு கூர்மையை பாராட்டுறத விட்டுட்டு, பழமொழியில் தப்பு கண்டுபிடி..
ஏங்க ,,, வீட்டு எதிரில் என் வண்டிய காணோம்.
இரவு நேரத்தில் அந்த இடத்தில் வண்டி போக முடியாதாம் அதனால் இப்பவே போய் ஒரு வண்டிய அங்கே நிறுத்திட்டேன் .மதியம் போய் அதில் நமக்கு வேண்டிய ஜூஸ் மற்றும் சாப்பாடு விஷயங்கள வைச்சிடுவன்.

chairs11698916_10153073106957998_4367872869855403860_n
அருமையான இடம்... இதை விட கிட்ட போகணும்ன்னா பாட்டாசு மேலேயே ஏறி உக்கார்ந்தா தான் ...
இப்ப நான் அவசரமா வெளிய போகணும் ...என்ன பண்றது ...
என் வண்டிய எடுத்துனு போ...
என் லைசன்ஸ் எல்லாம் அந்த வண்டியில்..
கவலையே படாதே.. இதோ எடுத்துன்னு வந்துடறேன்..
மீண்டும் அங்கே சென்ற போது... இன்னும் நிறைய பேர் அங்கே இடம் பிடிப்பதை காண முடிந்தது. நல்ல வேளை காலையில் வந்து பிடித்ததில் நமக்கு நல்ல இடம்.. "என்ன வந்தாலும் பிச்சி எடுத்துறியே விசு" என்று என்னை நானே பாராட்டி ...என்று சொல்லி கொண்டு வீட்டை வந்து சேர்ந்தேன்.
இரவு 8 மணி நண்பர்கள் அனைவரும் வர.. எங்கள் வீட்டில் இருந்து நடந்து அந்த இடத்திற்கு சென்றோம்.
வாத்தியரே..காலையில் நான் எழுப்பினது ஒரு நன்றிய சொல்லிட்டு கிளம்பு.. வானவேடிக்கை பாக்க போகலாம்.
நல்ல வேலை எழுப்பின தண்டம். அத்திப்பூத்தற்போல் என்னைக்காவது ஒரு நாள் இப்படி ஏத்தாவது உதவி செய்யுற.. நன்றி.
சரி... சீக்கிரமே போனியே.. அங்கே வெடி வைக்கிற இடத்துக்கு கிட்ட இடம் கிடைத்ததா?
தண்டம்.. நான் புடிச்ச இடத்துக்கும் கிட்ட வேணும்ன்னா .. நீ வெடி மேலேயே ஏறி உக்காரணும். அவ்வளவு கிட்ட..
இடத்தை  அடைந்தோம் ...

நிறைய கூட்டம் நிரம்பி வழிந்தது.  அவர்களை எல்லாம் தாண்டி எங்கள் இடத்தை நோக்கி சென்று அந்த காட்சியை கண்டு பேய் அறைந்தவன் போல் ஆனேன் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) . 
நான் பிடித்து வைத்து இருந்த இடத்தில் ஒரு சிறிய தீயணைப்பு நிலையமே கட்டி இருந்தார்கள்.
அங்கே அவர்களிடம் சென்று..
ஆபிசர் , இங்கே இருந்த எங்கள் நாற்காலி , பாய் எல்லாம்?
அந்த அறிவாளி நீ தானா ...?
என்ன ஆச்சி ஆபிசர் ..?
யாராவது வெடி வெடிக்கிற இடத்துக்கும் இவ்வளவு அருகில் இடம் பிடிப்பார்களா ? அவ்வளவு என்ன பேராசை.. உங்க சாமான் எல்லாம் தீயணைப்பு நிலையத்தில் உள்ளது .. திங்கள் வந்து வாங்கிகொள்ளுங்கள். திங்களுக்குள் வராவிடால் அதற்கு மேல் தினந்தோறும் வாடகை தரவேண்டும்.
சார் இங்க இருந்த வண்டி..?
எந்த அறிவாளி அந்த வண்டிய இங்கே வைச்சது ..?
என் மனைவி தான் சார், அவங்க இந்த ஊருக்கு புதுசு.. எவ்வளவோ சொல்லியும் கேக்காம இங்க வந்து வச்சிட்டாங்க..சாரி..
வண்டி, போலிஸ் எடுத்துன்னு போய் விட்டார்கள் .அதையும் ஒரு 400 டாலர் கட்டி திங்கள் எடுத்து கொள்ளுங்கள் .
இவை அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த மனைவியின் முகத்தில் கோவம் தாண்டவமாடியது.
இதுக்கு தான் சொன்னேன்.. "கெடுவான் கேடு நினைப்பான் "... நாலு பேரை கேட்டு செஞ்சி இருக்கலாமே..
சாரி..
இப்ப என்னபண்றது.. இன்னும் 15 நிமிடத்தில் வான வேடிக்கை .. நமக்கு நிக்க கூட இடம் இல்ல...
தண்டம், வா பக்கத்தில் ஏதாவது இடம் பார்க்கலாம் ..
என்ன வாத்தியாரே.. சொதப்பிட்ட..
டேய்.. வெந்த புண்ணில்...வெண்ணைய தடவாத..
பழமொழி தப்பு வாத்தியாரே..
ரொம்ப முக்கியம் ..
வாத்தியாரே.. இந்த மேட்டை தாண்டி போனால் அங்கே கொஞ்ச இடம் இருக்கு..
எல்லாரும் வாங்க.. இங்கே மேலே போகலாம்.. மேடா இருப்பதால் வான வேடிக்கை நல்ல தெரியும்..
அடுத்த பத்து நிமிடங்களில் அனைவரும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி அந்த இடத்தை அடைகையில் ...
டாடி... பாத் ரூம் போகணும்..
இரு ராசாத்தி.. இன்னும் 5 நிமிடத்தில் வான வேடிக்கை..
உடனே போகணும்..
சரி .. நீங்க எல்லாரும் இங்கேயே இருங்க.. நான் கூட்டினு போறேன் ..
அங்கு சென்று வருவதற்குள் பாதி வான வேடிக்கை முடிந்தது.
டாடி... அவ்வளவு ஜூஸ் - கொறிக்கிற சமாசாரம் வாங்கினிங்களே ..அதெல்லாம் எங்கே..
அது எல்லாம் உங்க அம்மா காரில்.. அந்த காரு போலிஸ் ஸ்டேசனில் ..
அனைவரின் எரிச்சலுக்கும் காரணமாகி ,,, தலை குனிவோடு வீட்டை நோக்கி நடந்தேன்.. வரும் வழியில்... எல்லாரும் என்னை கேவலமாக பார்க்க ... "இதுவும் கடந்து போகும்"  என்று வீட்டை அடைந்த நான் அங்கே என் வீட்டின் எதிரில் இருந்த காட்சியை பார்த்து பேய் அறைந்தது போல் ஆனேன்( பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) .
என்னங்க நம்ம வீட்டு எதிரில் இவ்வளவு கூட்டம்?
தெரியல ... வரும் போது காஸ் ஸ்டவை அணைத்துவிட்டு வந்தாயா.?
உங்க வாயிலே... போய் பக்கத்துக்கு வீட்டுக்காரை என்ன விஷயம்ன்னு கேளுங்க....
என்று மனைவி சொல்ல, அவரை நோக்கி நான் நடக்க... அவரும் என்னை நோக்கி வந்தார்..
விஷ்.. எங்க குடும்பமா யாரையும் காணோம் ?
இங்கே தான் போனோம்...நீங்க எல்லாம் இங்கே என் வீட்டின் எதிர்ல் என்ன பண்றீங்க..?
விஷ்.. இந்த ஊரிலே இந்த வான வேடிக்கை பார்க்க நல்ல இடம் உங்க வீட்டு வாசல் தான். வருடாவருடம் இந்த தெருவில் உள்ள எல்லாரும் இங்கே உங்க வீட்டு எதிரில் கூடி ஆட்டம் பாட்டம் போட்டு வான வேடிக்கை பார்போம். நீங்க தான் ஆளே காணோம்.. எங்க போனீங்க..
அவசரமா வெளியே போக வேண்டி இருந்தது என்று சொன்ன என்னை அம்மணி முறைக்க ... நானோ.. காலையில் என்னை மறக்காமல் எழுப்பிய தண்டத்தை முறைக்க..
என்ன ஏன் வாத்தியாரே.. முறைக்கிற.. எதோ எல்லா தப்பும் நான் செஞ்சது போல்...
எல்லா தப்பும் நீ செஞ்சது தான் தண்டம்..
எப்படி..?
நீ மட்டும் காலையில் எழுப்பாமல் இருந்தா..

பின் குறிப்பு...:
நண்பர்களே இது நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்த வருடத்தில் இருந்து எங்கள் வீட்டின் எதிரிலேயே தெருவோடு வான வேடிக்கை பார்க்க கூடி விடுவோம்.
மீள் பதிவு தான்... 
இந்த வருடத்திற்கு ஒரு புது  திட்டம் வைத்துள்ளேன்.. அதை ஜூலை 5ம் தேதி போடுகிறேன்.


3 கருத்துகள்:

  1. ஹாஹா... செம பல்பு வாங்கிட்டீங்க போல!

    பதிலளிநீக்கு
  2. வாசித்த போதே தெரிந்தது மீள் பதிவு இன்னும் இந்த வருடம் ஜூலை 4 இனிதானே வரப் போகிறது என்று. மீண்டும் வாசித்தாலும் உங்கள் பல்பு தந்த வெளிச்சத்தை மறக்க முடியுமா...ரொம்பவே பிரகாசமாக இருக்க ரசித்தோம் மீண்டும். ஹஹஹ்ஹ எரியற தீயில வெண்ணையை......தடவிட்டோமோ..ஹஹஹஹ்ஹ்

    பதிலளிநீக்கு