ஞாயிறு, 12 ஜூன், 2016

ஒ.. ஒரு வேளை நான் நிஜமாவே கொடுத்து வைச்சவனா....?

இந்த ஞாயிறு அடியேனை பெற்றெடுத்த அம்மணியை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து வருமாறு நண்பர் ஒருவரின் வேண்டுகோள் வந்தது. பின்னர் நிகழ்ச்சியில் அம்மா தான் சிறப்பு விருந்தினர் என்றும் சிறப்புரையை அவர்கள் தான் வழங்கவேண்டும் என்று ஒரு விண்ணப்பமும் வைத்தார்.

அம்மாவிற்கு இப்ப 90 வயதாகிவிட்டது நண்பரே.. அவங்களால...

விசு ... போன மாதம் அவங்கள ஒரு இடத்தில பார்த்தேன்.. உன்னோடோ,  என்னோட நல்லா இருக்காங்க.. நீ கூட்டி  கொண்டுவா..

என்று சொல்ல ...........அம்மாவிடம்  விஷயத்தை சொன்னேன்..அவர்களும்  சம்மதிக்க ... ஞாயிறு காலை லாஸ் அஞ்சல்ஸ் பயணம்.

எங்கள் இல்லத்தில் இருந்து 80-90 கிலோமீட்டர்.. 40 நிமிடத்தில் சென்று விடலாம். 9 மணிக்கு இருக்க  வேண்டும் என்று நண்பர் சொன்னதால்... காலை 7.30 போல் கிளம்பிவிட்டோம்.

வண்டியில்  ஏறி அமர்ந்தவுடன் ...

இந்த சீட் பெல்ட் ஒழுங்கா போட்டு இருக்கான்னு  பாரு...

கண்கள் சீட் பெல்ட்டை நோக்கி சென்றன.. மனமோ.. பல வருடங்களை தாண்டி பல்லாயிரமைல்களை தாண்டி ஓடியது.
என்னதான் சொல்லுங்க அந்த சைக்கிள் பெடல் மிதிக்கும் போது   இருந்த சுகம் இங்கே இல்லை.

வாடகை சைக்கிள் ஒன்று எடுத்து கொண்டு ... அதில் அவர்களை பின் இருக்கையில்  அமர வைத்து செல்லும் நாட்கள்..

அன்றும் அவர்கள் ஏறி அமர்ந்தவுடன் ஒரு கேள்வி கேட்பார்கள்..

விசு.. புடவை சக்கரத்துல விழுதா, பார்?

இந்த சீட் பெல்ட் நாட்களுக்கும் அந்த புடவை-சக்கர நாட்களுக்கும் தான் எத்தனை வித்தியாசம்..

இதுவோ சைக்கிள்  நாட்கள், எனக்கு 14 வயதாவது இருந்து இருக்கும். அதற்கும் முன்பு...நினைவு தெரிந்த நாட்கள் முதல் தகப்பனின் நினைவே இல்லாமல் வளர்ந்தவன் தானே நான்.

பிறர்  சொல்ல என் தகப்பனை பற்றி நிறைய கேட்டுள்ளேன். எனக்கு ஐந்து வயது இருக்கும் போது இறைவனடி சேர்ந்தார்.  அம்மா எப்போவாவது அப்பாவை பற்றி பேசுவார்கள்.

அம்மாவிற்கு நாற்பது சொச்சம் இருக்கும் போது அப்பா திடீரென்று காலமடைந்தார். விட்டு சென்றதோ... 9 பிள்ளைகள்.. 15 வயதில் இருந்து 4 வயது வரை..

வீட்டில் நான் தானே இளையவன். என் மூத்த சகோதர்கள் சகோதரிகள் அனைவருக்கும் அப்பாவின் நினைவு சற்று இருந்ததால்.. அந்த உரையாடலில் கலந்து கொள்வார்கள்.. நான் விழி  பிதுங்கி நிற்கையில்.. அவர்கள்.. இது நினைவு இல்ல? அதுகூடவா நினைவு இல்லை என்று கேட்பார்கள்.. ஒன்றுமே நினைவில் இல்லை.

அருகில் இருந்த அம்மாவை பார்த்தேன். சற்று கண்ணை மூடி கொண்டு ஏதோ ஒரு நினைவில் பயணித்து கொண்டு வந்தார்கள். ஒரு வேளை அவர்களும் சைக்கிள் நாட்களுக்கு சென்று இருப்பார்களோ... முகத்தில் இருந்த ஒவ்வொரு கோடும் கோடி கதை சொன்னது.

ஒரு தனி பெண், கணவனின் துணை இல்லாமல் எப்படி எங்களையெல்லாம் வளர்த்து இருப்பார்கள்.. என்ற கேள்வியும் கூடவே வந்தது.


போகும் வழியில்.. மனதில் ஒரு எண்ணம்.. என்னதான்.. லாஸ் அஞ்சேல்ஸ் நகரில் சொகுசு வண்டியில் அன்னையை அழைத்து சென்றாலும்..
அந்த சைக்கிள் ஒன்றை எடுத்து கொண்டு அவர்களை பின் சீட்டில் அமர வைத்து மேடு வந்தவுடன் எழுந்து நின்று ஒட்டினனே.. அந்த சுகம் இல்லையே..

இடமும் வந்தது.. நிகழ்ச்சியும் ஆரம்பித்தது.. சிறப்பு விருந்தினரை அறிமுகபடுத்திய நண்பர்..

இவர்களை இன்று ஏன் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தோம் தெரியுமா?

என்று பேச ஆரம்பித்தார். என்ன சொல்ல போகின்றார் என்ற ஆர்வத்தில் நானும் நிமிர்ந்து அமர....

அம்மாவும் பிள்ளைகளும் இங்கே அமர்ந்து இருகின்றார்கள் அம்மாவை பற்றி நான் நிறைய கேள்வி பட்டுள்ளேன். 1970ம் வருடங்களில்   இவர்கள் வேலையின் நிமித்தம் கோடிகணக்கான பணத்தை நிர்வாகித்து வந்தார்கள். இந்த பணம் முழுவதும் ஏழை , மற்றும் மாற்று திறன் கொண்டோருக்கான பணம். இவ்வளவு பணம் கையில் இருந்த போதும் இவர்கள் அதில் இருந்து ஒரு ரூபாயாவது தனக்காகவோ அல்லது தன் பிள்ளைகளுக்காகவோ  எடுத்தது இல்லை.

இன்னும் சொல்ல போனால் இவ்வளவு பணத்தை இவர்கள் நிர்வாகிக்கும் அந்த காலத்தில்  இவர் பிள்ளை கூட கிழிந்த கால்சட்டையை தைத்து தான் போட்டு பள்ளிக்கு செல்வார்கள்...

அம்மா அவர்கள் இந்த ஊனமற்ற பிள்ளைகளுக்காக எத்தனையோ நிறுவனத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். ஆனாலும் .. அவர்களின் இந்த சுத்தமான வாழ்க்கை தான் எங்களை இன்று அவர்களை சிறப்பு விருந்தினராக அழைக்க வைத்தது.

அம்மாவும் சிறப்புரை ஆற்றினார்கள். சந்திப்பும் முடிந்தது. மதிய உணவும் அங்கேயே பரிமாற்ற பட்டது.. அந்த நேரத்தில் நண்பர் அருகில் வந்து..

விசு... அந்த கிழிஞ்ச கால்சட்டையை பத்தி நான் பேசியதை நீ ஒன்றும் தவறாக எடுக்கவில்லையே...

கண்டிப்பாக இல்லை... அந்த கிழிஞ்ச கால்சட்டை எனக்கும் தானே பெருமை. இதில் தப்பே இல்லை...

இல்லை , அதை சொன்னவுடன் தான் எனக்கு.. ஐயையோ.. இங்கே இருக்கிற  எல்லாருக்கும் நீ தான் அவங்க பிள்ளைன்னு தெரியுமே.. உன்னை என்ன யோசிப்பாங்கோன்னு  நினைச்சேன்..

நண்பா.. நீ இந்த உண்மைய சொன்னவுடன் இங்கே இருக்கிற மக்கள் மத்தியில் என் மரியாதை கூடி இருக்குமே தவிர குறையவில்லை.... இதில் தப்பே இல்லை...

என்று அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினேன்...

சாப்பிட்டு கொண்டு இருக்கையில்.. நண்பன் தண்டபாணி அருகில் வந்தான்.. பொதுவாக கொஞ்சம் கிண்டலாக பேசுபவன்.. இன்றோ என் தோளின்  மேல் கை வைத்து .. தோளை சற்று அழுத்தி பிடித்தான்..

பாணி...

விசு...

தண்டம்... நீ என்ன வாத்தியாறேன்னு கூப்பிட்டா "எவரிதிங் இஸ் ஆல் ரைட்"ன்னு அர்த்தம்.. விசு ன்னு கூப்பிட்டா எனக்கு கொஞ்சம் பயம் தான்..
என்ன விஷயம்?

என்று திரும்பி பார்த்தேன்..

வாத்தியாரே.. கொஞ்சம் அமைதியா இருக்கியா?

என்று சொன்னவனின் கண்கள் ஈரமாகி இருந்தது.

தண்டம்.., என்னாடா ஆச்சி.. எவரிதிங் ஆல்ரைட் வித் யு..?

மீண்டும் ஒரு முறை என்  தோள்களை இறுக்கி, ...

ஏன் வாத்தியாரே.. இந்த விஷயத்த எனக்கு சொல்லல..

டேய்.. இது எனக்கே தெரியாது.. வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணேன்.

நீ ரொம்ப கொடுத்து வைச்சவன் வாத்தியாரே..சரி, அப்புறம் பார்க்கலாம்  என்று அந்த இடத்தை விட்டு  கிளம்பினான்

நாங்களும் உணவை முடித்து கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினோம். வண்டியில் ஏறிய பின் ..அம்மா..

விசு.. புடவை சக்கரத்தில் மாட்டி... சாரி.. சீட் பெல்ட் சரியா போட்டு இருக்கா பார் ..

என்று கேட்க வண்டியை இல்லத்தை நோக்கி விட்டேன்.

மனதில் ஒரு மூலையில்... என்னடா இது.. நம்ம கிழிஞ்ச கால் சாட்டை போட்டு இருக்கோம்.. தண்டபாணி என்னமோ .. நீ கொடுத்து வைச்சவன்னுன்னு சொல்றான்?  அவன் சொன்னா சரியா தான் இருக்கும் ....

ஒருவேளை நான் உண்மையாகவே கொடுத்து வைச்சவனா இருக்குமோ.. என்ற பெருமை மனதில் வந்தது.

இதை படித்த நீங்களாவது சொல்லுங்களேன்.. நான் கொடுத்து வைச்சவனா?


9 கருத்துகள்:

  1. நீங்கள் கொடுத்துவைத்தது கிழிஞ்ச கால்சட்டை போட்டுக்கொண்டதினால் அல்ல. 1. பிறர் பணத்தை தன் பிள்ளைகளின் நன்மைக்கு உபயோகப்படுத்தாத தாயார், தனக்கு என்ன முடியுமோ அதை உங்களுக்குக் கொடுத்ததனால்.. அது ஒழுக்கம் மற்றும் நற் பண்பு 2. அந்தத் தாயாரை அவரின் முதிர்ந்த பருவத்தில் சிறிது சௌகரியமாக உங்கள் அருகில் வைத்திருக்கும் பாக்கியத்திற்கு.

    பதிலளிநீக்கு
  2. நன்றி. என் தாயாரின் நினைவு வந்தது. நாம் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்
    விஜயன்

    பதிலளிநீக்கு
  3. உங்கள் தாயாரின் ஒழுக்கமான செயல்கள்தான் இன்று உங்களை உயரத்தில் அமர்த்தி வைத்துள்ளது என்றால் அதில் தவறேதும் இல்லை! கண்டிப்பாக நீங்கள் கொடுத்து வைத்தவர்தான். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் கடவுளால் வளர்க்கப்பட்ட குழந்தை ஆமாம் உங்களுக்கு அம்மாவாக இருப்பவர் நம்முடன் வாழும் கடவுள்தான்

    பதிலளிநீக்கு
  5. / நம்ம கிழிஞ்ச கால் சாட்டை போட்டு இருக்கோம்.. தண்டபாணி என்னமோ .. நீ கொடுத்து வைச்சவன்னுன்னு சொல்றான்? //

    ஆமாம் விண்டோ ஏர்கண்டிஷன் கால் சாட்டையை போட்டு இருந்தால் கொடுத்து வைச்சவந்தானே நானும் விண்டோ ஏர்கண்டிஷன் வைத்த கால் சட்டையை அணிந்து வளர்ந்தவந்தான்.. என்ன நான் உங்களோட கம்பர் பண்ணும் போது நிறைய வசியானவன் அதனால்தான் என் கால் சட்டையில் ஒன்று அல்ல இரண்டு அல்ல நிறைய விண்டோ ஏர்கண்டிஷன் வைத்து அலைந்தவன்

    பதிலளிநீக்கு
  6. மனதைத் தொட்ட பகிர்வு..... நிச்சயம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் தான்.....

    பதிலளிநீக்கு
  7. அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
    மானிடராய் பிறந்த காலையின்
    கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது
    கூன் குருடு செவிடு பிறந்த காலையின்
    கல்வியும் செல்வமும் தான் பெறுதல் அரிது
    கல்வியும் செல்வமும் பெற்ற காலையின்
    வாழ வழி நாடி வழி பிறந்திடுமே!!

    இவை யணைத்தினையும் அன்னையுடன்
    அனுப வித்தல் அனைத்தினும் அரிது!!

    நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் கொடுத்து வைத்தவர்களே..., நீங்க கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கொடுத்து வெச்சிருக்கீங்க...
    அன்பும் வாழ்த்துக்களும்...!!

    பதிலளிநீக்கு
  8. அம்மா,
    அது சொல்லாத எதுவும் உலகில் இல்லை.தண்டம் மட்டும்
    அழவில்லை ...
    சைக்கிளென்ன,காரென்ன.அம்மா பயப்படத்தான் செய்வார்கள் ..அது பிள்ளைகள் பற்றிய பாதுகாப்புணர்ச்சி..
    தபால் பெட்டி கால்ச்சட்டைகள் எப்போதும் மகிழ்ச்சியை கொண்டுவருபவை..
    நீண்டநாட்களின் பின் ஒரு உண்மையான அம்மா பதிவு....

    பதிலளிநீக்கு
  9. அம்மாவைப் பார்த்ததும் அப்படியே மனம் நிரைந்து விட்டது விசு. நீங்கள் கொடுத்துவைத்தவர் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் ஆம் அம்மா இறைவனின் தூதர் என்றால் அது மிகையல்ல. நீங்கள் மட்டுமில்லை இப்போது நாங்களும் கொடுத்துவைத்தவர்களே. அதிலும் கீதா சற்று அதிகம்.

    அம்மா எங்களை எல்லாம் நினைவு வைத்திருப்பார் என்று நினைக்கின்றோம்.

    கீதா: உங்களுக்குக் கால்சட்டை என்றால் எனக்கு ஸ்கர்ட், பாவாடை, அப்புறம் தாவணி. பல பொத்தல்கள் இருக்கும். அதை மறைக்கப் படாத பாடு பட வேண்டியிருக்கும். இருக்கக் கூடாத இடத்தில் பொத்தல் இருந்தால் ஒட்டுத் துணிகள் போட்டு ஓட்டுத் தையல் போட்டுத் தைக்கப்படும். அதற்கென்றே ஒட்டுத் துணிகள் வீட்டில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். அதுவும் வேறு கலராக இருந்தால் ஒரு டிசைன். அது ஒரு காலம் பொத்தல்கள் இருந்தாலும் ஏழையின் வீட்டில் நட்சத்திர பங்களா போல மகிழ்வாகத்தான் இருந்தது.

    பதிலளிநீக்கு