வெள்ளி, 27 மே, 2016

ஒண்ணுமே தெரியாம இருக்கீங்களே.. : இனியவள் - இளையவளின் ஒப்பாரி.

உங்களுக்கு இந்தியா பத்தி எதுவுமே தெரியல டாடி...

இரண்டு வாரம் இந்தியாவிற்கு சென்று திரும்பிய என் இளைய ராசாத்தி வீம்பாக பேச்சை ஆரம்பித்தாள்....

என்னது? எனக்கு இந்தியா பத்தி எதுவும் தெரியாதா? மகளே.. கலிபோர்னியாவில், ஏன் ? அமெரிக்காவிலே யாருக்கும் இந்தியாவை பத்தி என்னை போல் தெரியாது. ஒவ்வொரு தொகுதியையும் விலாவாரியா தெரியும்.

சும்மா பேசுங்க! ஆனா உண்மைய சொல்ல போனா உங்களுக்கு இந்தியா பத்தி ஒன்னும் தெரியாது..

ஏன் அப்படி சொல்ற..?

ஓகே.. ஒருவேளை அரசியல் கொஞ்சம் தெரியும்.. தமிழில் கொஞ்சம்  எழுத தெரியும் .. கொஞ்சம் மேடை பேச்சு தெரியும் .. மத்த படி எதுவும் தெரியாது.

எனக்கு எதுவும் தெரியாதுன்னு உங்க  அம்மா மாதிரி பொதுவா சொல்ல கூடாது. என்ன தெரியாதுன்னு சரியா சொல்லணும்.

சரி, விஷயத்துக்கு நேர வரேன். உங்களுக்கு இந்திய உணவை பத்தி ஒன்னும் தெரியாது.

அட பாவி மகளே.. நான் மட்டும் கணக்கு பிள்ளையாகி இல்லாட்டி சமையல் காரன் தான்னு ஊரெல்லாம் பெருமையா சொல்லினு வரேன். நீ என் வீட்டுக்குளே இருந்தே என்னை இப்படி பேசிட்டியே.. உனக்கு இந்திய சாப்பாடு என்ன வேனும்ம்னு சொல்லு, அடுத்த அரை மணி நேரத்தில் செஞ்சி எடுத்துன்னு வரேன்.


சமையல் எல்லாம் செய்வீங்க.. ஆனால் உங்களுக்கு இந்திய இனிப்பு வகைய பத்தி ஒண்ணுமே தெரியாது.

இனிப்பா.. அது நமக்கு செய்ய வராது.. இருந்தாலும் என்ன வேணும்னு சொல்லு வாங்கி தரேன்.

இந்த முறை பெரியம்மா ஒரு இனிப்பு வாங்கி தந்தாங்க.. அந்த மாதிரி இனிப்பை நான் இது வரை சாப்பிட்டதே இல்லை.



அப்படியா.. அவ்வளவு நல்லா இருந்ததா? ஏன் அப்படி சொல்ற?

டாடி.. பொதுவாவே  இந்திய இனிப்பு ரொம்ப இனிப்பு ரொம்ப எண்ணையோட இருக்கும் .. இது அப்படி இல்ல?

இதோட பெயர் என்ன?

எனக்கு தெரியாது ? பெரியம்மாவ  கேளுங்க.

அங்க  இப்ப நடுராத்தி.. இப்ப கூப்பிட்டு இனிப்போட பெயர் என்னான்னு கேட்டா... கசப்பா ஏதாவது சொல்லுவாங்க.. நல்லா யோசித்து பாரு .. அதோட பேரு என்ன?

தெரியல..

சரி .. பாக்க எப்படி இருந்தது?

கொஞ்சம் வெள்ளை  நிறத்தில் .. இனிப்பும்  கூடவே கொஞ்சம் இனிப்பு தண்ணி மாதிரியும்..

ஒ.. அட நான் பெத்த  மகளே.. அது குலோப்  ஜாமூன்.

அது எனக்கு தெரியும்.. அது பிரவுன் நிறம்.. இது வெள்ளை..

ஒ.. குலோ ஜாமூன் மாதிரியே.. கூடவே இனிப்பு  தண்ணியோட.. ஒ..  ரஸகுல்லா.. அதை எத்தனை முறை வாங்கி தந்து இருப்பேன். எனக்கு போய் இனிப்பு பத்தி தெரியாதுன்னு..

ஆதுவம் இல்லை.. அதை வாயில் வைக்க முடியாது ..ரொம்ப இனிப்பு.

அப்ப.. அதர்சமா?

அதர்சம்.. பிரவுன் டாடி.. இது ஒரு மாதிரி வெள்ளையா.

ராசாத்தி சில பேர் அதர்சத்தை வெள்ளையா செய்வாங்க.. அதுதான்.

டாடி... கூடவே இனிப்பு தண்ணியும் இருந்ததுன்னு சொல்றேன்.. சும்மா அதர்சம்ன்னு போய் சொல்லின்னு.. உங்களுக்கு தெரியலைன்னு நினைக்கிறன்.

ஒரு வேளை ... ஜாங்கிரி.. அதுல இனிப்பு தண்ணி மாதிரி இருக்கும்.

ஐயோ அது சிவப்பு நிறம்.. இது ஒரு மாதிரி  வெள்ளை நிறம்.

ஒரு வேளை யாராவது செய்ய தெரியாதவங்க செஞ்சி இருப்பாங்க.. கலர் போட மறந்து இருப்பாங்க...

டாடி.. ஜஹாங்கிர் முறுக்கு போல இருக்கும், இது ஒரு மாதிரி வெள்ளையா கொஞ்சம் உருண்டை பண்ணி தட்டியது போல் இருந்தது.

அது ஜஹாங்கிர்  இல்ல மகள்.. ஜாங்கிரி .

உங்களுக்கு ஒரு விஷயமா தெரியாட்டி உடனே என் மேலே தப்பு கண்டு பிடியுங்க ..

சரி.. அது அவுரங்கசீப் ... சாரி ஜஹாங்கீர் தான் ...உருண்டை பண்ணி தட்டின மாதிரி... இனிப்பு குழி பணியாரம்.

ஐயோ.. அது இல்ல... அதை செஞ்சி சூடா சாப்பிடனும். இதுக்கு ஒரு கவர் போட்டு சுத்தி வைச்சி இருக்காங்க.

ஒ.. சில்வர் கவரா... அதை இவ்வளவு தாமதமா சொல்லு.. அது ஒரு விதமான பால்கோவா.

டாடி.. எனக்கு பால்கோவா தெரியும். இது அதுவும் இல்ல.

சில்வர்  கவர் போட்டு...

சில்வர் கவர்  மாதிரி டாடி..  ஆனா இந்த கவர் ரொம்ப சாப்ட். அதை எடுத்துட்டு தான் சாப்பிடனும்.அதோட சாப்பிட்டா கொஞ்சம் கசக்குது.

கவர் போட்ட .. வெள்ளையா இனிப்பு தண்ணியோட...

மகள்.. இப்ப தெரியுது. இது தமிழ்நாட்டு இனிப்பு இல்ல.. டெல்லியில் கிடைக்கும். பூசணிக்காயில் செய்வாங்க...

இல்ல .. நாங்க எங்க டெல்லிக்கு போனோம் .. இது பெங்களூரில்  கிடைச்சது.

பெங்களூரில்.. இனிப்பு.. ராசாத்தி.. ஒரு வேளை அரபு நாட்டு இனிப்பா இருக்கும்.. கூகிளில் போட்டு தேடி பாரு.. கண்டிப்பா இருக்கும்.
கூகிள் சென்று தேடினாள்..


இதுல ஏதாவதா?

இல்ல...


ஆனால் பாக்க கிட்ட தட்ட இது போல் தான் இருந்தது..
முந்திரி  பருப்பு இல்லாமல். அந்த கவரை பிரிச்சா  உள்ள வெள்ளை.. இனிப்பு தண்ணியோட..

மகள்.. இப்ப தான் தெரிஞ்சது.. இது பால் கொள்ளுக்கட்டை....

ஐயோ.. அதையும் சூடா  தானே   சாப்பிடனும். இதை சில்லுனு பிரிட்ஜில் இருந்து எடுத்து சாப்பிடனும்.

தொட்டா  எப்படி இருந்து.. கடினமாவா.. இல்ல சாப்டா இருந்ததா?

கடினமும் இல்ல.. சாப்டாவும் இல்ல .. ஒரு மாதிரி ஜெல்லி போல இருந்தது.

மகள்.. ஜெல்லி போலனா  கண்டிப்பா அது இந்தியா இனிப்பு இல்ல.. வேற ஏதோ நாட்டுது..

இல்லா டாடி.. கண்டிப்பா இந்தியாதான்.

எப்படி சொல்ற?

பெரியமா தான் சொன்னாங்க. இது அமெரிக்காவில் மட்டும் இல்ல.. உலகிலேயே வேறு எங்கேயும் கிடைக்காது . இந்தியா ஸ்ரீ லங்காவில் மட்டும் தான் கிடைக்கும்ன்னு சொன்னாங்க..

இது,..... நான்.. என்னை.. இது..

சரி . உங்களுக்கு இந்தியாவ பத்தி ஒண்ணுமே தெரியல ஒத்துக்குங்க..

இல்ல மகள்.. இது,..... நான்.. என்னை.. இது..

சரி சரி.. போங்க..

அவள் அந்த இடத்தை விட்டு கிளம்ப.. .இந்தியாவில் விடியட்டும்  என்று காத்து கொண்டு இருந்தேன்.

மாலை ஆறு மணியானது. இந்தியாவில் காலை 6 ஆயிற்றே..தொலை பேசியில் அழைத்தேன்.

அக்கா .. எப்படி இருக்கீங்க..?

நல்லா இருக்கோம்..பத்திரமா வந்து சேர்ந்தாங்களா?

நானும் நல்லா... ம்... ஒ.. வந்துட்டாங்க. ரொம்ப நன்றி அக்கா. ரெண்டு வாரம் நல்ல பத்திரமா வச்சி பாத்து அனுப்பிட்டீங்க..

பரவாயில்லை தம்பி..

அக்கா.. ஒரு விஷயம் கேக்கணும் .. நான் கேட்டேன்னு சின்னவளிடம் சொல்லிடாதீங்க.

என்ன.. விஷயம் சொல்லுங்க..

என்னமோ ஒரு இனிப்பு வாங்கி தந்தீங்கலாம்.. ரொம்ப இனிப்பா இல்லாம.. கொஞ்சம் ஜூஸோட ரொம்ப நல்லா  இருந்ததுன்னு சொல்றா? என்ன வாங்கி தந்தீங்க?

அவ எங்க இனிப்பு சாப்பிட்டா. இனிப்புனாலே வாயிலே வைக்க மாட்டேன்னு சொல்லிட்டா..

இல்ல அக்கா.. இது ரொம்ப நல்ல இருந்ததாம். சில்லுனு பிர்ட்ஜில் இருந்து எடுத்து கொடுத்தீங்கலாம்.

தெரியலையே..பாக்க எப்படி இருந்ததாம்?

உருண்டை புட்ச்சி லேசா தட்டின மாதிரி..

கலர்.. ?

கவர் கொஞ்சம் பிரவுன் ... அதை எடுத்துட்டா உள்ள  வெள்ளை.. கவர் கொஞ்சம் கசக்குதாம்.

தெரியலையே.தொட்டா எப்படி இருந்ததாம். கடினமா.. ஸாப்டா?

நானும் கேட்டேன்..

ரெண்டும் இல்ல.. ஜெல்லி மாதிரி இருந்ததுன்னு சொன்னா..

ஒ... அதுவா?

அதே தான்.என்ன அது.. சீக்கிரம் சொல்லுங்க..

நொங்கு.

பின் குறிப்பு :
நான் பேய் அறைந்ததை போலானேன் என்று சொல்லவும் வேண்டுமோ... ?




6 கருத்துகள்:

  1. ஒங்க பொண்ணு உங்கள நோண்டி நொங்கு எடுத்திட்டா ... நல்லா வேணும்!

    பதிலளிநீக்கு
  2. ஒருவாறு நினைத்தேன் ,,, உங்களுக்கு தெரியலையே விசு சார்,,,

    பதிலளிநீக்கு
  3. ஹஹஹஹ்ஹஹஹ்ஹ் சொல்ல வந்ததை (நோண்டி என்பதைத் தவிர்த்து) தருமி சார் சொல்லிவிட்டார்....

    பாவம் புள்ள அதை இனிப்பு என்று நினைத்திருக்கிறார். நுங்கு பாடம் எடுத்திடுங்க விசு..

    இங்கும் கிடைக்கின்றது. இன்று எங்கள் வீட்டில் நுங்கு தனியாகவும், + நுங்கு சர்பத்.

    பதிலளிநீக்கு
  4. நல்லவேளை உங்கள் இனியவள் இந்தப் பலகாரத்தை செய்து தரச்சொல்லி அடம்பிடிக்கல..!!!

    பதிலளிநீக்கு
  5. பிள்ளையை அடிக்கடி இண்டியாவிற்கு கூட்டி சென்று வளர்த்து இருந்தால் இந்த மாதிரி பிரச்சனை இருந்திருக்காதுல்ல

    பதிலளிநீக்கு
  6. ரோஜா சினிமாவில் அரவிந்தசாமி boss கிட்டே ரோஜாவை செக்யூரிட்டி clearance க்கு கூட்டிக்கிட்டு போவாரே. அப்போ boss கேட்கும் கேள்வி அதுதான் வெள்ளையா சீனி எல்லாம் போட்டு ஒன்னு செய்வீங்களே? இந்த சீன் தான் ஞாபகம் வந்தது.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு