வெள்ளி, 22 ஜனவரி, 2016

இன்று வந்ததும் அதே நிலாவா?

கல்லூரி நாட்கள். முதுகலை வகுப்பில் அமர்ந்துள்ள நேரம். எங்கள் வகுப்பு மூன்றாவது மாடியில் அமைந்துள்ளது. வணிகவியல் பேராசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்த வேளை, வகுப்பின் வெளி இருந்து சலசலப்பு  லேசாக கேட்டது.  பொதுவாக இம்மாதிரியான சலசலப்பு எப்போதாவது கேட்கும், ஆனால் ஆரம்பித்த சில நிமிடங்களில் அமைதி நிலை மீண்டும் திரும்பும்.

முறை சலசலப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டு வந்தது. மனம் பாடத்தில் கவனம் செலுத்தவில்லை. எங்கள் வகுப்பின் இருக்கையில் இருந்து யாரும் வெளியே என்ன நடக்கின்றது என்று பார்க்கவும் முடியாது.  மாணவர்களில் பலர் ஒருவருக்கொருவர் கண்ணாலே பேசி கொண்டு இருக்கையில், அடியேன் எழுந்து,


சார்.. கீழே எதோ பிரச்சனை போல் இருகின்றது ?

நானும் அப்படி தான் நினைக்கின்றேன், கொஞ்சம் நேரம் காத்து இருப்போம்,  நம் துறை தலைமையிடம் இருந்து ஏதாவது செய்தி வரும் வரை.

சலசலப்பு வளர்ந்து வளர்ந்து இப்போது கோஷமாகிவிட்டது. இனிமேலும் தாமதிக்க முடியாது. என்னில் என்ன பார்த்தாரோ?  எங்கள் துறையின் தலைமை பேராசிரியர், என்னை மாணவ செயலாளராக நியமிந்து இருந்தார். அந்த பொறுப்பும் வர,

சார்.. நான் கொஞ்சம் போய் பார்த்துவிட்டு வருகிறேன்,

இல்ல, நீங்க யாரும் போக வேண்டாம்.. காத்து  இருப்போம்.

அவர் பிரச்சனை அவருக்கு ...

80ன் ஆரம்பங்களில் பொதுவாக எல்லா கல்லூரிகளிலும் பிரச்சனையே வணிகவியல் துறையில் இருந்து தான் வரும். வசதியான குடும்பங்களில் இருந்து வந்த மாணவர்களும் சரி, வியாபார குடும்பத்தில் இருந்து வந்த மாணவர்களும் சரி , வணிகவியல் துறையில் தான் இருப்பார்கள். அரசியல்  மற்றும் பண செல்வாக்கும்  இத்துறையில் சற்று அதிகமே இருக்கும். அந்த ஒரே காரணத்தினால் பாடத்தை நடத்தி கொண்டு இருந்த பேராசிரியர் எங்கள் வகுப்பை கட்டுபடுத்தி வைப்பதிலேயே குறிவைத்து இருந்தார்.

சில நிமிடங்கள் கழிந்தன. எங்கள் வகுப்பின் கதவின் எதிரே கணக்கு துறையை சேர்ந்த சில முகம் தெரிந்த சக  மாணவர்கள்.. அவர்களை கண்டு பேராசிரியர் நடப்பது என்ன என்று அறியாமல் விழி பிதுங்க ..

அடியேன் .. கதவை நோக்கி சென்று அவர்களிடம்..

என்ன பிரச்சனை?

ஸ்ட்ரைக் .. விசு . ஸ்ட்ரைக்.. உடனே வெளியே வந்து நீங்களும் ஆதரிக்கனும்.

கண்டிப்பாக, ஆனால் ஸ்ட்ரைக் எதற்காக ..?

என்ன விசு .. விசயம் தெரியாதா?

சொல்லுங்க..

இலங்கையில் நம் இனத்தவரை அடித்து கொன்று கொண்டு  இருகின்றார்கள், இங்கே நமக்கு எதற்கு பாடம் ?

உணர்ச்சிவசபட்டு பேசினார்கள்.

நியாயமான போராட்டம் தான், என்று மனதில் சொல்லி கொண்டே, வகுப்பை திரும்பி பார்த்தேன். போராட்டம் எதற்கு என்று தெரியாவிடிலும் களத்தில் குதிக்க தாயராக உள்ள பல நெஞ்சங்கள். என்ன போராட்டமாய் இருந்தால் என்ன ? இந்த வகுப்பில் இருந்து வெளியே போனால் போதும் என்று ஏங்கும் சில நெஞ்சங்கள். ஏதாவது செய், ஆனால் வகுப்பை மட்டும் கலைத்து விடாதே என்று பார்வையில் கேட்ட பேராசிரியர் , மற்றும், முகத்தில் சற்று பயத்தோடு அமர்ந்து இருந்த மாணவிகள்.

எங்கள் கல்லூரியில் மாணவிகள் சில துறைகளில் மட்டுமே இருந்தார்கள். அதில் வணிகவியலும் கணக்கு துறையும் அடங்கும்.

உணர்ச்சிவசப்பட்ட மாணவர்களிடம்..

நண்பர்களே,  உங்கள் ஆவேசம் புரிகின்றது. கண்டிப்பாக இந்த போராட்டத்தில்  சேருகின்றோம் . ஆனாலும் எங்கள் துறையில் மாணவிகள் இருப்பதால் அவர்கள் பாதுகாப்பும் முக்கியம் அல்லவா. ஒரு நிமிடம் இருங்கள் என்று .. வகுப்பில் அமர்ந்து இருந்த நண்பர் ஒருவரை அழைத்தேன்.

இந்த குறுப்பிட்ட நண்பர், செல்வாக்கு உள்ளவர், அனைவரையும் அறிந்தவர். அவர் ஏதாவது சொன்னால் அதை மற்றவர்கள் பொதுவாக ஏற்று கொள்வார்கள் .அவரிடம்..

இலங்கை தமிழருக்கான போராட்டம்.  ஒரு காரியம் செய்யுங்கள். இதில் பங்குபெற விருப்பம் உள்ள மாணவர்களை மட்டும் அழைத்து கொண்டு இவர்களோடு சேர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று சற்று சத்தமாக சொல்லி விட்டேன்.

அவ்வளவு தான் ! மாணவிகளை தவிர அனைவரும் கிளம்பி விட்டனர்.

பேராசிரியரிடம்,

சார்.. நீங்கள் மாணவிகளை பார்த்து கொள்ளுங்கள், நாங்கள்  செல்கிறோம், கீழே நிலைமை சரியானதும் செய்தி அனுப்புகிறேன், மாணவிகளை வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் என்று  சொல்லி விட்டு வளியே வருவதற்குள், எங்கள் வகுப்பில் இருந்து சென்ற மாணவர்கள் அந்த போராட்டத்தின் தலைமையை ஏற்று கொண்டு இருந்தனர்.

என்னோடு படித்த உங்களில் அநேகர் அறிந்த ஒரு சக பதிவு மாணவரோ.. உணர்ச்சி பொங்கும் வாசகங்களை கவிதை வடிவில் எழுதி தர அது உடனடியாக அச்சாக மாற, போராட்டம் கல்லூரியில்  ஆரம்பித்து  கலெக்டர்  அலுவலகம் வரை நடந்தது.

மாணவர்களிடம் என்ன ஒற்றுமை. ஜாதி மத பேதமில்லா போராட்டம். ஒரே ஒரு நோக்கம்.
போராட்டம் முடிந்ததும் கல்லூரியின் அருகில் உள்ள "வுட்லண்ட்ஸ்" என்ற உணவகத்தில் (வுல்டண்ட்ஸ் என்றவுடன் எதோ பெரிய நட்சத்திர விடுதி என்று நினைத்து விடாதீர்கள்). மூங்கில் கட்டையினால் வடிவமைக்க பட்ட சிற்றுண்டி  சாலை, அதனால்  நாங்கள் வைத்த பெயர் வுட்லண்ட்ஸ்.

அனைவரிடம் இருந்த சில்லறையாய் எடுத்து ஆளுகொரு டி மற்றும் வடை உண்டு இருக்கையில் மணி கிட்ட தட்ட ஆறு.

அப்போது அங்கே வந்த கல்லூரி ஊழியர் ஒருவர்..

உங்கள் பேராசிரியர், மாணவிகளோடு இன்னும் வகுப்பில் இருகின்றார்.. என்று சொல்ல.

அட பாவி, இவர்களை மறந்து விட்டோமே.. என்று அடித்து பிடித்து கொண்டு ஓட ... அங்கே கோவமாக இருந்த அன்னபூரணி ... பத்ரகாளி குரலில்..

அட பாவி.. எப்போவோ முடிந்த போராட்டத்துக்கு எங்களை இத்தனை மணி நேரம் இங்கே உட்கார வைச்சிட்டீங்களே, "பழைய பகையை புதுப்பிச்சிட்ட" என்று பின்னாளில் வந்த நீலாம்பரி போல் கொக்கரிக்க ....

யார் இந்த உணர்சிகரமான போராட்ட வாக்கியங்களை - கவிதைகளை எழுதினார்கள் என்று காவல்துறை  "கோ"வத்தோடு  தேட...

அடே டே இது அல்லவா, மாணவர் வாழ்க்கை. ஐந்து வருட கல்லூரி வாழ்க்கையில் ஒரு முறை கூட யார் எந்த மதம், சாதி, குலம் , கோத்திரம் என்ற ஒரு பாகுபாடே இல்லை.

மதியம் எடுத்து வரும் உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு  பங்கு போட்டே உண்டோம். படித்தோம், சிரித்தோம், மகிழ்ந்தோம்,

...மொத்தத்தில் வாழ்ந்தோம்.

இப்படி இருந்த இந்த சுகமான மாணவர் வாழ்க்கை எப்படி சுமையாக மாறியது?

அன்று வந்ததும் அதே நிலா தானே..

பின் குறிப்பு :

என்ன விசு, உனக்கு ஈழத்து பாப்பிசையில் ரொம்ப ஈடு பாடுன்னு தெரியும், ஆனால், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் .. இவ்வளவு ஆர்ப்பாட்டம், போராட்டம்.

அது என்னமோ என்னை அறியாமலே ஒரு உணர்ச்சி நண்பரே. ஈழ தமிழர் என்றவுடன் என்னை அறியாமல் நான் பேச ஆரம்பித்துவிடுவேன்.

அப்படி இருந்த நான் .. இப்போது ஈழத்து பெட்டையை மணந்து ... வாயில்லா பூச்சாக பெட்டி பாம்பாக மாறிவிட்டேனே ..?

இன்று வந்ததும் அதே நிலாவா ...


4 கருத்துகள்:

  1. உங்களில் அநேகர் அறிந்த ஒரு சக பதிவு மாணவரோ..//

    தெரியுமே அந்த மாணவரை/பதிவரை! இங்கிலாந்து இளவரசர்..ஹிஹி தமிழில் என்று சொல்ல வந்தோம்...இப்போது "கோ" வென உணர்ச்சிப் பெருக்கில் கவிதைகள் எழுதும் ராஜாவைத் தெரியாது என்றால் என்னே தமிழுக்கு வந்த இழுக்கு! எங்களுக்கு வந்த வழுக்கு!

    ஹஹஹ பிகு....பெட்டிப் பாம்பு அங்கு சீற முடியாமல் போனாலும் இங்கு இந்தப் பெட்டியில் அவ்வப்போது தலையை நீட்டிச் சீறுகின்றதே!! அதுவே உமக்கு வாய்த்த வரம் அல்லவா!!!! ஹஹஹ்

    பதிலளிநீக்கு
  2. கல்லுரி நாட்களில் வெளியே சத்தம் வந்தால் கவனம் சிதறும்,. லாஜிக் இருக்கிறதோ இல்லையோ மற்றவர்கள் கோஷம் எழுப்பும் போது விஷயம் புரியாமலேயே கோவிந்தா போடுவதும் இனிமையான நாட்கள் ......அவை...

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான நினைவலைகளில் புதிரும் போட்டு யோசிக்க வைத்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு