சனி, 7 நவம்பர், 2015

அடுத்த தீபாவளிக்கு ....“உன் கண்ணில் நீர் வழிந்தால்…”

பள்ளி காலத்தின் இறுதி ஆண்டு ….என் அருமை தங்கை புற்றுநோயோடு நான்கு வருடங்கள் போராடி பின்னர் போராட சக்தி இல்லாமல் இறைவனடி சேர்ந்த வருடம்…
குடியரசு தினமான ஜன 26ம் தேதி பிறந்து  சுதந்திர நாளானா ஆகஸ்ட் 15ம் தேதி தன் 14ம் வயதில் உயிர் நீத்த நாள்.  அவள் பிரிந்து 4 மாதம் தானே ஆகின்றது. கிறிஸ்மஸ் எப்படி கொண்டாட முடியும்? வீட்டில் அலங்காரமும் இல்லை, தின்பண்டங்களும் இல்லை, சிரிப்பும் இல்லை மற்றும் வழக்கமாக இருக்கும் உறவினர் வருகையும் இல்லை.
சென்ற வருடம் இருந்த மகள் – தங்கை இப்போது இல்லையே என்று ஏங்கி அழுது கொண்டே வீட்டில் உள்ள அனைவரும்  டிசம்பர் 24ம் தேதி இரவு உறங்க சென்றோம்.

காலை ஒரு 7 மணி போல் இருக்கும். வழக்கம் போல் கிறிஸ்மஸ் அன்று எங்கள் வீட்டிற்கு வரும் நண்பன் பாலாஜி இந்த வருடமும் வந்தான். பாலாஜி ஒரு வசதியான வீட்டு பிள்ளை. அவர்கள் இல்லத்தில் சுத்த சைவம் தான் கடை பிடிப்பார்கள். ஒவ்வொரு கிறிஸ்மஸ் அன்றும்  எங்கள் வீட்டில் பாலாஜி இல்லத்திற்கு என்று முட்டை கூட போடாமல் ஒரு கேக் செய்து வைப்பார்கள்.
இல்லத்திற்கு வந்த பாலாஜி, என்னிடம்…
என்ன விசு.. வீட்டில் எல்லாரும் அப்படியே தூங்கி எழுந்து இருகின்றீர்கள்? அதிகாலை கோவிலுக்கு போகவில்லையா?
பாலாஜி…இந்த வருடம் நடந்தது தான் உனக்கு தெரியுமே…அதனால் நாங்கள் இந்த வருடம் கொண்டாடவில்லை. ஒருவேளை மனதின் நிம்மதிக்காக இன்று மாலை கோவிலுக்கு சென்றாலும் செல்வோம்.சாரி, பாலாஜி இந்த வருடம் வீட்டில் கேக் கூட செய்யவில்லை.
 அது பரவாயில்லை விசு,  சரி விசு, அப்பா – அம்மா உன்னை கையோடு அழைத்து வர சொன்னார்கள்.
ஏன் பாலாஜி ….
தெரியவில்லை விசு..கொஞ்சம் புறப்பட்டு வா.
பாலாஜியின் வீடு எங்கள் வீட்டில் இருந்து ஒரு 10 நிமிட நடைதான் …நானும் அவனும் நடந்து கொண்டு இருக்கையில் தான் நான் அவனை கவனித்தேன். பண்டிகைக்காக புது துணி அணிந்து இருந்தான்.
என்ன பாலாஜி.. அக்டோபரில் தான் தீபாவளிக்கு புது துணி வாங்கினாய்,
அதற்குள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு புது  துணியா?
விசு, உனக்கே தெரியும், நாங்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுவது இல்லை , இருந்தாலும் இந்த வருடம் என்னமோ தெரியவில்லை எங்கள் வீட்டில் கிறிஸ்மஸ்க்கு  புது துணி எடுத்து கொடுத்தார்கள்.
ரொம்ப நல்லா இருக்கு பாலாஜி. கொடுத்து வைச்சவன் நீ..
என்று பேசிக்கொண்டே பாலாஜி வீட்டை அடைந்தோம் …
பாலாஜியின் தந்தை ஊரிலேயே பெரிய வக்கீல். தினந்தோறும் காலை ஒரு 5:30 மணிபோல் எழுந்து அவர் வீட்டின் வாசலிலேயே நடந்து கொண்டு தன் இறைவனை துதி பாடி வணங்கி கொண்டு இருப்பார். இன்று தான் அவர் அலுவலகத்திற்கும் விடுமுறையாயிற்றே, அதனால் சிறிது தாமதமாக எழுந்து இருப்பாரோ என்னவோ, நாங்கள் அவர் இல்லத்தை அடைகையில் அவர் இன்னும் தன் வழிப்பாட்டில் இருந்தார். எங்கள் இருவரையும் பார்த்த அவர், தன் கண்களினாலே எங்களை சிறிது நேரம் அங்கே இருக்க சொன்னார்.
என்ன ஆயிற்றே தெரியவில்லை, சென்ற வாரம் பாலஜியோடு சேர்ந்து செய்த தவறு ஏதாவது தெரிய வந்து இருக்குமா? என்று நினைத்து கொண்டே காத்து இருந்தேன்.
மெரி கிறிஸ்மஸ் விசு.
மெரி கிறிஸ்மஸ் டு யு டூ மாமா (நான் அங்கிள் என்று கூப்பிடுவதை அவர் ஒருபோதும் விரும்பியது அல்ல)
என்ன விசு..? இந்த கிறிஸ்மஸ் கொண்டாடவில்லையா?
இல்ல மாமா.. தங்கச்சி பாப்பா…
டேய் தெரியுமடா…
பாலாஜி , உள்ளே அலமாரியில் ஒரு பை இருக்கு கொஞ்சம் எடுத்து கொண்டு வா..
இதோ அப்பா..
விசு.. உள்ள பாலாஜி ரூமிற்கு போய் அந்த பையில் இருப்பதை கொஞ்சம் கவனி..
எனக்கு ஒரே ஆச்சரியம். பையில் என்ன இருக்கும்? பாலாஜின் அறைக்கு சென்று அந்த பையை திறந்து பார்த்த நான் அழவே ஆரம்பித்து விட்டேன். பாலாஜி அணிந்து இருந்த அதே துணிமணிகளை அவன் அப்பா எனக்கும் வாங்கி வைத்து இருந்தார்.
கண்ணீரை துடைத்து கொண்டே… பாலாஜி, தங்கச்சி பாப்பா இப்பதான் …. நம்ப புது துணி போட்டா நல்லா இருக்காது பாலாஜி.
நீ அப்பாவிடமே சொல்லு விசு .
மாமா, ரொம்ப நன்றி மாமா.. இருந்தாலும்… இன்றைக்கு..
விசு… உன் தங்கச்சி இன்றைக்கு இருந்து இருந்தால் இதை உடுத்தி இருப்பியா  இல்லையா?
கண்டிப்பாக உடுத்தி கொண்டு இருப்பேன் …
அவள் தான் உன் மனதில் எப்போதும் இருக்காளே, இதை உடுத்திக்கோ, போ,
என்று அன்பு கட்டளையிட்டார் …
மறுபேச்சே இல்லாமல் அந்த புது துணியை அணிந்து கொண்டு நானும் பாலாஜியும் வெளியே வருகையில் மாமா எங்கள் இருவரிடமும் ஆளுக்கொரு ஐந்து ருபாய் கொடுத்து,
” போய் சந்தோசமா இருங்கடா “
என்று சொல்லி அனுப்ப … அருகில் இருந்த தியேட்டரில்… இருவரும் சேர்ந்து ” அலைகள் ஓய்வதில்லை” படத்தை பார்க்க சென்றோம்.
அதிலேயும் அதையே தான் சொன்னார்கள்.
கிறிஸ்மஸ் முடிந்தது. சில நாட்கள் கழிந்தது. அருகே இருந்த மைதானத்தில் நான், பாலாஜி மற்றும் சில நண்பர்கள் கிரிக்கெட் ஆடி கொண்டு இருக்கையில், பாலாஜி வீட்டில் வேலைசெய்யும் ஒரு நபர் அழுது கொண்டே எங்களை நோக்கி ஓடி வந்தார்..
பாலாஜி… உங்க அண்ணன் போய்ட்டாண்டா..
எங்கே போனான்?
என்று பாலாஜி விசாரிக்கையிலேயே எனக்கு புரிந்து விட்டது. கல்லூரியில் படிக்கும் பாலாஜியின் அண்ணனிற்கு எதோ விபத்து நடந்துள்ளது என்று.
பக்கத்துக்கு வீட்டில் உள்ள TV ஆண்டென்னாவை சரி செய்ய வீட்டின் மாடியில் மேல் சென்றவன் அங்கு இருந்து தடுக்கி விழுந்து தலையில் பலத்த அடிபட்டு இறந்து விட்டான்.
பாலாஜியின் வீட்டில் இருந்த அனைவரும் இடிந்து விட்டார்கள். கல்லூரி வயது பிள்ளையை பச்சை வாழை மரத்தை வெட்டி நடுவீட்டில் போட்டது போல் கிடத்தி வைத்தது இன்றும் மனதை நெருடுகின்றது.
கண்ணீர் துளியில் ஒரு விளக்கு ....இதுவும் கடந்து போகும் 
என்னடா வாழ்க்கை இது…என்று யோசிக்கையில்..
விசு.. உன் தங்கையின் இறப்பு எவ்வளவு வருத்தம் தந்து இருக்கும் என்பது இன்று தான் எனக்கு புரிகின்றது, உன்னுடைய இழப்பிற்கு நான் ஆறுதலா ஒண்ணுமே செய்யவில்லை விசு…. உன்னுடைய சோகத்தில் நான் பங்கேற்க்கவே இல்லையே விசு. இது இவ்வளவு பெரிய இழப்பு என்று எனக்கு அப்ப தெரியல விசு, என்னை மன்னிச்சிடு..
டேய், முட்டாள், அண்ணனை பறிகொடுத்து இருக்க, என்னடா பேசுற..போன ஆறு மாத காலத்தில் உன்னை விட எவன்டா என்னோடு அதிக நேரம் செலவு செய்து  இருப்பான்? இந்த நேரத்தில் நீ மட்டும் என் நண்பனா இருந்து இல்லாவிடில்.. யோசித்தே பார்க்க முடியவில்லை.
என்று சொல்லி கொண்டே இருவரும் கட்டி பிடித்து அழ …அந்நாளும் முடிந்தது.
காலம் ஒரு நல்ல வைத்தியர் தானே (Time is a Great Healer) நாட்கள் மெதுவா கடந்தது. அந்த வருடம் முழுவதும் நான் கொஞ்சம் கஞ்சமாக தான் இருந்தேன்.
 என்ன விசு, இப்ப எல்லாம் பையில் இருந்து காசை எடுக்க மாட்ற? ரொம்ப கஞ்சன் ஆயிட்ட விசு நீ…
அப்படி எல்லாம் இல்லை பாலாஜி..
இல்லை விசு.. போன வருஷம் நீ நல்லா செலவு பண்ண ஆளு..இப்ப திடீரென்று மாறிவிட்டாய்..
என்ன செய்வது? வர தீபாவளிக்கு நான் ரெண்டு பேன்ட் ரெண்டு சட்டை எடுக்கவேண்டும் என்பதை அவனுக்கு சொல்லவா முடியும்?
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்...Happy and Safe Deepaavali Everybody...

12 கருத்துகள்:

  1. உணர்ச்சி பொங்கும் நிகழ்வுகள்.

    பதிலளிநீக்கு
  2. மனிதனை நேசிக்கின்ற உறவுகள் சூழ வாழ்வது வரம் தான்....மனம் நெகிழ்வாகின்றது...

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள அய்யா,

    தாங்களின் பாசவலையில் சிக்கித் தவித்து விக்கி நிக்கிறேன்.
    ‘அலைகள் ஓய்வதில்லை’
    ‘நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
    இன்னும் அது தனிவதில்லை...
    எண்ணங்களும் மறைவதில்லை.......’

    த.ம.1

    பதிலளிநீக்கு
  4. அருமையான நிகழ்வுகளை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். மனதை கணக்கா வைத்த பதிவு!
    த ம 3

    பதிலளிநீக்கு
  5. மனதை நெகிழ வைத்த பதிவு.... ஆமாம் இது ஒரு மீள் பதிவுதானே?

    பதிலளிநீக்கு
  6. மனம் நெகிழவைக்கும் நிகழ்வு
    சொல்லிப் போனவிதமும்
    முடித்த விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. sendra varusham deepavaliyinpothu saravediyaana nakaichuvai pathivu.
    marakka mudiyaa ungal pathivukalil ondru.
    intha varudam depavalikku manaithai nekaza vaitha pathivu.

    ninaivil nirkkum ungal pathivukalil ithvum ondru.




    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு நட்பு! நெகிழ வைத்த பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. உங்களுக்கே உரிய நெகிழ்வான எழுத்துநடை மனதைப் பிழிகிறது.... - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  10. மனதைத் தொட்டது....ஏற்கனவே படித்தது என்றாலும்...

    பதிலளிநீக்கு