புதன், 5 ஆகஸ்ட், 2015

ஒரு கோப்பையிலே என் ....

விடுமுறை முடித்து ஆண்டவன் புண்ணியத்தில் பதினைந்து  நாட்கள் கழித்து இல்லத்தை வந்து சேர்ந்தோம். மணி இரவு 10, திங்கள். அடுத்த நாள் வேலைக்கு போக வேண்டும் என்ற நினைப்பு சற்று பேரு மூச்சை அளித்தாலும், போவதற்கு வேலை உள்ளதே என்ற ஒரு ஆறுதலோடு உறங்க சென்றோம்.

பல மணிநேர பயண களைப்பினால் நான் விட்ட குறட்டை யாருக்கும் கேட்க்கவில்லை.  காலையில் அம்மணியின் குரல்...


ஏங்க .. எழுந்து கிளம்புங்க..

இன்றைக்கு என்ன பிளான் ? பொருட்காட்சியா ? அரண்மனையா அல்ல, உறவினர் - நண்பர்கள் இல்லாமா ? எங்கே போறோம்.

ஒ.. இன்றைக்கா ? முதலில் பொருட்காட்சி போயிட்டு அதற்க்கு பிறகு உறவினர் வீட்டுக்கு போகலாம்..

நல்ல பிளான்..ஒரு அரை மணி நேரம் கொடு .. ரொம்ப தூக்கம்..

நினைப்பு தான் பிழைப்பை கெடுத்திச்சான். விடுமுறை எல்லாம் முடிந்து வீட்டை வந்து சேர்ந்த்தாச்சி ... சீக்கிரம் கிளம்புங்க..

ராசாத்திக்கள் மட்டும் தூங்குறாங்களே..

அவங்களுக்கு பள்ளிகூடம் ஆகஸ்ட் 24 தான்.. பாவம் விடுங்க.. ரெண்டு வார பயணத்தில் ரெண்டு பெரும் ரொம்பவே சோர்ந்துட்டாங்க..

உனக்கு புருஷனா இருப்பத்தோடு புள்ளையா இருந்தா நான் கூட இப்ப நல்லா தூங்கினு இருப்பேன். அது சரி.. என்ன காப்பி வாசனை புதுசா வித்தியாசமா இருக்கு ?

அதுவா. சுவிஸ் நாட்டில் வாங்கின காப்பி தூள், ரொம்ப நல்லா இருக்கு இல்ல..

ஆமா .. தேங்க்ஸ்..

அலுவலகத்திற்கு கிளம்பி வண்டியை எடுக்கும் வேளையில் ..

ஏங்க.. இந்தாங்க .. இதை உங்க ஆபிசில் உள்ள உணவு மேசையில் வைத்து விடுங்கள்.

மேலே போகும் முன் ஒரு சிறிய குறிப்பு. இங்கே எங்கள் அலுவலகத்தில்  சமையல் அரை ஒன்று உண்டு. அங்கே, குளிர்சாதன பெட்டி, மைக்ரோ ஓவன், காப்பி தேநீர்  செய்யும் சாதனம் மற்றும் அமர்ந்து  உண்ணுவதற்கான நாற்காலி - மேசை இருக்கும். வேலை செய்யும்  அனைவரும் இந்த அறையில் தம் தம் உணவை வைத்து கொள்ளலாம்.  பொதுவாக ஒருவர் உணவை மற்றொருவர் தொட (திருட) மாட்டோம். சில வேளைகளில் மற்றவர்களுக்கும் உணவு எடுத்து வருகையில் அந்த உணவின் மீது.. "அனைவருக்கும்" என்று எழுதி அந்த மேசையின் மேல் வைத்து விடுவோம்.

இது என்ன..?

ஜெர்மனியில் நான் வாங்கிய சாக்லேட்.ஐரோப்பாவின் சாக்லேட் என்றால் ஒரு தனி ருசி தானே .உங்க கூட வேலை செய்பவர்களுக்கு வாங்கினேன். எடுத்துன்னு போய் அங்கே வையுங்க.
ஐரோப்பாவின் சாக்லேட் .. அன்புடன் விசு...
பரவாயில்லையே... பல்லாயிரம் மைல் தாண்டி போனாலும் என் அலுவலகத்தை நினைத்து வாங்கி வந்து இருக்கின்றாயே  ...நன்றி..

தம் தம் அறையில் தூங்கி கொண்டு இருந்த ராசாத்திக்கள் இருவரையும் ஒரு பொறாமையோடு பார்த்து விட்டு .. வண்டியை கிளப்பினேன்.

12 நிமிட ஓட்டம். இடது பக்கம் மலைகள்.. வலது பக்கம் பசிபிக் பெருங்கடல். இரண்டையும் பார்த்து கொண்டே அலுவலகம் சென்றேன். கிட்ட தட்ட மூன்று வாரம் கழித்து செல்கிறேன் அல்லவா. மேசையின் மீது நிறைய தாள்கள். இன்னொரு பெரு மூச்சு...

நேராக உணவறை சென்று .. அந்த சாக்லட்டை மேசையில் (ஒரு சிறிய குறிப்போடு .. ஐரோப்பிய சாக்லேட் .. அன்புடன் விசு) விட்டு, ஒன்பது மணி ஆனதும் அருகில் உள்ள வங்கிக்கு சென்றேன்.

அலை பேசி அலறியது...

விஷ்... அலெக்ஸ் பேசுறேன் .. எங்கே இருக்க ?

அட பாவி அலெக்ஸ்.. மூன்று வாரம் கழித்து பேசுற.. முதலில் எப்படி இருக்க என்று கேட்க்காமல் ... எங்கே இருக்கன்னு. அருகில் வங்கியில் தான் .. என்ன விஷயம்...

உடனே கிளம்பி வா...

என்ன விஷயம்...

சீக்கிரம் வா..

வங்கி வேலையை பிறகு முடித்து கொள்ளலாம் என்று வண்டியை திரும்பவும் அலுவலகம் பக்கம் விட்டேன்.

என்ன காரியம் பண்ணிட்ட விஷ் ..?

என்னய்யா ?

அங்கே உணவறையில் "அன்புடன்" எதோ வைச்சு இருக்கியே..

ஆமா.. ஐரோப்பா சாக்லட்.இதுக்கு முன்னாலா சாப்பிட்டு இருக்கியா?

நான் சாப்பிட்டது இருக்கட்டும் .. நீ என்ன காரியம் பண்ணி இருக்க...?

என்னய்யா பண்ணேன் ..

அந்த சாக்லட் முழுக்க முழுக்க "ரம்" மற்றும் "விஸ்கி"யில் செய்யப்பட்டுள்ளது . ரெண்டு சாக்லேட் சாப்பிடுவதற்கு பதில் ஒரு அரை பாட்டில் அடிக்கலாம்.

அய்யய்யோ .. மன்னிக்கணும் .. என் மனைவி தான் தெரியாமல் இதை வாங்கிட்டாங்க..

அட பாவி.. நீங்க இந்தியன்ஸ் கூட நாங்க மெச்சிக்கன் போல தானா...

புரியல..

மெக்சிக்கோவில் நாங்க ஆம்பிளைகள் ஏதாவது முட்டாள்தனமான தப்பு பண்ணால் .. அதை அழகா எங்க பொண்டாட்டி மேல போட்டுடுவோம்..

அட பாவி அலெக்ஸ்.. இதை உண்மையாகவே மனைவி தான் வாங்கினார்கள். சரி.. இது ஒரு பெரிய காரியம்ன்னு இதுக்கு போய் தலை போற மாதிரி உடனே வான்னு.. கொஞ்சம் பயந்துட்டேன்.

கண்டிப்பாக பயப்படவேண்டிய காரியம் தான் விஷ்.. நம்ம ஆபிசில் 16 -18 வயது பிள்ளைகள் கோடை விடுமுறைக்காக வேலைக்கு வராங்க. அவர்களில் யாரவது இதை சாப்பிட்டு ஏதாவது விபரீதம் என்றால்...

என்ன சொல்ற..?

விஷ்.. 21 வயதிற்கும் கீழே இருப்பவர்களுக்கு மது கொடுத்தால் நிறுவனத்தை மூடிவிட்டு நம்ம உள்ள போக வேண்டியது தான்.

இப்ப நினைவிற்கு வருது அலெக்ஸ். நேரத்திற்கு வந்து காப்பாத்தின.

ஒரு சிறிய சாக்லட் விஷயம்.. இங்கே இவ்வளவு பெரிதாக எடுத்து கொள்கின்றார்கள். அங்கே .. .பள்ளி - ஆலயம் - கோயில் - மசூதி- நூலகம் -கல்லூரி என்று அணைத்து இடத்திலும் வைத்து தாக்கி கொண்டு இருக்கின்றார்களே..

நெஞ்சு பொறுக்குதில்லையே..

www.visuawesome.com



2 கருத்துகள்:

  1. எப்படி மிஸ் பண்ணினீர்கள் நண்பரே! எல்லா சாக்கலேட்டிலும் அதன் இங்கீரீடியன்ட்ஸ் எழுதி இருக்குமே! அங்கெல்லாம்... சரி அத விடுங்க...இப்ப எங்களுக்குப் பயமா போச்சு...இங்க மதுக்கடை எல்லாம் மூடச் சொல்லி போராட்டம்....ஆகஸ்ட் 15 ஆம் தேதி முகூர்த்தம் பார்த்திருக்காங்களாம்...மதுக்கடைகளை மூடவேண்டும் என்று அறிவிக்க...காற்றோடு.....காதோடு வந்த செய்தி....

    இப்ப இங்க உள்ளவங்க டாஸ்மாக்குல "குடி"யிருந்தவங்க எல்லாம் இந்த மாதிரி சாக்கலேட் சாப்பிட ஆரம்பிச்சுருவாங்களோ? இங்கேயும் தான் கிடைக்குதெ..கள்ளச் சாராயம் போல இதுவும் பெருகிடுமோ....ஹஹஹஹ்

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் ஜெர்ம்னனிய மொழியில் எழுதி இருந்தது. கவனிக்க்காமல் விட்டு விட்டோம்.

    பதிலளிநீக்கு