வியாழன், 30 அக்டோபர், 2014

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்....



டாடி..நாளைக்கு என்னுடைய போட்டி எங்கே...

கேட்டு கொண்டே வந்தாள் என் இரண்டாவது மகள். அவள்  7 வயதில் இருந்தே கோல்ப் (Golf) ஆடுபவள்.  வாரத்திற்கு 4 நாட்கள் பயிற்ச்சிக்கு - இதற்க்கான வகுப்பிற்கும் சென்று வார இறுதியில் பல போட்டியில் பங்கேற்பவள். 

சிறு வயதில் இருந்தே  வெளியே ஆடும் விளையாட்டிற்கு அடிமை  (addicted to outdoor sports). எனக்கும் விளையாட்டு மிகவும் பிடித்த காரியம். சிறிய வயதில் நிறைய ஆட்டம், இப்போது பிள்ளைகள் ஆடுவதை ரசித்து பார்ப்பேன்.
என் கண்ணின் மணி 


நாளைக்கா? இங்கே இருந்து ஒரு 90 கிலோமீட்டர் மகள்.

என்னுடைய ஆரம்ப நேரம் (Tee time) எப்போது?

7:25க்கு ராசாத்தி. நாம் ஒரு 5 மணிக்கு கிளம்பினால் போதும். போகும் வழியில் காலை உணவை முடித்து கொண்டு அந்த மைதானத்தை ஓர் 6:30 போல் போய் சேருவோம். அங்கே உன் பெயர்  (Registration)  அவர்களிடம் சரி பார்த்து விட்டு ஒரு 45 நிமிடம் ப்ராக்டிஸ். பிறகு உன்னுடைய ஆட்ட நேரம் ஆரம்பிக்கும்.
வானிலை  நிலைமை எப்படி டாடி. 

நாளைக்கு நல்ல நாள் மகள். மழையும் இல்லை- அதிக வெயிலும் இல்லை. ஆனால் கொஞ்சம் காற்றாக இருக்கும்  என்று போட்டு இருக்கின்றது. அதற்க்கு ஏற்றார் போல் உடை அணித்து கொள்.

ஓகே.. குட் நைட் டாடி.

மகள், நீயே உன் தொலை பேசியில் அலாரம் வைத்து என்னை எழுப்பு . 4:30 மணி போல் எழுந்தால் தான் சரியாக இருக்கும், குட் நைட் மகள்.

அவள் தூங்க போன பின், அவளின் "கோல்ப்" பையை சரிப்பார்த்து அதில் பந்து-கையுறை-தூரம் பார்க்கும் கருவி- பந்து குறிக்கும் சிறிய பொத்தான், மற்றும் அவளின் காலனி எல்லாம் சரி பார்த்து தூங்க போனேன்.

காலையில் எழுப்பினாள்  அடித்து பிடித்து கிளம்பி எல்லாவற்றையும் காரில் போட்டு கொண்டு பயணத்தை ஆரம்பித்தோம். 

மகள், உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும், நீ கோவித்து கொள்ள கூடாது.
என்ன டாடி?

கடைசியாக நீ ஆடிய இரண்டு போட்டிகளிலும் இரண்டாவதாக வந்தாய்.
ஆமா டாடி,  அந்த ரெண்டு போட்டிகளிலும் முதலில் வந்த பெண்கள் நன்றாக ஆடினார்கள். 

கண்டிப்பாக, ஆனாலும் நீ இன்னும் கொஞ்சம் கவனித்து ஆடு மகள். உன்னை முந்திய இந்த இருவரையும் இதற்க்கு  முன்னாள் நீ ஜெயித்து  இருகின்றாயே? கொஞ்சம் நிதானித்து கவனித்து ஆடு.

சரி டாடி. முயற்சி பண்றேன்.


வழியில் உள்ள  ஒரு உணவகத்தில் உண்டு விட்டு, மீண்டும் பயணத்தை ஆரம்பித்தோம்.  அங்கு போய்சேர்ந்தவுடன் வழக்கமான பதிவு முறைகளை முடித்து விட்டு கொஞ்சம் நேரம் "ப்ராக்டிஸ்" பண்ண சென்று விட்டாள். 

அங்கே போட்டிக்கு வந்தவர்களில் அதிகம் பேர் கொரியா நாட்டை சேர்ந்தவர்கள். நாம் அமெரிக்காவில் வாழ்கிறோமா? இல்லை கொரியாவில் வாழ்கின்றோமா என்று கேட்க்கும் அளவிற்கு அந்நாட்டை சேர்ந்தவர்கள். இங்கே கொரியா நாட்டை சேர்ந்த தாய் மார்களுக்கு "புலி தாய்" (Tiger Mom) என்ற புனை பெயர் உண்டு. பிள்ளைகளை சீராக வளர்ப்பதில் சிறந்தவர்கள்.

7:15 போல் மகளும் அவளோடு போட்டி போட்டு விளையாடும் மற்ற இரண்டு பெண்களும் வந்தார்கள். போட்டியில் நிறைய பேர் கலந்து கொண்டாலும், மூன்று அல்லது நான்கு பேரை ஒன்றாக அனுப்புவார்கள்.  பெற்றோர்கள் அவர்கள் ஆடுவதை 20 மீட்டர்க்கு பின்னே நின்று பார்க்கலாம். ஆனால் பேசவோ கை சைகையோ காட்டக்கூடாது. அப்படி செய்தோம் என்றால் பிள்ளைகள் ஆட்டத்தில் இருந்து நீக்க படுவார்கள். ஏதாவது அவசரம் (மருத்துவ உதவி-தண்ணீர் )   என்றால், நம் பிள்ளையோடு நாம் பேசும் போது அருகில் குறைந்த பட்சம்  இன்னொரு பிள்ளையின் பெற்றோரோ அல்ல இன்னோர் விளையாடும் பிள்ளையோ இருக்க வேண்டும்.

நான் சிரித்து  கொண்டே... நீ மட்டும் இன்று மீண்டும் இரண்டாவதாக வந்தால் உன்னை இன்று இங்கேயே விட்டு விட்டு போவேன், வீட்டிற்கு அழைத்து செல்ல மாட்டேன்  என்று செல்லமாக   மிரட்ட, அவளோ பதிலாக .. நோ ப்ராப்ளம் டாடி. நீங்கள் என்னை கண்டிப்பாக வீட்டிற்கு அழைத்து செல்வீர்கள், ஐ வில் ட்ரை மை பெஸ்ட். 

ஓகே, ஆல் தி பெஸ்ட். ப்ளே வெல்.


தேங்க் யு டாடி. 



 ஒவ்வொரு பிள்ளையும் தன் ஆட்டத்தை துவங்கும் போது அங்கே அறிவிப்பாளர் பிள்ளையின் ஊரையும் பெயரையும் உரக்க சொல்லி அறிமுக படுத்தி வைப்பார். சுற்றும் முற்றும் உள்ள அனைவரின் கவனமும் அவர்கள் மேல் இருப்பதால், இந்த வேளை தான் ஆட்டத்திலேயே மிகவும் கடினமான நேரம் என்று அனைத்து பிள்ளைகளும் கூறுவார்கள். ஆட்டம் துவங்கியவுடன், பிள்ளைகள் ஒவ்வொருவரும் தன் தன் வண்டியை தள்ளி கொண்டு ( இந்த வண்டி அப்படியே நம்ம ஊர் நொங்கு வண்டி போல் தான் இருக்கும், அதே மாடலில் செய்யப்பட்டது) செல்வார்கள். மொத்த ஆட்டம் முடிய 5-6 மணி நேரம் ஆகும். பாதி நேரத்தில் போட்டி அமைப்பாளர்களே உணவு அளித்து விடுவார்கள்.  

(ஆட்டம் துவங்குகையில் அழைப்பு.. இதை தான் பிள்ளைகள் வயிறு கலங்கும் என்பார்கள்)

"கோல்ப்" ஒரு வித்தியாசமான ஆட்டம். இந்த ஆட்டத்தில் யாரும் யாரையும் எதிர்த்து ஆடுவதில்லை.  (நம்ம ஊரில் சிறிய வயதில் கோலி ஆடுவோம் அல்லவா. ஒரு சதுரம் போட்டு தூரத்தில் இருந்து கோலி உருட்டி விட்டு யார் குறைந்த அளவு உருட்டலில் இலக்கை அடைகின்றனரோ அவர் தான் வெற்றி .. அதே கான்செப்ட்). மற்றவர்கள் எப்படி ஆடினார்கள்  என்பதை முற்றியும் கவனிக்காமல் நம் ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் நன்றாக ஆடும் வாய்ப்பு உண்டு.  

(பார்க்க நொங்கு வண்டி மாதிரியே இல்ல? )


மகள் ஆட்டத்தை துவங்க நானும் மற்ற பெற்றோர்களும் அவர்களை பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம் . நடுவில் அங்கே அங்கே பெற்றோர்கள் ஒருவர்கொருவர் பேசி கொண்டும் பிள்ளைகளின் படிப்பு மற்றும் ஊர் நிலவரம் பற்றி பேசி  கொண்டே போவோம்,. 5-6 மணி நேரம் ஆயிற்றே, வேறு என்ன செய்வது?

ஆட்டம் முடிந்தது. என்னை பொறுத்த வரையில் நன்றாக தான் ஆடினாள். அனால் அவளிற்கு முன்னாலும் பின்னாலும் ஆடிய மற்ற பிள்ளைகள் எவ்வாறு ஆடினார்கள் என்று தெரியாது. ஆட்டம் முடிந்தவுடன் அங்கே அவர்களுக்கென்ற ஒதுக்க பட்ட இடத்தில அமர்ந்து தங்களின் எண்ணிக்கையை சரி பார்த்து கொள்வார்கள்.  இந்த ஆட்டத்தில் பொய் சொல்லி வெற்றி பெறுவது மிக எளிது. ஆனாலும் சின்ன வயதில் இருந்தே பொய் சொல்ல கூடாது (integrity) ரொம்ப முக்கியம் என்று சொல்லி கொடுக்கும் ஆட்டம் தான் இது. இவர்கள் எண்ணிக்கை சரி பார்க்கும் நேரத்தில் அங்கே ஒரு பலகை கண்டு மகிழ்ந்தேன். இதோ நீங்களும் பாருங்களேன்.



கணக்கு வழக்கு எல்லாவற்றையும் முடித்து விட்டு சிரித்து கொண்டே என்னை நோக்கி  ஒடி வந்தாள்.

டாடி.. நான் தான் சொன்னேனே, நீங்க கண்டிப்பாக என்னை இங்கே விட்டு விட்டு போக மாட்டீர்கள் என்று.

அப்படி சொல்லு என்  ராசாத்தி, முதலாவதாக வந்தியா? 

இல்ல டாடி, நான் மூணாவதாக தான் வந்தேன்.

அப்ப எப்படி நான் உன்னை வீட்டிற்கு கண்டிப்பாக அழைத்து செல்வேன் என்று சொன்னாய்.?

டாடி, பேச்சை மாற்ற கூடாது. நீங்க என்ன சொன்னீங்க ? நான் மீண்டும் ரெண்டாவதாக வரகூடாது என்று தான் சொன்னீர்கள், நான் தான் இப்ப மூணாவது வந்தேனே.. 

 நான் தான் இப்ப மூணாவது வந்தேனே.. 

அதுமட்டும் இல்லாமல் பேச்சு பேச்சா தான் இருக்கவேண்டும் என்று போட்டாளே ஒரு  போடு. 

.

 (பரிசளிப்பு நேரம்)

"செய்வன திருந்த செய் மட்டும் அல்ல.... சொல்வதையும் திருந்த சொல்" என்ற சொல்லை அன்று தான் நான் அறிந்தேன்.


சிரித்து கொண்டே இருவரும் காரை நோக்கி சென்றோம். 

www.visuawesome.com

Pictures are definitely mine, not borrowed from google for a change. They were taken at  different tournaments, though)

7 கருத்துகள்:

  1. ///பேச்சு பேச்சா தான் இருக்கவேண்டும் என்று போட்டாளே ஒரு போடு. ///

    அப்படி போடு அருவாள...........எங்ககிட்டேயா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னத்த சொல்வேன் .. மாது. ஒரு மனைவி - ரெண்டு ராச்திக்கள். நம்ம ஆட்சி தான் அந்த காலத்து மன்மோகன் ஆட்சி போல் கூட்டணி தர்மத்தில் இருக்கு.

      நீக்கு
  2. "செய்வன திருந்த செய் மட்டும் அல்ல... சொல்வதையும் திருந்த சொல்" என்ற கருத்தை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் மகள் உங்களை விட புத்திசாலி போலிருக்கே! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தடி சாக்கில் எனக்கு புத்தி மட்டுன்னு சொல்றமாதிரி இருக்கே, வருகைக்கு நன்றி தளிர்

      நீக்கு
  4. மகளின் சுட்டித்தனம் ரசிக்கவைத்தது..!

    பதிலளிநீக்கு