சனி, 18 அக்டோபர், 2014

நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,.. வாழ்ந்தே தீருவோம்!

நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,.. வாழ்ந்தே தீருவோம்!

இந்த பாடலில் வருவது போல் சிவாஜி-முத்துராமன்-கோபாலகிருஷ்ணன் பாணியில் மும்பை நகரில் நான்,அருமை நண்பன் டொமினிக், என் ஒன்று விட்ட சகோ ரமேஷ், வாழ்ந்து கொண்டு இருந்த காலத்தில் நடந்த சில காரியங்கள்...



அருமை நண்பன் டொமினிக் எங்களை விட்டு போய் வருடங்கள் 4 ஆனாலும் , அவன் நினைவுகளும், அவனோடு செய்த அந்த நாட்களின் அட்டகாசங்களும், நெஞ்சில் என்றும் நிற்கின்றன. You have gone too soon, Bro. RIP, Doms...


யாம் அறிந்ததிலே இவனை (டொமினிக்)போல் கலாய்ப்பவர் எவரும் இல்லை.


இது ஓர் மீள் பதிவு, என் நண்பன் டொமினிக்கின், நகைச்சுச்வை உணர்விற்கு சமர்ப்பணம்.


நிற வெறி, இன வெறி, சரி! இது என்ன உண வெறி?


மும்பை நகர வாழ்க்கை, நாட்கள் நொடிகள் போல ஓடும் நாட்கள் அவை. "மட்டுங்கா" என்னும் தமிழர் வாழ் பகுதியில் நான் நண்பன் டொமினிக் மற்றும் ரமேஷ் ஒரு சிறு அறையில் வாழ்ந்து வந்தோம். நீங்கள் எல்லாம் அறிந்தது போல் நான் ஒரு கணக்கு பிள்ளை, ரமேஷ் ஒரு தொழிலதிபர், டொமினிக் ஒரு வங்கி அதிகாரி. கஷ்டமோ நஷ்டமோ ஒருவருக்கு ஒருவர்  தான் எல்லாமே. பெற்றோர் மற்றோர் எல்லாம் தமிழ்நாட்டில், என்றாவது ஒரு நாள் கடிதம் வரும். தொலை பேசி மிகவும் அபூர்வம். தினமும் காலை எழுந்து கிளம்பி மூன்று பெறும் அருகில் உள்ள ஏதாவது ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்து கொண்டு வேலைக்கு கிளம்புவோம். அதோடு, வேலை முடித்து மாலை 6 மணி போல் சந்திப்போம். இவ்வாறாக நாட்கள் போய் கொண்டு இருக்கையில், திடீர் என்று ஒரு நாள் நண்பன் டொமினிக் ஒரு கடிதம் எடுத்து வந்தான். அதில் உனக்கு திருமணம் செய்ய போகிறோம், உடனடியாக  ஒரு குறிப்பிட்ட விலாசத்தில் சென்று அந்த பெண்ணை பார்த்து வரும்படி எழுதி இருந்தது.  உடனடியாக, நான், ரமேஷ், டோமொனிக் "அமர் அக்பர் அந்தோனி" போல பெண் பார்க்க புனே கிளம்பினோம். இரவு முழுதும் ரயில் பயணம் செய்து காலை ஒரு 7 மணி போல் புனே சென்று அடைந்தோம்.


அங்கே நடந்தது தான் இந்த உண வெறி நிகழ்ச்சி.அந்த புனே நகரில் எங்களுக்கு எதுவும் தெரியாது. அருகில் இருந்த உணவகத்திற்கு சென்று காலை உணவிற்காக அமர்ந்தோம். அங்கே வந்த சர்வர் எங்கள் மூவரிடமும் ஒன்றுமே கேட்க்காமல் நேராக ஆளுக்கு நாலு இட்லியும் சாம்பாரும் சட்டினியும் பரிமாற்ற ஆரம்பித்தான். எங்கள் மூவரில் நண்பன் டொமினிக் சிறிது கோபக்காரன். அந்த சர்வரை அழைத்து, ஹிந்தியில், நாங்கள் எதுவுமே கேட்கவே இல்லையே, எங்களை கேட்காமல் ஏன் இட்லியை வைத்தாய் என்றான். அவன் அதற்கு பதிலாக சத்தமாக சிரித்து, நீங்கள் மூவரும் "மதராசி தானே" என்றான். ஆம் என்றோம். பிறகு இட்லி சாப்பிடாமல் உனக்கு வேற என்ன வேண்டும் என்றான். டொமினிக் சிறிது கோபமாக நாங்கள் "மதராசி" என்ற ஒரே காரணத்திற்க்காக இட்லி தான் சாப்பிடலாம் என்று நீ எப்படி நினைக்கலாம் என்று கேட்டான்.  அங்கே இருந்த மற்ற மாநில மக்கள் அனைவரும் எங்களை ஏதோ "இட்லி சாப்பிடும் வேற்று கிரக மனிதர்கள்" போல் பார்க்க ஆரம்பித்தார்கள்.



இவ்வளவு நேரமாக இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த கல்லா பெட்டி பெரியவர் எங்கள் அருகில் வந்து, "ஹிந்தியில்" மன்னிக்க வேண்டும் , அவன் செய்தது தவறு தான், ஆனாலும், நீங்கள் உள்ளே நுழைந்தவுடன் நானும் சரி, சர்வரும் சரி, ஏன் இங்கே உள்ள மற்ற எல்லோரும் நீங்கள் மூவரும் இட்லிதான் கேட்ப்பீர்கள் என்று பேசி கொண்டோம் என்றார். அவர் இந்த வார்த்தைகளை சொல்லியவுடனே அருகில் இருந்த அனைவரும் தம் தம் தலையை ஆட்டி வழி மொழிந்தனர். இதை பார்த்தவுடன் எனக்கு கெட்ட கோபம் வந்து விட்டது. எனக்கே கோபம் என்றால் டொமினிக் நிலைமையை யோசித்து பாருங்கள்.

அந்த சர்வரை சத்தம் போட்டு கூப்பிட்டு உடனே இந்த இட்லியை எங்கள் மேசையில் இருந்து அகற்றுமாறு ஆணையிட்டான். பூப்போல் இருந்த இட்லி எங்கள் மேசையை விட்டு பிரியும் போது எனக்கு உள்ளே ஒரு துக்கம். சில நிமிடங்கள் கழித்து அந்த "கல்லா பெட்டி பெரியவர்"  வேறு ஒரு சர்வரை எங்கள் மேசைக்கு அனுப்பினார். அந்த சர்வர் எங்கள் அருகில் வந்து என்ன சாப்பிட போறீர்கள் என்று கேட்டவுடன் நானும் ரமேசும் ஒன்றாக சேர்ந்து ஆளுக்கு நாலு இட்லி, கூடவே சாம்பார், சட்டினி என்றோம். இதை கேட்டவுடன் மற்றவர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

இன்று தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது, அந்நாள் வரை இட்லி என்பது ஒரு "நல்ல உணவு. ருசியான உணவு" என்று எண்ணிக்கொண்டு இருந்த நான் அன்று தான், அடடே இட்லிக்கும் தமிழனுக்கும் ஏதோ ஒரு விட்ட குறை தொட்ட குறை போல் உள்ளது. தமிழனுக்கு உடல் ரீதியாக, மன  ரீதியாக ஏதோ பாதிப்பு. அதை ஏதோ ஒரு விதத்தில் இட்லி நிவர்த்தி செய்கிறது என்ற முடிவிற்கு வந்தேன். அந்த சர்வர் டொமினிகிடம் நீ ஏதும் சாப்பிடவில்லையா என்றான். டொமினிக் உடனடியாக இட்லியை தவிர வேறு என்ன உள்ளது என்றான். அதற்கு அவன் "தோசை" என்று சொல்ல டொமினிக் இரண்டு தோசை ஆர்டர் செய்தான்.  தோசை வரும் முன் எங்கள் இட்லி வந்து விட்டது. அதை பார்த்த டொமினிக், அடடே என்னாப்பா பூ போல் இருக்கிறதே, எனக்கு ஒரு உதவி செய், ஒரு நாலு இட்லி பார்சல் வாங்கி கொள், நான் வெளியே போய் சாப்பிட்டு கொள்கிறேன் என்றான். சற்று நேரம் கழித்து தோசை வந்தது. ஒரு தோசை எவ்வளவு என்று டொமினிக் கேட்டான் அதற்கு 2:50 என்று பதில் வந்தது. சரி எனக்கு ஒரு "முட்டை தோசை" கொடு என்றான். அந்த சர்வர் அதற்கு "முட்டை தோசை" ஒன்றுக்கு 4 ருபீஸ் என்றான். என்னப்பா? ஒரு முட்டை 75 பைசாதானே சாதா தோசை 2:50 அதற்கு மேல் நீ முட்டைக்கான 75 பைசாவை சேர்த்தாலும் 3:25 தானே இதற்க்கு ஏன் 4 ருப்பீஸ் என்று சொல்ல மீண்டும் ஒரு விவாதம் தொடங்கியது.

கடைசியாக அந்த தோசை சுட்டு கொண்டு இருந்த மலையாள நண்பர் "அந்த ஏழு நாட்கள்"  பாக்யராஜ் பாணியில், வேண்டும் என்றால் சாப்பிடு, இல்லாவிடில் நடையை கட்டு, இங்கே ஏன் தேவையற்ற விவாதம் என்றார்.  ஒருவேளையாக சாப்பிட்டு முடித்து பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்தோம். 

பெண் வீட்டின் உள்நுழையும் முன்பே அங்கு வந்த  தரகர் எங்கள் மூவரை பார்த்தவுடன் பேய் அறைந்தவர்  போல் மாறினார் (அந்த பேய் அறைந்த கதையை மற்றொரு நாள் சொல்லுகிறேன்) , பெண் பார்க்க வந்துள்ளாய், இதற்க்கு தனியாக வர வேண்டும் என்று தெரியாதா? ஏன் நண்பர்களை அழைத்துவந்தாய் என்று டொமினிகை கடிந்து கொண்டார். இவர் ஏன் இப்படி சொல்லுகின்றார் என்று புரியாத டொமினிக்,  நண்பர்கள் ஏன் வரகூடாது என்றான். அதற்கு அந்த தரகர், அந்த பெண் இவர்கள் ரெண்டு பேரில் ஒருவரின் மேல் ஆசை பட்டு விட்டால் உன் கதி அதோ கதி என்றார். 

அதற்கு டொமினிக், எங்கள் மூவரில் அந்த பெண் யாரை விரும்பி திருமணம் ஆனாலும் உம்முடைய பீஸ் வந்து விடும் என்று சொன்னான். அதை கேட்டவுடன் அந்த தரகர் அப்படியானால் இன்னும் ரெண்டு பேரை அழைத்து வந்து இருக்கலாமே என்றார். இந்த பேச்சை கேட்டவுடன் நானும் ரமேசும் மெதுவாக அங்கே இருந்தது வெட்டி கொண்டோம். நீ பெண் பார்த்துவிட்டு வா,  நாம் ஒரு ரெண்டு மணி நேரம் கழித்து அந்த இட்லி கடையில் சந்திப்போம் என்று சொல்லி கிளம்பினோம்.

நாங்கள் அங்கு இருந்து கிளம்பும் போது டொமினிக் மறக்காமல் அந்த இட்லி பார்சலை வாங்கி  கொண்டான். நாங்கள் இருவரும் அங்கு இருந்து கிளம்பி பொடி நடையாக அந்த கடையை வந்து சேர்ந்து அதே மேசையில் அமர, அதே சர்வர் அதே ஸ்டைலில் எங்கள் இருவரிடம் எதுவும் கேட்காமல் ஆளுக்கு நாலு இட்லி வைத்தான். மனதில் சிறித்து கொண்டே நாங்கள் உண்டு கொண்டு இருக்கையில் நண்பன் டொமினிக் ஆட்டோவில் வந்து இறங்கினான். 

உள்ளே வந்த அவன் அந்த மலையாள நண்பரிடம், ஒரு தோசை என்று சொல்லி அவர் அருகிலேயே நின்று கொண்டு அவர் சுடும் அழகை பார்த்து கொண்டு இருக்கும் போதே நான் நினைத்தது நடந்து விட்டது. அவர் தோசையை திருப்பும் வேளையில் டொமினிக் தன சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு முட்டையை எடுத்து உடைத்து அந்த தோசை மேல் ஊற்றி "நீ திருப்பி மட்டும் போட்டு கொடு" என்று சொன்னவுடன் அந்த தோசை சுடும் மலையாள நண்பனும் பேய் அறைந்ததை போல் ஆகிவிட்டான்.


பின் குறிப்பு : பேய் அறைந்த கதையை பின் ஒரு நாள் கண்டிப்பாக சொல்லுகிறேன், பொறுமை ப்ளீஸ். 

தொடர்ச்சி .....இது என்ன உணவெறி?http://vishcornelius.blogspot.com/2014/07/blog-post_7217.html



அதை படிக்க இங்கே சொடுக்கவும்.


www.visuawesome.com

5 கருத்துகள்:

  1. ஹாஹாஹ் செம உணவெறி தான்....அதெல்லாம் சரி அந்தப் பொண்ணு அவங்க ஓகே சொன்னாங்களா ?

    அந்தப் பேயறைந்த கதைக்கு பொறுதிருக்கின்றோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பொண்ணு இவருக்கு என்ன சொல்லியது என்பதை தான் மேலே பதிவில் ( கடைசி வரியில்) தொடர்ச்சியில் எழுத்து இருக்கின்றேன். கொஞ்சம் அங்கே போய் படிச்சு பாருங்க. வருகைக்கு நன்றி.
      பேய் அறிந்த கதையை ஒவ்வொரு முறையும் எழுத ஆரம்பிபேன், நடுவில் பயத்தில் விட்டு விட்டுவிடுஎன். என்றாவது ஒரு நாள்...

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே.!

    அருமையாக மலரும் நினைவுகளை சொல்லியிருக்கிறீர்கள்.! ரசித்துப் படித்தேன்.!

    என் வலைத்தளம் வந்து படித்து கருத்திட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. haahaahaa unga friend egg aa thosa kalla uthiyathu sema ethirpaarkkala...

    enga uru kaaranga ellam tamilarkalai sambar batch solluvanga ennu theriyala sir.
    aana ungaloda idli pathivu padicha piraku.
    enga uru kaarangalum tamilarkalai sambar batch solluratha partha


    tamilarkal sambar taan athikama idlikku uthi saapiduvangalonu thonuthu sir.

    ungalin pathivu rasichom sir.
    thodarungal

    பதிலளிநீக்கு
  4. ////அவர் தோசையை திருப்பும் வேளையில் டொமினிக் தன சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு முட்டையை எடுத்து உடைத்து அந்த தோசை மேல் ஊற்றி "நீ திருப்பி மட்டும் போட்டு கொடு"/////

    உங்கள் நண்பர் டொமினிக் உண்மையிலேயே கலாய்ச்சல் பார்ட்டிதான்

    பதிலளிநீக்கு