திங்கள், 27 அக்டோபர், 2014

"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து", சுட்டு வைத்த தோசை!

விசு, சூப்பர் விசு, இப்ப தான் மணிரத்தினத்தின் "ரோஜா' படம் பார்த்தேன். இந்தியாவில் கிட்ட தட்ட ஒரு வருஷத்துக்கு மேல ரிலிஸ் ஆனாலும், இப்ப தான் இங்கே வீடியோ கிடைத்தது. இந்த வீடியோ கசட் இன்னும் 24 மணி நேரம் நம்மிடம் தான் இருக்கும். இன்று இரவு இன்னொரு முறை பார்க்கலாம், என்ன சொல்லுற?

வெங்கட்,,, மாப்பு. இன்றைக்கு நான் கொஞ்சம்  பிசி. மாணவர்களின் தேர்வுதாள்களை (நானும் ஒரு காலத்தில் வாத்தியாக இருந்தவன் தான், பாவம் என்னிடம் படித்த மாணவ - மாணவியர்) , இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம்.


விசு, மணி ரத்தினம் படம் விசு..

டேய், மணிரத்தினதோட சத்திரியன் - தளபதியே நான் இன்னும் பார்க்கவில்லை. அதுக்குள்ள இதுக்கென அவசரம்.

எனக்கு தெரிஞ்ச தமிழ் ஆட்களிலே மணிரத்தினம் படத்த பத்தி பரபரப்பா பேசாத ஆளு நீ தான் விசு.

வெங்கட், நீ படத்த ஆரம்பி, நான் இந்த தாள்களை திருத்தி கொண்டே முடிந்தால் பார்க்கின்றேன்.

ஓகே விசு, சமையல் இன்றைக்கு யார்?  நீயா நானா (ஒரு வேலை அந்த விஜய் TV தலைப்பு இங்கே இருந்து தான் சுட்டு இருப்பார்களோ).

நான் தான் வெங்கட், எல்லாம் தயார்.

அது என்ன விசு? மத்த எல்லா காரியத்திலேயும் இல்லாத அக்கறைய சமையலில் காட்டுகின்றாய்?

வெங்கட், சமையல் ஒரு கலை டா.. அதை ரசித்து செய்யவேண்டும்.

(நான் ஒரு ஆசிரியர், வெங்கட் டாக்டர். அருகில் இருந்த மக்கள் மத்தியில் இருவருக்கும் நல்ல மரியாதை, வெளி நாடு தான், ஆனாலும், ரெண்டு பேருக்கும் ஒரு பய பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிடானுங்க, அது வேற கதை).

சரி வெங்கட், இது வந்து ஒரு வருஷம் ஆகிவிட்டது என்கிறாய். மணிரத்தினம் படத்திற்கு இளையராஜா நல்ல பாட்டு போட்டு இருப்பாரே, இந்த பட பாடல்களை பற்றி நம்ப கேள்வி படவே இல்லையே.

விசு, எந்த காலத்தில் இருக்கிற?  இந்த படத்திற்கு  A R Rehman என்ற புது இசை அமைப்பாளர் வந்து இருக்கின்றார். பாட்டு ஒன்னு ஒன்னும் தூள்.  முத படத்திலேயே கலக்கிட்டார். ...

அப்படியா வெங்கட்..நீ சொல்றது அப்படியே 9வது படிக்கும் போது அப்ப இருந்த இன்னொரு நண்பன் சொல்லுகிற மாதிரியே இருந்தது.

என்ன சொல்ல வர விசு?

இல்ல வெங்கட்.. அந்த காலத்தில் இப்படி தான்  இன்னொரு நண்பன் சொன்னான்.

விசு, பஞ்சு அருணாசலத்தின் அன்னக்கிளி  படத்து பாட்டுகள் சூப்பர்.

கண்டிப்பா, MS எப்பவுமே அருணாசலதிர்க்கு நல்ல மெட்டா தருவாரே.

இல்லை விசு, இளைய ராஜான்னு ஒருத்தர் வந்து இருக்கின்றார். "அன்னக்கிளி உன்னை தேடுதே" ன்னு ஒரு பாட்டு. என்னமா இருக்கு.

இவன் ஓவரா பில்ட் அப் கொடுத்தததால் நான் இன்னும்  அன்னக்கிளி பார்க்கவில்லை.

சரி, படம் ஆரம்பித்து விட்டது. அமைதி ப்ளிஸ். ஓகே,

ஓகே.

தாள்களை திருத்தி கொண்டே ஒர கண்ணால் கொஞ்சம் பார்க்க ஆரம்பித்தேன்.  மணிரத்தினம் படம் என்று உடனே சொல்லிவிடலாம். அரை இருட்டு, வசனம் இல்லை. அந்த பின்னணி இசை கொஞ்சம் விதியாசகமாக இருந்தது. "Indiana Jones "  படத்தில் இருந்த இசை போல் இருந்தது. ஓ, இள ரத்தம், புது மாதிரியாக செய்து இருகின்றார் என்று நினைக்கும் போதே, "சிகப்பு ரோஜாக்கள் மற்றும் மூடு பனி' படத்திற்கு இளையராஜா போட்ட பின்னணி இசை மனதில் ஓடியது.

தாள்களில் கவனத்தை திருப்பினேன். முதல் காட்சி " காஷ்மீர் தீவிரவாதி கைது' (பதிவாளர் வருண் கவனிக்கவும்,  "அவங்க நல்ல காலம் அப்ப சுலபமா ரிலிஸ் பண்ணி விட்டார்கள், இந்த மாதிரி ஒரு அறிவிப்ப படத்தில் இந்த காலத்தில் போட வேண்டும் என்றால், எஹாவது ஒரு தொலைகாட்சியில் பட்டிமன்றத்திற்கு நடுவராக வருவேன் என்று ஒத்து கொண்டால் தான் முடியும்)என்ற தலைப்போடு முடிந்தது. அடுத்த காட்சி , நம்ம ஊரில் . அருமையான பசுமையான புல்வெளி.. அங்கேயும் வெளிச்சம் இல்லை.
என்னடா, இவர் படத்தில் வெளிச்சமும் இல்லை வசனமும் இல்லை என்று நொந்து கொண்டே இருக்கையில், பாடல் ஆரம்பித்தது.  "சின்ன சின்ன ஆசை" ! குதித்தே விட்டான் வெங்கட்.. விசு, இந்த பாட்டு தான்.. சூப்பர் இல்ல.

ஆமா வெங்கட் நல்லாத்தான் இருக்கு.

கேட்டவுடனே மனதில் உட்காரும் மெட்டு.  ஆனால் எங்கேயோ கேட்ட மாதிரி மெட்டு.. பாடல் ஆரம்பித்தது. நாயகி 'சின்ன சின்ன ஆசை" என்று பாட ஆரம்பிக்கின்றாள். அடே டே, இந்த பாடல் மட்டும் இல்லாமல் காட்சியும் எங்கேயோ பார்த்த மாதிரி உள்ளதே. எங்கே எங்கே என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே பாடல்களின் வரிகள் மேலே மேலே போய் கொண்டு இருந்தன.  "சின்ன சின்ன ஆசை" என்று நாயகி தன் " Favorite Things" பற்றி பாடி கொண்டு இருந்தாள்.
அட பாவி வெங்கட்  , " Sound of Music" படம் பார்த்தாயா?

பல முறை பார்த்து இருக்கேன், அதுக்கு என்ன இப்ப?
அதில் முதல் பாட்டு என்ன நினைவிருக்கா?
"The Hills are alive" என்று நாயகி மகிழ்ந்து பாடி கொண்டு வருவாள்.
ரெண்டாவது பாட்டு.
அதே நாயகி " Favorite things"  என்று தனக்கு பிடித்த சின்ன சின்ன ஆசைகளை பற்றி பாடுவா.
இப்ப கூட்டி கழிச்சி பாரு..

விசு  அப்பட்டமா காப்பி அடிச்சிடாங்க! ஆமா விசு, நீ சொன்ன வுடன் தான் நினைவிற்கு வருது.  அதே தான். சரி ரத்தினத்தையும் முத்துவையும் விடு. மெட்டு  எப்படி?.

போடாங்க...

என்ன விசு சொல்லுற?

டேய்... UB 40 வுடைய " Red Red Wine"  எடுத்துக்க,  கூடவே Betty McLean பாடிய "If its raining its raining"  பாட்ட  கொஞ்சம் லேசா கலந்து விடு, அது தான் "சின்ன சின்ன ஆசை".

ஆமா விசு,  என்னா விசு, நல்ல சந்தோசமா இந்த படத்த உன்னோட சேர்ந்து பார்க்கலாம்னு வந்தேன், இப்படி கெடுத்துட்டியே!?
எல்லாம் யான் பெற்ற இன்பம் தாண்டா.. சரி இப்ப எங்க கிளம்பிட்ட?

இந்த கசெட்டை ரிடர்ன் பண்ணிட்டு வரேன்.

ஏன்டா, படத்த மீண்டும் ஒரு முறை பார்கின்றேன்னு சொல்லி தானே ஆரம்பிச்ச. இப்ப என்ன ஆச்சி?

வேணா விடு விசு. இந்த படம் முடிக்கும் முன்னாலே, நீ எனக்கு ஒரு 10 ஆங்கில படத்தையும், இருபது ஆங்கில பாடல்களையும் கத்து  கொடுத்து விடுவ.

சரி, போ, அந்த கடையில் "அன்னக்கிளி" கசெட் இருந்தா வாங்கிவா. அந்த படத்த ஒரு நாள் பார்த்தே ஆகவேண்டும் ஒரு "சின்ன சின்ன ஆசை"

இந்த "மதுரை குசும்பு" தானே வேண்டாங்கிறது.

என்று சொல்லி கொண்டே... "வீடு வரை உறவு... வீதி வரை மனைவி" என்று பாடி கொண்டே வெளியே கிளம்பினவனை...

டேய், அது MSV  பாட்டு தானே..?

என்ன கேள்வி கேட்டுட்ட விசு? சூப்பர் பாட்டு விசு, MSV யே தான். ஏன் கேக்குற?

எங்க மீண்டும் ஒரு முறை பாடு..

"வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ".

மாப்பு...  இப்ப அந்த "சின்ன சின்ன ஆசை" மெட்டில் அப்படியே அதை பாடு.

"சின்ன சின்ன ஆசை"... ... விசு... MSV ஒரு இசை மேதாவி தான் விசு. தனக்கே தெரியாமல் ரோஜா படத்திற்கு இசை அமைத்து  இருக்கார் பார்.

பின் குறிப்பு:  அந்த நாள் துவங்கி இந்நாள் வரையிலும் நானும் சரி நண்பன் வெங்கட்டும் சரி, மணி ரத்தினம் -வைரமுத்து - AR ரெஹ்மான் கூட்டணியில் வந்த எந்த படத்தையும் பார்கவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

12 கருத்துகள்:

  1. //மணி ரத்தினம் ... வந்த எந்த படத்தையும் பார்கவில்லை//

    இப்படி சொல்லியிருந்தால் இன்னும் மகிழ்ச்சி .........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தருமி ஐயா...
      திருத்தம்;
      அன்றில் இருந்து மணி ரத்தினத்தின் எந்த படத்தையும் பார்க்கவில்லை. ரெஹ்மான் மற்றும் வைர முத்து இருக்கும் ஓரிரு படங்களை பார்த்த நினைவு.
      அது சரி ஐயா,, உமக்கும் அவருக்கும் என்ன பஞ்சாயத்து? ஆட்சேபனையில்லாமல் இருந்தால் சொல்லுங்களேன்.
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. நீங்கள் சொல்லியிருக்கும் ஆங்கிலப் பாடல்களை நான் கேட்டதில்லை. எனக்கொரு சந்தேகம், ஒருவேளை அந்த ஆங்கில பாடலும் MSVயிடமிருந்து காப்பியடித்ததாக இருக்குமோ..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கும் வாய்ப்புண்டு மாது. MSV ன் வீடு வரை மனைவி ஒரு காவியமல்லவா? அதை யார் வேண்டும் என்றாலும் காப்பி அடிக்க வாய்ப்புண்டு. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. //உமக்கும் அவருக்கும் என்ன பஞ்சாயத்து? //

    நல்ல டைர டக்கரு தான், இல்லைன்னு சொல்லலை. அஞ்சலி, மெளன ராகம், தளபதி, நாயகன் ...குறைச்சலில்லை. இதில் ஐம்பதுக்கு ஐம்பது = பாதி காப்பி பாதி அவருடையது.
    ஆனால் இவருதான் தமிழ்நாட்டுல இந்தியாவிலே பெரிய ‘இது’ன்னு சொன்றது மீடியா கொடுத்த பிலடப்பு. (காரணம் என்னவோ?!)அந்த அளவிற்கு பெரிய ஆள் நிச்சயம் இல்லை.
    சில இடங்களில் அவரைப் பற்றிச் சொன்னது:
    http://dharumi.blogspot.in/2007/11/x.html
    ஆனால், உதாரணமா, பம்பாய் சீரியஸ் படம் - சரி; பின் அதில எதுக்குக் குத்துப் பாட்டு? copy cat இருக்காரே - மணிரத்தினம் - அவரின் படங்களில் (கன்னத்தில் முத்தமிட்டால் தவிர)குத்துப் பாட்டு இல்லாத படம் இல்லை என்றே நினைக்கிறேன். பின் ஏன் இவரை இந்த மீடியாக்காரர்கள் இந்த அளவு தூக்கி வைத்துப் பேசுகிறார்களோ?

    http://dharumi.blogspot.in/2005/04/9.html
    நேற்று தீபா மேத்தாவின் EARTH- படம் பார்த்தேன். பாவம்,மணிரத்தினம். இரண்டேகால் மணி நேரம் ஓட்ட வேண்டிய கட்டாயத்தால் 'உயிரே..உயிரே'-யில் ஆரம்பித்து, 'குட்டி குட்டி ராக்கம்மா'-க்குப் போய் பிறகு 'பம்பாய்' என்ற படத்திற்குள் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. build up கொடுப்பதற்குள் எடுப்பவர் - பார்ப்பவர் 'தாவு' தீர்ந்துவிடுகிறது. ஏனோ EARTH படம் பார்த்ததும் நம் பம்பாய் படம் நினைவுக்கு வந்தது. தரமும் தெரிந்தது.

    http://dharumi.blogspot.in/2005/04/9.html
    முக்கியமாக பம்பாய் நினைவுக்கு வரக் காரணமாயிருந்தது இந்த படத்தில் வரும் இந்து-முஸ்லீம் வன்முறைக்காட்சிகள். பம்பாயில் மிக விஸ்தாரமாகக் காண்பிக்கப்பட்ட காட்சிகள் இதில் மிகக் குறைவாகவே காட்டப்பட்டன. ஆனால், அதைப்பார்த்த அந்தக் குழந்தையின் பாதிப்பு மிகக் கவித்துவமாகக் காட்டப் படுவது மட்டுமல்லாமல், அந்தக் கோரக்காட்சிகளின் தாக்கம் நம் மீதும் விழுந்து அழுத்துகிறது. இயக்குனருக்கு hats off சொல்ல வேண்டிய காட்சி. வன்முறைக்காட்சிகள் குறைவு; பேச்சு, வசனம் ஏதும் இல்லை. ஆனால் தாக்கமோ மிக அதிகம்.
    நம் படத்தில் அந்த நுணுக்கம் (subtlety),கவித்துவம் இல்லை; ஒரு முரட்டுத்தனம்தான் இருந்தது.

    http://dharumi.blogspot.in/2005/04/7.html
    எனக்கு மணிரத்தினத்தின் 'அஞ்சலி' படத்தில் உள்ள பாட்டு, நடனம் எல்லாம் எடுத்துவிட்டு 'படம்' மட்டும் பார்க்க ஆசை. அப்படியிருந்தால் அந்தப் படம் தரமாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறியது போல் இவர் ஒரு நல்ல இயக்குனர் தான். ஆனால் இந்தியாவிலே சிறந்த இயக்குனர் என்பதை ஒத்து கொள்ள முடியாது. என்னை பொறுத்தவரை, இவர் வளரும் காலம், பாரதி ராஜா - பாக்கியராஜ் போன்ற இயக்குனர்களின் இறுதி காலம். அதனால், ஆளை இல்லாத ஊரில் இலுப்ப பூ சர்க்கரை கதை ஆகியது (இங்கே என் கதையும் அதே தான், நான் வசிக்கும் கலிபோர்னியா மாநிலத்தில் நானும் ஓர் தமிழ் பேச்சாளன் - எழுத்தாளனாக கருத படுகின்றேன், அதை பற்றி வேறொரு நாள் பேசலாம்.)
      மற்ற படி, குத்து பாட்டு எல்லாம் Money ரத்தினம் சேர்க்க வேண்டிய அவசியமாகி இருக்கும்.
      வருகைக்கு நன்றி. தங்கள் சுட்டி காட்டிய பதிவுகளை படித்து விட்டு மறு மொழியிடுகிறேன்.

      நீக்கு
  4. நன்றி

    பாலாவும் சில புதிய வரவுகளும் அவரைத் தூஊஊஊக்கி சாப்பிட்டு விட்டார்கள்

    பதிலளிநீக்கு
  5. விசு,

    சின்ன சின்ன ஆசை முழுமையான ரெகே பாணியில் முதல் முதலில் தமிழில் வந்த பாடல். எனவே இதில் பாப் மார்லி, யு பி 40, பீட்டர் டோஷ், இன்னர் சர்கிள் போன்ற மேற்கத்திய ரகே சாயல் இருப்பது இயல்பானதுதான். இதை காப்பி என்று முத்திரை குத்துவது கொஞ்சம் அதிகம். மேலும் ரெட் ரெட் வைன் பாடல் போகும் பாதையே முற்றிலும் வேறானது. எப்படித்தான் இவ்வாறு சிரமப்பட்டு சம்பந்தமில்லாத இரண்டு கோடுகளை இணைக்கிறீர்களோ தெரியவில்லை. ஒரு டிஸ்க்ளைமர்- நான் ரஹ்மானின் விசிறியோ அல்லது அவரை இயல்புக்கு மாறாக புகழ்பவனோ கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி காரிகன். தங்கள் கூற்று சரியே. ரெகே என்றவுடனேயே அந்த பாடல்கள் எல்லாவற்றிலேயும் சற்று ஒரே சாயல் தெரியும் என்பது உண்மை தான். தங்கள கருத்தை சொல்லும் போதே சில அருமையான ரெகே பாடலர்களை நினைவுபடுதிநீர்கள், நன்றி. இந்த கருத்தை நான் எடுத்து வைக்க எதுவும் சிரமப்படவில்லை.
      முதல் முறையாக இந்த பாடலை கேட்கும் பொது என் மனதில் பட்டதை நண்பனிடம் கூறினேன், அவ்வளவுதான். சின்ன சின்ன ஆசை தான் தமிழில் வந்த ரெகே பாடல் என்பதிலும் எனக்கு உடன் பாடு இல்லை. 50ல் வந்த எதிர் வீட்டு பெண் படத்தில் வந்த "கண்ணாலே பேசி பேசி கொல்லாதே" பாட்டே ரெகே போல் தான் கேட்கும் (எனக்கு). என் நண்பர்களோ ஒருவன் அதை Tango என்றும் மற்றொருவன் "Slow Rock "" என்றும் சொல்வார்கள். அது சரி, இசை என்றால் விவாதித்து கொண்டே இருக்கலாம் அல்லவா?
      பீட்டர் டோஸ் என்று சொன்னீர்கள். என்ன ஒரு இசை அமைப்பாளர். "Bob Marley and the Wailers" இவரின் "Johnny B Goode" ரெகே பாணியில் கேடு உள்ளீர்களா?
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. ஒருவன் ஒருவன்முதலாளி என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் எனக்கு Twinkle twnkle little star என்ற நர்சரி ரைம் ஏனோ நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா... தாங்க முடியல சிரிப்பு. ரொம்ப ரசிக்க வைத்த பின்னூட்டம். இதை படித்தத்தில் இருந்தே இந்த ரெண்டு பாடல்களையும் என் மண்டையில் இருந்து இறக்க முடியவில்லை.
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. என்ன ஒரு finding.. கலக்கிடிங்க முரளி,G

      நீக்கு