திங்கள், 22 செப்டம்பர், 2014

நீதி உயர்ந்த மதிகல்வி!


ஒவ்வொரு வருடமும் பள்ளி கூடம் ஆரம்பிக்கும் வாரத்தில் பள்ளிக்கு திரும்பும் நாள் (Back to School Day) என்று ஒன்று வைக்கப்படும். இந்நாளில் - இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் - மாணவிகள் உள்ளே அனுமதிக்க படமாட்டார்கள். இது பெற்றோர்களுக்கும் மட்டும்.



பெற்றோர்களாகிய நாம், இந்நாளில் பள்ளி கூடத்திற்கு சென்று ஆசிரியர்களையும் - ஆசிரியைகளையும் பார்த்து, வாழ்த்தி விட்டு, நம் பிள்ளைகளை பற்றியும் நம்மை பற்றியும் அவர்களுக்கு தெரிவித்து, அவர்களை பற்றி நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு. இந்த நிகழ்ச்சிக்கு பொதுவாக இங்கே தாய்மார்கள் செல்வார்கள்.

ஆனால் நம் வீடு கதை தான் தெரியுமே! எனக்கு அந்த பள்ளி - ஆசிரியர்கள் எல்லாம் அத்து படி, நீங்கள் போய் கொஞ்சம் அறிந்து கொண்டு வாருங்கள் என்று அம்மணி சொல்ல , கிளம்பி விட்டேன். அங்கே நடந்த சில விஷயங்கள் மனதில் பதிந்தன. அவைகளை பகிர இந்த பதிவு.

முதலாக, உள்ளே செல்லும் முன் பள்ளி அலுவலகத்தில் நம் பிள்ளைகளின் நேர அட்டவணையை (Time Table) தந்து விட்டனர்.

காலை 6:30 - வேதியியல்
அடுத்து : கணக்கு
அடுத்து : வரலாறு
அடுத்து : ஸ்பானிஷ்
அடுத்து : பூகோளம்
அடுத்து : ஆங்கிலம்

முதல் வகுப்பில் அமர்ந்து இருந்தேன். அங்கே இருந்த மற்ற அனைவரும் தாய்மார்களே. என்னை தவிர மற்றொரு தகப்பன் அமர்ந்து இருந்தார். என்னை பார்த்தவுடன், ஒரு புன்முறுவல். அவரை பார்த்தவுடன் தெரிந்து கொண்டேன், அவரின் பூர்விகமும் இந்தியா என்று.  என் மகள், ஏற்கனவே என்னிடம் சொல்லி இருகின்றாள், தன்னோடு இன்னொரு இந்திய பெண் படிக்கின்றாள் என்று. வேதியியல் ஆசிரியை தன்னை அறிமுகபடுத்தி கொண்ட பின்பு, இந்த வருடம் என்ன என்ன பாடம் - வீட்டு வேலை எப்படி- மற்றும் சீர்திருத்தம் - ஒழுக்கம் எல்லாவற்றையும் பற்றி பேசினார்கள்.

அதன் பின் கேள்வி பதில் நேரத்தில் சில பெற்றோர்கள் சில கேள்விகள் கேட்க்கையில் மணி அடித்தது. அடுத்த வகுப்புக்கு இன்னும் 5 நிமிடத்தில் செல்ல வேண்டும் என்று ஒலி பெருக்கியில் இருந்து தலைமை ஆசிரியர் சொல்ல, பெற்றோர்கள் அடித்து பிடித்து ஓடினர்.

நாம் படிக்கையில், நாம் ஒரு வகுப்பில் தானே அமர்ந்து இருப்போம். ஆசிரியர்கள் தானே வெவ்வேறு நேரத்திற்கு வருவார்கள் என்று நினைத்து கொண்டே அடுத்த வகுப்பிற்கு போனேன். நான் அங்கே நுழையும் முன்பே மணி அடித்து விட்டதால், வெளியே நின்ற என்னை பார்த்த அந்த ஆசிரியை " you are late" என்று சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர்.  உள் நுழைகையில்... அந்த வகுப்பில் எனக்கு தெரிந்த அனேக முகங்கள், என்னோடு அலுவலத்தில் பணிபுரியும் சக ஊழியர்களும் அவர்களின் இல்லத்தரசியும்.

இங்கே ஒரு விஷயம் சொல்லி ஆகவேண்டும்.

நான் ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிகிறேன். எனக்கு அதிகாரிகள் உண்டு. எனக்கு கீழே பணி புரிபவர்களும் உண்டு. அது மட்டும் இல்லாமல் கீழ் மட்ட ஊழியர்கள் நிறைய உண்டு. இந்த கீழ்மட்ட பணியை  பெரும்பாலும் அண்டை நாடான மெக்சிகோவை சேர்ந்தவர்கள் செய்வார்கள். எங்கள் எல்லார் பிள்ளைகளும் கிட்டதட்ட ஒரே வயதை சேர்ந்தவர்கள்.

நாங்கள் வாழும் இடம்  பசிபிக் கடலை ஒட்டிய சிறிய இடம். அதில் ஒரே உயர் நிலை  பள்ளிக்கூடம், கிட்ட தட்ட 3000ம் பிள்ளைகள்  படிக்கும் பள்ளி. இது ஓர் அரசு பள்ளி.

இந்த கணக்கு வகுப்பில் என்னோடு பணிபுரிவர்கள் சிலர் அமர்ந்து இருந்தனர். என் மகள் 10வது படிகின்றாள். மற்றவர்களின் பிள்ளைகளில் 2 பேர் 11வது. இன்னும் ஒருவரின்  பிள்ளை 9வது.  11வது 9தாவது படிக்கின்றவர்கள் என் மகள் படிக்கும் 10வது வகுப்பில் என்ன செய்கின்றார்கள் என்று கேட்டேன். அதற்க்கு " எந்த பிள்ளை எந்த வகுப்பில் படிகின்றாள் என்பது முக்கியம் இல்லை, எப்படி படிக்கின்றார்கள் என்பது தான் முக்கியம். 9 வது படிக்கும் மாணவர்கள், எந்த பாடத்திலாவது மிகவும் நன்றாக படித்தால் அவர்கள் 10வது பாடத்தை படிக்கலாம். அவ்வாறே, 11வது படிக்கும் மாணவர்கள் எந்த பாடத்திலாவது ஒரு பாடத்தில் சிரம பட்டால் அவர்கள் 9வது பாடத்தை படிக்கலாம்" என்று பதில் வந்தது. வித்தியாசமாக இருந்தாலும் நன்றாக இருந்தது.

நான் ஏற்கனவே கூறியது போல், பெற்றோர்களாகிய நாங்கள், வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள். வெவ்வேறு படிப்பு, வெவ்வேறு சம்பளம், மற்றும் சமூகத்தில் வெவ்வேறு அந்தஸ்து. ஆனாலும் பிள்ளைகள் அந்த வித்தியாசம் ஒன்றும் இல்லாமல் ஒன்றாக அமர்ந்து ஒரே வகுப்பில் படிப்பது ஒரு பெரிய சந்தோசத்தை தந்தது. எங்கள் ஊரில் எந்த ஒரு பிள்ளையையும் எந்த பள்ளிக்கூடம் போகிறாய் என்று கேட்டு வித்தியாசம் பார்க்க இயலாது.

அதை முடித்து... ஒவ்வொரு வகுப்பாக ஓடி ஓடி ... எல்லாவற்றையும் அறிந்த பின் வீட்டிற்கு சென்றேன். மகள் கேட்டாள்.

அப்பா எங்கள் வகுப்புகளை பார்த்தீர்களா ? ஆசிரியர்களை பார்த்தீர்களா  என்று. ஆம் என்றேன்.

அடுத்த நாள் மகள் பள்ளியில்  இருந்து வருகையில்.. நேற்று ... நீங்கள் என் கணக்கு வகுப்பிற்கு தாமதமாக போனீர்களா என்றாள். ஆம், மகளே, சற்று தொலைவில் இருந்தது, அதனால் தான் என்றேன். என்ன அப்பா? சொதப்பி விட்டீர்களே! அங்கே இருந்த மற்ற பெற்றோர்கள் தம் தம் பிள்ளைகளிடம் சொல்ல இன்று எல்லாரும்  என்னை கிண்டல் செய்து விட்டார்கள்.

மன்னித்து  விடு மகளே, என்று கூறி.. இந்த தாமதமாக செல்லும் வழக்கம் எனக்கு... "தொட்டில் பழக்கம்" ஆகி விட்டதே என்று நொந்தேன்...


www.visuawesome.com

5 கருத்துகள்:

  1. பள்ளிக்குத் திரும்பும் நாள்
    அதுவும் பெற்றோர்களுக்கு
    படிக்கப் படிக்க ஆனந்தமாக இருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வழக்கங்கள் இங்கே பல உண்டான கரந்தை அவர்களே, இந்த "பள்ளிக்கு திரும்பும் நாள்" நிகழ்ச்சியும் அதில் ஒன்று. இவ்வாறான பள்ளியை சார்ந்த நிகழ்ச்சிகளை இனிமேல் கண்டிப்பாக பதிவாக போடுகிறேன். வருகைக்கும் வாக்குக்கும் நன்றி.

      நீக்கு
  2. ஐடியா நன்றாக இருக்கிறதே, நம்ம ஆட்சியாளர்கள் கவனித்தால் நல்லா இருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. மன்னித்து விடு மகளே, என்று கூறி.. இந்த தாமதமாக செல்லும் வழக்கம் எனக்கு... "தொட்டில் பழக்கம்" ஆகி விட்டதே என்று நொந்தேன்... //// hahaha... indian

    (Back to School Day) ingaiyum athu pol vaithal nalla irukkume.

    பதிலளிநீக்கு