செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

எலி இல்லாத வீட்டுக்கு பூனை, திருடன் வராத வீட்டிற்கு நாய்!

"வா விசு... மூன்று வருடம் கழித்து எங்கள் வீட்டிற்கு வர, வலது கால எடுத்து வச்சி வா" என்று அழைத்தான் என் நண்பன் சத்தி. சத்தியும் நானும் இளங்கலை, முதுகலை ஒன்றாக படித்தவர்கள். படித்து முடிந்து 25 வருடங்கள் ஆகியும், ஒவ்வோர் முறையும் நான் இந்தியா செல்லும் போது, அவனை சந்தித்து ஒருவரை ஒருவர் பற்றியும், மற்றும் சுற்றம் உற்றம் பற்றியும் அறிந்து கொள்வேன்.

என்ன சத்தி.. வீட்டில் எலி தொலையா? ரெண்டு பூனை வீட்டுக்கு உள்ளேயே இருக்குது.

எலி எல்லாம் ஒன்னும் இல்ல விசு, இது என் பிள்ளைகள் தொந்தரவு.

அட பாவி, இந்த பூனை எல்லாம் வீட்டிற்குள் இருந்தால் பிள்ளைகள் நோய்வாய் படுவார்களே, இத ஏன் "வேலி மேல போற ஓணான்"  கதை போல வீட்டிற்குள் வைத்து கொண்டு..?

ஒன்னும் பண்ண முடியாது விசு, கண்டிப்பா வேணும்னு அவங்க அம்மாவை "ஓகே" பண்ணிடாளுங்க.. அம்மா சொன்னா அதுக்கு ஏது மறு பேச்சி.

நல்ல சொன்ன சத்தி..அது சரி, அது என்ன அழகான நாய் போல ஒரு விளக்கு?

அட பாவி, அது விளக்கு இல்ல, விசு! உண்மையாவே நாய் தான்.

நல்ல வேளை சொன்ன, அது விளக்குதான்னு நினச்சி சுவிட்ச் தேட ஆரம்பிச்சிட்டேன். டேய், என்னாடா இது, ரெண்டு பூனை, ஒரு நாய், ஒரு மிருக கண்காட்சி சாலையே வீட்டில் இருக்கே...சரி இங்க என்னா திருட்டு பயமா?

சீச்ச்   சீ..இது ரொம்ப நல்ல ஏரியா விசு, அந்த மாதிரி எல்லாம் பயம் இல்ல..

பின்ன ஏன்டா, எலி இல்லாத வீட்டுக்கு பூனை, திருடன் வராத வீட்டிற்கு நாய்?

என்னத்த சொல்ல? மூத்த பிள்ளைக்கு ரெண்டு பூனை, இளையவளுக்கு நாய்..

நல்ல வேளை, ரெண்டோட நிறுத்திட்ட, அடுத்த பிள்ளை இருந்தா என்ன கேட்டு இருக்குமோ..

சரி ஏன் அந்த நாய்க்கு கழுத்த சுத்தி அந்த விளக்க மாட்டி இருக்க..

ஒன்னும் இல்ல விசு, வழக்கமா ராத்திரி வீட்டுக்குள்ள எங்களோடு வந்து படுத்துக்கும். போன வாரம் கொஞ்சம் மறந்து ஒரு நாள் வெளியே வச்சிட்டோம்.

நாய் குணமே ராத்திரி முழுவதும், வெளியே இருப்பது தான சத்தி, அதுக்கும் இந்த கழுத்த சுத்தி இருக்க விளக்குக்கும் என்ன சம்பந்தம்?

விவரமா சொல்றேன் கேளு. அன்னிக்கு வெளியே இருக்கும் போது நடு ராத்திரி "கூர்க்கா" வந்து ஒரு விசில் அடிச்சி இருக்கான். அந்த விசில் சத்தம் கேட்டு பயந்து ஓடி வந்து கதவில் தலைய மோதி கழுத்தில் பலமான அடி. அதுக்கு தான் அந்த விளக்கு மாதிரி ஒன்னை டாக்டர் இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு போட சொல்லி இருக்கார்.

என்ன சத்தி, நாயை பார்த்து மனுஷன் ஓடி இருக்கான்னு கேள்வி பட்டு இருக்கேன், இது இவ்வளவு பெரிய நாயா இருந்தும், கூர்க்கா விசில் கேட்டு பயந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு.

சரி, இந்த மூணு பிராணிகளுக்கும் மாசத்துக்கு எவ்வளவு செலவு ஆகுது?

செலவு ஒரு பக்கம் இருக்கட்டும் விசு, இதை கவனிக்க எவ்வளவு நேரம் ஆகுதுன்னு யோசித்தாத்தான் மண்டை காயுது. இந்த மூணு பிராணிகளுக்கும் செலவு செய்யற நேரத்தில் சக மனிதர்களுக்கு எவ்வளவோ உதவி செய்யலாம். என்னத்த பண்றது?

சரி, எவ்வளவு காசு செலவு ஆகுது சொல்லு,

கிட்ட தட்ட மாசத்திற்கு 1000 ருபாய், சாப்பாட்டிற்கே. அப்புறம், மருத்துவ செலவு, குளியல் செலவு, முடி வெட்ட செலவு, லொட்டு லொசுக்குன்னு இன்னொரு 500 ருபாய்.

கேட்கவே ஆச்சரியமா இருக்கு சதி, உங்க அப்பா மட்டும் இத பாத்து இருந்தா, மவனே உனக்கு நடந்த கதையே வேற..

என்னத்த செய்வேன், விசு, புலி வாலை புடிச்சாச்சி, விட்டா கடிச்சிடும்.

சரி, இப்ப இதுல இருந்து எப்ப விடுதலை, சத்தி?

நாய் என்னமோ 10 வருஷம் கிட்ட வாழுமாம். இந்த கூர்க்கா விசில் விபத்தினால இதுக்கு எப்ப வேண்டும் என்றால் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். பூனைங்க ரெண்டும் இன்னும் ஒரு 4 வருஷம் இருக்கும்.

சத்தி... டேய்.. என்னடா வீட்டுக்குள்ள எலி ஓடுது? இப்ப தான சொன்னே இங்க எலி இல்லைன்னு.

நான் கூட இப்பதான் பாக்குறேன் விசு, இதுதான் முதல் முறை.

சரி, எதிரில் ஓடுற எலிய என்னமோ சினிமாவில் கதாநாயகியா அறிமுக படுத்துற காட்சி பாக்குற மாதிரி இந்த ரெண்டு பூனையும் உட்கார்ந்து கொண்டு இருக்கே...இதுங்களுக்கு முன்ன பின்ன எலினா என்னவென்று தெரியுமா?

தெரியாது போல இருக்கு. பாலை வைச்சா குடிக்குங்க, அப்புறம் மீன் விரும்பி சாப்பிடுங்க.

நல்ல நாய், பூனை சத்தி உங்க வீட்டில்!

அது சரி விசு, அங்க உங்க வீட்டில் இந்த மாதிரி பூனை , நாய் எல்லாம் எதுவும் இல்லையா? அமெரிக்காவில் வீட்டுக்கு வீடு இந்த மாதிரி இருக்குன்னு எங்கேயோ படிச்சி இருக்கேன்.

நிறைய பேர் வீட்டில் இருக்கு சத்தி. அது அவனவனுக்கு எவ்வளவு நேரம் இருக்கோ அதை பொருத்து. என்னை பொறுத்தவரை நாய் வளக்கறது திருடன் வீட்டிற்கு வராமல் இருக்க, பூனை வளர்ப்பது எலி தொல்லைக்காக. இது ரெண்டும் இல்ல, பின்ன எதுக்கு  எங்க வீட்டில் நாய், பூனை?

சரி விசு, குறைந்த பட்சம் ரெண்டு பறவையாவது..

பாவி.. நல்ல சந்தோசமா சுத்தி இருக்க வேண்டிய கூண்டில் போட்டு அடைச்சி அத வேற நான் ரசிக்கனும்மா?

ரெண்டு மீனாவது...

மீன் சமையல் அறையில் கொழம்புல இருந்தா போதும், ஒன்னும் நடு வீட்டில் நீச்சல் அடிகனும்னு அவசியம் இல்ல.

அப்ப 'டைம் பாஸ்' எப்படி விசு?

அதுக்கு தான் சிங்க குட்டிங்க மாதிரி ரெண்டு பெத்து வைச்சி இருக்கேனே? அந்த ராசத்திகளோடு தான்.

ராசத்திங்க என்னைக்காவது நாய் பூனை வேண்டும் என்று கேட்டால்...?

கேட்க்க மாட்டார்கள்.. ஏன்னா என்னை சமாளிக்கவே அவங்களுக்கு நேரம் இல்லை.

3 கருத்துகள்:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. இந்த நாய்க்கு போட்ட கோன்மாதிரி எங்க ஊர்ல போட்டி இருந்தா அதற்கு neutering பண்ணி இருக்கிறார்கள் என்று அர்த்தம் இது எங்க ஊரில் கட்டாயம் பிறந்த 6 மாதம் ஆன உடனே இதை பண்ணி அதற்கான சர்டிபிகேட் கொடுத்தால்தான் லைசன்ஸ் தருவார்கள் இது நீயூஜெர்ஸி சட்டம்

    பதிலளிநீக்கு
  3. எங்க வீட்டில் இருக்கும் ஒரு ராசத்தியும் எனது மனைவியும் இன்னொரு ராசாத்தி வேண்டும் என்றார்கள் போடா அப்படி என்று சொல்லிவிட்டு ஒரு ராஜ குமாரனை வாங்கி கொடுத்துவிட்டேன்

    பதிலளிநீக்கு