வியாழன், 17 ஜூலை, 2014

பொற்காலம் டு கற்காலம்.

விசு, செம்ம சாப்பாடு விசு. அட்டகாசம் போ. எப்படி விசு , காசிமேட்டில் கிடைக்காத மீனை கூட கலிபொர்னியாவில வாங்குற. சூப்பர், என்று சில நண்பர்கள் கூறும் போது மணி இரவு 8:30.

இங்கே, நானும் சரி, மற்ற என் நண்பர்களும் சரி, மாதம் ஒருமுறை யாராவது ஒருவர் இல்லத்தில் சந்தித்து உண்டு களிப்போம். இன்று எங்கள் இல்லத்தில்.
எல்லாம் முடிந்தது. இரவு ஒரு 9 மணி போல், நண்பர் ஒருவர் கூறினார். நாளை விடுமுறை தானே, நாம் எல்லோரும் சேர்ந்து "சிங்கம் 2" போகலாமே. இன்றுதான் வெளி வந்து இருக்கின்றது என்று கூறினார். நாங்கள் மொத்தம் ஒரு 40 பேர் (பிள்ளைகளையும் சேர்த்து) இருந்து இருப்போம்.
நீங்கள் எல்லோரும் போங்கள், எனக்கும் என் மனைவிக்கும் இந்த படம் போவதில் விருப்பமில்லை என்றோம்.  அதற்க்கு ஒரு நண்பன், என்ன விசு, சிறிய வயதில் எல்லா படத்தையும் பார்த்துவிடுவாய், இப்போது சுத்தமாக நிறுத்திவிட்டாயே என்ன காரணம் என்றான்.



எதுவும் முக்கியமான காரணம் இல்லை,"முன் தனி காட்டு ராஜா ", ஆனால் இப்போது " பிள்ளை குட்டி காரன் அல்லவா" அதனால் என்று சொல்லி, ஏன் நான் சினிமாவை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என்று ஒரு அசை போட்டேன்.
காரணம் கிடைத்தது.

அந்த காரணத்தை சொல்வதற்குள் கடந்த சில வருடங்களில் நான் விமானத்தில் இந்தியா செல்லும் போது 4 அல்லது 5 படங்களை பார்த்தேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். நான் பார்த்த படங்கள், கில்லி, மொழி, சந்திரமுகி (முதல் 10 நிமிடம்) மற்றும் சிங்கம்.


சரி இப்போது ஏன் படங்களை பாப்பதை விட்டுவிட்டேன் என்று சொல்கிறேன். தனி காட்டு ராஜவாக இருக்கும் போது நான் ஒரு தமிழ் பட பரம ரசிகன். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லும்படியான 'பாலசந்தர்-பாரதிராஜா-பாக்யராஜ்-பாலுமகேந்திரா- இளையராஜா-வைரமுத்து-கவுண்டமணி" அவர்களோடு வளர்ந்தவன் நான். எங்கள் காலத்தில் ஒருவனிடம் சரக்கு இருந்தால் தான் முன்னேற முடியும். சினிமா என்பது "பரம்பரை சொத்து" என்று ஆகுவதற்கு முன்னான, பொன்னான காலம்.

மூன்றாம் பிறையில் "அட்ரா ராமா, அட்ரா ராமா"என்று நாயகன் கூறும்போது, அழுதவன் நான்.

டார்லிங்-டார்லிங்-டார்லிங்கில் "ஏங்க 10-15 வருஷமா வேற வேலையே எதுவும் செய்யம்மா, உங்கள மட்டும் மனசில வைச்சு காதல் பண்ணிட்டேன். ப்ளீஸ், கொஞ்சம் ட்ரை பண்ணி என்ன லவ் பண்ணுங்களேன்" என்று சொல்லும் போது.. நானும் நாயகனோடு சேர்ந்து "ப்ளீஸ்" என்று சொன்னவன் நான்.

மயிலு ஆத்தாக்கு தாவணி கட்டினாகூட நல்லா இருக்கும்டா என்றவுடன், பரட்டையையும் முந்தி..."இது எப்படி இருக்கு?" என்று கேட்டவன் நான்.

அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.. "எனக்கு உண்மையாகவே தெரிந்தது".

மூன்றாவது முறையாக எங்கடா அந்த வாழை பழம் என்று கேட்ட போது.. "யோ, கவுண்டரே, அது தான்யா இது, எத்தன முறை கேட்பே? " என்று நான் அல்லவா கத்தினேன்.


இந்த காலத்தில் வளர்ந்தவன் நான். சரி, ஏன் நிறுத்திவிட்டேன். நல்ல கேள்வி. படையப்பா பார்த்த பின் அடடா.. .சூப்பர்! என்ன ஒரு இயக்குனர் KSR , நம்ம தலைவரை வைத்து இப்படி ஓர் சூப்பர் படம் பண்ணி விட்டாரே என்று ரசித்து விட்டு, தலைவரின் அடுத்த படத்திற்கு ஆவலாக காத்து இருந்தேன்.

வந்தது "பாபா". எங்கேயும் "பாபா" எதிலேயும் "பாபா"! படம் வெளி வந்ததும் முதல் நாளும் அதுவுமாய், துபாய் அருகில் உள்ள தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி. படம் முடிந்து வெளியே வந்த என்னை பார்த்த நண்பர்கள் ஏன் விசு பேய் அறைந்ததை போல் ஆகிவிட்டாய் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் கூறுகிறேன்) ஏன்றார்கள். 

அன்று தான் உணர்ந்தேன்,அறிந்தேன் . இந்த "பாலசந்தர்-பாரதிராஜா-பாக்யராஜ்-பாலுமகேந்திரா- இளையராஜா-வைரமுத்து-கவுண்டமணி" மற்றும் சிலர் என்  எதிர்ப்பார்ப்புகளை எங்கேயோ தூக்கி கொண்டு போய் வைத்து விட்டார்கள்.  இனி வரும் படங்கள் நம்மை திருப்தி படுத்தாது என்று. 

இந்த விஷயத்தை நான் கூறுகையில் பல நண்பர்கள் "நல்ல முடிவு" என்பார்கள், மற்றும் பல நண்பர்கள் " கெட்ட முடிவு" என்பார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை, தமிழ் சினிமாவின் பொற்காலம் முடிந்து, இது கற்காலத்திற்கு சென்று விட்டதை போல் ஓர் எண்ணம். சரியோ தவறோ தெரியவில்லை.

சரி, இப்போது, சிங்கம் 2க்கு வருவோம், என்ன படம், என்ன கதை, யார் ஹீரோயின் என்ன இழவோ என்று புரியவில்லை. நான் கொஞ்சம் காமடி விரும்பி. இந்த படத்தில் விவேக்-சந்தானம் இருவரும் நடிகின்றார்கள் என்று அருகில் இருப்பவர் சொல்ல, சிரிக்கலாம் என்று அமர்ந்து இருந்தேன். சிரிப்பு ம் வரவில்லை.

இதை பார்த்தவுடன் ,சரி சரி, நாம் எடுத்த முடிவு சரி தான் என்று என்னை நானே பாராட்டி கொண்டேன்.

சரி.. பொழுது போக்கு என்ன என்று கேட்கின்றீர்களா? இருக்கவே இருக்கு.. " யு டுப்" தட்டினால் வருகின்றார்கள் ... " பாலசந்தர்- பாரதிராஜா-பாக்யராஜ்-பாலுமகேந்திரா- இளையராஜா-வைரமுத்து-கவுண்டமணி"


பேக் டு பொற்காலம்...

http://www.visuawesome.com/

4 கருத்துகள்:

  1. அவ்வப்போது அது போல் படங்களும் இப்போது வரத்தான் செய்கின்றன... இருந்தாலும் அது ஒரு பொற்காலம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி சொல்லித்தான் சிங்கம் 2க்கு போய் அசிங்க பாடு வந்தேன் சகோ....

      நீக்கு
  2. நானும் உங்க கட்சிதான்ண்ணா! இப்பத்தைய படங்கள் பார்ப்பதை தவிர்க்கின்றேன். ஆனா, அத்தி பூத்தாற் போல மைனா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், இவன் வேற மாதிரி, எதிர்நீச்சல்(சிவ கார்த்திகேயன்), கும்கி, கோலி சோடா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணொம், தங்க மீன்கள் மாதிரியான நல்லப் படங்களை பசங்க தயவில் பார்க்கிறேன்.

    அப்புறம் ஒரு சேதி பெரிய பெரிய நடிகர் படங்கள் பார்ப்பதை தவிர்ப்பது நலம்ன்றது என் பட்டறிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராஜி, இருந்தாலும் எனக்கு அதில் விருப்பம் - தைரியம் இல்லை. இந்த வார படம்... "புது கவிதை".. அடிச்சிக்க முடியுமா?

      நீக்கு