வியாழன், 17 ஜூலை, 2014

தூறல் நின்னு போகல..

இன்னொரு வார இறுதி, காலை சீக்கிரமே எழுந்து 3:30 மணிக்கு எங்க ஊர் காசிமேடானா "நியூ போர்ட்" பீச்சிற்கு மீன் வாங்க நண்பன் ஒருவரோடு சென்றேன். அந்த மீன் சந்தையை நாங்கள் அடையும் போது மணி 4 போல் இருக்கும். எங்கள் வாகனத்தை கடலுக்கும் ஒரு 100 மீட்டர் தள்ளி நிறுத்திவிட்டு வெளியே சில் என்ற மழை காற்று அடித்ததால்   சந்தை திறக்கும் வரை   வண்டியிலேயே அமர்ந்து இருந்தோம்.



கூட வந்த நண்பர் சற்று கள்ளம் கபடம் இல்லாத மனிதர்.ஐந்து நிமிடம் கிடைத்தால் கூட ஒரு கொட்டாவி விட்டு தூங்கி விடுவார். நான் வானொலியை ஆன் செய்து அதில் வந்த பாடல்களை கேட்டு கொண்டு, இன்னும் சிறிது நேரத்தில் வானலியில் வறுபடும் மீன்களை பற்றி யோசித்து கொண்டு இருக்கையில் திடீரென்று ஒரு முக்கிய அறிவுப்பு. "ஹாவாய்" அருகில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் மேற்கு கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை. நாங்கள் அமர்ந்து இருந்ததோ மேற்கு கடற்கரையின் மேல்.

அதை கேட்ட நான் உடனே பேய் அறைந்ததை போல் ஆகி விட்டேன் (மீண்டும் சொல்கிறேன், பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்லுவேன்.) உடனே அருகில் உறங்கி கொண்டு இருந்த நண்பரை எழுப்பி, சுனாமி வரும் என்று எச்சரிக்கை வந்துள்ளது, வண்டியை கிளப்பலாமா என்றேன். அவர் உடனே சின்ன வயதில் நீ புலி வருது கதையை கேள்வி பட்டது இல்லையா? அது போல் தான் இதுவும் என்று சொல்லி மீண்டும் தூங்க போனார். ஒரு ஐந்து நிமிடம் கழிந்தது மீண்டும் ஒரு சுனாமி எச்சரிக்கை. நண்பரை மீண்டும் எழுப்பி கூறினேன், அவர் என்னிடம், நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல நண்டு வாங்கி சமைக்கலாம் என்று இருக்கிறேன், தயவு செய்து பொறுமையாக இரு என்றார். இவர் இதை சொல்லும் போது இருவரும் கடலின் ஆழ பகுதியில் ஒரு கப்பலோ அல்ல எண்ணை கிணறோ (எது என்று சரியாக தெரியவில்லை) அதின் விளக்கு மஞ்சளில் இருந்து சிவப்புக்கு மாறியதை கண்டோம். உடனே நான் கூறினேன், நண்பா, சிவப்பு என்றாலே ஆபத்து தானே, அதனால் தான் நிறத்தை மாற்றி விட்டார்கள், நாம் கிளம்புவோம் என்றேன். அவர் அதற்கு பதிலாக வேண்டுமானால் இப்படி செய்யலாமே. நீ அந்த விளக்கை கூர்ந்து கவனி. அப்படியே சுனாமி வந்தாலும் அந்த அலைகள் இந்த விளக்கையும் மூழ்கி அடித்து விடும். அந்த விளக்கு மட்டும் உன் கண்ணில் இருந்து மறைந்தால் சுனாமி வந்துவிட்டது என்று அர்த்தம். அது மட்டும் அல்லாமல் இந்தியா போல் நீ இங்கு பயப்பட வேண்டாம், இங்கே தான் சுனாமி தப்பிக்கும் வழி என்று போர்டு போட்டு வழி இருக்கிறதே அதால் எதுவும் கவலை படாதே என்று ஒரு சிறிய தைரியம் கூறினார்., நீ நன்றாக கவனி என்று கூறி மீண்டும் தூங்க சென்று விட்டார்.

 நான் வண்டியை திருப்பி தயாரான நிலையில் வைத்து விட்டு "அலை மேல்" விழியாக விளக்கை பார்த்து கொண்டு இருக்கையில் வானொலியில் சுனாமி வராது என்று உறுதி செய்தார்கள். ஒரு 4:45 போல் ஆகி இருக்கும். மீன் சந்தை திறக்க அனைவரும் வரிசையில் நின்று (அந்த நண்டுக்கு பயங்கர டிமாண்ட்) எங்களுக்கு தேவையான மத்தி, சங்கரா, இறால், மற்றும் வஞ்சிரம் வகையார்க்களை வாங்கி கொண்டு வருகையில் நல்ல மழை.

வீட்டிற்கு வந்து அவரர் மீன்களை பிரித்து எடுத்து கொண்டு நண்பர் விடை பெற்றார். பொன்னி அரிசியோடு ஒரு நல்ல மீன் குழம்பு, கூடவே ஒரு நெத்திலி சொதி, தொட்டுக்கொள்ள சங்கரா வைத்து உண்டு கழித்து முடிகையில் மணி 1:30. வெளியே மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுவதால் எங்கேயும் செல்ல முடியாத நிலை. சரி, திருமணம் ஆனா ஒரு ஆணிற்கு மதியம் தூங்குவது என்பது குறுஞ்சி பூ பூத்தார் போல் (12 வருடத்திற்கு  ஒரு முறை தான் நடக்கும்)   என்று எண்ணி கொண்டே கம்பிளியை எடுத்து போத்திக்கிட்டு படுத்தேனா அல்ல படுத்துகினு போத்திகிடேனா என்று கூட தெரியவில்லை, அருமையான தூக்கத்தை தழுவி கொண்டேன்.

எவ்வளவு நேரம் படுத்தேன் என்று தெரியாது, என் இளைய மகள் வந்து எழுப்பினாள். அவசரமாக கடைக்கு செல்ல வேண்டும் கிளம்புங்கள் என்றாள். வெளியே மழை பெய்யும் இந்த வேளையில் அவ்வளவு என்ன அவசரம் என்று முனகி கொண்டே தயாராகையில் மூத்த மகள் ஒரு லிஸ்டை என்னிடம் கொடுத்தாள். அதில் முட்டை ஒரு டசன், கடலை மாவு அரை கிலோ என்று எழுதி இருந்தது. அடடே, என்ன தான் இருந்தாலும் தமிழ் குடும்பம் தமிழ் குடும்பம் தான். மழை என்றவுடனே வீட்டில் முட்டை பஜ்ஜி செய்ய தாயார் ஆகிவிட்டார்கள் என்று தமிழனின் கலாசாரத்தை போற்றி கொண்டே வண்டியை விட்டேன்.

இல்லத்தின் அருகில் உள்ள கடைக்கு சென்று அவர்கள் சொல்லியபடியே முட்டையும் கடலை மாவையும் வாங்கி கொண்டு அவர்கள் சொல்ல மறந்த புதினா இலையும் (முட்டை பஜ்ஜிக்கு சட்டினி பண்ணத்தான்) வாங்கி கொண்டு வீட்டை வந்து சேர்ந்தேன்.
நான் வந்ததும் வராததுமாக என் மூத்த மகள் ஓடி வந்து எல்லா வற்றையும் எடுத்து கொண்டு, நீங்கள் வேண்டுமானால் மீண்டும் தூங்க செல்லலாம் என்றாள். நான் மீண்டும் ஒரு பூனை தூக்கம் போட தயாராகும் வேளையில் என் இளையவள் வந்து புதினா ஏன் வாங்கினாய் என்றாள். நான் உடனடியாக அவளுக்கு அது உன் அம்மாவிற்கு தெரியும் என்று சொல்லிவிட்டு தூங்க போனேன். இந்த முறை தூக்கம் வரவில்லை. ஒரு அரை மணி நேரம் கடந்து இருக்கும், நான் ஆவலோடு முட்டை பஜ்ஜிக்கு காத்து கொண்டு இருந்தேன். 45 நிமிடம் கழித்து முட்டை பஜ்ஜி வாசனை ஏதும் வராத போது, மழையில் சற்று நனைத்தால் மூக்கு அடைத்து கொண்டது போல் என்று எனக்கு நானே ஒரு ஆறுதல் சொல்லி கொண்டேன்.

ஒரு மணி நேரம் ஆனது. என்னடா இன்னும் பஜ்ஜி வரவில்லையே என்று வெளியே வந்து பார்த்தால், மனைவியும் மகள்களும் ஒருவருக்கொருவர் " மஞ்சள் முகமே வருக" என்று அமர்ந்து கொண்டு இருந்தனர். அவர்கள் மூன்று பேர் முகத்திலும் ஒரு மஞ்சள் சாயம், தலையில் எதோ ஒரு திரவம். நான் சற்று சுதாரித்து கொண்டு, முட்டை, கடலை மாவு வாங்கி வர சொன்னீர்களே, முட்டை பஜ்ஜி செய்யத்தானே என்று தயக்கத்தோடு கேட்டேன்."நினைப்பு தான் பொளைப்ப கெடுத்துச்சான்" என்று சொல்லி, கடலை மாவு முகத்திற்கு போட, அந்த முட்டை வெள்ளை கருவை தலைக்கு தடவினால் ரோமம் கரு கரு என்று வரும் என்று சொன்னார்கள்.

கைக்கு எட்டின முட்டையும் கடலையும் பஜ்ஜியாகி வாய்க்கு எட்டவில்லையே என்று சோகமாக ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்தேன்...

இன்னும் தூறல் நின்னு போகல..

4 கருத்துகள்:

  1. மிச்சம் மீதி ஃபேஸ்பேக் மாவு இருந்தா நீங்க உங்க முகத்தில் பூசிக்கிட்டு மூவரோடு நால்வராய் அமர்ந்திருக்கலாமேண்ணா!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மாவை பூசின்னேனோ இல்லையோ... பஜ்ஜி வரும் நினைத்து ஏமாந்து முகத்தில் கரி பூசிக்கொண்டேன்.

      நீக்கு