வியாழன், 26 ஜூன், 2014

நிறைவான மகிழ்ச்சிக்கு காரணம் உறவே... பணமே..

ஹலோ விசு, கலிபோர்னியா முத்தமிழ் சங்கத்தில் இருந்து ஹரி பேசுறேன்.

சொல்லுங்க ஹரி!

மனைவி, பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்கோ? விசு..

அவங்க நல்லா இருந்தாதானே நான் நண்பர்கள் போனையே எடுப்பேன். இல்லாவிடில் அவர்களை தானே பராமரித்து கொண்டு இருப்பேன். அங்க எப்படி சுகம்?

நல்லா இருக்கோம் விசு. அது சரி உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டுமே..

சொல்லுங்க ஹரி

வர மே மாத இறுதியில் கலிபோர்னியா முத்தமிழ் சங்க சார்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு பண்ணி இருக்கோம்.

அருமை ஹரி, அருமை...ஏழு கடல் தாண்டி வந்தும் நீயும் உன் சம்சாரமும் சேர்ந்து தமிழ் மேல் காட்டும் அக்கரைக்கு நன்றி ஹரி. அது சரி தலைப்பு என்ன?


நிறைவான மகிழ்ச்சிக்கு காரணம் உறவே... பணமே...

நல்ல தலைப்பு. பட்டிமன்றம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

விசு நான் கேட்க வந்த விஷயத்திற்கு வருகிறேன். எங்க தமிழ் சங்க சார்பில் நீங்களும் இந்த பட்டிமன்றத்தில் பேச வேண்டும் என்று நாங்கள் கேட்டுகொள்கிறோம்.

ஏன் ஹரி, இது சொந்த செலவில் சூனியம் வைச்சிக்கிற கதை போல் இருக்கிறதே.

இல்ல விசு...நீங்க பேசினால் நன்றாக இருக்கும் என்று தான் எங்களுக்கு தோன்றுகிறது.

அது சரி ஹரி, நீங்கள் நல்ல பேச்சாளர் ஆயிற்றே, நீங்கள் பேசுகிறீர்களா?

நான் இந்த சங்கத்தில் ஒரு பொறுப்பில் உள்ளதால் பேசுவது கடினம், இந்தமாதிரி நிகழ்சிகளின் போது நான் வெளியே இருந்து வேலை செய்வது தான் சரி.

அட பாவி... இப்படி சொல்லி என்னை மேடையில் ஏத்தி வேடிக்கை பார்க்க விருப்பமா? நீ பேசுகிறேன் என்று ஒப்புகொண்டால் நானும் பேசுகிறேன்.

சரி விசு, இதில் உறவே ... பணமே என்பதில் நீ எதற்க்காக பேச விரும்புவாய்.

அது முக்கியம் இல்ல ஹரி.. நீ எதில் பேச போகிறாயோ நான் அதற்க்கு எதிர்ப்பை பேச போகிறேன்...

எனக்கு எதிராகவா? ஏன் விசு இப்படி ஒரு விபரீத ஆசை.

அது ஒன்னும் இல்ல ஹரி, இதுவரை நாம் இருவரும் சேர்ந்து பேசிய பட்டிமன்றத்தில் நாம் எப்போதும் ஒரே அணியில் இருந்து பேசியதால் நண்பர்கள் ஒருவேளை இது ஒரு "மேட்ச் பிக்ஸிங்" என்று நினைகின்றார்கள்.

சரி விசு, எந்த அணி என்பதை பிறக்கு பார்த்து கொள்ளலாம், நீ நிறைவான மகிழ்ச்சிக்கு காரணம் உறவே என்று பேச தயார் பண்ணி கொள்.

நன்றி ஹரி

நன்றி விசு...

இந்த உரையாடல் முடிந்த அடுத்த இரண்டு வாரத்தில் நான் கருமமே கண்ணாயிரம் என்று உறவை பற்றி பேச தயார் ஆகி கொண்டு இருந்தேன். 8 குழந்தைகள் உள்ள இல்லத்தில் 8வதாக பிறந்தவன் அல்லவா? அதுவும் 4 வயதிலேயே தகப்பனை இழந்து விடுவதால், அண்ணன்மார், அக்காமார் அவர்களின் உறவால் உதவியால் வளர்ந்தவன் அல்லவா? அதனால் உறவே என்று பேச நிறைய கருத்துக்கள் கிடைத்தது. பொதுவாக பேசுவதை தவிர்த்து விட்டு எனக்கு நடந்த உண்மையான சம்பவங்களை வைத்து பேசலாம் என்று தயார்  பண்ணினேன். ஓரிருமுறை நண்பன் ஹரியிடம் பேசியும் காட்டினேன், அவரும் மகிழ்ச்சி அடைந்தார். பட்டிமன்றம் நடக்க இன்னும் 4 நாட்கள் தான். இந்தியாவில் இருந்து ஒரு அழைப்பு. உன் அண்ணன் தவறி விழுந்து மருத்துவ மனையில் இருக்கிறார். மருத்துவர்கள் உன்னை உடனே அழைகின்றார்கள், புறப்பட்டு வா.

ஹலோ ஹரி...விசு பேசறேன்

சொல்லுங்க விசு.

ஹரி, அவசரமாக இந்தியா போக வேண்டிய ஒரு நிர்பந்தம், என் அண்ணன் உடம்பு சரி இல்லாமல் இருக்கின்றார். நான் இந்த பட்டிமன்றத்தில் பேச முடியாது போல இருக்கு. மன்னிக்க வேண்டுகிறேன்.

என்ன விசு.. அண்ணனுக்கு என்ன ஆச்சு?

சரியா தெரியவில்லை ஹரி.. நான் இந்தியாவில் இருந்து திரும்பி வந்து பேசிகொள்கிறேன்.

சரி விசு.. ஆல் தி பெஸ்ட்.வி வில் ப்ரே பார் யு.

அடுத்த விமான பயணம், கிட்ட தட்ட 24 மணி நேர பயணம்.விமானத்தில் ஏறி அமர்ந்தது தான்... என் அண்ணன் நினைப்பு வந்து விட்டது.

6வது படிக்கையில் ஹாஸ்டலில் அவனுக்கு கிடைத்த பரிசை எனக்கு மாற்றி கொடுத்தது.
அவன் NCC 'ல் இருந்தவன். நாங்கள் படிக்கையில் இரண்டு மணி நேரம் அந்த NCC  பயிற்சியை முடித்தால் ஒரு டிபன் தருவார்கள். அந்த பயிற்சி முடிந்தவுடன் அந்த களைப்பையும் பார்க்காது அந்த உணவை எடுத்துக்கொண்டு என்னை தேடி கண்டு பிடித்து என்னோடு சேர்ந்து உண்பான்.
யார் ஒருவருக்கும் எந்த நேரத்திலேயும் தவறாக எதையும் நினைக்க செய்ய மாட்டான்.
மும்பை நகரில் அவன் பணி பு ரிகையில் நான் கோடை விடுமுறைக்கு  அங்கே சென்று இருந்தேன். அப்போது ஒரு நாள்  நான் வழி தவறி வர சிற மணிநேரங்கள் தாமதித்தால் அங்கே ரயில்வே நிலையத்திலேயே 6 மணி நேரம் அமர்ந்து என்னை பார்த்தவுடன் செல்லமாக கடிந்து கொண்டவன்..என்று பல நினைவுகள்...

இரண்டு வாரம் கழித்து

ஹலோ ஹரி..

சொல்லுங்க விசு

பட்டிமன்றம் எப்படி போச்சி?

அதை விடுங்க, அண்ணன் எப்படி உள்ளார்?

அண்ணன் தவறி விட்டார் ஹரி..

எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் விசு. தைரியமாக இருங்கள்.

சரி பட்டிமன்றம் எப்படி போச்சு? பேராசிரியர் என்ன தீர்ப்பு கூறினார்.

நிறைவான மகிழ்ச்சிக்கு காரணம் "உறவே" என்று கூறினார்.

சரி ஹரி... பிறகு சந்திப்போம்

"உறவே"..

என் வாழும் காலம் இன்னும் எவ்வளவு நாட்கள் என்று தெரியாது ஆனால் நிறைய பணம் சம்பாதிக்க வாய்புகள் உண்டு. ஆனால் என்னை விட்டு போன என் அண்ணன் என்னும் உறவு? மீண்டும் கிடைக்குமா?
அருமை நண்பர்களே... "மீண்டும் சொல்கிறேன்'...
நிறைவான மகிழ்ச்சிக்கு காரணம் உறவே..உறவே... உறவே...

2 கருத்துகள்:

  1. ஆனால் உறவும் அநித்தியம் , பணமும் அநித்தியம், இது ரெண்டிலுமே மகிழ்ச்சி எங்கே இருக்கு ?

    பதிலளிநீக்கு