வெள்ளி, 7 மே, 2021

"அம்மாவுக்கு தாலி அறுக்க போறாங்க "




தவழும் நாட்கள் முடிந்து

தடுமாறி நடக்கையில் 

யாரோ சொல்ல கேட்டேன்..

அவங்க அம்மாவுக்கு தாலி 

அறுக்க போறாங்க என்று.


அர்த்தம் புரியாமல் 

அம்மாவின் அருகில் செல்ல

அனைத்தையும் கண்டு 

என்னை 

அணைத்து கொண்டு 

அழுதார்கள்.


அடுத்த சில வருடங்கள்

அய்யயோ பாவம் 

அப்பா இல்லாத பையன்

மற்றோரின் பரிதாபம் தான் 

பரிதவிக்க வைத்தது.


என்னை வாழ விடுங்க..

எனக்கு அம்மா இருக்காங்க..

அடிவயிற்றில் இருந்து கதறினேன்

அசரீரியாக கரைந்தது.


வீழ்ந்தேன்..

அல்ல அல்ல 

வாழ்ந்தேன்..


அம்மா ...

அம்மா...


எங்கேயும் அம்மா

எதற்கும் அம்மா..

அனைத்தினையும் கற்றேன்.


ஆசை பட...

நிராகரிக்க...

கொண்டாட ..

திண்டாட ...

மண்டியிட .. 

மன்றாட ..

கெஞ்ச..

மிஞ்ச ...

கொஞ்ச ...


ஒரு முறை விளையாட்டில் தலைகள் மோத 

நண்பனும் நானும்

வலி தாங்காமல் 

"அம்மா... ஆ " என்று அலறினோம்.


குருதியை துடைத்து 

மருந்தினை வைக்க 

வலி குறையிகையில் 

அவன் "அப்பாடா" என்று 

பெருமூச்சு விட்டான்.

நானோ " அம்மாடா " 

என்றேன்.


கேட்டான்..

வலிக்கையில் தானே அம்மாவை 

அழைப்போம், 

நீ என்ன நிம்மதிக்கு 

"அம்மாடா" 

என்கிறாய் என்றான்.


எனக்கு வலியானாலும் சரி

வழியானாலும் சரி 

அம்மா தான் என்றேன்.


இன்று நான் ஒரு மனிதன்

சராசரிக்கும் மேல் தான்.

இரண்டு பெண்களுக்கு தகப்பன்

அம்மணிக்கு கணவன்

அநேகருக்கு நண்பன்

அலுவலகத்தில் அதிகாரி

அனைத்தையுமே ஆரம்பித்தது 

வைத்தது  அம்மா..





 அனைத்தும் இருந்தாலும் 

மனதில் ஒரு ஏக்கம் 

தாக்கமும் கூட 

ஆண்டவன் என்னை

 ஒரு பெண்ணாக 

படைக்கவில்லையே..


ஏன்..

என்னையும் "அம்மா " என்று யாராவது 

அழைக்க வேண்டும் என்ற நப்பாசை தான்.


இப்போது சிலவேளைகளில் 

இருக்கையில் இருக்கையில் 

அந்த கூக்குரல் 

கேட்கின்றது..


அவங்க அம்மாவுக்கு தாலி அறுக்க 

போறாங்க...


தாலியை தான் அறுத்தார்கள்.

தரம் நிரந்தரம் தானே.



4 கருத்துகள்:

  1. அட்டகாசமான அதே நேரத்தில் மனதை நெகிழ வைத்த பதிவு இது விசு

    பதிலளிநீக்கு
  2. ஏன்..

    என்னையும் "அம்மா " என்று யாராவது

    அழைக்க வேண்டும் என்ற நப்பாசை தான்.//

    நீங்களும் தாயுமானவர் தான் விசு! உங்கள் ராசாத்திகளையும் நீங்கள் அக்கறையோடு தாய் போலக் கவனிக்கிறீங்களே! அப்புறம் என்ன!

    அருமையான கவிதை விசு ரசித்தேன்...மனதை நெகிழவும் வைத்தது.

    அன்னையர் தின வாழ்த்துகள்! அம்மாவிற்கும் உங்களுக்கும் தான்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கவிதையிலும் அசத்துகிறீர்கள் விசு. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு