புதன், 30 செப்டம்பர், 2020

ஹலோ மிஸ், ஹலோ மிஸ்! .. நடையா இது நடையா!

MGR - சிவாஜி - கமல்ஹாசன் - கண்ணதாசன்!

சென்ற பதிவில் குரு படத்தில் இளையராஜா இசையமைத்து வந்த பாடல்கள்  கல்லூரி நாட்களை எப்படி எல்லாம் ஆட்டி அசைத்தது என்று சற்றே சுட்டி காட்டி  இருந்தேன்.


இந்த பாடலின் ஆரம்பம் தான் விரும்பும் - காதலிக்கும்  ஒரு பெண் எங்கோ சென்று இருக்க காதலன் கிண்டலாக பாடும் பாட்டு போல் அமைந்த காட்சி..

பாடலின் இசை என்னமோ சூப்பர் மெட்டாக இருந்தாலும் பாடல் வரிகள் என்னமோ ஆராம்ப்பு பசங்களுக்கு தமிழ் வாத்தியார் வைத்த போட்டியில் பங்கேற்ற படைப்புகள் போல் இருக்கும்.

என்னடா இது? இவ்வளவு அழகான மெட்டு, இதுக்கு எப்படியெல்லாம் எழுதி இருக்கலாம் என்று நினைக்கையில், இந்த பாடலை யார் எழுதினார்கள் என்று தேடுகையில்..

"கண்ணதாசன் "

அதிர்ந்தே விட்டேன். 

என்னடா இது ?

கண்ணதாசனா? 

வெறும் காலிலே வேர்க்க வேர்க்க ஆடுவாரே, இந்த பாடல் சிட்டுவேஷன் அவர் காலில் சலங்கை கட்டி விட்டது போல் இருந்து இருக்க வேண்டுமே என்று ஆச்சர்ய படுகையில்..

80 களில் இசை என்னமோ அபாரமாக இருந்தாலும் பாடல் வரிகள்  

ஆசை -தோசை

ராஜா - ரோஜா

கதை - உதை

இலக்கணம் - தலைக்கனம்

மம்மி - மாமி 

என்ற அளவில் தான் இருந்தது என்பது ஒரு வருத்தமே.

இதே கண்ணதாசன் இதே போன்ற நாம் பிறக்கும் முன்பே வந்த படங்களுக்கு எழுதிய பாடல்கள் நம்மை இன்றும் வியப்பில் ஆழ்த்துகின்றன.

என்ன பாடல்கள்?

1963 ல் வந்த அன்னை இல்லம் படத்தில் "நடையா இது நடையா" 



ஒரு பெண்ணின் நடையை நாடகமா என்று கேட்டு ஆரம்பித்த பாடல். இயல் இசை நாடகம் என்ற முத்தமிழில் ஒன்றான நாடகம் எவ்வளவு பெரிய விடயம்? அதை தன் நாயகியின் நடை போன்று என்று வர்ணித்து.. 

அட அட அட..இன்னும் சில வரிகளை பார்ப்போம்.

கடற்கரை காத்து அடிக்குது

காத்துல சேலை நடிக்குது

முன்னாலே வரச் சொல்லி அழைக்குது

முகத்திலே கடுகு வெடிக்குது...

கண்ணதாசன் கண்ணதாசன் தான்..

மேல் சொன்ன வரிகளில் தான் எத்தனை அர்த்தங்கள். முக்கியமாக அந்த கடைசி வரி. அடேங்கப்பா..

"முகத்திலே கடுகு வெடிக்குது"

கடுகு வெடிப்பதை ஏன் கோவத்தோடு ஒப்பிடுகின்றார்கள் என்று நன் அறியாவிடினும், அந்த கடுகு வெடிப்பதில் தான் என்ன சுகம்?

என்னதான் பிரமாண்டமான சமையலாக இருந்தாலும், அந்த சமையலுக்கு  சுழி போடுவதே கடுகு தான்.

கொதிக்கும் எண்ணையில் கடுகை தூவ அவை பட் பட் பட் என்று வெடிக்கும் சப்தமும் கூடவே வரும் வாசனையும் நம்மை வேறொரு உலகத்துக்கே அழைத்து செல்லும். அந்த தருணத்தை எதிரில் உள்ள காதலிக்கு அர்ப்பணித்த கண்ணதாசனா இந்த "பறந்தாலும் விடமாட்டேன்"பாடலை எழுதினார்? 

வியக்கிறேன்!

மற்றும்..

இதே போன்ற ஒரு காட்சி, 1964 ல் வெளி வந்த என் கடமை படத்தில்..

சற்றே செல்லமாக  கோவித்து கொண்டு விலகி செல்லும் காதலியை பார்த்து  நாயகன் பாடும் "ஹலோ மிஸ் ஹலோ மிஸ், எங்கே போறீங்க"?!



இந்த பாடலில் வரும்

கண்ணழகை கண்டால் கூட்டம் சேருங்க

காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணூங்க

மாப்பிள்ளை போலே நான் வரும் போது

பார்ப்பவர் உள்ளம் ஆறாதுங்க


ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லேங்க

ஆதரவை கேட்டால் பாவம் இல்லேங்க

நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு

நடப்பது தானே ஓடாதீங்க


WOW ! All  I can  say is Wow!

ஒரே வரியை எடுத்து கொள்வோம்.


//மாப்பிள்ளை போலே நான் வரும் போது

பார்ப்பவர் உள்ளம் ஆறாதுங்க//

திருக்குறளை கற்கையில் உவமை அணி வஞ்சக புகழ்ச்சி அணி என்று சில அணிகளை கற்ற நினைவிற்கு வருகின்றது. இந்த வரிகள் எந்த அணியில் வருமோ? அறிந்தோர் சொல்லவும்.

நாயகியின் அன்பை வென்ற தான் எவ்வளவு கொடுத்து வைத்தான் என்றும்.

நாயகி எவ்வளவு அழகானவள் என்றும்..

மற்றவர்களின் பொறாமை என்றும்...

தான் திருமணத்திற்கு தயார் என்றும்..

அடேங்கப்பா..

இதில் வரும் கடைசி வார்த்தை.

"ஆறாதுங்க"

மாப்பிள்ளையாக நான் கூடவருவதை பார்க்கையில் மற்றவர்களின் உள்ளம் ஆறாதுங்க.. 

மற்றோரின் பொறாமை ஆறாதுங்க.

மற்றோரின் சூடு ஆறாதுங்க.

மற்றும்

ஆறு + ஆகுதுங்க

மற்றோரின் எண்ணகங்களும் உணர்ச்சிகளும் ஆறாக  மாறுகின்றது,

என்னதாசா? 

சிவாஜி MGR க்கு மட்டும் இம்புட்டு அழகா எழுதிட்டு நம்மவருக்கு நாமத்தை  போட்டுட்டிங்களே ?


3 கருத்துகள்:

  1. கண்ணே கலைமானே அவர் எழுதிய கடைசிப் பாடல் என்று சொல்வார்கள்.  அது நன்றாகத்தானே இருக்கிறது...   சில பாடல்கள் அப்படி இப்படி இருக்கும்.  அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக. இந்த பதிவு இந்த ஒரு பாடலை பற்றியே.

      ஊமை என்றால் அதில் ஒரு அமைதி..

      கண்ணதாசன் ஒருவரால் மட்டுமே அதை எழுத முடியும்!

      நீக்கு