சனி, 18 ஜூலை, 2020

பூந்தோட்ட கணக்குபிள்ளை !

ஈரமான ரோஜாவே...

பூவே செம்பூவே...

பூவரசம் பூ பூத்தாச்சு ...

பனி விழும் மலர்வனம்...

போக போக புரியும், இந்த பூவின் வாசம் தெரியும்..

அது என்னமோ தெரியல என்னோ தெரியல, பூ என்றாலே மனம் ஒரு நிமிடம்  "தகிட தகிட" என்று அலைகின்றது.

இல்லத்தின் எதிரில் ஒரு ரோஜா பூ தோட்டம் அமைத்து அந்த செடிகளும் பூத்து  குலுங்க, வாரம் மூன்று முறை இல்லத்தில்  விதவிதமான பூங்கொத்துக்களை வைத்து அழகு பார்க்கின்றேன்.

சனி கிழமை காலையில், கண்ணாடி பாத்திரத்தை (flower vase ) மற்றும் கத்திரிக்கோல் எடுத்து கொண்டு இன்றைக்கான பூங்கொத்தை  தயாரிக்கையில் தான் எத்தனை உரையாடல்கள்.

பொதுவாகவே என் இல்லத்தின் அருகில் வசிப்பவர்கள் காலையில் தம் தம் நாய்களை அவைகளின் காலை கடனை கழிக்க நடைக்கு அழைத்து செல்வார்கள். இவர்கள் தவிர வார இறுதி சைக்கிள் ஓட்டுபவர்கள்.  அதற்கும் மேலாக தினந்தோறும் நடை பயிற்சிக்கு செல்பவர்கள் என்று சனி கிழமை காலை இல்லத்தின் எதிரில் அநேகரை சந்திக்கும் வாய்ப்பு அதிகம்.இப்படி இருக்கையில் இந்த சனி பூங்கொத்திற்காக ஒரு கையில் ரோஜாவோடு மற்றொரு கையில்  கத்திரியோடு நின்று கொண்டிருக்கைலையில் நடந்த சில உரையாடல்கள்..

"குட் மார்னிங்" எதிரில் வந்த அடுத்த வீடு பங்காளி 

"குட் மார்னிங்" 

"என்ன தப்பு பண்ண? பூங்கொத்தை வைத்து சமாளிக்கிற!!!?"

இருவரும் சிரித்தோம்..

அடுத்து வந்த அம்மணி ....

"யாருக்கு பிறந்தநாள்?"

"வந்து.. வந்து?"

"யாருக்காய்இருந்தால் என்ன? அருமையான பூங்கொத்து.. ஆல் தி பெஸ்ட்"

புன்னகைத்து விலகினார்.

அடுத்து வந்த இன்னொருவர்...

"சேவிங் லாட்ஸ் ஆப் மணி ஹா? இதுக்கு மட்டும் நான் வாரத்துக்கு ஐம்பது டாலர் செலவு பண்றேன்" 

"ரியலி..!!? யு மேட் மை டே"

சத்தம் போட்டு பிரிந்தார்.

அடுத்து வந்த அம்மணி..

"இந்த கொரோனா நேரத்தில் இந்த மாதிரி பூக்கள் தான் மனதிற்கு ஆறுதல், தினந்தோறும் உங்க தோட்டத்தை பார்க்கவே ஒரு வாக் வரேன், தேங்க யு"

"யு ஆர் வெல்கம்"

அடுத்து வந்தவர்...

"எல்லாரும் நல்லா இருக்காங்க தானே. யாருக்கு பூங்கொத்து?"

"ஆல் ஆர் பைன்! சும்மா வீட்டில் வைக்க... ?"

"தேங்க் காட், பயந்தே போய்ட்டேன் "

நன்றியோடு விலகினார்!

இப்படி பல உரையாடல்கள் நடக்கையில் இந்த பூக்களின் மேல் எனக்கு எப்படி இப்படி ஒரு மோகம் என்று நினைக்கையில், இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று மனதில் ஓடியது.

கொரோனா துவக்கத்தில் இருந்தே என்னை பெற்ற மகராசி அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் இருக்கின்றார்கள். கடந்த சில மாதங்களாக யாரும் அம்மாவை நேரில் சந்திக்க முடியாது. அவர்களை பார்க்க போனால் ஒரு கண்ணாடி கதவின் அடுத்த பக்கத்தில் அவர்கள் அமர்ந்து இருக்க அலை பேசியில் அவரைகளை பார்த்து பேசி கொள்ளலாம்.

இப்படி இருக்கையில், அவர்களின் 94   பிறந்தநாளை  பிள்ளைகளோடு கொண்டாட அனுமதி கிடைக்க இல்லத்திற்கு அழைத்து வந்தேன். வாகனத்தில் இருந்து இறங்கிய அவர்கள் சொன்ன முதல் வார்த்தை.

"அடேங்கப்பா.. என்ன அழகு. என்னை இதுக்கு எதிரில் என்னை ஒரு போட்டோ எடு."

எடுத்தேன்...

அடுத்த சில நிமிடங்கள், அம்மாவின் பேச்சு ஒரே பூ.. பூ பூக்களை பற்றியே! இவற்றை எப்படி பராமரிப்பது, எப்படி வெட்டி வளர்ப்பது என்று அறிவுரை.

ஓ.. நமக்குள் இருக்கும் இந்த பூவின் காதல் இங்கே தான் உதித்திருக்கின்றது என்று உணர்ந்தேன்.

பின் குறிப்பு : 
 
இந்த டிராமா எல்லாம் இங்கே வேணா.. உனக்கு பூக்கள் மேல ஏன் இம்புட்டு ஆசைன்னு உண்மையை சொல்லுன்னு  ஒருத்தர் கேட்பதில் காது கிழிகின்றது.

"வாரத்துக்கு ஐம்பது டாலர் சேவிங்ஸ் தான். வேற என்ன? "

அதுக்குதான் என்னை செல்லமா 

"பூந்தோட்ட கணக்குப்பிள்ளை"ன்னு  கூப்பிடுவாங்க!



5 கருத்துகள்:

  1. பிரமாதம் விசு! என்னவர்க்கும் எப்பொழுதும் பூந்தொட்டியில் பூக்கள் இருக்க வேண்டும். வாங்கிவந்து அழகாக அலங்கரிப்பார். அழகாக இருக்கும், இரசிப்பேன் என்றாலும் செலவு என்று திட்டுவேன்.
    அம்மாவைப் பார்ப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. சரி சரி எல்லாத்தையும் நகைச்சுவையாக சொல்லிட்டீங்க ஆனால் ஒரு உண்மையை மட்டும் சொல்லாமல் மறைச்சீட்டீங்களே விசு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுர..

      மல்லிப்பூ பத்தி தானே. அதை பத்தி வேற பதிவு போடுறேன். குடுமபத்துல குழப்பத்தை உண்டாக்காத மதுர!

      நீக்கு
  3. பூக்களைத்தான் பறிக்காதீங்க பாட்டு நினைவுக்கு வரவில்லையா!!!!

    பூக்கள் எப்போதுமே மனதுக்கு உற்சாகம் தருபவை.

    பதிலளிநீக்கு