செவ்வாய், 9 ஜூன், 2020

சோஃபியாவும் வரதராஜனும்...

"சொல்க சொல்லை தைரியமாக சொன்னபின்
சொன்னதற்கு ஏற்க நட "

இந்த காலத்தில் நாம் என்ன சொன்னாலும் எங்கே போனாலும் எதை செய்தாலும் யாரோ ஒருவர் எங்கேயோ எதோ ஒரு கேமராவிலோ பார்த்து கொண்டும் கேட்டு கொண்டும் கவனித்து கொண்டும் இருக்கின்றார்கள்.

அதனால் நாம் பொதுவெளியிலும் சரி தனிமையிலும் சரி சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இன்றைய தெலுங்கானா  கவர்னர் அன்றைய பாஜக தமிழக தலைவர் தமிழிசை அவர்களோடு விமானத்தில் பயணம் செய்த சோஃபியாஎன்ற மாணவி..

"பாசிச பாஜக ஒழிக' என்று சொன்னதற்காக, தமிழிசை அவர்கள் விமான நிலையத்திலேயே காவல் துறையை அழைத்து சோஃபியா  மீது நடவடிக்கை எடுத்தது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த நிகழ்ச்சியின் போது பலர் சோஃபியாவிடம் ,

தெரியாமல் சொல்லிவிட்டேன்,



உணர்ச்சிவசப்பட்டு சொல்லிவிட்டேன்

அந்த அர்த்தத்தில் சொல்லிவிட்டேன்

என்னை மன்னித்து விடுங்கள் ..

என்று  ஏதாவது சொல்லிவிடுங்கள், இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்று சொன்னபோதும்..

"பாஜக பாசிச கட்சி"

 என்பது என் நிலை, அதை தான் சொன்னேன், இதில் என்ன மழுப்பு , மறுப்பு, மன்னிப்பு என்று தன்னிலை  மாறாமல் என்ன நடந்தாலும் சரி என்று நிலைத்து நின்றார் என்று தான் நான் கேள்வி பட்டேன்.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த மாணவியின் சுய மரியாதையை  நாம் பாராட்டியாக வேண்டும் என்பதும் உண்மையே.

சில நாட்களுக்கு முன்பு, ஊடகவியலாளர் திரு வரதராஜன் அவர்கள், ஒரு காணொளியில், இந்த கொரோனா நேரத்தில் தமிழகத்தில் தன் உறவினர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை கிட்டாமல் மிகவும் சிரமப்பட்டார்.

அரசு அதிகாரிகள், மற்றும் மருத்துவமனை முதலாளிகள் பல பெரும்புள்ளிகள் என்று எத்தனையோ பேரை தொடர்பு கொண்டபோதும் இந்நபருக்கு எந்த மருத்துவமனையிலும் இடம் கிடைக்கவில்லை என்று சொல்லி.. அதோடு, மக்களுக்கு..

மிகவும் கவனமாக இருங்கள்! வெளியே போய் கொரோனா கிருமியை இல்லத்திற்கு கொண்டு வந்துவிடாதீர்கள், அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உங்களை நீங்களே தான் காப்பாற்றி கொள்ள வேண்டிவரும் என்று கூறினார்.

அதை பார்க்கும் போதே,

நல்ல ஒரு கருத்தை தான் சொல்லி இருக்கின்றார். இவர் சமூகத்தில் ஒரு உயர்ந்த அந்தஸ்தத்தில் இருக்கின்றார். கண்டிப்பாக தான் கூறியதை போல் பலரை தொடர்பு கொண்டு இருந்து இருப்பார். இவர்களுக்கு இந்நிலைமை என்றால் நம் நிலைமை என்ன என்று ஒவ்வொரு சராசரி மனிதனையும் எச்சரித்து இருக்கும்.

இவர் இப்படி சொன்னவுடனே.. சோஃபியாவிற்கு நேர்ந்தது போல இவர் மேலே ஒரு வழக்கு பதிவிட அடுத்த நாளே, இவர்..

கொரோனாவின் சிகிச்சை முறை மற்றும் மருத்துவமனையில் இடம் என்று அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் ஆஹா.. ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி இன்னொரு காணொளியை வெளியிட்டு இருக்கின்றார்.

இவரின் இந்த செயல் கோழையின்  செயல் என்று தான் நினைக்க வைக்கின்றது. தன் உறவினர் / நண்பர் ஒருவருக்கு நேர்ந்த இந்த பிரச்னையை உலகிற்கு எடுத்து வைத்த இவர் ஒரு சாதாரண வழக்கிற்கு பயந்து தன்  கூற்றுக்கு நேரெதிரான மாற்று கூற்றை வைத்து ...

என்ன தான் சொல்வது. ஒரு மாணவியிடம் இருந்த அந்த மனதைரியம் இவரை போன்றவருக்கு இல்லையே என்று ஆதங்கப்பட தோன்றுகின்றது.

இதில் இன்னொரு விஷயம்.

மக்களே ஜாக்கிரதை, அரசாங்கத்தை எதிர்த்து யாராவது ஏதாவது சொன்னால் உடனே உங்கள் மீது வழக்கு பாயும் என்ற ஒரு செய்தியையும் நமக்கு சொல்லி இருக்கின்றார்கள்.

இறுதியாக ஒன்று.. நான் ஏற்கனவே சொன்னது போல் வரதராஜன் அவர்களுக்கு பெரிய இடத்து தொடர்புகள் உண்டு. இந்த வழக்கு கூட ஒன்றும் இல்லாமல் தூக்கி குப்பையில் வீசப்படும் என்று தான் நான் நினைக்கின்றேன்.  அவரை கைதுசெய்து சிறையில் வைத்தால் என்னை விட ஆச்சர்யபடுபவர் யாரும் இருக்க முடியாது.

3 கருத்துகள்:

  1. வணக்கம் சார். "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"

    பதிலளிநீக்கு
  2. கைது எல்லாம் செய்ய மாட்டார்கள்... அது நாய் சேகர் கோஷ்டி...!

    பதிலளிநீக்கு
  3. அரசியல் மருத்துவத்திலும் புகுவதுதான் மிகவும் வருந்தத் தக்கதாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு