புதன், 3 ஜூன், 2020

பூக்கள், இறைவனின் ஆறுதல் பரிசோ...

சிறிய வயதில் இருந்தே பூக்கள் என்றால் எனக்கு மயக்கம் என்று தான் சொல்ல வேண்டும். பூக்களின் நிறம் மனம் குணம் என்று ஒவ்வொரு பூவையும் நின்று நிதானமாய் ரசிப்பவன்.

பள்ளிக்கூட வயதில், ஒரு பூவை பார்த்து மணிநேர கணக்கில் நான் ரசித்துக்கொண்டு இருக்க.. ஊரோ கண் காது மூக்கு வைத்து ஏதேதோ கதை பின்னி ..

"பாவம் விசு.. ! இன்னைக்கு ரிசல்ட் வர போது.. அவனை
 கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கோங்க.. "

பூவை ரசித்து கொண்டு  இருந்த என்னை பார்த்து பரிதாபமாக வர, நானோ இவங்களுக்கு என்ன ஆச்சி என்ற குழம்ப..

"ஏன் விசு, காலையில் இருந்து அரளி காயை பாத்துன்னு இருக்க.. இந்த முறை பாஸாகட்டி என்ன!!? அடுத்த முறை எழுதலாமே "

ன்னு  ஒருவன் சொல்ல..
அரளி 

"அட பாவி.. இந்த செடியில் அரளி காய் இருக்குறதையே நீ சொன்னவுடன் தான் பாத்தேன், அந்த பூவை பாருடா என்ன அழகு"என்று சொன்னது இன்றும் நினைவில் உள்ளது.

அடுத்து என்னை கவர்ந்தது ..

வைச்சி தாக்குவது மாமிச வகையாக இருந்தாலும், சைவ உணவில் எனக்கென்று பிடித்தததில் முதல் மூன்று இடத்தில் இருப்பது அவரைகாய்.

அவரை

ஒழுங்காய் சமைத்தால் என்ன ஒரு சுவை. சுவையை விடுங்கள், அவரை பூவின் அழகிற்கு அளவே இல்லை. அந்த ஊதா நிறத்தில் தான் எத்தனை காவியங்கள் வாழ்கின்றன!  அவரை கொடியின் கீழ் அடியேனை கண்டால் அவசரப்படத்தாதீர்கள்.



அடுத்த பூ..

இதுவும் காய் கறிவகை தான். அநேகருக்கு இந்த காயை பிடிக்காது ஆனால் அடியேனுக்கு பிடிக்கும். வீட்டிற்கு பின்புறம் ஒவ்வொரு கோடையிலும் இந்த கொடி படர, இப்பூவின் வாசமே இன்னும் நாலு வாரத்தில் பாவக்காய் தயார் என்று சொல்லும். இங்கே ஒரு கூடுதல் தகவல்.

"அது பேர் என்ன சொன்னீங்க.. ?"

"பாவக்காய்"

"பாவம் அந்த காய், பேரையே மாத்திடீங்க"

என்று இலங்கை தமிழில் அம்மணி கொக்கரிக்க..

"பாவக்காய் இல்லாம வேற என்னவாம்??
பாகு அற்ற காய் 

"பாகற்காய் என்று அழைக்க படும்  பாகு அற்ற காய் "

"கொஞ்சம் இடஞ்ச்சூட்டி பொருள் விளக்கு, ப்ளீஸ் "

"பாகு என்றல் இனிப்பு, இனிப்பு அற்ற காய் .. தமிழில் பாருங்க, கசப்பு என்றாலே  மன கசப்பு வரும் என்பதால், கசப்பு உள்ள காய்ன்னு சொல்றது பதிலா அழகா "பாகு அற்ற காய்" ன்னு சொல்லுவாங்க.. "

"அடே அடே"

பாவையின் அழகே தனி தான், அதை விட அதனை எடுத்து சொல்லும் தமிழின் அழகே அழகு தான்.

அடுத்து..

சமைப்பது என்னவா இருந்தாலும் அதை தாளிச்சாதானே சுவை என்ற நா பழக்கத்தினால் மனதில் ஏறி அமர்ந்த கடுகு. சூடான எண்ணையில் அதை கொட்டும் போது வெடி தெறிக்கும் சத்தமும் சரி விதமும் சரி வாசனையும் சரி, அந்த கடுகின் பூக்களுக்கு நிகராகாது.

கடுகு 

ஏக்கர் கணக்கில் கடுகு விளையும் நிலத்தில் இருக்கும் அந்த மஞ்சள் பூக்கள்.. என்ன அழகு..


காய்வகையாராவை விடுங்க வெட்டுகுத்துக்கு வாங்கன்னு எங்கேயோ ஒரு குரல் கேட்குது. வளரும் வயதில் பக்கத்து தெருவுல இருக்கும் கசாப்பு கடையில் அரைகிலோ மட்டன்  வாங்கி வந்து அதை இஞ்சி பூண்டு மசாலா எல்லாம் போட்டு சட்டியை இரக்குறதுக்கு   முன்னால.. :"கசகசன்னு"

கச கச 


ஒரு  ஐட்டத்தை போடுவாங்க.. அந்த கசகச பூவின் அழகு தான் என்ன?

இன்னும் எத்தனையோ பூக்கள் இருக்கு.

"என்ன விசு.. நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா? ஒரு பொம்பளைய மாறி எப்ப பூவை பார்த்தாலும் "Flash Back, மலரும் நினைவுகள் அப்படின்னு போயிடுறேயே"

என்று நிறைய முறை கிண்டலுக்கு ஆளாக்க பட்டு இருக்கின்றேன். பரவாயில்லை.

என்னை பொறுத்தவரை பூக்கள் இறைவன் மனித குலத்திற்கு அளித்த ஆறுதல் பரிசு. அவைகள் தான் மனதிற்கு எவ்வளவு ஆறுதல் தருகின்றன.

தற்போது இவ்வுலகில் நடக்கும் கொரோனா, இனவெறி, ஏழ்மை, போராட்டம். 
இவை எல்லாவற்றையும் மறக்க எனக்கு தேவை ஒரு கொத்து பூ மட்டுமே.

4 கருத்துகள்:

  1. பாகற்காய் ..பாகு அற்ற காய் ..சூப்பர் விளக்கம் .நானும் பாவக்கா னுதானே சொல்லிட்டிருக்கேன் அண்ணே வெண்டைக்காயின் பூவும் மஞ்சள் நிறத்தில் அழகு ..லின்சீட் பூக்களும் நைஜெல்லா பூக்களும் கொள்ளை அழகு எனக்கு பட்டர்கப்ஸும் பிடிக்கும் டான்டேலியனும் பிடிக்கும் .மலர்களை ரசிப்பது மனதுக்கு இதமானது .யார்  என்ன சொன்னாலென்ன நினைத்தாலென்ன மனசுக்கு சந்தோஷமானதை செய்யுங்க .

    பதிலளிநீக்கு
  2. பாகு அற்ற காய்... ஆகா...! விளக்கம் சிறப்பு...!

    பதிலளிநீக்கு
  3. பாகற்காய் பொருள் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  4. நான் எப்போதுமே பாகற்காய் நு சொல்லியே பழகிப் போச்சு. இது பள்ளியில் தமிழ் ஆசிரியை பிரித்தெழுதுகவில் கொடுத்து கற்பித்தது . பாகு+அல்+காய் இனிப்பற்ற காய். அதுக்கு அப்புறம் சொல்லிருக்கீங்க பாருங்க அது செம //தமிழில் பாருங்க, கசப்பு என்றாலே மன கசப்பு வரும் என்பதால், கசப்பு உள்ள காய்ன்னு சொல்றது பதிலா அழகா "பாகு அற்ற காய்" ன்னு சொல்லுவாங்க.. "//

    ஆனால் பாவக்காய் என்றும் சொல்லுவதுண்டு. அது பெயர்ச்சொல். (அகரமுதலி)

    பூக்கள் ரொம்ப அழகு நான் மிக மிக ரசிப்பதுண்டு. மனதிற்கு மிகவும் இதமான ஒன்று. அது காட்டுப் பூவாகவே இருந்தாலும்.

    கீதா

    பதிலளிநீக்கு