சனி, 27 ஜூன், 2020

அரசாங்கமே! காவல் துறைக்கு இனிமேலாவது சம்பளம் கொடு!

என்னமோ தெரியவில்லை. சிறிய வயதில் இருந்தே காவல் துறையினரை கண்டால் எனக்கு என்னமோ பயமோ மரியாதையோ என்று எதுவும் தோன்றுவதில்லை. 

இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப பள்ளி நாட்களில் யாராவது போலீஸ் திருடன் விளையாட்டிற்கு அழைத்தால், எங்கள் பள்ளியின் அனைவரும் திருடன் ரோல் கேட்டு தான் ஆடம் பிடிப்பார்கள். போலீஸ் என்றால் மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்ற ஒரு நினைப்பு. 
காவலர்களை பார்த்தல்   ஒரு பரிதாபமும் மற்றும்.. "என்ன இவ்வளவு தாழ்ந்து போய் இருக்காங்களே." இவங்களுக்கு அரசாங்கம் சம்பளம் தருவதில்லையா? என்ற ஒரே நினைப்பே தான் வரும்.

தற்போது நடந்த சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணம் ஒரு இலவச செல் போனுக்கு என்று  எங்கோ படித்தவுடன், கண்டிப்பாக இருக்குமென்ற  எண்ணம் மட்டுமே வந்தது.

ஏன் அப்படி...?

என் ஆரம்ப பள்ளி காலத்தில் ஒரு வருடம் பள்ளிக்கூடம் ஒரு காவல் நிலையம் அருகில் இருந்தது. அங்கே பணி புரியும் காவல் துறையினரின் நடவடிக்கை அனைவரையும் சிரிக்க வைக்கும்.

பக்கத்துக்கு கடை டீ க்கு பணம் தர மாட்டார்கள்.

செய்தி தாளுக்கு மற்றும் வார இதழ் இலவசமாக அந்த கடையில் இருந்து வர வேண்டும்.

வாரம் ஒருமுறை தள்ளு வண்டியில் மிக்ஸர் மட்டும் இனிப்புகள் விற்கவரும்  அந்த ஏழை வியாபாரி இவர்களுக்கென்றே ஒரு பொட்டலம் கட்டி எடுத்து வந்து கொடுத்துவிடுவார்.

ஒரு முறை அருகில் செருப்பு தைய்ப்பவரிடம் கூட பணம் தராமல் மனைவியுடைய செருப்பை சரிபார்த்த காவலர் .

குடும்பத்தோடு எங்கு சென்றாலும் எந்த பேருந்திலும் டிக்கட் எடுக்க மாட்டார்கள்.

எங்காவது சொல்லவேண்டுமென்றால் அடுத்து எதிரில் வரும் சைக்கிளை நிறுத்தி அவர் மிதிக்க பின்னால் அமர்ந்து கொள்வார்கள்.

மற்றும் பக்கத்துக்கு பாய் கடையில் இருந்து கொழுப்போட ஒரு கிலோ, 

பூக்காரம்மாவிடம் இருந்து வாரத்திற்கு ரெண்டு முழம் மல்லி, 

தயிர்க்காரம்மாவிடம் இருந்து கெட்டி தயிர், 

மீன் வியாபாரியிடம் ஜிலேபிக்கெண்டை....இப்படி எல்லாவற்றிற்குமே கை ஏந்துவார்கள்.

இது எல்லாம் நான் சொல்லி கேள்வி பட்டது அல்ல கண்ணால் பார்த்தது.

எனக்கும் ஒரு காவலருக்கு நடந்த முதல் அனுபவம் இன்றும் என்னை அவர்கள் மேல் பரிதாபப்பட வைக்கின்றது.

பிளஸ் 2 , முதல் வருடம். லூனா என்றழைக்கப்படும் 50  CC  வண்டியில் நானும் என் அத்தை மகனும் பிராட்வேயில் இருந்து பாரிஸ் கார்னர் செல்ல அங்கே எங்களை நிறுத்திய காவலர் ஐந்து ரூபாய்க்காக ஏறக்குறைய அழுதே விட்டார். பார்க்கவே அவ்வளவு பரிதாபமாக இருந்தது.    

அடுத்த சந்திப்பு.. 

முதல்முதலாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க என் விலாசத்தை சரிபார்க்க ஒரு காவலர் இல்லத்திற்கு வந்தார். அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட அவர் பத்து ருபாயை பரிதாபமாக கேட்க, நானோ சில்லறை இல்லாததினால் இருபதை எடுத்து நீட்ட, மீதி பத்தை தராமல் நடையை கட்டிய அவரிடம்..

"அது இருபது"

"இருக்கட்டும், அடுத்த வாரம் இதே விண்ணப்பத்திற்கு நற்சான்றிதழ் கேட்டு நீ ஸ்டேஷன்னுக்கு வருவ , அதுலருந்து கழிச்சிக்கோ"

என்று கிளம்ப இந்த பரிதாபம் அதிகரித்தது.

அடுத்த என்கவுண்டர்...

வெளிநாட்டில் இருந்து முதல் முறையாக இந்தியா திரும்புகையில்..

சார்.. ப்ளீஸ்.. சென்ட்.. டாலர்.. ஏதாவது ப்ளீஸ்..

இது தான் இந்தியாவில் என் காவல் துறை அனுபவம். 

இன்று இவர்கள் ஒரு செல் போனுக்காக தந்தை - மகன் இருவரை அடித்து கொன்றார்கள் என்று கேள்வி பட்டவுடன் மனதில் வரும் ஒரு கேள்வி.

அரசாங்கமே.. 

பாவம் இவங்களுக்கு ஏதாவது சம்பளம் கொடுங்க, பார்க்கவே பரிதாமாய் இருக்கு.  

5 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது போல பல போலீஸ்சார் இருந்தாலும் ஒரு நல்ல போலீஸ்காரரின் செயல்காரணமாகத்தான் எங்களால் அமெரிக்கா வர முடிந்தது . இது என் அனுபவம்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல போலீஸும் இருக்காங்கதான்.

    பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்கு வெறும் பத்து ரூபாயா? எப்போ? 1950? ஆயிரங்கள்ல இல்ல செலவாகுது. ஆனாலும் என் மகனுக்கு பத்து பைசா செலவில்லாம வாங்கினோம்.

    பதிலளிநீக்கு
  3. 1981...In tiny lil village.

    பதிலளிநீக்கு
  4. காவல்துறை உங்கள் நண்பன் என்பதெல்லாம் சும்மா என்று தோன்றுகிறது, சாத்தான்குளம் சம்பவங்களை எண்ணும் போது. 5 அல்லது 10 ரூபாய் என்ற அளவில் இருந்து சில்லறை இலவசங்கள், இப்போது எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய அளவிற்கு வளர்ந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது.கொடுமை சார்.

    பதிலளிநீக்கு