திங்கள், 22 ஜூன், 2020

கற்க கசடற கற்றவை கற்றப்பின் நிற்க அதற்கு தக"!

திருக்குறளில் அறத்து பால் பொருட்பால் காமத்து பால் உண்டு என்று ஆசிரியர்கள் சொன்னது  நினைவிற்கு  வந்தது.

இவை மூன்று இருந்தாலும் பள்ளி காலத்தில் நமக்கு தெரிந்தது இரண்டே வகை குறள்கள் தான்..

படிச்சவுடனேயே கோனார் நோட்ஸ் கூட இல்லாம அர்த்தம் புரியும் குறள் வகை . கோனார் நோட்டுஸ்க்கே புரியாத குறள் இன்னொரு வகை .

உதாரணத்திற்கு ..

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவை கையில் எடுத்து..!!?

இதை முதல் முதலாக எங்க தமிழ் வாத்தியார் சொன்னவுடன் மலைத்தே போய்ட்டேன். இதனை சொன்ன வாத்தியார்.. முதல் வரிசையில் இருந்து ஒருஒருத்தனையா நிக்க சொல்லி ஒவ்வொரு வார்த்தைக்கா அர்த்தம் கேட்டார்.
அந்த வரிசையில் ஏழாவது ஆளு நான். எனக்கு முன்னால எழுந்து நின்ன ஆறு பசங்களுக்கும் அர்த்தம் தெரியாம திரு திருன்னு முழிக்க.. எனக்கு வந்த வார்த்தையோ.. மழை!



துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

"விசு அந்த ஏழாவது வார்த்தைக்கு அர்த்தம் சொல்லு...?!!!?

முதல் ஆறு வார்த்தைக்கு அர்த்தம் அறியாத காரணத்தினாலும் மற்றும் நமக்கு தான் ய ர ல வ ல ழ வின் கொஞ்சம் பிரச்னையாச்சே.. அதனாலும்.. கொஞ்சம் குழம்பி போய்  நிக்க

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

ஏழாவது வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

"குன்று..!!!"

"என்ன சொன்ன.."
"
பாறை..!!"

"சுத்தமா புரியல.."

வேறு வார்த்தை கிடைக்காதலால்.. Mountain  என்று ஆங்கிலத்தில் சொல்ல..  எனக்கு முன்னால் அர்த்தம் தெரியாமல் நின்ற அனைவரையும் மன்னித்த  வாத்தியார் எனக்கு மட்டும் பிரம்பில் ஒன்று தந்து விட்டு..அர்த்தத்தை சொன்னார்.

இந்த மாதிரி குறள் அர்த்தம் தெரியாத குறள். ஆனால் சில குறள்கள் படித்தவுடன் பிடித்து விடும். ஏன்  என்றால் அவைகளை புரிந்து கொள்ள யார் உதவியும் தேவை இல்லை.

அப்படி பட்ட குறள்கள் பல இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது.

"கற்க கசடற கற்றவை கற்றப்பின் நிற்க அதற்கு தக"!

இந்த குறளை முதல் முதலாக கற்ற நினைவு இன்றும் எனக்கு பசுமரத்து ஆணி போல் உள்ளது.

இதற்கு நம் அனைவருக்கும் அர்த்தம் நேரடியாக புரிந்தாலும், தமிழ் சான்றோர் என்ன சொல்கின்றார்கள் என்று பாப்போம்.

கலைஞர்
பிழை இல்லாதவற்றை தனது குறைகள் நீங்குமளவிற்கு கற்று கொள்ள  வேண்டும். கற்ற பிறகு அதன் படி நடக்க வேண்டும்.

பேராசிரியார் பாப்பையா
கற்க..கற்க தகும் நூல்களை பிழை இல்லாமல் கற்க. கற்ற பிறகு கல்விக்கேற்ப நல்ல வழிகளில் வாழ்க.

இரண்டுமே அருமையான விளக்கம்.

சரி, இதற்கான என் விளக்கத்தை அளித்து விட்டு மேலே செல்லலாம்.


ஆறாவது படிக்கையில் ஆசிரியர் இக்குறளை கரும்பலகையில் எழுதி அதற்கான அர்த்தத்தை மாணவர்களை ஒரு தாளில் எழுதி தர சொல்ல.
எழுதிய பதிலை வெவேறு மாணவர்களிடம் கொடுத்து ஒருவன் எழுதிய அர்த்தத்தை இன்னொருவரை படிக்க சொல்ல..

என்  தாளை வைத்து இருந்த அன்றைய ரமா சிரித்து கொண்டே..

"சார்.. விசுக்கு அர்த்தமே தெரியல.. நீங்க போர்டில் எழுதியதை அப்படியே எழுதி வைச்சி இருக்கான்"

என்று சொல்ல, அவரும் என்னை

"விசு..!!!?"

கற்க கசடற கற்றவை கற்றப்பின் நிற்க அதற்கு தக!

பதில் தெரியாதலால் கேள்வியையே எழுதி வைத்த செயலுக்காக "நிற்க அதற்கு தக" மேசை மீது ஐந்து நிமிடம் என்று சொல்ல..

"அய்யா.. இந்த குறளுக்கு  எதற்கு அர்த்தம்? குறளே தெளிவாக இருக்கின்றதே.."

என்று சொல்ல அவரும் புன்னகைத்து..

"அமர்"

என்று சொல்ல...

மற்றவர்களோ விழி பிதுங்கினார்கள்..

அன்று பள்ளி முடியும் தருவாயில்..

"சார்.. இந்த குறளுக்கு  நேராவே அர்த்தம் தெரிந்தாலும்.. இதுல பல குறள்களும் இருக்கு, பல அர்த்தமும் இருக்கு சார்.."

"என்ன சொல்ற?"

"இதுல மொத்தமா ஏழு குறள் இருக்கு சார்.. ஏழுக்கும் வெவ்வேறு  அர்த்தம் இருக்கு சார்..."

"அது எப்படி ஏழு குறள்..?!!!"

என்று கேட்ட ஆசிரியருக்கு ஒவ்வொன்றாக விளக்கினேன். அது அந்தக்காலம். சரி தற்காலத்திற்கு  வருவோம்.

"முதல் குறள்.."

கற்க கசடற கற்றவை கற்றப்பின் நிற்க அதற்கு தக!

"அர்த்தம்..."

இந்த குறளுக்கு தான் அர்த்தம் ஏற்கனவே தெரியுமல்லவா.. இருந்தாலும்  வீட்டுக்காரம்மா யாழ்பாணத்து தமிழச்சி ஆச்சே.. அவங்க என்ன சொல்றாங்கன்னு...

"ஒரு குறள் சொல்வேன்.. கொஞ்சம் கூட யோசிக்காம உடனடியா உனக்கு மனசுல என்ன வருதுன்னு சொல்லனும்."

"சொல்லுங்கோ...!"

"கற்க கசடற கற்றவை கற்றப்பின் நிற்க அதற்கு தக!"

"படிக்கறது தேவாரம் இடிக்குறது சிவன்கோயிலா இருக்க கூடாது."

அட பாவத்த.. இந்த அம்மணி கலைஞர் மற்றும் பேராசிரியரையே மிஞ்சிட்டாங்களே.

அது சரி..

"மொத்தம் ஏழு இருக்குன்னு சொன்னீயே, அடுத்த ஆறை எடுத்து விடுன்னு "

நீங்க சொல்வது கேட்கின்றது. அடுத்த சில பதிவுகளில் சொல்கிறேன். அதுவரை...

நிற்க அதற்கு தக!


7 கருத்துகள்:

  1. // குரள் மற்றும் குரள்கள் இல்லேண்ணே அது குறள்கள்... // என்று சொல்லலாம்-ன்னு இருந்தேன்... ஆனா... பேச்சு வழக்கில் (எழுத்தில்)

    ஹா... ஹா... சிரித்து சிரித்து முடியலே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு தான் இந்த பிரச்சனை ஏராள( ல ழ)ம் ,சுட்டிக்காட்டியதற்கு நன்று தனபாலன். திருத்திவிட்டேன்.

      நீக்கு
  2. கலக்குரிங்க சார். சிரிக்கவும் வைக்கிரீங்க, சிந்திக்கவும் வைக்கிரிங்க. காத்திருக்கிரோம் அடுத்தடுத்த பதிவுகளுக்கும், குரள்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  3. "படிக்கறது தேவாரம் இடிக்குறது சிவன்கோயிலா இருக்க கூடாது." இதுதான் சிறந்த விளக்கம்.

    பதிலளிநீக்கு
  4. ரசித்தோம்.

    துளசிதரன்

    விசு சிரித்துவிட்டேன் முடிலப்பா....ரொம்ப நேரம் நிற்க எல்லாம் முடியாதுப்பா அந்த 6 என்னான்னு சீக்கிரம் சொல்லுங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. மேடம் விளக்கம் சூப்பர். கற்க கசடற கற்பவை கற்றபின்
    அதை உடனே மறந்துவிடு. இது என் பாலிசி. அருமையான பதிவு சார்.

    பதிலளிநீக்கு