வெள்ளி, 19 ஜூன், 2020

நினைத்தாலே இனிக்கும் கமலஹாசன் போல மாப்பிள்ளை

பள்ளிக்கூட நாட்களில் தமிழ் ஆங்கிலம் என்று வெளிவருகிற அம்புட்டு  நிறைய வாராந்திர மாத இதழ்கள் அனைத்தையும் வரி வரியாக படித்து விடுவேன்.

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழின் நாடு பக்கத்தில் யாருடைய படம்?
தினத்தந்தி  கடைசி பக்கத்தில் முழு பக்கமாக வரும் அடுத்த மெகா ரிலீஸ்!!
"தி ஹிண்டு"வின் கடைசி பக்கத்திற்கும் முன் பக்கத்தில் இருக்கும் விளையாட்டு செய்திகள்.
பிரிவோம் சந்திப்போம் தொடர் கதை.
சன் ஆங்கில இதழில் வரும் ஆங்கில பாடல்களின் வரிகள்.

இப்படி பல மனதில் நின்றவை.

இப்படி படித்ததில் எதோ ஒரு தமிழ் வார இதழில் நான் படித்த ஒரு சிறுகதை அந்த காலத்தில் என்னை வியக்க வைத்தது. என்ன ஒரு கலாச்சாரம். என்ன ஒரு பண்பாடு. வாழ்ந்தால் இந்திய கலாச்சாரத்தோடு வாழவேண்டும், அதுவும் தமிழ் கலாச்சாரம் என்று என்னை புல்லரிக்க வைத்த கதை.



கதையின் ரத்தின சுருக்கம் இது தான். (பாத்திரங்களின் பெயர்களை மறந்து விட்டேன், குத்து மதிப்பா எழுதுறேன் )

கதை..

ஐயோ!!! , பார்வதியின் திருமணத்திற்க்கு கூட வர முடியல. ஒன்னாங்கிளாஸ்சில் இருந்து காலேஜ் வரை என்னுடய உயிர் தோழி , ரொம்ப கோவமா இருப்பா என்று நினைத்து கொண்டே பார்வதி இல்லத்தின் கதைவை தட்டினாள் ராம்யா .

படிக்கும் காலத்திலே இருவரும் தமக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று மணி நேரக்கணக்கில் பேசியவர்கள். இருவருக்கும் வெவ்வேறு ரசனை.

"நினைத்தாலே இனிக்கும்" படம் வந்த நாட்கள் அல்லவா.. பார்வதிக்கு நினைத்தாலே இனிக்கும் கமல்ஹாசன் போலவே மாப்பிளை வேண்டும். பார்க்க செக்க சேவேன்னு அழகா இருக்கணும். கிட்டார், பியானோன்னு அடி தூள் கிளப்பனும். காலையில் ஜப்பானில் காபி,  மாலை நியூயார்க்கில் சாப்பாடு என்று பெரிய பெரிய ஊருக்கு எல்லாம் பறந்துக்கிட்டே இருக்கணும். பாக்குற அம்புட்டு தோழிகளும் தன்னை பார்த்து பொறாமை படனும்.

ரம்யாவின்  ரசனையோ  வேறு. அதே படத்தில வர ரஜினி மேல ஆசை இருந்தாலும், அவர் தனக்கு சரிப்பட்டு வரமாட்டாருனு சொல்லி, ஒரே சீனில் வரும் சரத்பாபு மாதிரி மாப்பிளை தான் வேணும்.செக்க சேவேனு உயரமா.. சிரிச்ச முகத்தோடு..

கதவை திறந்த பார்வதியின் அம்மா..



"வா ரம்யா, உக்காரு ! நீ கல்யாணத்துக்கு வரலைன்னு ரொம்ப கோவமா இருக்கா, உள்ள இருக்கா.. வர சொல்றேன்"

என்று சொல்ல..

ரம்யா ஒரு நன்றி புன்னகை உதித்து விட்டு, அமர்ந்தாள்.

"பார்வதி.. பார்வதி, யார் வந்து இருக்காங்க பாரு.. "

என்று சொல்லிகொண்டே அம்மா அங்கிருந்து நகர, சுவற்றில் இருந்த பார்வதியின் திருமண படத்தை பார்த்த ரம்யா அதிர்ந்தாள்.

பார்வதியின் கணவன்... கருப்பாக, குள்ளமாக , முகத்தில் ஒரு வசீகரம் கூட இல்லாமல்,

எப்படி... ? நினைத்தாலே இனிக்கும் கமலஹாசனுக்கும் இவருக்கும் எந்த  பொருத்தமும் இல்லையே...!!

என்று நினைக்கையில்,

"வாடி.. !! எப்ப வந்த.. ? என் கல்யாணத்திற்கு டிமிக்கி  கொடுத்துட்டா இல்ல ! உன் கல்யாணானம் வரும் தானே.. பாலி வாங்கிடறேன். வா சாப்பிடலாம்,"

என்று மேசைக்கு அழைக்க, ரம்யாவிற்கோ, இவள் எப்படி இந்த மாப்பிள்ளைக்கு சம்மதித்தாள் ..என்ற ஒரே கேள்வி.

 அம்மா இட்லி பரிமாற.

பார்வதி, "அவர் பக்கத்துல தான் E.B யில் வேலை செய்யுறாரு, நைட் ஷிப்ட்  இப்ப வந்துடுவார் "

ரம்யாவில் மனதில், E.B நைட் ஷிப்ட்.. ஐயோ.. அப்படினா படிப்பு கூட இல்ல.. வேலையும் சாதாரண வேலை.. எப்படி சம்மதித்தாள்.. ?

மேலும் குழம்பினாள்.

மாப்பிளை வந்தார்,  கண்டவுடன் ரம்யா மீண்டும் அதிர்ந்தாள். புகை படத்திலே சற்று நன்றாக தெரிந்த மாதிரி ஒரு தோற்றம் !

ஹலோ சொல்லி விட்டு,, சற்று நேரம் பேசி கொண்டு இருந்தார்கள்.

அகத்தின் அழகு முகத்திலே தானே , ரம்யாவின் முகத்தில் இருந்த கேள்வியை பார்வதி முழுவதுமாக புரிந்து கொண்டாள். இருந்தாலும் அவளாக கேட்டால் பதில் சொல்லலாம் என்று இருந்தாள்.

விடை பிரியும் நேரம் வர..

"நான் ஆட்டோ சொல்றேன்" என்று வெளியே இருவரும் வர...

ஆட்டோவிற்காக காத்து கொண்டு இருக்கையில், சற்றே ஒரு குழப்பமான அமைதி.

"பார்வதி...எப்படி !!!? "

ரம்யா கேட்டே விட்டாள்.

"நீ என்ன நினைக்குறேன்னு எனக்கு தெரியும். இவருக்கும் நினைத்தாலே இனிக்கும் கமலஹாசனுக்கு என்ன பொருத்தம்னு.. ?

"சாரி, பார்வதி ... எப்படி ? என்ன  ஆச்சி?!!!"

போன வருஷம் ஒரு நாள் வீட்டுல கரண்ட் போயிடிச்சு. பில் எல்லாம் சரியா தானே கட்டி இருக்கோம்ம்னு  செக் பண்ணிட்டு அப்பா மின்சார வாரியம் போய்  சொன்னாரு. லைனில் தான் ஏதாவது ரிப்பேர் இருக்கும் நாங்க ஆளை அனுப்புறோம்னு அவங்க சொன்னாங்க."

அப்பா , அம்மா ரெண்டு பெரும் வேலைக்குபோக நான் பாத்ரூமில் குளிச்சி இருந்தேன். வெளியே போன அப்பா கதவை சாத்தாமல் போய்ட்டாரு. அந்த நேரம் பார்த்து அங்க வந்த எலெக்ட்ரிஷியன், நேரா பாத்ரூம்க்கு வர, என்னை முழு நிர்வாணமா பார்த்துட்டார்..

"ஐயோ, அப்புறம்"

"அப்புறம் என்ன ?  கல்யாணம் தான் "

"அது சரி .. யாரோ ஒருத்தர் உன்னை நிர்வாணமா பார்த்ததுக்கு இவரை ஏன்  கட்டிக்கின"?

"ஐயோ இவரு தான் அந்த எலெக்ட்ரிஷியன்".

"உண்மையாவா...?"

"ஆமாம்?

"கருப்பா.. குள்ளமா, அழகே இல்லமா "

"ரம்யா.. நீ சொல்றது எல்லாம் சரிதான், இருந்தாலும் நம்ம இந்திய தமிழ் கலாச்சாரம் என்ன? ஒரு பெண்ணை ஒருத்தர் நிர்வாணமா பாத்துட்டா.. அவ எப்படி இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்ட முடியும். அது தான் மனசுக்கு கொஞ்சமும் பிடிக்காம இருந்தாலும் கழுத்தை நீட்டிட்டேன்."

அவளை கட்டிப்பிடித்த ரம்யா பெருமையாக ஆனந்த கண்ணீர் விட்டாள். நம் கலாச்சாரம், நம் பெண்மை. என்ன ஒரு அறுபுதம் என்று சொல்லிட்டு கொண்டே.


இந்த கதையை படித்தவுடன் நானும் அன்று  கண்ணீர்விட்டேன் என்று தான் சொல்லவேண்டும். ஆனந்த கண்ணீர்! என்ன ஒரு பெண்மை, என்ன ஒரு கலாச்சாரம் என்னே ஒரு அது.. என்னே ஒரு இதுனு.

வளர்ந்து வாழ்க்கையில் பல அனுபவங்களை கடந்து வந்த இந்நாட்களில் இந்த கதையை நினைத்தாலே கண்ணீர் இன்னும் வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்;

என்ன? தற்போது வருவது ஆனந்த கண்ணீர் அல்ல இரத்த கண்ணீர். நிர்வாணமா எவனோ பார்த்துட்டானாம், அவனை தான் காட்டுவாங்கலாம். என்ன ஒரு பரிதாபமான கலாச்சாரம்.

அதுகூட பரவாயில்லை. அவரு கருப்பம் , குள்ளமாம்!  இருந்தாலும் பரவாயில்லைன்னு வாழுறாங்களாம். கருப்பா குள்ளமா இருப்பது என்ன கேவலமா?

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும்!

பிளடி நான்சென்ஸ்!  

3 கருத்துகள்:

  1. என்ன் சொல்ல?

    துளசிதரன்

    கருப்பா குள்ளமா இருப்பது என்ன கேவலமா?//

    ஆனா பாருங்க விசு இப்பவும் இருக்குதே. மனசை யார் பாக்குறாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. "புதிய பாதை" யை விட மோசமாயிருக்கே...!

    பதிலளிநீக்கு